சிறுகதை : சொந்த வீடு

அக்டோபர் 1-15,2021

 

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் முருகுமணி. பணி செய்த காலத்தில் மிகவும் நேர்மையான அலுவலர் என்ற பெயர் எடுத்தவர். தனது பணியைத் தவிர வேறு எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டார். அவரது துணைவியார் கோமதியுடன் வாடகை வீட்டிலேயே வசித்துவந்தார். அவர்களின் ஒரே மகளும் திருமணமாகி வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார்.

முருகுமணி ஓய்வு பெற்றவுடன் கணிசமான தொகை கையில் கிடைத்தது. அந்தத் தொகையை என்ன செய்யலாம் என அவர் யோசனை செய்தார். அவரது துணைவியார் கோமதிக்கு நீண்ட நாள்களாக ஒரு குறை இருந்தது. அதாவது தங்களுக்குத் திருமணமான நாளிலிருந்து வாடகை வீட்டில்தான் குடியிருந்து வருகிறார்கள். சொந்த வீடு என்பது இல்லை. அதனால் ஓய்வுத் தொகையைக் கொண்டு சொந்தமான வீடு வேண்டுமென விரும்பினார். தனது விருப்பத்தையும் முருகுமணியிடம் தெரிவித்தார்.

“உங்களுக்கும் சொந்தமாக வீடு இருக்கணும்கிற ஆசை இருக்கும்னு நெனைக்கிறேன்’’ என்று ஒரு நாள் பேச்சைத் தொடங்கினார்.

“இருக்கு. ஆனாலும், யோசனை செய்ய வேண்டியிருக்கு. வாடகை வீட்டில் நிம்மதியாகத் தானே இருக்கோம்’’ என்றார்.

“நமக்குன்னு ஒரு சொந்த வீடு வேணாமா? வேலையில் இருக்கும்போதே செய்திருக்கணும். இப்பவாவது செய்யுங்க’’ என்று ஆதங்கத்துடன் கூறினார் கோமதி.

“பிளாட் வாங்கி வீடு கட்டறதா அல்லது பழைய வீட்டை வாங்கலாமா?’’ என்று கேட்டார் முருகுமணி.

இதைக் கேட்ட கோமதி மிகவும் மகிழ்ந்தார். தனது எண்ணத்தை ஈடேற்ற வேண்டும் என்கிற சிந்தனை அவருக்கு வந்ததே பெரிய செயல் என நினைத்தார்.

“இடம் வாங்கி நாமே வீடு கட்டினால் நம் விருப்பப்படி சிறப்பாகக் கட்டலாம். வீடு வாங்கினால் நல்ல இடமாகப் பார்த்து வாங்கணும். எதுவும் எனக்குச் சம்மதம்’’ என்றார் கோமதி. முடிவை முருகுமணியிடமே விட்டுவிட்டார் கோமதி.

வீடு கட்டுவதைவிட வீடு வாங்குவதே நல்லது என்ற முடிவுக்கு வந்தார் முருகுமணி. காரணம், வீடு கட்டுவதைப் பற்றி அவருக்கு அவ்வளவாக எதுவும் தெரியாது, நிறைய அலைய வேண்டி வரும், வேலை அதிகமாக இருக்கும், தனி ஆளாக இருந்து அனைத்தையும் கவனிக்க முடியாது என்பது அவரது எண்ணம். மேலும், இனிமேல் பிளாட் வாங்கி வீடுகட்ட காலதாமதம் ஆகும் எனவும் நினைத்தார்.

அந்த நேரத்தில் முருகன் என்ற கட்டிடப் பொறியாளரை அவர் சந்திக்க நேர்ந்தது. நண்பர் ஒருவர் மூலம் அவர் அறிமுகமானார். ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டிக் கொடுப்பவர். அவரிடம் தன் எண்ணத்தைச் சொன்னார் முருகுமணி.

“அய்யா! பழைய வீடு வாங்காதீங்க. பிளாட் வாங்கி புதிதாக வீடு கட்டறதுதான் நல்லது. வாஸ்து முறைப்படி நாம் விரும்பியபடி கட்டிக்கலாம்’’ என்றார் முருகன். புதிய வீடு கட்டினால் தனக்கு ஒரு பணி கிடைக்கும் என்பது அவரது எண்ணம்.

புதிய வீடு கட்டுவதில் முருகுமணிக்கு விருப்பம் இல்லையென்றாலும் முருகன் சொன்ன வாஸ்து என்பதற்கு விளக்கம் அவருக்குத் தெரியவில்லை. அது என்ன வாஸ்து எனக் குழம்பியவாறே முருகனைப் பார்த்து, “வாஸ்துன்னு சொன்னீங்களே! அப்படின்னா என்ன? பழைய வீடுகளில் வாஸ்து இருக்காதா?’’ எனக் கேட்டார்.

“வாஸ்து சாஸ்திரம் பற்றி நீங்களும் தெரிஞ்சிக்கணும். வாஸ்துன்னா வீடு கட்ற நிலம், வாஸ்து சாஸ்திரம் அப்படிங்கிறது கட்டடக் கலை, நகர அமைப்பு சம்பந்தப்பட்ட நம் நாட்டின் பழமையான அறிவுத் துறையாகும் அய்யா. அதாவது வேதம் சார்ந்த அறிவுத் துறைன்னு சொல்லலாம்’’ என பதில் கூறினார் பொறியாளர் முருகன்.

“அதில் முக்கியமானதைக் கூறுங்களேன்’’ என்று கேட்டார் முருகுமணி.

“அதாவது வாசல் எந்தத் திசையில் இருக்க வேண்டும், சமையல் அறை, குளியல் அறை, கழிவறைகள் எங்கெங்கே இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் வாஸ்துவில் இருக்கும். கெட்டும் தெற்கு பார்த்த வீட்டிற்குப் போகாதே என்ற பழமொழிகூட உண்டு அய்யா’’ என்றார் முருகன்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் முருகுமணி. காரணம் அவர் பல ஆண்டுகளாகக் குடியிருக்கும் வாடகை வீடு தெற்குப் பார்த்த வீடுதான்.

“முருகன், நாங்க இப்ப குடியிருக்கிற வீடு தெற்குப் பார்த்த வீடுதானே! நாங்க நல்லாத்தானே இருக்கோம். இந்த வீட்டிற்கு யாரும் வராமல் இல்லையே! வந்தவங்க எல்லாம் நல்லாத்தானே இருக்காங்க. கெட்டுப் போகவில்லையே!’’

முருகுமணியின் இந்தப் பேச்சுக்கு பதில் ஏதும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றார் முருகன்.

மறுநாளும் முருகுமணியின் வீட்டிற்கு வந்தார் முருகன். எப்படியாவது அவரை வீடு கட்ட வைத்துவிட வேண்டுமென்று முடிவு செய்தார் முருகன். ஆனால், முருகுமணியோ மீண்டும் வாஸ்து பற்றி விளக்கம் கூறும்படி கேட்டார்.

“சுருக்கமா சொல்றேன். கேளுங்க’’ என்று கூறிய முருகன் வாஸ்து புராணம் பற்றி சொல்ல ஆரம்பித்தார். “சிவனின் நெற்றி வியர்வையிலிருந்து பிறந்த ஒரு பூதம் பசியால் துடித்து கண்டதைத் தின்றது. அந்தப் பூதம் தவம் செய்து பூமியை தனது கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென வரம் கேட்டது. சிவனும் வரம் கொடுத்துவிட்டார். ஆனால், பிரம்மாவும் தேவர்களும் அந்தப் பூதத்தை குப்புறத் தள்ளி அதை எழவிடாமல் மேலே உட்கார்ந்து கொண்டார்கள். பூதத்திற்கு பசித்ததால் பிரம்மா பூதத்திடம் பூமியில் பார்ப்பனர்களின் வைவஸ்தவ ஹோமத்தில் தரும் பொருள்களை சாப்பிடுமாறும், வீடு கட்டுபவர்கள் செய்யும் ஹோமத்தில் உள்ளவற்றை சாப்பிடுமாறும் சொல்லி விட்டார். பிரம்மா அந்தப் பூதத்திற்கு வாஸ்து எனப் பெயரிட்டார். பிறகு வாஸ்து புருஷன் என்று அழைக்கப்பட்ட மனையின் தலைவனான அவன் வருடத்திற்கு எட்டு முறை மட்டுமே தூங்கி எழுவான். எழுந்தவன் ஒன்றரை மணி நேரம் மட்டுமே விழித்திருப்பான். அவன் கண்விழிக்கும் நேரங்களில வீட்டுப் பணியைத் தொடங்கலாம். அதுவே வாஸ்து நாள், வாஸ்து நேரம் எனப்படும். வாஸ்து பார்த்துதான் நாம் எல்லாமே செய்யணும்’’ என்று கூறி முடித்தார் முருகன்.

“அதெல்லாம் வேண்டாம். விநாயகன் பிறப்பைப் போல கேவலமாக இருக்கு இந்த வாஸ்து புராணம். நம்ம வசதிக்கேற்ப வீடு கட்டவோ, வாங்கவோ செய்ஞ்சா போதும். இனிமே என்கிட்ட வாஸ்து என்கிற சொல்லை சொல்லவே வேண்டாம்’’ என்று முருகனிடம் கேட்டுக் கொண்டார் முருகுமணி.

அப்போது அங்கு வந்த கோமதி,

“வீடு வாங்கறது நல்லதா, கட்டறது நல்லதா அப்படின்னு பட்டிமன்றமே நடத்துவீங்க போலிருக்கே’’ என்றார்.

வீடு வாங்குவதே நல்லது என்ற முடிவை மீண்டும் தெரிவித்தார் முருகன். வீடு கட்டினால் தனக்கு நல்லது என நினைத்த முருகன் சற்றே ஏமாற்றமடைந்தார். இருப்பினும் வீடு வாங்கும் பணியாவது கிடைத்ததே என்ற மகிழ்வில் உடனே வீடு தேடும் பணியில் ஈடுபட முடிவு செய்தார்.

“அம்மா, வீடு எந்த ஏரியாவில் இருக்கணும், எவ்வளவு விலையில் இருக்கணும்?’’ என்று கோமதியிடம் கேட்டார் முருகன்.

கோமதிக்கு நீண்ட நாள்களாக மற்றொரு குறையும் இருந்தது. அதாவது அவர்கள் குடியிருந்த வீட்டிற்கு அருகில் கோயில் எதுவும் இல்லை. கோயிலுக்குச் செல்ல வேண்டு மென்றால் ஆட்டோ வைத்துக் கொண்டு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. ஆகவே, அவரது ஒரே கோரிக்கை _ வீட்டிற்குப் பக்கத்தில் கோயில் இருக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால், முருகுமணிக்கு அதில் கொஞ்சம்கூட நாட்டமில்லை. அவர் தனது வாழ்நாளில் கோயிலுக்கே சென்றதில்லை. ஜாதி, மதம், கோயில் என்று எந்தச் சிந்தனையும் இல்லாமல் தனது பணியிலேயே கண்ணாக இருந்தவர். கடவுள் கொள்கையில் அவருக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. கடவுள் பெயரால் நடக்கும் சுரண்டல்களை கேள்விப்பட்டு பல நேரங்களில் கோபம் அடைந்திருக்கிறார். ஆனால், கோமதி அவருக்கு நேர்மாறாகவே இருந்தார்.

தனது கோரிக்கையை முருகனிடம் வெளிப்படுத்தினார் கோமதி.

“நல்ல வீடா கோயிலுக்குப் பக்கத்திலேயே பார்த்து முடிச்சுடுறேன்’’ என்று கோமதியிடம் கூறினார் முருகன்.

சொன்னபடியே காரியத்தில் இறங்கிய முருகன் சில நாட்களிலேயே இரண்டு வீடுகளைப் பார்த்துவிட்டு முருகுமணியைச் சந்திக்க வந்தார்.

“இரண்டு வீடுகள் பார்த்திருக்கேன். ஒரு வீட்டிற்கு எதிரிலேயே கோயில் இருக்கு. இன்னொரு வீட்டிற்குப் பக்கத்தில் கோயில் எதுவும் இல்லை. ஆனால், வீடு நல்லாயிருக்கும். விலையும் குறைவு. நீங்க ரெண்டு பேரும் வந்து பாருங்க. பிடித்த வீட்டை முடிச்சிக்கலாம்’’ என்றார்.

“கோயிலுக்கு எதிரே உள்ள வீட்டையே பார்த்து முடிச்சுடலாம். கோயில் இல்லாத தெருவில் ஏன் வீடு பாத்தீங்க?’’ என்று கேட்டார் கோமதி.

“பார்த்துட்டேன். தேர்வு செய்ய வேண்டியது உங்க வேலை’’ என்று சொன்ன முருகன் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று இரண்டு வீடுகளையும் காட்டினார்.

இரண்டு வீடுகளையும் பார்த்தனர். கோயில் அருகில் இல்லாத வீடு நல்ல வசதியாகவும் காற்றோட்டமாகவும் விலை குறைவாகவும் இருந்தது. முருகுமணிக்கு மிகவும் பிடித்தது. ஆனால், கோயிலுக்கு எதிரில் உள்ள வீட்டையே கோமதி வாங்க விரும்பினார். அது அவ்வளவாக நன்றாகவும் இல்லை, காற்றோட்ட வசதியும் இல்லை, விலையும் அதிகமாகக் கூறப்பட்டது. ஆயினும் கோயில் மோகத்தில் இருந்த கோமதி விடாப்பிடியாக அந்த வீட்டையே வாங்க வேண்டும் என்றார்.

“தூங்கி எழுந்தவுடன் சாமி முகத்தில் விழித்தால் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்’’ என வேறு சில புரோக்கர்களும் கோமதியின் கோயில் ஆசைக்குத் தூபம் போட்டனர். வேறு வழியின்றி கோமதியின் ஆசையை நிறைவேற்றினார் முருகுமணி. வாங்கிய வீட்டில் ஒரு நாள் குடியேறவும் செய்தார்கள்.

நாள்கள் கடந்தன. கோமதி நாள்தோறும் காலையும் மாலையும் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டார்.

இந்நிலையில் கார்த்திகை மாதம் வந்தது. ஒரு நாள் காலையில் வெளியே வந்து பார்த்தபோது சிலர் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை கம்பங்களில் கட்டிக் கொண்டிருந்தனர். சில ஒலிபெருக்கிகள் நேரிடையாக கோமதி வீட்டை நோக்கியே இருந்தன. அந்தத் தெருவில் நீண்ட தொலைவிற்கு ஒலி பெருக்கிகளைக் கட்டினர். கட்டிமுடித்த சில நேரங்களில் உச்சகட்ட ஓசையுடன் பாடல்கள் போடப்பட்டன. வேலை வெட்டி இல்லாத ஒருவன் ஒலிபெருக்கியை இயக்கி விட்டுச் சென்றுவிட்டான். அன்று நாள் முழுவதும் ஒரே இரைச்சல். கோமதிக்கு தலைவலி எடுத்துவிட்டது. இரவிலும் ஒலிபெருக்கியை இயக்கித் தூங்க விடவில்லை. நாள்தோறும் இது தொடர்ந்தது. இரைச்சலுக்கு இடையில் முருகுமணியிடம் குரலை உயர்த்திப் பேசியதால் கோமதிக்குத் தொண்டை கட்டிக் கொண்டது. தூக்கமின்மையாலும் தலை வலியாலும் அவதிப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நெஞ்சு வலியும் அவரை ஆட்கொண்டு விட்டது. முருகுமணிக்கும் இதே நிலைதான்.

“இன்னும் எத்தனை நாள்களுக்கு இப்படி இரைச்சலில் இருக்க வேண்டும்?’’ என்ற ஒரு நாள் மருத்துவமனையில் முருகுமணியிடம் கேட்டார் கோமதி.

“கார்த்திகை, மார்கழி மாதம் முழுவதும் இப்படித்தானாம் பொங்கல் முடிந்துதான் ஒலிபெருக்கிகளைக் கழற்றுவார்களாம்’’ என்றார் முருகுமணி.

இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தார் கோமதி.

“சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோமே’’ என எண்ணி வருந்தினார்.

“சம்பந்தப்பட்டவங்ககிட்ட போய்க் கேட்டேன். சண்டைக்கு வந்துட்டாங்க. நீதானே கோயிலுக்கு அருகே வீடு கேட்டே! இப்போ புலம்பி என்ன பயன்?’’ என்றார் முருகுமணி.

“தப்புதாங்க. ஆனாலும் இதுக்கு தீர்வுதான் என்ன? நமக்குள்ள உணர்வு அந்தத் தெருவில் உள்ள மற்றவர்களுக்கு இல்லையா?’’ எனக் கேட்டார் கோமதி.

“இருக்கும். ஆனா பக்தி போதை அவங்க கண்களை மறைக்குது. பலரும் கேள்வி கேட்க துணிச்சல் இல்லாம மனசுக்குள் புழுங்கிக்கிட்டு இருக்காங்க. நாம என்ன பண்றது. பேசாம வீட்டை வித்திடுவோமா?’’ என்று எரிச்சலுடன் கேட்டார் முருகுமணி.

இதைக் கேட்ட கோமதி மிகுந்த ஆவேசத்துடன் பேசினார்.

“கூடாது. கூடவே கூடாது. இந்த அநியாயத்தை நாம் தட்டிக்கேட்டே ஆகணும். தெருவில் உள்ள மற்றவர்களிடமும் எடுத்துச் சொல்வோம். காவல் நிலையத்தில் புகார் கொடுப்போம். பிள்ளைகள் படிக்க முடியவில்லை. வயதானவர்கள் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. அரசாங்கத்தின் கவனத்திற்கும் இதைக் கொண்டு செல்வோம். புதிய அரசாங்கமும் அமைஞ்சிருக்கு-. நிச்சயம் நீதி கிடைக்கும்’’ என்று நம்பிக்கையுடன் கூறினார் கோமதி.

உடன் தாளை எடுத்து காவல்துறைக்கு விண்ணப்பம் தயார் செய்ய ஆரம்பித்தார் முருகுமணி!     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *