பகுத்தறிவு : தண்டவாளப் பேய்?

மார்ச் 1-15 2022

கோ.மு.சா.

நடு இரவு சுமார் 12:00 மணிக்கு ஒரு பெண் தனியாக ரயில் தண்டவாளத்தில் (Railway Track) உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். அவள் யார்? இப்படிப்பட்ட இருட்டில் உட்கார்ந்து அழ வேண்டிய காரணம் என்ன? என்ற கேள்வி எல்லோர் மனத்திலும் தோன்றியது. அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். அது,

இளம் ஜோடி இருவர் பகல் 12:00 மணிக்கு தண்டவாளத்து மர நிழலில் (Railway Track) உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். (Train) ரயில் வேகமாக வந்தது. இவர்கள் இருவரும் எழுந்திருக்கும் முன் அவர்கள் மீது ஏறிச்சென்றது. அவர்கள் இருவரும் அந்த இடத்திலேயே இறந்து போனார்கள். உயிருக்கு உயிரான காதலர்கள் தாங்கள் இருக்கும்  சூழ்நிலையை மறந்து இருக்கும்போது அவர்கள் உயிரைப் பறித்துச் சென்றது வேகமாக வந்த  ரயில்.

மறுநாள் இரவு 12:00 மணியளவில் அந்தப் பெண் மட்டும் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் என்று ஊர் மக்கள் தெரிவித்துள்ளார்கள். ஒரு நாள் அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர் கீழே விழுந்து இறந்து போனார். அதை அம்மக்கள் அந்த பெண் பேய் அடித்துக் கொன்று விட்டதாகச் சொன்னார்கள். அந்த உடலை ஆய்வு செய்து டாக்டர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்று சொன்னார். ஆனால், அதை யாரும் நம்பவில்லை. காரணம், அவ்வளவு மூட நம்பிக்கை. அதனால் இரவானால் அந்தப் பக்கம் யாரும் போவதில்லை. விவசாய வேலை செய்பவர்கள்கூட இரவு வந்துவிட்டால் வீட்டுக்குப் போய் விடுவார்கள். அறுவடை செய்த நெல்லைக்கூட எடுக்காமல் அப்படியே போட்டுவிட்டு வீட்டுக்குப் போய் விடுவார்கள். மறுநாள் காலையில் வந்து பார்த்தால் பாதி நெல் களவு போயிருக்கும். இதை யாரிடமும் சொல்லாமல் வேதனைப்படுவார்கள். இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

அதே ஊருக்கு மேற்கே சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் ஆடுதுறையில் அரசினர் ஆசிரியர் பயிற்சி பள்ளி உள்ளது. அப்பள்ளியில் கோமுசா மற்றும் அவருடன் சேர்ந்து சுமார் 100 மாணவர்கள் படித்தார்கள். அவர்களில் சில (10 பேர்) மாணவர்கள் அருகில் உள்ள கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து அதில் தங்கிப் படித்து வந்தார்கள். அதில் கோமுசாவும் ஒருவர்.

கோமுசா தந்தை பெரியாரின் கருத்தை எடுத்துக் கூறுவார். ‘பேய் இல்லை, பிசாசு இல்லை, கடவுள் இல்லை’ என்றுதான் எப்போதும் கூறிக் கொண்டிருப்பார்.

நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ‘பேய் பிசாசு இல்லை என்று சொல்கிறாய் அதை உன்னால் விளக்க முடியுமா, நிரூபிக்க முடியுமா’ என்றனர். ‘முடியும்’ என்று சொன்னார். ‘நாங்கள் இடும் சவாலை நீ ஏற்றுக் கொள்கிறாயா?’ என்றார்கள். ‘ஆம்’ ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

“அப்படியானால் இங்கிருந்து தெற்கே ஒரு ரயில் தண்டவாளம் (Railway Track) உள்ளது. அதில் ஒரு ரயில் பாலம் (Railway Bridge) உள்ளது. அந்தப் பாலத்தில் இரவு 12:00 மணிக்கு மேல் ஒரு பெண் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பாள். அந்த இடத்திற்கு நீ போய் வர முடியுமா?’’ என்றார்கள். அவரும் ‘முடியும்’ என்றார்.

ஒரு நண்பன் கேட்டான். ‘பயமாக இருந்தால் சொல்லி விடு’ என்றான். ஆனால், ‘நான் புறப்படத் தயாராகிவிட்டேன்’ என்று பதிலளித்தார். 12:00 மணிக்கு அவரை அனைவரும் வழி அனுப்பினார்கள்.

கோமுசா நடக்க ஆரம்பித்தார் வேகமாக ரயில் தண்டவாளத்தை நோக்கி நடந்தார். அநேகமாக சுமார் அரை மணி நேரமாக நடந்து தண்டவாளத்தை நெருங்கினார். வயலிலிருந்து  ஏறும்போது இதயம் ‘படக் படக்’ என்று அடித்துக்கொண்டது. ஏதோ ஒரு பயம் அவரைப் பற்றிக்கொண்டது.

சோதனை நேரம்:

ரயில் தண்டவாளத்தில் ஏறி அந்தப் பாலத்தின் மேல் இருந்த மதிலைப் பார்த்தார். உடம்பு ‘ஜில்’ என்று வேர்த்தது. ஒன்றும் புரியவில்லை. காரணம், அவர்கள் சொன்னது போல் மதிலின் மேல் ஒரு பெண் வெள்ளைச் சேலை கட்டிக்கொண்டு, தலையை விரித்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். கிழக்குப் பக்கமாகச் சென்று  தண்டவாளத்தில் ஏறினார். அந்த உருவத்தின் பின் பக்கம் தெரிந்தது. அது அழும்போது, “அய்யய்யோ என்னை விட்டுட்டுப் போய்ட்டீயே, அய்யய்யோ என்னை விட்டுட்டுப் போய்ட்டீயே’’ என்று அழுவதைக் கேட்டார். மயக்கமே வருவது போல் இருந்தது. ஆனாலும், சமாளித்துக் கொண்டு அழுத அந்த உருவத்தின் குரலை ஏற்கெனவே கேட்டிருக்கிறார். அது வகுப்பறையிலும், வீட்டிலும் அடிக்கடி கேட்ட குரல் போல் இருந்தது. அந்தக் குரலை நினைவு படுத்திப் பார்த்தால் அந்தக் குரல் வகுப்புத் தோழன் மாரியப்பன் குரல்தான் என்பது அவருக்கு நன்றாகப் புரிந்தது. பின், அந்த உருவத்தின் அருகில் சென்று, “டேய், மாரியப்பா டேய்’’ என்றார். அது மாரியப்பன்தான். அவனும் அவரை, “டேய் கோமுசா’’ என்றான். அப்பொழுது பாலத்தின் கீழிருந்து 5 பேர்கள் சிரித்துக்கொண்டே மேலே ஓடி வந்தார்கள். அவர்கள் கோமுசாவை கட்டிப்பிடித்து, “உண்மையிலேயே நீ தைரியக்காரன்தான்’’ என்றார்கள். “நான் தைரியசாலி என்பது இருக்கட்டும். அந்தப் பேய் எங்கே?’’ என்று கேட்டார். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து மாரியப்பனைப் பார்த்து, “இதோ இருக்கிறதே பேய்’’ என்றார்கள்.

“பிறகு நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?’’ என்று கோமுசா கேட்டார். நண்பர்கள் சொன்னார்கள்.

“உன்னை இங்கே வழியனுப்பி வைத்துவிட்டு, நாங்கள் மாரியப்பனுக்கு பெண் வேஷம் போட்டு வெள்ளைப் புடவை கட்டி சவுரி முடி கட்டி தலையை விரித்துப் போட்டு இரண்டு மோட்டார் பைக்குளில் 6 பேரும் வந்தோம். மாரியப்பனை மேலே உட்கார வைத்து விட்டு நாங்கள் பாலத்தின்கீழ் பதுங்கி இருந்தோம்’’ என்றார்கள். பிறகு அனைவரும் வீட்டுக்குப் புறப்பட்டு வந்தனர். அவர்கள் செய்த இந்த செயலினால் ஊர் மக்களுக்கு நன்மையாக முடிந்தது. ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ரயில் தண்டவாளத்தில் பேய் இல்லை என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

எங்களுடைய செயலை அவ்வூர் பஞ்சாயத்துத் தலைவர், தலைமை ஆசிரியரிடம் சொன்னார். தலைமை ஆசிரியர் மறுநாள் காலை இறை வணக்கத்தின்போது கோமுசாவைப் பாராட்டினார். ஒவ்வொருவரும் இதுபோல் பள்ளிக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பாராட்டினார்.

கோமுகா கூறுகையில்,

“எங்களுக்காக நாங்கள் அனைவரும் சேர்ந்து நாங்கள் தங்கியிருந்த வீட்டில் நவீன கழிப்பறை கட்டினோம். மின் இணைப்பு கொடுத்தோம். வீட்டு வாசலில் பேருந்து நிழற்குடை அமைத்தோம். சாலையில் மின்கம்பம் நட்டினோம். மேலும் வீட்டின் வாசலில் பகுத்தறிவுப் படிப்பகம் ஒன்றை அமைத்தோம்.

மூடப் பழக்க வழக்கங்களைப் போக்கி அவ்வூர் மக்களுக்கு பகுத்தறிவை ஊட்டினோம்’’ என்றார். 

(மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் நடந்த உண்மை சம்பவம் இது)ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *