அன்னை மணியம்மையார் மறைவு மார்ச் – 16

மார்ச் 16-31,2022

பெண்ணுரிமை போற்றி, தொண்டறம் காத்த, பெருமைமிகு அன்னை மணியம்மையார்!

தளபதி மு.க.ஸ்டாலின்  தலைவர், தி.மு.க.

சுயமரியாதையையும் பகுத்தறிவையும் இரு கண்களாகக் கொண்ட ஓர் இலட்சிய இயக்கத்திற்கு, பெண்மணி ஒருவர் தலைமை தாங்கி வெற்றிகரமாக வழிநடத்துவது என்பது வரலாற்றில் வியக்கத்தக்க சாதனையாகும். அந்த அரிய சாதனையை ஒரு தொண்டாக – தன் தலையாய கடமையாகக் கருதி நிறைவேற்றியவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

தந்தை பெரியாருக்குக் காணிக்கை

தாய்க் கழகமான திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அவர்தம் தம்பியர் ஒருங்கிணைந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு தந்தை பெரியார் _- அன்னை மணியம்மையார் திருமணம் முக்கியக் காரணமாக முன்வைக்கப்பட்டது என்பதை மறைக்க வேண்டியதில்லை; அது வரலாற்றில் பதிவாகியுள்ளது. எனினும், தந்தையிடமிருந்து பிரிந்த தனயனாக பேரறிஞர் அண்ணா அவர்கள், தனி இயக்கம் கண்டு, அதை ஒட்டுமாஞ்செடி என மக்கள் மத்தியில் நிறுத்தி, அரசியல் களத்தில் வென்று, 18 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து, அதனை, தாம் கண்டதும் கொண்டதுமான தன்னுடைய ஒரே பெருந்தலைவர், தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கையாக்கினார் என்பதுதான் அந்த வரலாற்றுப் பகுதியின் நிறைவுக் கட்டம்.

கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நொடியே திருச்சிக்குப் பயணப்பட்டு அங்கு உள்ள பெரியார் மாளிகையில் பேரறிஞர் அண்ணா அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களுடனும், நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுடனும் சென்று, பெரியாரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். திருச்சி தி.மு.கழக தளகர்த்தரான அன்பில் எப்போதும் பெரியாருக்குச் செல்லப்பிள்ளை என்பதால் அவரும் உடன் இருந்தார்.

கசப்பான கருத்து வேறுபாடுகள் காலவெள்ளத்தில் கரைந்தோடின. மகிழ்ச்சி அலைகளே உணர்ச்சிப் பெருவெள்ளமாக மாறிப் பெருகியது. மணியம்மையார் அவர்களும் காலத்தின் மாற்றத்தை உணர்ந்து அறிஞர் அண்ணாவையும் அவரது தம்பியரையும் பாசத்துடன் வரவேற்றார்.

அன்னையார் பற்றி அண்ணா

அண்ணா எழுதியுள்ளார், “அய்யா அவர்-களிடம் (ஈரோட்டில்) நான் வந்து சேரும்போது, இப்போது எனக்கு என்ன வயதோ அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக்காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும்’’ என்று.

அந்தத் தூய தொண்டறமும் ஊழியமும்-தான், தந்தை பெரியாரை மட்டுமின்றி, அவரது சளைக்காத போராட்டங்கள் பயணங்கள்- பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து பெரியாரின் இயக்கத்தையும், எதிரிகள் அண்டமுடியாதவாறு, கட்டிக்காத்தது. சிறுநீர்ச் சட்டியைச் சுமந்துகொண்டு, சமூக நீதிப் போர்க்களத்தில் திராவிட இனத்தின் விடுதலைக்காகவும், தமிழரின் தன்மான உணர்வுக்காகவும் பெரியார் அவர்கள் தனது 95 வயது வரை ஓயாது, பல்லாயிரம் மைல் பயணம் செய்து, நம்பிக்கையுடன் களம் காண்பதற்கு மணியம்மையார் அவர்களின் தொண்டு, துணை நின்றது.

அய்யாவுக்கு அரசு மரியாதை அளித்த கலைஞர் அரசு

1973இல் பெரியார் மறைந்தபோது, எந்த அரசுப் பதவியும் வகித்திராத அவருக்கு, அதிகாரிகளின் ஆலோசனையை எதிர்கொண்டு, விடுதலைப் போராட்ட வீரர் என்கிற அடிப்படையில், முழு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வினை நடத்தியவர், ஈரோட்டுக் குருகுலத்தில் பயின்ற, பெரியாரின் தலை மாணாக்கர்களில் ஒருவரான முதல்வர் கலைஞர் அவர்கள். பெரியாரின் மறைவுக்குப் பிறகு, திராவிடர் கழகத்தின் எதிர்காலம் என்னவாகும் என இனப் பகைவர்கள் ஏளனத்தோடு பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அந்த இயக்கத்தை தன் தோளில் சுமந்து, பகுத்தறிவுப் பயணத்தைப் பாங்குடன் தொடர்ந்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

இராமலீலாவிற்கு பதிலாக இராவண லீலா

இந்தியாவின் வடபகுதியிலே இராமலீலா நடத்தப்படும் நிலையில், தமிழ்நாட்டில் திராவிடப் பண்பாட்டு அடையாளமாக இராவண லீலாவை நடத்தும் துணிச்சல்மிகு முடிவினை மணியம்மையார் மேற்கொண்டார். இதுகுறித்து, குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தந்தி மூலம் விவரம் தெரிவித்து இந்தப் பண்பாட்டுப் போராட்டத்தை அவர் நடத்தினார். அதேநேரத்தில், மாநிலத்தில் ஆட்சியிலிருந்த தலைவர் கலைஞர் தலைமை-யிலான திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்பட்டு-விடாதபடி, இராவண லீலாவை நடத்தியதுடன், காவல்துறையினரால் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டபோதும் உரிய ஒத்துழைப்பு வழங்கினார். இது தொடர்பான வழக்கினைத் துணிவுடன் எதிர்கொண்டு, மேல்முறையீடுகள் வரை சென்று, கொள்கை சார்ந்த வாதங்களை முன்வைத்து, வழக்கிலிருந்து அனைவரும் விடுதலை பெறுவதற்கு உறுதி தளரா சட்டப் போராட்டத்தை மேற்கொண்டவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

என் திருமணத்திற்கு அம்மா வாழ்த்துரை

பெரியார் அவர்கள் வலியுறுத்திய சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்டப்-பூர்வமான அங்கீகாரம் அளித்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.கழக அரசு. எனக்கும் என் வாழ்விணையர் துர்கா அவர்களுக்கும் 20.08.1975இல் சுயமரியாதைத் திருமணம் நடை பெற்றபோது, முதல்வர் கலைஞர் அவர்களின் அழைப்பின் பேரில், பெருந்தலைவர் காமராஜர், மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற விழாவில், அன்னை மணியம்மை-யாரும் பங்கேற்று மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துரை வழங்கினார். சுயமரியாதைத் திருமணம் பரவலாக நடைபெறுவதற்கு வசதியாக, பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமண நிலையத்தை மணியம்மையார் அவர்கள் தொடங்கி வைத்தார். அது தற்போது, ஆண்டுதோறும் பல நூறு இணையர்களுக்கு ஜாதி மறுப்பு – சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைக்கிறது.

அவரசநிலைக் காலத்தில் அன்னையாரின் துணிவு

தந்தை பெரியாரின் எண்ணங்களை ஈடேற்ற, முத்தமிழறிஞர் கலைஞர் அரசு மேற்கொண்ட மேன்மையான முயற்சிகளையும், செயல்படுத்திய சீர்மிகு திட்டங்களையும் வரவேற்ற மணியம்மையார் அவர்கள், பெரியார் விரும்பியவாறு, சென்னை அண்ணா சாலையில் தலைவர் கலைஞருக்கு, சிலை அமைத்துப் பெருமைப்படுத்தினார்.

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, திராவிடர் கழகத்தினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் மற்ற அரசியல் இயக்கத்தினரும் ‘மிசா’, கைதிகளாக சிறைப்படுத்தப்பட்ட நேரத்தில், தாய்க் கழகத்தை அன்னையாக இருந்து கட்டிக்காத்த பெருமையும் மணியம்மையார் அவர்களுக்கு உண்டு. நெருக்கடி நிலையை எதிர்ப்பதில் தலைவர் கலைஞரைப் போலவே உறுதியாக இருந்து, பத்திரிகைத் தணிக்கை உள்ளிட்ட பாதகங்களை எதிர்கொண்டு இயக்கம் காத்தார் மணியம்மையார்.

அரவணைக்கும் அன்புள்ளமும் அகலா மனோதிடமும் கொண்டு, பெரியாரின் மகத்தான இயக்கத்தைக் கட்டிக்காத்த அன்னை மணியம்மையார் அவர்கள் 1978ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாள் இயற்கை எய்தினார். அவரது நினைவாக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள், “அரும்பெரும் தலைவருக்கு வாழ்க்கைத் துணைவியாக வாய்த்த அன்னை மணியம்மையார் அவர்களும், தான் உடல் நலிவுற்ற காலத்திலும், தனக்குத் தள்ளாமை வந்துவிட்டது என்று எண்ணிய நேரத்திலும், தான் எடுத்த காரியங்களை, பெரியார் வகுத்த நெறிகளைப் போராடியாவது வெற்றி காண வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை பெற்றவராக இருந்தார். பெரியார் அவர்கள் கொண்டிருந்த கொள்கையில் மணியம்மை-யாருக்கு இருந்த உறுதிப்பாடுதான் எல்லா வகையிலும் அவரைப் பின்பற்றச் செய்தது’’ எனப் பொருத்தமாகப் புகழ்ந்துரைத்தார்.

ஆசிரியர் அய்யாவின் அருந்தொண்டு

அன்னை மணியம்மையார் அவர்களுக்குப் பிறகு தாய்க் கழகத்தைக் கட்டிக்காத்து பல களங்களை நெஞ்சுரத்துடன் எதிர்கொள்ளும் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களும் தன் வயது பற்றி எந்தக் கவலையுமின்றி, ஏற்ற இலட்சியங்களுக்காக எப்போதும் பாடு-பட்டுவருவது திராவிட இயக்கத்தினர் அனைவருக்கும் தெம்பும் ஊக்கமும் அளித்திடக் கூடியதாகும். தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியது போலவே, அன்னை மணியம்மையார் நூற்றாண்டையும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடும் ஆசிரியருக்கும், திராவிடர் கழக நிருவாகிகளுக்கும், கருஞ்சட்டைத் தோழர்-களுக்கும், வணக்கமும், மனமார்ந்த வாழ்த்து-களும் உரித்தாகுக! அன்னை மணியம்மையார் புகழ் என்றும் ஓங்குக!

(அன்னை மணியம்மையார் நூற்றாண்டு மலர் 2020)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *