சமூகநீதி நாள் 17 : பெரியாரைப் படி, படி, படி!

அக்டோபர் 1-15,2021

முனைவர் வா.நேரு

தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று மதுரை மீனாட்சி அரசு கலைக்கல்லூரியில் ‘சமூகநீதி நாள்’ கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்  மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் பெற்ற பெரும்பலன் இந்த ஆண்டு சமூகநீதி நாள் கொண்டாட்டமாகும். தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்ற அவரின் அறிவிப்பு பத்தோடு பதினொன்று அல்ல. திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “செப்.17 என்ற எம் அறிவு ஆசானின் பிறந்த நாள் ‘சமூகநீதி நாள்’ என்ற அறிவிப்போடு அனைவரும் உறுதியேற்கும் நாளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் வாழுகிறீர்கள் -வரலாறாக’’ என்றும், ‘மகிழ்ச்சியோடு நம் பயணம் தொடர்கிறது’ என்றும் 17.9.2021 ‘விடுதலை’ அறிக்கையில் குறிப்பிட்டதுபோல மகிழ்ச்சியான பயணமாக மதுரை மீனாட்சி அரசு கலைக் கல்லூரிப் பயணம் அமைந்தது.

அரங்கம் நிறைந்த நிகழ்வு. பெண்கள் படிக்கும் கல்லூரி. மாணவிகள் தந்தை பெரியாரின் கொள்கையைக் கவிதையாகப் படித்தார்கள். எரிமலையாய் சொற்பொழிவில் வெடித்தார்கள். தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை கதையாகச் சொன்னார்கள். மாணவிகள் மட்டுமல்ல, பேராசிரியர்களும் பெருமை பொங்க, ‘நாமெல்லாம் இங்கு படிக்கவும், வேலை பார்க்கவும் காரணம் தந்தை பெரியார்’ என்பதனை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்னும் நூலைப் பற்றிப் பேசிய கல்லூரி முதல்வர் அவர்கள் “மாணவிகளே, இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துவிடாதீர்கள். கட்டாயமாகப் படியுங்கள். இதில் இருக்கும் புள்ளி விவரங்கள் மிகப் பெரிய அதிர்ச்சியை எனக்குக் கொடுத்தன. படியுங்கள்’’ என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

அரசு அலுவலகங்களில் பணியாற்றிய எங்களைப் போன்றவர்களுக்கு இந்த சமூகநீதி நாள் கொண்டாட்டம் _ கல்லூரிகளில், பள்ளிகளில், அரசு அலுவலகங்களில் என்பது எவ்வளவு பெரிய சாதனை என்று எளிதாகப் புரிகிறது. எண்ணி, எண்ணி மகிழ வைக்கிறது. “இதற்கு முன் நடைபெற்று இருக்கும் பிறந்த நாள் விழாக்களை தந்தை பெரியாரின் 143-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவோடு ஒப்பிடும்போது கூடுதல் சிறப்புகளும், தனித்தன்மைகளும் உண்டு. குறிப்பாக, சிறப்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் என்பது இனி ‘சமூகநீதி நாளாக’ அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்ததோடு, அந்நாளில் தலைமைச் செயலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதி மொழி எடுக்கப்படும் என்றும், தமிழ்நாடு சட்டப் பேரவையில் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட பிரகடனம் (6.9.2021) தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துக்கும் மேலானது என்றே கருத வேண்டும்’’ என்று ‘விடுதலை’ தலையங்கம் (17.9.2021) குறிப்பிட்டது போல, பொன்னெழுத்துக்கும் மேலான அறிவிப்பின் பலனை மதுரை மீனாட்சி அரசு கலைக் கல்லூரியில் நாங்கள் (நான், மதுரை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கவிஞர் சுப.முருகானந்தம், பொறியாளர் இராமச்சாந்திரன், முனைவர் பட்ட ஆய்வாளர் இராஜப்பிரியா ஆகியோர்) அனுபவத்தின் வாயிலாகக் கண்டோம்.

தந்தை பெரியார் வினையாற்றிக்கொண்டே இருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக தந்தை பெரியாரின் பிறந்த நாளுக்கு மறு நாள் எனக்கு வந்த ஓர் அலைபேசி அழைப்பு அமைந்தது. அலைபேசியில் ஒரு பெண், ‘அய்யா, வணக்கம். நான் முகில்நிலா பேசுகிறேன்’ என்றார். சட்டென்று யார் என்று எனக்குத் தெரியவில்லை. ‘அய்யா, பொள்ளாச்சி கூட்டத்தில் உங்களோடு வாக்குவாதம் செய்தேனே, அந்த முகில்நிலா’ என்றார். எனக்கு  நினைவுக்கு வந்தது. ‘சொல்லுங்கள் அம்மா’ என்றேன். அதோடு அன்று நடந்த நிகழ்வும் எனக்கு நினைவுக்கு வந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பொள்ளாச்சியில் ஓர் இலக்கியக் கூட்டம். மாதம் மாதம் இலக்கியக் கூட்டத்தை நடத்தும் தோழர் கவிஞர் பொள்ளாச்சி அபி அழைத்திருந்தார். சென்றிருந்தேன். பேசினேன். கூட்ட முடிவில் கேள்வி நேரம் பகுதியில் ஒருவர் தலித் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறை குறித்து கேள்வி கேட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஸ்வாதி கொலை செய்யப்பட்டது மிகக் கொடுமையான ஒன்று. ஆனால், அதனைப் போல பல தலித் பெண்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதனைப் பற்றி ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வன்புணர்வால் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் என்று  எடுத்துக் கொண்டால், ஒடுக்கப்பட்ட சமுதாயப் பெண்களின் பாதிப்பு மிக அதிகம். ஊடகங்களில் உயர்ஜாதிப் பெண்களுக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை ஒடுக்கப்பட்ட பெண்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பது உண்மைதான் என்று விளக்கம் கொடுத்தேன்.

கூட்டத்தில் உட்கார்ந்திருந்த முகில்நிலா மிகக் கோபமாக என்னிடம், ”அய்யா, பெண்கள் என்றால் எல்லோரும் பெண்கள்தானே? பாதிக்கப்படும் பெண்கள்தானே? அதில் ஏன் நீங்கள் தலித் பெண்கள், மற்ற பெண்கள் என்று பிரிக்கிறீர்கள்?’’ என்றார். நான் பதில் சொன்னேன். எனது பதிலில் அவருக்கு மன நிறைவு இல்லை. அப்போது நான், “தந்தை பெரியாரைப் படியுங்கள், உங்களுக்கு நான் சொல்வது மிக எளிதாகப் புரியும்’’ என்றேன்.

”ஏங்க, உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால், நீங்கள் தந்தை பெரியாரைப் படியுங்கள்  என்று சொல்கிறீர்கள்’’ என்றார். அவரிடம் உண்மைத் தன்மை இருந்தது. கூட்டம் முடிந்தவுடன் என் பையில் இருந்த பெரியார் எழுதிய புத்தகத்தை அவரிடம் என் கைப்பேசி எண்ணை மட்டும் எழுதிக்  கொடுத்துவிட்டு, ‘படியுங்கள்’ என்று சொல்லி விட்டு வந்துவிட்டேன். இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன.

அவர்தான் இந்த செப்டம்பர் 18ஆம் தேதி அழைத்திருந்தார். மிக மகிழ்ச்சியாக,  “அய்யா, இரண்டு இளைஞர்களுக்கு நான் விளக்கம் சொல்லிப் பார்த்தேன். அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் இருவரிடமும் பெரியாரைப் படியுங்கள் என்று நான் சொன்னேன். சொன்னவுடன் உங்கள் நினைவு வந்தது. அன்று கோபப்பட்டோம். பின்பு பெரியாரைப் படிக்க ஆரம்பித்தோம். இன்று நாமே அடுத்தவர்களிடம் சமூகத்தைப் புரிந்துகொள்ளப் பெரியாரைப் படியுங்கள் என்று சொல்கின்றோம் என்றவுடன் உங்கள் நினைவு வந்தது. செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்காக அழைத்தேன்’’ என்று கூறி உரக்கச் சிரித்தார். மகிழ்ச்சியாக இருந்தது. பெரியார் கிடைக்க வேண்டும். கிடைத்துவிட்டால் அதன் பயன் வெகு சீக்கிரம் உணரப்படும் என்பதற்கு இது எடுத்துக்காட்டாக இருந்தது.

தந்தை பெரியார் சாதாரண மனிதர்களின் உள்ளத்திலும் எப்படி ஊடுருவி இருக்கிறார் என்பதனை உணரும் ஒரு சம்பவமும் அதே நாளில் அமைந்தது. மதுரையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அதில் காவலாளியாக இருக்கும் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் வாய்ப்பு அமைந்தது. 70 வயதை ஒட்டிய வயதுகளில் இருப்பவர். அவருக்கு நான் முன்னால் அறிமுகமில்லை. நான் எந்த இயக்கத்தைச் சார்ந்தவன் என்பதும் அவருக்குத் தெரியாது. இராணுவத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இப்போது, மருத்துவமனையில் காவலாளியாகப் பணியாற்றுகிறேன் என்றார். பேசிக் கொண்டிருக்கும்போது போகிற போக்கில், “சார், நேற்று பெரியார் பிறந்த நாள் சார், நாமெல்லாம் படிக்க, வேலைக்குப் போக பெரியார்தான் சார் காரணம். பெரியார் பிறந்த நாளுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் போய் மாலை போட வேண்டாமா சார்? அரசியல் கட்சிக்காரங்க, அவங்க கட்சிக்காரங்க மட்டும்தான் மாலை போடணுமா சார்? ஒவ்வொரு வீட்டிலும் பலன் பெற்றவன் இருக்கிறான் சார். எல்லோரும் போகணும் சார்’’ என்றார். மதுரையில் இயக்கத் தொடர்பில் இல்லாதவர் அவர். மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருந்தது.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக, அன்று இரவு நமது நேரத்தில் எட்டு மணிக்கு நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சியில் _ காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். நிகழ்ச்சியைப் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் அய்யா டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, மாறுவேடப் போட்டி என்று குழந்தைகள் வயது வாரியாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மழலையர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் தந்தை பெரியார் பற்றிய கருத்துகளைக் கொட்டி முழங்கினார்கள். போர்ப்பறை அடித்தார்கள். இன்னிசையாகப் பாடினார்கள். சிலம்பம் ஆடி அசத்தினார்கள். அதில் நிகழ்வின் தொடக்கத்தில் பறை இசையை முழங்கிய பிரபு அவர்கள், “பெரியாரைப் படி, படி, படி, படி’’ என்று பாடிக்கொண்டே பறையை வாசித்தார்.

“காலையில் படி, கடும்பகல் படி,

மாலை, இரவு முழுவதும்

பெரியாரைப் படி, பெரியாரைப் படி’’

என்று பறையின் மூலமாக பிரபு முழங்குவதுபோல எனக்குத் தோன்றியது.

வட நாட்டில் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம், உலக அளவில் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம் என்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, கொள்கை விழாவாக நடைபெறுவது, ஜப்பான் போன்ற மொழிகளில், தந்தை பெரியார் போகாத மொழிகளில் எல்லாம் இப்போது போய்க் கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

மருத்துவமனையின் காவலாளி முதல் கல்லூரி முதல்வர் வரை தந்தை பெரியாரை நன்றியுடன் நினைவு கூர்ந்ததும், பலரும் தந்தை பெரியாரைப் படியுங்கள், படியுங்கள் என்று கூறியதும் நம் உள்ளத்தில் மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. மன நோயாளிகளாக இருக்கும் சிலர், தந்தை பெரியாரைப் பற்றி சமூக ஊடகங்களில் சொல்லப்பட்ட பொய்களையே மீண்டும், மீண்டும் சொல்லிச்சொல்லி தங்கள் மன நோயை நிருபித்துக் கொண்டிருக்கும் நிலையில், தந்தை பெரியார் மக்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் _ தனது தியாகத்தால், கொள்கையால், பெண் உரிமைக்கு வழி அமைத்ததால், ஜாதி ஒழிப்புக்கு பாதை வகுத்ததால் _ என்று எண்ணுகின்றபோது மகிழ்ச்சி பொங்குகிறது. அவதூறு கூறும் சிறு சதவிகித வீணர்களை அலட்சியப்படுத்துங்கள், தந்தை பெரியாரின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லுங்கள் என்று நம்மை வழி நடத்துவதோடு, நாளும் தந்தை பெரியாரைப் படிக்கும், பரப்பும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் வழியில் நாளும் தந்தை பெரியாரைப் படிப்போம். அவர் வழி நடப்போம். நாளைய உலகம் தந்தை பெரியாரின் கொள்கையில் அமைந்த நல் உலகம் என்பதற்கான முன்னோட்டம் தெரிகிறது. அதனை அடைய இன்னும் அதிகமாக  உழைப்போம்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *