தலையங்கம் : பொங்கலை ‘திராவிடர் திருவிழா’ என்று ஏன் அழைக்கிறோம்?

ஜனவரி 1-15,2022


ஆங்கிலப் புத்தாண்டு 2022 பிறந்துவிட்டது!
தமிழ்ப் புத்தாண்டு என்பது தை முதல் நாள் பொங்கல் முதலே என்பது அறிவார்ந்த தமிழ் அறிஞர்களின், திராவிடச் சிந்தனையாளர்களின் சீரிய கருத்து. 1935ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் கூடிய தமிழ்ப் பேரறிஞர்கள் ஒன்றுகூடி இதை உறுதிப்படுத்தினார்கள் என்பது மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாறு ஆகும்!

நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உன் புத்தாண்டு!
என்று தனது ஆழ்ந்த புலமையாலும் அறிவார்ந்த மொழி, இன நல உணர்வாலும் புரட்சிக்கவிஞர் முழங்கினார்!
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக் காரணமாக நமக்குச் சம்பந்தமில்லாத புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட, ஆரியப் பண்டிகைகளை _ விழாக்களைக் கொண்டாடினர், பண்பாட்டுப் படையெடுப்பில் சிக்கிச் சீரழிந்த நம் முன்னோர்கள்!
பெரியாரின் பகுத்தறிவுப் பண்பாட்டுப் புரட்சியால் இழந்தவைகளைப் பெற்று வருகிறோம். மீட்டுருவாக்கமும் செய்து மகிழ்கிறோம்.
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு ஏராளமான மறுக்க முடியாத வாதங்களையும் தரவுகளையும் அளித்துள்ள நிலையில், இன்னமும் சிலர், “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’ என்ற பழமொழிக்கொப்ப, புத்தாண்டு ஏப்ரல் 14 தான் முதல் நாள் என்று கூறுவது அவர்களது அறியாமையையும் வீண் பிடிவாதத்தையுமே காட்டுவதாக உள்ளது!
தமிழ் ஆண்டு என்று பெயர் கூறப்படும் 60 ஆண்டுக் கணக்கில்  ஒரு பெயராவது தமிழ்ச் சொல்லாக இருக்கிறதா? ஏன் இல்லை _ இப்போது புரியவில்லை _ பண்பாட்டுப் படையெடுப்புதான் என்பது!
இன்றும் சில ஆணவ ஆரியப் பல்லக்கு தூக்கிகள், நாம் உருவாக்கிய தமிழ் உணர்வை மூலதனமாக்கி அரசியல் பிழைப்பு நடத்துவோர்,
பொங்கல் திருநாளை, திராவிடர் திருநாள் என்று அழைக்கலாமா?
தமிழர் திருநாள் என்று அழைக்கலாமே என்று குதர்க்கவாதம் பேசி குறுக்குச் சால் ஓட்டுகின்றனர்!
ஏன், திராவிடர் திருநாள் என்று கூறுகிறோம்? பண்பாட்டுப் படையெடுப்பால், ஆரியப் பண்பாட்டை _ குலதர்மத்தைக்  காக்கவே பல ஆரிய பண்டிகைகள்! ஆனால், ‘பொங்கல்’ அப்படி அல்ல! இது உழவர் திருநாள்!
ஆரியப் பண்பாட்டின்படி, உழுவது பாபகரமான செயல் (மனுதர்மம், அத்தியாயம் 10, சுலோகம் 84)
‘உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி’ என்றும்,
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (குறள் 1033)
என்றும் கூறி, உழவைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் இரு வேறு எதிர் எதிர் பண்பாட்டு அடிப்படையில் ‘பொங்கல்’ உழவர் திருவிழா என்றும், திராவிடர் நாகரிகத்தை -_ பண்பாட்டினைப் பாதுகாக்கவே இந்த விழா எடுப்பதும் தனி முக்கியத்துவம் வாய்ந்தாகும்.
‘தமிழர்’ என்பதும், ‘திராவிடர்’ என்பதும் முரண் அல்ல. தமிழரைவிட ‘திராவிடர்’ என்பது பாதுகாப்பானது. பண்பாட்டு அடிப்படையில் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் சொன்னார், ‘தமிழன்’ என்று சொன்னால் பெருமை பெறுகிறேன்! ‘திராவிடர்’ என்று சொன்னால் உரிமை பெறுகிறேன்! என்று.
‘தமிழர்’ என்று சொல்லும்போது பார்ப்பனரும்  நாங்களும் ‘தமிழன்’ என்று சொல்லி உள்ளே நுழைவர். ‘திராவிடர் திருநாள்’ பொங்கலை பார்ப்பனர்கள் தீபாவளியைக் கொண்டாடுவது போல கொண்டாடுவதில்லையே!
அதையே ‘மகர சங்கராந்தி’ என்று திசை திருப்புகிறார்களே! எனவே, ‘தமிழர் திருநாளா? திராவிடர் திருநாளா?’ என்பது தேவையற்ற விவாதம்; கேள்வி எழுப்பி காலத்தை விரயமாக்குவது.
எதிரியின் ஆயுதம் பார்த்து அதற்குத் தக போர்முறையை வகுப்பதுதான் பெரியாரின் போர்முறை. நினைவிற்கொள்ளுங்கள்!
விழாக் கொண்டாடுவோம் அடக்கத்தோடு! _ இவ்வாண்டு ஒமைக்கிரான் தொற்று பரவல் அச்சத்திற்கேற்ப.
‘உண்மை’ தொடங்கி 52 ஆண்டுகள் ஆகி இன்று ‘உண்மைக்கு’ப் பிறந்த நாளும்கூட! வாழ்த்துச் சொல்லுங்கள் _ சந்தாக்களைத் திரட்டுவதன் மூலம்!
நன்றியுடன்
 – கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *