கவிதை : தமிழாண்டின் தொடக்கம் ‘தை’ யே!

ஜனவரி 1-15,2022

முனைவர் கடவூர் மணிமாறன்

நித்திரையில் கிடக்கின்ற தமிழா! நீயும்

               நெடுமரமா? எனப்புரட்சிக் கவிஞர் கேட்டார்;

சித்திரையா தமிழர்புத் தாண்டு? ஏனோ

               சிந்தனையின் மலடாகிச் சீர்கெட் டாயே!

எத்திக்கும் வாழ்கின்ற தமிழர் எல்லாம்

               ஏற்றுவிட்ட தைமுதலே தமிழ்ப்புத் தாண்டாம்!

பித்தரெனப் பிதற்றுவதில் பெருமை இல்லை;

               பீடுமிகு பகுத்தறிவை இழத்தல் நன்றோ?

 

 

குறுந்தொகையும் நற்றிணையும் பிறவும் நம்மோர்

               கோலமிகு தைத்திங்கள் சிறப்பைப் பாடும்;

சிறுமையினை விதைத்திட்ட ஆரியர்கள்

               செந்தமிழர் மரபினையே பழிக்க லானார்!

அறிவிலிகள் ¨ஆணிருவர் புணர்ந்து பெற்ற

               அருஞ்சேய்கள் என்பார்கள் அறுப தாண்டை!

வெறியர்தம் பொய்க்கதையை ஏற்பார் இல்லை

               வீரமிகு தமிழினத்தின் மானம் காப்போம்!

 

மறைமலையார், திரு.வி.க, நாட்டார் அய்யா

               மாண்பார்ந்த பல்கலையின் செல்வர் கா.சு.

நிறைபுலமை கி.ஆ.பெ. மு.வ.போன்ற

               நிகரில்லாப் பேரறிஞர் எல்லாம் கூடிக்

குறைசொல்வோர் வாயடங்கத் தமிழ்ப்புத் தாண்டோ

               கூறுபுகழ் ‘தை’என்றே முடிவு செய்தார்!

அறுவடைநாள் உழவர்நாள்! ‘தை’பி றந்தால்

               அனைவர்க்கும் வழிபிறக்கும் என்றார் ஆன்றோர்!

 

செம்மாந்த புகழ்வாழ்வு தமிழர் வாழ்வு;

               சித்திரையோ வருத்துகிற கோடைக் காலம்;

நம்மண்ணை நம்மக்கள் மனத்தை எல்லாம்

               நாள்முழுதும் மகிழ்விக்கும் திங்கள் ‘தை’யே!

நம் உறவு நட்பினரைத் தைத்துச் சேர்த்தல்

               நவில்கின்ற ‘தை’எனும்சொல் மாட்சி ஆகும்;

வெம்பழிசேர் சித்திரையை ஏற்றுக் கொள்ளோம்

               வீறுடைநம் புத்தாண்டின் தொடக்கம் ‘தை’யே!

 

t ஆணிருவர் – கண்ணனும் நாரதனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *