சமூகநீதி நாள் உரை : அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூகநீதி! (2)

டிசம்பர் 16-31,2021

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் சமூகநீதி விழாவில் ஆசிரியரின் சிறப்புரை.

இன்றைக்குத் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்பது _ திராவிடர் திருவிழாவாக அருமையாக நம்மால் இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் கொண்டாடப்படக் கூடிய விழாவாக அமைந்திருப்பது இந்த ஆண்டினுடைய சிறப்பாகும்.

பாலியல் அநீதியையும் அகற்றவேண்டும்!

ஆகவேதான், பாலியல் நீதி உறுதிப்பட வேண்டும் என்பது போன்று _ பாலியல் அநீதியையும் அகற்றவேண்டும் என்பதுதான் சமூகநீதி என்பதாகும்.

அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லும் பொழுதே, பெரியாரால் பயன்படாதவர்கள் யாராவது, தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் ஒருவரைக் காட்ட முடியுமா?

பெரியார் கொள்கையால், பெரியார் தொண்டால் பயன்படாதவர்கள் யாராவது இருக்கிறார்களா?

உடனே நீங்கள் சொல்வீர்கள், பார்ப்பனர்கள் இருக்கிறார்களே, என்று.

அவர்கள்தானே பெரியாரால் அதிகம் பயன்பட்டு இருக்கிறார்கள். அதை அவர்களே சொல்லியிருக்கிறார்களே.

காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன்

காவல்துறை ஆணையராக ராதாகிருஷ்ணன் என்ற நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பார்ப்பனர்.

திராவிடர் கழகத் தலைவராக அன்னை மணியம்மையார் அவர்கள் இருந்தபொழுது, காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் மகளுக்கு அமெரிக்காவில் திருமணம் நடந்தது; திருமண வரவேற்பு சென்னை ஏ.வி.எம். திருமண மண்டபத்தில் நடந்தது. எனக்கும், அன்னை மணியம்மையாருக்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.

நாங்கள் அந்த மணவிழா வரவேற்பிற்குச் சென்ற பொழுது, எங்களை அன்போடு வரவேற்றார். மணமக்களுடன் ஒளிப்படம் எடுத்துக்-கொண்டோம்.

நாங்கள் புறப்படும்பொழுது, ‘‘நீங்கள் வந்தது எனக்குப் பெருமையாக இருந்தது. அம்மா, சில பேர் நினைத்துக் கொண்டிருப்பார்கள் _ பெரியார் அய்யா, பார்ப்பனர்களுக்கு எதிரி என்று. அதுபோன்று கிடையாது. நான் அதை உணர்ந்து சொல்கிறேன். பெரியாரால் அதிகம் பயன்பட்டது நாங்கள்தான். ஏனென்றால், திருமணம் என்ற பெயரால், நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். இன்றைக்கு அந்த நிலை இல்லை; பெரியாரின் சிந்தனை யால்தான்’’ என்றார்.

சமூக அநீதியினுடைய கொடுமைகளை ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொருவரும் அனுபவித்து இருக்கிறார்கள்.

காந்தியார் அவர்கள் சுட்டுக் கொல்லப்-பட்டவுடன், காந்தியாரைக் கொன்றவன் கோட்சே என்ற மராத்தி பார்ப்பான் என்ற செய்தி பிறகுதான் வந்தது. முதலில், காந்தியாரைச் சுட்டுக்கொன்றவன், முஸ்லிம் என்று ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டார்கள். அது உண்மை இல்லை என்று அய்யா அவர்கள் வானொலியில் உரையாற்றினார்.

அப்பொழுது மொரார்ஜி தேசாய் பம்பாயில் உள்துறை அமைச்சராக இருக்கிறார். அவருடைய ஆட்டோ பயாகிரபி என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி அறிந்தவுடன், நாசிக் போன்ற பல இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. அக்கிரகாரங்கள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டன _ கோட்சே, மராத்தி பார்ப்பனன் என்பதற்காக.

ஆனால், தமிழ்நாட்டில் ஒரு சிறு கலவரம் நடந்ததா? காரணம் என்ன? பெரியார்தான் காரணம்.

எங்கள் இயக்கத்தினால், யாருக்காவது ஆபத்து ஏற்பட்டிருக்கிறதா?

இந்த இயக்கத்தினால், யாருக்காவது வன்முறை யினால் ஆபத்து ஏற்பட்டது என்று சொல்ல முடியுமா?

மதவெறியின் காரணமாக, கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போய் பாபர் மசூதியை இடித்தவர்கள் யார்?

இன்னுங்கேட்டால், கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள், இதுவரையில் எந்தக் கோவிலையும் இடித்தது இல்லை.

கடவுள் உண்டு என்று சொல்பவர்கள்தான், கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போகிறார்கள். என் கடவுள் இங்கே பிறந்தார், அங்கே பிறந்தார் – என் கடவுள்தான் முக்கியம் என்று சொல்லி.

மூன்று பேருக்கு என்ன பங்கோ அதை அனுபவியுங்கள்!

ஆகவேதான், பெரியாருடைய சமூகநீதி சிந்தனை என்பது அனைவருக்கும் அனைத்தும் என்பதாகும்.

பார்ப்பனர்களா?

அவர்களுக்கும் பங்கு உண்டு.

நூற்றுக்கு மூன்று பேர் இருக்கிறீர்கள் அல்லவா, மூன்று பேருக்கு என்ன பங்கோ அதை அனுபவியுங்கள் என்றார் அய்யா.

97 பேருடைய பங்கை நாங்கள் அனுபவிப்போம் என்றால்,  exploitation – Social Monopoly சமூகத்தில் நீங்கள் ஆதிக்கம் செலுத்துகிறீர்கள் என்று அர்த்தம் என்று சொன்னார்.

எனவேதான், சமூகநீதி என்பது இருக்கிறதே, அது சமூக அநீதியை விரட்டி – அதற்கு மாற்று. அதைத்தான் தந்தை பெரியார் இட ஒதுக்கீடாக செய்தார்.

அந்த இட ஒதுக்கீடு ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ் வொரு வகையாக இருந்தது; இன்றைக்கு அது தொடர்ந்து வருகிறது. இதை அவர்களால் தாங்க முடியவில்லை. அவ் வளவுதானே தவிர, இன்னமும் அவர்களுடைய எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இன்னமும் ஆதிக்கம் இருக்கிறது.

ஒன்றிய அரசில், 27 சதவிகிதத்தைப் போராடிப் பெற்றோம். ஆனால், நடைமுறையில் 27 சதவிகிதம் வரவில்லையே. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் தெரிந்துகொண்டோம்.

ஏமாற்று வேலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தான் திராவிட மாடல்!

இந்த ஏமாற்று வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற இயக்கத்திற்கும், ஆட்சிக்கும் பெயர்தான் திராவிட ஆட்சி _ திராவிட மாடல்.

இதனால்தான், அவர்களுக்கு எரிகிறது _ கொதிக்கிறார்கள்.

அமெரிக்காவில் சமூகநீதிக்குப் பெயர் அஃபெர்மெட்டிவ் ஆக்சன்.

மலேசியாவில், மண்ணின் மைந்தர்கள் என்பவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டில், சமூகநீதி ஒவ்வொரு பெயரால் இருக்கிறது.

இன்னொரு நாட்டில், காம்பன்சேட்ரி சோசியல் ஜஸ்டிஸ் என்று சொல்கிறான். ஏற்கெனவே இழந்ததை, சமப்படுத்துவதற்காக என்று சொல்கிறார்கள்.

எனவே, எல்லா இடங்களிலும் அந்தப் பிரச்சினைகள் வரக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு வாய்ப்புகள் வந்திருக்கின்றன.

எனவேதான், உறுதி மொழி எடுத்துக்கொண்டு, நம்முடைய பயணம் தொடரும் _ பயணங்கள் முடிவதில்லை.

சமூகநீதி நாள் என்பது இருக்கிறதே, அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்ததாக, நம்முடைய கோரிக்கைகள் இந்தியா முழுவதும் ஒலிக்கும்.

நீட் தேர்வின்போது ஆள் மாறாட்டம் ஆங்காங்கே நடைபெறுகிறது; ஒரு கேள்வித்தாள் விலையாக 35 லட்சம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால், அவர்கள் ஏழையா? அதற்காக எங்கள் பிள்ளைகள் தூக்கில் தொங்குவதா?

இதுதான் தகுதி, திறமையா?

ஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டவேண்டும்

இதையெல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி, ஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டவேண்டும் என்ற அவசியம் இருக்கிறது.

எனவே, சமூகநீதி நாளில் நாம் சூளுரைக்கிறோம். எஞ்சிய இந்தத் திட்டங்களையெல்லாம் செயல்படுத்துவதற்கு மாபெரும் மக்கள் இயக்கத்தை உண்டாக்குவோம்.

பெரியார் மக்களை நம்பினார்  _

மக்களோடு மக்களாக இருந்தார்கள் _

மக்களுக்காக வாழ்ந்தார்கள்.

நாமும் அந்தப் பயணத்தைத் தொடருவோம்! அனைவருக்கும் நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *