அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (287)

பிப்ரவரி 16-28,2022

ஈரோடு சமூகநீதி இளைஞரணி மாநாடு

கி.வீரமணி

திராவிடர் கழகத்தின் முக்கிய வெளியீடு-களில் ஒன்றாகவும், இன்றளவும் கழகப் பேச்சாளர்களாலும், வரலாற்று ஆய்வாளர் களாலும் சுட்டிக் காட்டப்படும் முக்கிய நூலாகவும் திகழ்கின்ற ‘கீதையின் மறுபக்கம்’’ 1.4.1998 அன்று பெரியார் திடலில் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. (அதற்குப் பிறகு 26 பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.) இந்த வெளியீட்டு விழாவில் நா.கிருஷ்ணன், (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) வெளியிட பொறியாளர் சோ.ஞானசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொள்ள மற்றும் ஏராளமான  பேராசிரியர்களும், கழகப் பொறுப்பாளர்களும் பெற்றுக் கொண்டனர். அங்கு சிறப்புரையாற்றுகையில், “பகவத் கீதை என்ற நூல் கொலையையும், வன்முறையையும் தூண்டி விடக்கூடிய நூல். அதனை தடை செய்ய வேண்டியது முக்கியமானது. காந்தியின் கொலையைப் பற்றி விசாரித்த ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்லா (பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தவர்) ‘The Murder of Mahatma’ என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், “கோட்சே, பகவத் கீதையை ஆழமாக நேசித்துப் படித்திருக்-கின்றார். அதன் பெரும்பாலான சுலோகங்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தார். நல்ல குறிக்கோளை அடைவதற்காகச் செய்யப்-படுகின்ற வன்செயல்-களை நியாயப்படுத்து-வதற்காக அவற்றை மேற்கோளாகக் காட்ட அவர் விருப்பம் கொண்டிருந்தார்’’ என்று நீதிபதிகளே இதைச் சுட்டிக்காட்டி-யிருக்கின்றனர். ஆக, பகவத் கீதை எதற்குப் பயன்பட்டது? கொலையை நடத்துவதற்காகப் பயன்பட்டது. ஜாதியைக் காப்பாற்றுவதற்காகப் பயன்பட்டது’’ என பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினேன்.

இந்தப் புத்தகம் பல்வேறு மாவட்டங்களிலும் கழகப் பொறுப்பாளர்களால் வெளியிடப் பட்டது. மிகப் பெரிய அரசியல் தலைவர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு புதிய வெளிச்சத்தைக் காட்டும் நோக்கில் அவர்களால் வாசிக்கப்பட்டு பாராட்டப்பட்ட நூலாகும்.

பட்டுக்கோட்டை கழகத் தோழர் எஸ்.தண்டாயுதபாணி அவர்களின் செல்வன் டி.காமலால் காந்திக்கும், கண்ணுக்குடி ஜி.மோகன்தாஸ் அவர்களின் செல்வி எம்.மாலதிக்கும் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழாவை 10.4.1998 அன்று தலைமையேற்று நடத்தி வைத்தேன். மணமக்களுக்கு மாலை எடுத்துக் கொடுத்து, அவர்களை அணியச் செய்தும் மணவிழாவை நடத்தி வைத்தேன். அங்கு கூடியிருந்த பெண்கள் கூட்டத்தினர் எனது உரையை ஆர்வத்தோடு கேட்டனர். ஒவ்வொரு வீட்டிலும் கடவுள் படங்களை அகற்றிவிட்டு பெண் இன முன்னேற்றத்திற்-காகப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களது படத்தை மாட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். அதனை கூட்டத்தினர் கைதட்டி வரவேற்று மகிழ்ந்தனர்.

பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள மதுக்கூரில் அத்திவெட்டி வ.கோவிந்தசாமி _ இந்திராணி ஆகியோரின் செல்வன் வெற்றிவேலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் _ ராஜகுமாரி ஆகியோரின் செல்வி சாந்திக்கும் 12.4.1998 அன்று எஸ்.பி. திருமண அரங்கில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினை கூறச் செய்தும், மாலை மாற்றிக் கொள்ளச் செய்தும் மணவிழாவினை நடத்திவைத்தேன். அங்கு உரையாற்றுகையில், “தந்தை பெரியார் அவர்கள்தான் ஆண், பெண் இருவரும் சம உரிமையோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சுயமரியாதைத் திருமணத்தை உருவாக்கியும் தந்த தத்துவத் தலைவர் ஆவார். அதற்குச் சட்டவடிவம் தந்தது பேரறிஞர் அண்ணா அவர்களையே சாரும்’’ என இருபெரும் தலைவர்களின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினேன்.

திருவாரூர் ‘மாலைமுரசு’ செய்தியாளர் ஒளிச் செங்கோ மகள் திருமணத்தை 17.4.1998 அன்று காலை தலைமையேற்று நடத்திவைத்-தேன். மணமக்கள் வெண்ணிலா _ மதியழகன் ஆகியோரை வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ‘தமிழரசி’ பத்திரிகையின் ஆசிரியர் நடராசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அங்கு உரையாற்று-கையில், “தந்தை பெரியார் அவர்களது கொள்கைதான் இறுதியில் அகிலத்தை ஆளவிருக்கும் கொள்கை’’ என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக் கூறினேன். இம்மணவிழாவிற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தோழர்களும், கழகப் பொறுப்பாளர்-களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

அறந்தாங்கியில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களுடைய சிலைத் திறப்பு விழா 17.4.1998 அன்று நடைபெற்றது. அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை அருகில் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த முழு உருவச் சிலையை தோழர்களின் வாழ்த்தொலியுடன் திறந்து வைத்தேன். விழாவிற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் சிறப்பான ஏற்பாடுகளையும், வரவேற்பையும் செய்திருந்தனர். விழாவில் உரையாற்றுகையில், “அறிவைப் பரப்புவது தானே நம்முடைய நாட்டிலேயே கடினமான பணி. தந்தை பெரியார் அவர்கள் அறிவுப்-பூர்வமான பிரச்சாரத்தைச் செய்தார்-களே. மற்ற தலைவர்களுக்கும் தந்தை பெரியாருக்கும் வேறுபாடு உண்டு. மற்ற தலைவர்கள் மக்கள் பின்னாலே செல்லக் கூடியவர்கள்; பெரியார் அவர்கள்தான் மக்களைத் தன் பின்னாலே அழைத்துச் சென்ற ஒரே தலைவர். ‘வந்தால் வா, கேட்டால் கேள், போனால் போ! அவ்வளவுதான்’ என்று சொன்னார். ஏன் என்றால் ஒரு தந்தை நிலையிலே இருந்து அடிக்க வேண்டிய நேரத்திலே அடித்துச் சொல்லி, திருத்த வேண்டிய நேரத்திலே திருத்திச் சொல்லி, இடித்துரைக்க வேண்டிய நேரத்திலே இடித்துக் காட்டி அதைச் செய்தார்’’ என அறிவுலக ஆசானின் சாதனைகளை எடுத்துக் கூறினேன். மாவட்டப் பொறுப்பாளர்களின் நேர்த்தியான திட்டமிடுதலால் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அனைத்துக் கட்சித் தோழர்-களும் கலந்து கொண்டனர்.

தென்சென்னை மாவட்ட தி.க. இளைஞரணித் தலைவரும், சென்னை கு.இராமசாமி_ பவுனம்மாள் ஆகியோரின் செல்வன் இரா.வில்வநாதனுக்கும், மு.காளியப்பன் _ ருக்மணி ஆகியோரின் செல்வி கா.வளர்மதிக்கும் 19.4.1998 அன்று மயிலையில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவையொட்டி மண்டப பகுதி முழுவதும் கழகக் கொடி மற்றும் பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மணமக்களை வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா உறுதி மொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து விழாவினை நடத்தி வைத்தேன். விழாவில் உரை நிகழ்த்துகையில், “வில்வநாதன் அவர்கள் இந்த இயக்கத்தில் கட்டுப்பாடு மிக்க இராணுவத் தொண்டர் போல பணியாற்றக் கூடியவர், ‘அடக்கமானவர், அமைதியானவர்’. அந்தப் பெருமையின் காரணமாகத்தான் இந்த மணவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் விளக்கிக் கூறினேன். மணவிழாவிற்கு சென்னையைச் சேர்ந்த பல்வேறு கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தஞ்சை மன்னார்குடி குமாரசாமி திருமண அரங்கில் 24.4.1998 அன்று இராயபுரம் திராவிடர் கழக இளைஞர் அணித் தோழர் இரா.சேதுராமனுக்கும், சோழங்கநல்லூர் பெரியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் வி.பியூலா சுகந்திக்கும் வாழ்க்கை ஒப்பந்த ஏற்பு விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். இவ்விழாவில் கனடா கேபோட் பல்கலைக்கழக பன்னாட்டுத் தொடர்பாளர் எலைன் ஹாட் கலந்துகொண்டு, பெரிதும் வியந்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். விழாவில் சிறப்புரையாற்றுகையில், சுயமரியாதைத் திருமணங்களின் தேவையைப் பற்றி எடுத்துக் கூறி உரையாற்றினேன். பல்வேறு கட்சியின் முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

திருச்சி கரூரில் சென்னை கோட்டூர்புரம் பழனிச்சாமி _ சம்பூரணம் ஆகியோரின் செல்வன் ப.கவுதமனுக்கும், சென்னையைச் சார்ந்த கோவிந்தசாமி _ அம்சவேணி ஆகியோரின் செல்வி புஷ்பலதாவுக்கும் கரூர் பிரேம் மகாலில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 26.4.1998 அன்று நடைபெற்றது. இந்த ஒப்பந்த விழாவில் கலந்துகொண்டு தலைமையேற்று நடத்தினேன். மணமக்கள் இருவரையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினை பின்பற்றிக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து நடத்தி வைத்தேன். விழாவின் சிறப்புரையின்-போது ஏராளமான கழகத் தோழர்கள், “கீதையின் மறுபக்கம்’’ நூலை ஆர்வமாக மேடையில் வந்து பெற்றுச் சென்றனர். மணவிழாவிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை பெரியார் திடலில் கழகத் தோழர்களின் சுயமரியாதைத் திருமணங்களை 27.4.1998 அன்று தலைமையேற்று நடத்தி வைத்தேன். இத்திருமண நிகழ்வு ஜாதி மறுப்பு திருமணங்களாக எளிய முறையில் நடைபெற்றது. நான்கு ஜோடி மணமக்கள் கி.முல்லைவேந்தன் _ கனகரத்தினம், கி.சேகர் _ மு.வெ.நிர்மலா, கி.இந்திரா _ கவிஇரவீந்திரன், சுஜாதா _ சாமிநாதன் ஆகியோரை வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ள வைத்து விழாவினை நடத்தி வைத்தேன். விழாவில் உரையாற்றுகையில், “ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுடைய குழந்தைகளுக்கு அரசு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒரு சில ஆண்டுகளிலேயே ஜாதிப் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்’’ என எடுத்துக் கூறினேன். விழாவிற்கு சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து கழகத் தோழர்களும், உறவினர்களும் வந்திருந்தனர்.

புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழாவாக சென்னை பெரியார் திடலில் 29.4.1998 அன்று சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்நாட்டில் பல துறைகளில் சிறந்து சேவையாற்றிவரும் அறிஞர் பெருமக்களுக்கு ‘தந்தை பெரியார் விருது’ கொடுத்து கவுரவித்தோம். மருத்துவத்-துறையில் ஜே.ஜி.கண்ணப்பன், எழுத்துத் துறையில் ம.இலெனின் தங்கப்பா, திரைத்-துறையில் நடிகை எம்.என்.இராஜம், சிறுவர் விளையாட்டுப் பிரிவில் நீச்சல் வீராங்கனை இராகவி ஆகியோருக்கு முறையே விருது கொடுத்தும், சால்வை அணிவித்தும் பாராட்டி-னோம். விருது பெற்றவர்கள் சிறப்புரை-யாற்றினார்கள்.

அந்த மேடையிலேயே, மணவிலக்குப் பெற்றவருக்கு மறுவாழ்வு அளிக்கும் சுயமரியாதைத் திருமணமும் நடைபெற்றது. மதுரை பாண்டிகோயில் முனியசாமி _ பொன்னுத்தாய் ஆகியோரின் செல்வி பசும்பொன் செல்விக்கும், வந்தவாசி மேட்டுக்குடியைச் சார்ந்த சண்முகம் _ கமலம்மாள் ஆகியோரின் செல்வன் சேகருக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி மொழியினை கூறச் செய்து மண விழாவினை நடத்தி வைத்தேன்.

விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகப் பொருளாளர் திண்டிவனம் து.வாசுதேவன் _ கவுசல்யா தேவி ஆகியோரின் செல்வன் வி.கமலநாதனுக்கும், சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஏ.பி.தேவராசன்_சிநேகபிரபா ஆகியோரின் செல்வி டி.லட்சுமிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா சென்னையில் 3.5.1998 அன்று தலைமையேற்று நடத்தி வைத்தேன். மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியினை பின்பற்றிக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். மணவிழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஜி.வெங்கட்ராமன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.   

தமிழ் அறிஞரும், தமிழில் பல அரிய சொற்களைத் தோற்றுவித்தவரும், ‘கூரியர்’ பத்திரிகை ஆசிரியருமான நண்பர் மணவை முஸ்தபா அவர்களின் மகள் திருமண விழா சென்னையில் 3.5.1998 அன்று மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு மணமக்கள் டாக்டர் கே.எம்.சையத் மீராசா _ வகீதா ஆகியோரை வாழ்த்தினேன். இவ்விழா-வில் கழகத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட தி.க. செயலாளர் பி.பி.இராசு இல்ல மணவிழாவை 10.5.1998 அன்று தலைமையேற்று நடத்திவைத்தேன். பி.பி.இராசு _ பாப்பா ஆகியோரின் செல்வன் இரா.அறிவழகனுக்கும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சன்னாசி _ பாப்பாத்தியம்மாள் ஆகியோரின் செல்வி ச.பிரகலதாவுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி-மொழியினை பின்பற்றிக் கூறச் செய்து, மாலை மாற்றிக்கொள்ளச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். இம்மணவிழாவில் ஏராளமான திராவிடர் கழகத் தோழர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து-கொண்டனர்.

கழகத்தின் சமூகநீதி மாநாடு மற்றும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடும் ஈரோட்டில்  மே 15, 16 ஆகிய நாள்களில் மிகுந்த எழுச்சியுடனும், சிறப்புடனும் நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் சமூகநீதித் தலைவர்கள் வந்திருந்தனர். ஈரோடு சி.எஸ்.அய் பள்ளித் திடலில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் மாநாட்டுப் பந்தலை தோழர்களின் வேண்டு-கோளுக்கு இணங்க திறந்து வைத்து மாநாட்டைத் துவக்கி வைத்தேன். முதல் நிகழ்வில் ‘சமூகநீதிக் கருத்தரங்கம்’ என்னும் பொருள் பற்றி அறிஞர் பெருமக்கள் ஆய்வுரைகள் வழங்கினர். மாலை நடைபெற்ற தீர்மான அரங்கில் தமிழ்நாட்டின் நலனை மய்யப்படுத்தி முக்கியத் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அவற்றுள் முக்கியமாக, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வழிவகை செய்யும் வேண்டுகோள், மதச்சார்-பின்மையைக் காப்பாற்றுக! நீதிமன்றங்-களில் சத்தியப் பிரமாணம் கீதை மீது வாங்கக் கூடாது, சாமியார்களைக் கண்காணிக்க அதிரடிப்படை உள்ளிட்ட சில தீர்மானங்களாகும்.

இரவு நடைபெற்ற விழாவில் _ பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில், ‘வீரமணி சமூகநீதி விருது’ வழங்கும் நிகழ்வில் _ அகில இந்திய காங்கிரஸ் மேனாள் தலைவர் சீதாராம் கேசரி அவர்கள் கலந்துகொண்டு அவ்விருதினை சமூகநீதித் தலைவர் சந்திரஜித் யாதவ் அவர்களுக்குக் கொடுத்தார். விருது நாயகர் சந்திரஜித் அவர்கள் உரையாற்றுகையில், “பெரியார் பிறந்த மண்ணிலிருந்து இந்த விருதினைப் பெறுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். தந்தை பெரியார் உலகுக்குக் கொடுத்த செய்தியை நாலா திசைகளுக்கும் எடுத்துச் செல்வோம். நம் எதிரிகளின் சூழ்ச்சிகளை, வஞ்சகங்களை முறியடிப்போம்’’ என மாநாட்டில் கலந்துகொண்ட தோழர்-களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.

சிறப்பு அழைப்பாளர் சீதாராம் கேசரி அவர்கள் நிறைவுரையாற்றுகையில், “நான் நினைத்துப் பார்க்கிறேன். இந்த நாட்டிலே இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்களுடைய, அடக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளுக்காக, சமூகநீதிக்காக இந்தியாவில் பாடுபட்டவர்களில் தந்தை பெரியார் அவர்களைவிட யாரேனும் இருக்கிறார்களா! என்று எண்ணிப் பார்க்கிறேன். தந்தை பெரியார் அவர்களைவிட, வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அதுபோல தந்தை பெரியார் அவர்களுடைய நிறுவனத்தைக் கட்டிக் காத்தும், சமூகநீதிக்காகப் போராடிக் கொண்டும் இருக்கிற ஒரே மனிதராக இந்தியாவில் ஒரு முன்னணி வீரராக நான் பார்ப்பது நண்பர் வீரமணி அவர்களைத்-தான்!

கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக ஜாதியின் கொடுமையால் நாம் பாதிக்கப் பட்டிருக்கின்-றோம். அந்த ஜாதி அமைப்பு முறையைத் தான் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கட்டிக்காக்க விரும்பு-கின்றார்கள். நாமெல்லாம் இந்துக்களா? நான் ஓர் இந்துவே அல்ல; என்னைப் பொறுத்த-வரைக்கும் நான் இந்து என்று சொல்லிக்-கொள்ள மாட்டேன்’’ என பல்வேறு சமூகநீதிக் கருத்துகளை எடுத்துக் கூறினார்.

மாநாட்டில் எனது சிறப்புரையில், “வடபுலத் தலைவர்கள் எல்லாம் தந்தை பெரியார் அவர்களை விட்டால் சமூகநீதிக்கு நாதியே கிடையாது _ பெரியார் தத்துவம் ஒன்றுதான் நமக்கு விடியலைத் தரும் _ என்ற உணர்ச்சியைப்  பெற்றிருக்கின்றார்கள் என்று சொன்னால், அவர்கள் எல்லாம் இந்த இயக்கத்திற்கு கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்களாக இருந்து பணியாற்றுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி அனைத்துத் துறைகளிலும் இருக்கின்றார்கள். அனைத்துக் கட்சிகளிலும் இருக்கின்றார்கள்.

எங்களுடைய மாநாட்டுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். சங்கராச்சாரியாரே இங்கு வரலாம். எனக்கு ஒரு சால்வை போர்த்த வேண்டும் என்று சங்கராச்சாரியார் விரும்பினால், போர்த்துங்கள் என்று சொல்வோம். அதனால் கடவுள் உண்டு என்று  சொல்வோமா? கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று அழுத்தமாகத் தானே சொல்லுவோம்! சமூகநீதிப் பணியில் கழகத்தின் பணி எப்போதும் நிலையாகத் தொடரும்’’ என கழகத்தின் நிலைப்பாட்டினை வலியுறுத்தி உரையாற்றினேன்.

முன்னதாக மாநாட்டு மேடையில் இரு இணையர் மணவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் தெய்வசிகாமணி _ டாக்டர் காளியம்மாள் ஆகியோரின் செல்வி மலர்விழிக்கும், வெள்ளரிப்பட்டி இராமசாமி _ பழனியம்மாள் ஆகியோரின் செல்வன் இரா.மணிக்கும், சோலையார்பேட்டையைச் சேர்ந்த குழந்தை _குழந்தையம்மாள் ஆகியோரின் செல்வன் இராசேந்திர-னுக்கும், பெங்களூரைச் சேர்ந்த மாணிக்கம் _இராணி ஆகியோரின் செல்வி இராணிக்கும், வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினைப் பின்பற்றிக் கூறச் செய்து, மணமக்களை மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 1000மாவது நிகழ்ச்சி நிறைவு விழா மலரை நான் வெளியிட மேனாள் மத்திய அமைச்சர் சீதாராம் கேசரி பெற்றுக்-கொண்டார்.

மாநாட்டின் இரண்டாம் நாள் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடாக நடைபெற்றது. அதில், “கீதையின் மறுபக்கம்’’ ஆய்வரங்கத்தில் வழக்குரைஞர்கள் அருள்மொழி, கீதாலயன் ஆகியோர் உரையாற்றினர். இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான உரைவீச்சும் நடைபெற்றது. மாலை “பாலியல் நீதிக் கருத்தரங்கம்’’ அறிஞர் பெருமக்களின் உரை வீச்சுடன் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டு மேடையில் பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு சி.நடேசனார், பெரியார் அவர்களின் தங்கை மகன் எஸ்.ஆர்.சாமி, தெற்கு மாவட்ட தி.க. துணைத் தலைவர் இல.பெருமாள், பெரியார் பெருந்தொண்டர் என்.இ.பாலகுரு, வெள்ளக்-கோவில் ரெங்கநாயகி அம்மாள் ஆகியோருக்கு கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்து, ‘பெரியார் விருது’ வழங்கி சிறப்பித்தோம்.

நூல் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் மஞ்சை வசந்தனின், ‘பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை’, ‘பார்ப்பனத் தந்திரங்கள்’ ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன. அதனை மகளிரணிச் செயலாளர் க.பார்வதியும், மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் நாராயணசாமி (புதுவை) அவர்களும் பெற்றுக்கொண்டனர். முதன்முதலில் சிறுவர்களுக்கான “பெரியார் பிஞ்சு’’ இதழை இரு மாதத்துக்கு ஒரு முறையென வெளியிட்டோம். அதனை குழந்தைகள் பெற்றுக் கொண்டனர்.

அடிமைத்தளையை நீக்கும் வகையில் சாமி.அய்யா _ செல்வி தம்பதிகளின் தாலி அகற்றும் நிகழ்வும் நடைபெற்றது. அவர்களைப் பாராட்டி சிறப்பித்தோம். நிறைவாக மாநாட்டுக்காக அரும்பணியாற்றிய கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களைப் பாராட்டி கவுரவித்தோம். ஈரோடு சமூகநீதி மாநாடும், திராவிடர் கழக இளைஞரணி மாநாடும் கழகத்தின் பணியினை இன்னும் விரைவுபடுத்தும் வகையில் உத்வேகத்தையும், ஊக்கத்தையும் தோழர்களுக்கும் பொறுப்பாளர்-களுக்கும் வழங்கியது.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *