சுயமரியாதை நாள் டிசம்பர் 2 :அய்யாவின் அடிச்சுவட்டில் தொடர்க பல்லாண்டு!

டிசம்பர் 1-15,2021

இரா.முத்தரசன்

(மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,

தமிழ்நாடு மாநிலக்குழு)

திராவிடர் கழகத்தின் தலைவர் பெருமதிப்பிற்குரிய அய்யா ஆசிரியர், தோழர் கி.வீரமணி அவர்களுக்கு அகவை எண்பத் தெட்டு நிறைவுற்று எண்பத்தொன்பதில் அடியெடுத்து வைக்கும் இனிய நாளில் (02.12.2021) மேலும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம். அவர் நம் அனைவருக்கும் தொடர்ந்து நல்லாலோசனைகளை வழங்கி இச்சமூகம் மேம்பட, பகுத்தறிவுச் சிந்தனை வளர்ந்திட பேருதவி புரிய வேண்டும் என விழைகிறோம்.

இளம் பருவத்தில் தந்தை பெரியார் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அவரோடு இணைந்து கொண்ட ஆசிரியர் அன்று தொட்டு இன்று வரை, தந்தை பெரியாரின் கொள்கை அறிவாயுதம் கொண்டு உறுதியோடு களமாடி வருவது அறிவார்ந்த சமூகத்திற்குக் கிடைத்த நல்வாய்ப்பாகும்.

எத்தகைய சூழலிலும் கொள்கை நிலையில் சமரசம் என்கிற பேச்சுக்கு இடமளிக்காது கொள்கை வீரராக வலம் வருகின்றார்.

எவ்வளவு உயர்ந்த கொள்கை என்றாலும் அவை மக்களிடம் சென்றடையவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படவும், அது பவுதிக சக்தியாக மாறும் அளவுக்கு உயர்த்தப்படவும் தொடர் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியது மிக மிக முக்கியப் பணியாகும்.

அத்தகைய மகத்தான பணிகளை தந்தை பெரியார் மேற்கொண்டதைப் போன்றே, அவரது குருகுலத்தில் கசடறக் கற்றுத் தேர்ந்த ஆசிரியரும் தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அர்பணிப்பு உணர்வுடன், அயராது பணியாற்றி வருகிறார்.

வகுப்புவாத நச்சுப் பாம்பு படமெடுத்து ஆடுகின்றது. அப்பாவி மக்கள் ஆபத்தை உணராது பாம்புக்குப் பால் வார்ப்பது போன்று, சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், நபர்களும் வகுப்புவாதப் பேரபாயத்தை உணராது, அல்லது உணர்ந்தாலும் ஏதோ ஒரு வகையில் சுயநல ஆதாயம் பெறுவதற்கோ அல்லது எங்கிருந்தோ வரும் நிர்ப்பந்தகளுக்குப் பணிந்தோ சந்தர்ப்பவாத நிலை எடுப்பதையும் காண்கிறோம்.

வெள்ளையர் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஏதோ ஒரு நொடிப் பொழுதில் இல்லை. வெள்ளையனே வெளியேறு என்று உரக்கக் குரல் எழுப்பிட நமது நாட்டு மக்களுக்கு இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தேவைப்பட்டது.

அண்ணல் மகாத்மா காந்தியை பதுங்கித் தாக்கிப் படுகொலை செய்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ‘காந்திய சோசலிஸம்’ என்ற பசப்புத்தனத்தைக் கொள்கையாக அறிவித்தனர். மக்களை நம்பச் செய்து மதவெறி சக்திகளை அணிதிரட்டி நிதிமூலதன சக்திகளின் ஆதரவோடு நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ளனர். நாட்டின் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர் என அனைவரும் ஆர்.எஸ்.எஸ். குருபீடத்தால் ஆசீர்வதிக்கப்-பட்ட விசுவாசமிக்க சேவக்குகள். இதன் முகத்திரையைக் கிழித்து முறியடிக்க காலம் கொஞ்சம் பிடிக்கும் என்பது உண்மைதான்.

அவ்வளவு ஏன், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நம் நாட்டு விவசாயப் பெருமக்களுக்கு எதிராக, பெரும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாக நிறைவேற்றிய மூன்று சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்திட நமது விவசாயிகள் பெரும் போராட்டம் தொடர்ந்து நடத்தி 700க்கும் மேற்பட்ட விவசாயிகளைப் பலிகொடுக்க வேண்டிய துயர நிலை உருவானதை வாழும் காலத்தில் பார்க்கிறோம்.

தமிழ்நாடு உள்பட ஆறு மாநில சட்டப் பேரவைகளில் விவசாயிகள் விரோத, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றியதைக் கருத்தில் கொள்ளவும், பரிசீலிக்கவும் முன்வராத எதேச்சாதிகாரத்தைப் பார்க்கிறோம்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூரில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் மகன் தனது வாகனத்தை விவசாயிகள் மீது ஏற்றி நான்கு விவசாயிகள் உள்பட எட்டுப்பேரை படுகொலை செய்தார். இந்தக் கொடூரக் காட்சியைப் பதிவு செய்த ஊடகச் செய்தியாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நாட்டில் உள்ள பத்தொன்பது கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜ.க. ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கும், மக்கள் விரோதக் கொள்கைகளுக்கும், சட்டங்களுக்கும் எதிராக பத்து நாள்கள் நாடு முழுவதும் இயக்கம் நடத்தின.

அய்க்கிய விவசாயிகள் முன்னணியின் அழைப்பை ஏற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு என்று போராட்டம் தீவிரமடைந்தது.

இத்தனையும் நடைபெற்ற பின்னரும் அசையாது, வாய்திறக்காமல் அமைதி காத்து வந்த பா.ஜ.க. ஒன்றிய அரசு,

விவசாயிகள் போராட்டத்தை தேச விரோதிகள் நடத்துகின்றார்கள், எதிர்கட்சிகள் தூண்டி விடுகின்றன என்று அவதூறு பரப்புரை மேற்கொண்டது.

நகர்ப்புற நக்சலைட்டுகள் புகுந்து விட்டார்கள். சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மை மேல் நன்மைகள் உண்டு. அதிக விலை கிடைக்கும். இது புரியாமல் பிறர் தூண்டுதல்களுக்கு இரையாகிப் போராடு-கின்றார்கள் என்று அங்கலாய்த்துக் கொண்டது மோடி _ அமித்ஷா கூட்டணி.

“போராடும், விவசாயிகளுடைய மண்டையை உடையுங்கள்’’ என பாஜக முதலமைச்சர் ஒருவர் கட்சி அணிகளுக்கு உத்தரவிட்டார். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு, ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் இடைவிடாது நடத்திய தொடர் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது.

தாங்கள் கொண்டு வந்த வேளாண் வணிகச் சட்டங்களை திரும்பப் பெறுகின்றோம் எனச் சொல்லி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டிய நிர்பந்தம் மோடிக்கு ஏற்பட்டது. விவசாயிகள் ஒன்றுபட்ட போராட்டம் வெற்றி முழக்கம் எழுப்பி மேலும் முன்னேறி வருகிறது.

இதேபோல் மக்களைப் பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள் தொகை பதிவு கணக்குச் சட்டம்,

மின்சார சட்டத் திருத்த மசோதா 2020,

விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச விலைபெற சட்டபூர்வ உரிமை,

சுற்றுச் சூழல் தாக்க அறிவிக்கை 2020,

நீட் நுழைவுத் தேர்வு,

தேசிய கல்விக் கொள்கை என நீளும் பட்டியலாக கோரிக்கைகள் இருக்கின்றன,

இந்தக் கோரிக்கைகளெல்லாம் ஏதோ கால வளர்ச்சியில் இயல்பாக உருவான கோரிக்கைகள் அல்ல.

ஜனநாயகத்தில் கிஞ்சிற்றும் நம்பிக்கையற்று, உலகின் மிக பிற்போக்குத்தனமான சிந்தனை-யில் சர்வாதிகார வெறியோடு இனத்தூய்மை பேசிய வெறியன் ஹிட்லரின் பாசிசக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, இந்துத்துவா கற்பிதக் கருத்துகளை, மக்களைப் பிளவுபடுத்தும் மனுதர்ம சிந்தனைகளை, அரசியல் கருத்துகளாக அடையாளப்படுத்திச் செயல்பட்டு வரும் ராஷ்ட்டிரிய சுயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் செயலால் ஏற்படும் எதிர்விளைவுகளாக விளைந்த கோரிக்கைகளாகும்.

ஆசிரியர் அவர்கள் பலநேரங்களில் பொது நிகழ்ச்சிகளில், உலகில் தனது சொந்தக் கொள்கையை பகிரங்கமாகச் சொல்லாத அமைப்பு ஒன்று இருக்கு-மேயானால் அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு-தான் என்று தவறாது கூறிவருவதை வாழ்க்கை அனுபவம் மிகச் சரியானது என்று உணர்த்துகிறது.

ஒவ்வொரு அரசியல் கட்சியும், அமைப்பு-களும் தங்கள் கொள்கைகளை பகிரங்கமாக நூலாக அச்சிட்டு பொது மக்களுக்கு வழங்குகின்றது. ஆனால், ஆர்எஸ்எஸ் இயக்கம் தங்களது கொள்கையாக, இலட்சியமாக ஏற்றுக் கொண்டுள்ள மனுதர்மத்தை இதுதான் எங்கள் கொள்கை என்று பகிரங்கமாகத் தெரிவித்து நூல் வெளியிடுவதில்லை. இங்கே தனது முகத்தை மறைத்துக் கொள்கிறது. ஆனால், திராவிடர் கழகத்தில் அரசியல் நேர் எதிர் திசையில் செயல்படும் ஆர்எஸ்எஸ் அமலாக்கத் துடிக்கும் மனுதர்மத்தை அட்சரம் பிசகாமல் உள்ளது உள்ளபடி அசல் மனுதர்மத்தை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு வெளியிட்டு விற்பனை செய்து வருகிறது. அதில் உள்ள மனித விரோத, சமூக விரோதக் கருத்துகளையும்  சதிகளையும், புரட்டுகளையும் மக்களிடம் உணர்த்தி வருகிறது திராவிடர் கழகம்.

உண்மைகளை மறைத்து, பொய் ஒன்றையே தனது மூலதனமாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய ஆர்எஸ்எஸ் இயக்கம் பற்பல பெயர்களில் பல்வேறு அமைப்புகளை அமைத்து செயல்படுத்தி வருகின்றது.

அத்தகைய பிரிவுகளில் ஒன்றாக, அரசியல் பிரிவை உருவாக்கியது. அது கடந்த காலத்தில் இந்து மகா சபை மற்றும் ஜனசங்கமாகச் செயல்பட்டது. இன்று பாரதீய ஜனதா கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி நாயகன் _ நல்ல நாள்கள் வருகின்றன என்ற கற்பனைக் கட்டமைப்பை உருவாக்கி நாட்டை ஆளுகின்ற இடத்தைப் பெற்றுள்ளது.

ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்-களுக்கு வேலை வழங்கப்படும். இந்திய முதலாளிகள் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம் அந்நிய நாட்டு வங்கிகளில் பதுக்கப் பெற்றுள்ளது. அவற்றை மீட்டு, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 இலட்சம் செலுத்தப்படும் என்று வாய் கூசாமல் தெரிவித்தனர்.

இவற்றை எல்லாம் செயல்படுத்தவில்லை என்பது ஒருபுறம் இருக்க, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, “ஆட்சிக்கு வருவதற்கு என்ன வேண்டுமானாலும் வாக்குறுதிகளைக் கொடுங்கள் என்று எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பாடம் நடத்தியது. அதனை ஏற்றுத்தான் எங்களால் நிறைவேற்றிட இயலாது என்பது நன்கு தெரிந்தும் தயக்கமில்லாமல் வாக்குறுதிகளை வாரி வழங்கினோம்’’ என்று பகிரங்கமாகத் தெரிவித்தார். அவ்வாறு தெரிவித்தவர் எவ்வித கூச்ச, நாச்சமின்றி, அச்சமின்றி நம் நாட்டில் நடமாட முடிகின்றது.

பல்வேறு எதிர்பார்ப்புகளோடு உள்ள மக்களிடத்தில், தங்களின் சுயநல அரசியலை நிறைவேற்றிக் கொள்ள எத்தகைய பொய்யையும், தயக்கமின்றித் தெரிவிக்கக் கூடிய கூட்டம்தான் வகுப்புவாத ஆர்எஸ்எஸ் கூட்டம். அத்தகைய கூட்டம் அதிகாரத்தில் இருக்கின்றது என்பது மட்டுமல்ல, மிருக பலத்துடன் இருக்கின்றது.

அத்தகைய வாய்ப்புக் கிடைத்துள்ளதைப் பயன்படுத்தி தங்களின் குருபீடக் (ஆர்எஸ்எஸ்) கொள்கைகளை அரசின் சட்டபூர்வக் கொள்கைகளாகச் செயல்படுத்த அச்சமின்றி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

காலங்காலமாகப் போராடிப் பெற்ற சமூகநீதி பறிக்கப்படுகின்றது.

பன்னெடுங்காலமாக மனுதர்மத்தால் மறுக்கப்பட்டு வந்த கல்வி உரிமை தற்போது நீட், புதிய கல்விக் கொள்கை மூலம் சட்டபூர்வமாக மறுக்கப்படுகின்றது.

நூறாண்டு காலம் போராடி, உயிர்ப்பலி கொடுத்து, தொழிலாளி வர்க்கம் பெற்ற 44 சட்டங்கள் நான்கு நெறித் தொகுப்புகளாகச் சுருக்கப்பட்டு விட்டது.

நாடு எவர் தயவுமின்றி, தலைநிமிர்ந்து நிற்க மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சட்டபூர்வமாக தனியார் மயமாக்கப்படுகின்றன.

இந்தி, சமஸ்கிருதம் என்ற இருமொழி-களைக் காப்பாற்றிட பிறமொழிகள் நிராகரிக்கப் படுகின்றன.

ஒன்றிய அரசு வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அப்பட்டமாகப் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.

மாநில உரிமைகள் மறுக்கப்படுகின்றன

மாநிலங்களில் தங்களது கட்சியை ஆதரிக்காமல், பிற கட்சிகளை மக்கள் தேர்ந்தெடுத்தால் அம்மாநில மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடுகிறது. நிதி ஒதுக்கீட்டில் மாற்றான் தாய் மனப்போக்கைப் பின்பற்றுகிறது.

ஆளுநர்களைக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற அரசுக்கு எதிராகப் போட்டி ஆட்சி நடத்துவது.

அரசியல் அமைப்புச் சட்டம் அத்து மீறப்படுகின்றது.

நாடாளுமன்றம் புறக்கணிக்கப்படுகின்றது. ஜனநாயக முறையில் விவாதம் நடத்திடாமல், எதேச்சாதிகாரமாக மக்களுக்கு எதிராகச் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

நாட்டை வழிநடத்திட அரசியல் அமைப்புச் சட்ட அதிகாரத்துடன் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, கணக்கு மற்றும் தணிக்கைத் துறை போன்ற அமைப்புகளின் செயல்பாட்டில் தலையிட்டு, அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் துணைக் கருவிகளாகச் செயல்பட நிர்ப்பந்திக்கப்-பட்டு வருகின்றது.

நாட்டில் சிறுபான்மை மக்கள், பட்டியலின மக்கள், பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்-பற்ற நிலையும் அச்சத்துடன் வாழக்கூடிய அவலமும் உருவாகியுள்ளது.

மேற்கண்டவை மட்டுமின்றி இவை போன்ற இன்னும் எண்ணற்ற பிரச்சனைகள் உள்ளன.

இத்தகைய சூழலில் நமது மதிப்புமிக்க ஆசிரியரின் பிறந்த நாளை டிசம்பர் இரண்டாம் நாள் கொண்டாடி மகிழும் இந்நாளில் நமக்கு கவலைகளும் ஏற்படுகின்றன. கடமைகள் அழைக்கின்றன.

ஆசிரியர் எண்பத்தெட்டு அகவை நிறைவுற்று, எண்பத்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றார் என்று நாம் குறிப்பிடுகின்றோம்.

ஆனால் ஆசிரியர், தனக்கு வயது மூப்பு என்பது குறித்தோ, தனது உடல்நிலை குறித்தோ சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக பதினெட்டு, பத்தொன்பது வயதுடைய இளைஞரைப் போன்று, ஓடும் பாம்பை மிதிக்கின்ற வயது என்பார்களே, அவ்வாறு நினைத்து தமிழ்நாட்டை வலம் வந்து கொண்டு இருக்கின்றார். ஆசிரியரின் ஆர்வத்தை, கடமையை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியரைச் சந்திக்க அனுமதி கேட்டு, பெரியார் திடலில் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம்.

அப்போது உங்களிடத்தில் சில செய்தி-களைப் பேச வந்துள்ளோம் என்று நாங்கள் குறிப்பிட்டபோது,

ஆசிரியர், “பேசுங்கள், என்னிடம் குறையிருந்தால் கூறுங்கள், என்னைத் திருத்தவும், கண்டிக்கவும் சி.பி.அய்.க்கு (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) முழு உரிமையுண்டு’’ என்று மிகுந்த தோழமை உணர்வோடு உரிமை அளித்து ஊக்கப்படுத்தினார்.

இல்லை, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி செய்திகளைப் பகிர்ந்து கொண்டு சென்றோம்.

தற்போது, ஆசிரியர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கியுள்ள உரிமையைப் பயன்-படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாட்டின் நலன் கருதி விரும்புகின்றோம். ஆசிரியரைத் திருத்தவில்லை; கண்டிக்கவில்லை; உரிமை-யோடும் தோழமை உணர்வோடும் விடுக்கும் வேண்டுகோள்தான்.

ஆசிரியர் அவர் பொருட்டு, அவரது உடல்நலன் குறித்துக் கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் நாட்டுக்கும், நமக்கும், சமூகத்துக்கும் தேவை. நாட்டுக்கும் நமக்குமான தேவையை ஆசிரியர் ஏற்பார், ஏற்க வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

ஆசிரியர் இருந்த இடத்தில் இருந்தவாறு ஆணை இட்டால், இட்ட கட்டளையை ஏற்று செவ்வனே நிறைவேற்றி முடிக்கும் ஆற்றல் படைத்த இளைஞர்களும், மாதர்களும், தொண்டர்களும் திராவிடர் கழகத்தில் நிரம்ப இருக்கும் போது ஏன் கவலை கொள்ள வேண்டும்.

திராவிடர் கழகத் தோழர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடியவர்கள் அல்லர். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உணர்வுபூர்வமாக செயல்படக் கூடிய, சமுதாய மாற்றத்திற்காகத் தங்களை அர்பணித்துக் கொண்ட அரிய குணம் கொண்ட தோழர்கள் கருஞ்சட்டைப் பட்டாளமாக இருக்கும்பொழுது, ஆசிரியர் ஏன் கவலைப்பட வேண்டும்? ஆசிரியரின் வயது, உடல்நலம் இவற்றைக் கருத்திற்கொண்டு, சுற்றுப் பயணங்களைச் சுருக்கிக் கொள்ள வேண்டும் என்பதே நமது தோழமைப்-பூர்வமான அன்பான வேண்டுகோளாகும்.

வேண்டுகோளை மதிப்பிற்குரிய ஆசிரியர் உத்தரவாகக் கருதிட உரிமையோடு வேண்டுகிறோம்.

ஆசிரியர் மேலும் பன்னெடுங்காலம் வாழ்ந்து, சமூகப் பணிகளைத் தொடர்ந்திட, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு, தனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *