தலையங்கம் : ம.பி.யில் ஆதிசங்கரருக்கு அரசு செலவில் ஆடம்பரமா? மதச்சார்பின்மை காற்றில் பறக்கிறது!

ஜனவரி 16-31,2022

மத்தியப் பிரதேசத்தில் சவுகான் தலைமையில் இன்று நடைபெறும் பா.ஜ.க. ஆட்சி, பொதுத் தேர்தலில் பெருவாரியான மக்கள் வாக்குகளைப் பெற்று அமைந்த ஆட்சி அல்ல; காங்கிரஸ் ஆட்சிதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி. அதனைக் கவிழ்த்து, ‘ஆயாராம், காயாராம்’ குதிரை பேர எம்.எல்.ஏக்கள் மூலம் கமல்நாத்  தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தே ஓர் ஆண்டுக்கு முன்பு ஆட்சி அமைந்த அரசு.

அதில் அப்பட்டமான ஹிந்துத்துவா ஆட்சியை அவர்கள், பசு பாதுகாப்பில் தொடங்கி, 9.1.2022 அன்று விசித்திர அறிவிப்பாக ஆதிசங்கரருக்கு 108 அடி உயர உலோகத்திலான சிலை, 54 அடி பீடம் -_ 2000 கோடி ரூபாய் செலவில் காட்சியகம் (மியூசியம்) _ குருகுலம் _ மதப் பயிற்சி நிலையம் என்றெல்லாம் மத்தியப் பிரதேச அரசு செலவில் செய்யவிருப்பதை அந்த முதல் அமைச்சர் சவுகான் (பாஜ.க.) கூறியிருக்கிறார்!

மத்தியப் பிரதேச அரசு ஏற்கெனவே இரண்டரை லட்சம் கோடி கடனில் தனது நிருவாகத்தை நடத்தும் ஓர் மாநில அரசு!

இந்த லட்சணத்தில் ஆதிசங்கரருக்கு அங்கே சிலை _ காட்சியகம் எல்லாம்! பா.ஜ.க.வின் கட்சிச் செலவில் அவர் செய்ய முன்வந்தால் அதுபற்றி நாம் கவலைப்படப் போவதில்லை.

மக்கள் வரிப்பணத்தை எடுத்து _ அதுவும் கடனில் தத்தளிக்கும் ஒரு மாநில அரசு _ இத்தகைய டம்பாச்சாரி _ வீண் ஆடம்பரத்திற்கு செலவழிக்கப் போவதாகக் கூறுவது எவ்வகையில் நியாயமாகும்? வன்மையான கண்டனத்திற்கு ஆளாக வேண்டும்!

அரசின் மதச்சார்பற்ற தன்மை என்ற அரசியல் சட்ட நெறிமுறையைக் குழிதோண்டிப் புதைத்து அதன்மீது இப்படி _ வர்ணாசிரமத்தைப் பரப்பிடவே நாட்டின் நான்கு பகுதிகளிலும் சென்று மடங்கள் அமைத்து, ஜாதியை ஒழிக்கவும் பெண்ணடிமையை மாய்க்கவும் பகுத்தறிவை வளர்க்கவும் தோற்றுவிக்கப்பட்ட _ பரப்பப்பட்ட பவுத்தத்தை ஒழித்துக் கட்டிட முயற்சி எடுத்தார் ஆதிசங்கரர் என்பதைத் தவிர, அவரது சாதனை வேறு என்ன?

இன்று வற்புறுத்தப்படும் அனைவரையும் இணைக்கும் ‘Inclusive Growth’ ‘யாவரும் கேளிர்’ தத்துவத்திற்கு எதிராக வர்ண தர்மத்தைப் போதித்தவர் என்பதைத் தவிர வேறு என்ன?

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் விவேகானந்தர், ஆதிசங்கரரைப் பற்றி என்ன கூறியுள்ளார்?

‘அவரது அறிவு கூர்மையானதல்ல, அது மனித விரோதமானது, என்ற கருத்துப்படக் கூறவில்லையா? பின் இவருக்கு ஏன் இப்படி 2,000 கோடி செலவு. அதுவும் அரசுப் பணத்தில்!

தந்தை பெரியார் என்ற சமூகப் புரட்சியாளருக்கு அவரது அறக்கட்டளையின் மூலமாக, பொதுமக்களின் ஆதரவோடு ‘திருச்சி _சிறுகனூர் அருகே’ 30 ஏக்கர் நிலத்தில் பல்வேறு அறிவியல் அடிப்படையில் புது உலகத்தைக் குழந்தைகளுக்கும் போதிக்கும் வகையில் அமையவிருக்கும் ‘பெரியார் உலகம்’ பற்றி வாய் கிழிய வக்கணை பேசிய வம்பர்கள் இதுகுறித்து ஏன் மவுனம் சாதிக்கின்றனர். இவர்களையும் நாடும் உலகமும் புரிந்து-கொண்டால் இவர்களது இரட்டை வேடமும் பா.ஜ.க.வின் ஆரிய சனாதனப் பற்றும் அம்பலமாகும்.

– கி.வீரமணி,

ஆசிரியர், உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *