ஆசிரியர் பதில்கள்: மெத்தனம் இல்லா எச்சரிக்கை வேண்டும்!

ஏப்ரல் 1-15,2021

கே:       வாக்குவங்கியே இல்லாத ம.நீ.ம. கூட்டணி, தி.மு.க. வாக்குகளைப் பிரிக்கும் என்று ஊடகங்கள் ஊகிப்பது உள்நோக்கம் உடையதுதானே?

               – ம.வள்ளி, உத்திரமேரூர்

ப:           அருமையான பொறிதட்டும் கேள்வி. பல ஊடகங்கள் அத்தகையவர்களுக்கு வாக்குவங்கியை உருவாக்க, அபார விளம்பரச் சடகோபங்களைச் சாத்தி, உயர்த்திட முயற்சிக்கின்றன. வாக்காளர்களிடம் அந்தப் ‘பாச்சா’ பலிக்கப் போவதில்லை.

கே:       தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க. கூட்டணிக் கட்சியினர்க்கு தங்களின் அறிவுரைகள் எவை?

               – த.வெங்கடேஷ், பேரம்பாக்கம்

ப:           1.            கடைசி நேரத்தில் மெத்தனம் இல்லா எல்லையற்ற கவனம்.

               2.            வாக்குச் சாவடியில் முகவர்களை பா-.ஜ.க. கூட்டணி ‘அதிக விலை கொடுத்து _ அதுவும் தொலைதூர கிராமப் பகுதி வாக்குச் சாவடிகளில் _ விபீடணர்களுக்கான திட்டம்’ _ பீகாரில் நடந்தது பற்றிய எச்சரிக்கை.

               3.            கட்டுப்பாடு _ ஒருவருக்குத்தான் இடம் தர முடியும் -_ கிடைக்காதவர்களும் மனதில் எவ்வித தயக்கமோ, ஏமாற்றமோ இன்றி, அறிவித்த வேட்பாளர்களுக்கு  அனைவரும் கலைஞர் நிற்கிறார் என்றும், உதயசூரியன் ஆட்சிக்கு 234 தொகுதிகளில் பலத்த மெஜாரிட்டியுடன் வெற்றிபெற வைத்து, தங்களை உயர்த்திக் கொள்ளுவது அவசியம் _ அவசரம்!

கே:       பி.ஜே.பி தேர்தல் அறிக்கையில் மக்கள் விரோத திட்டங்களான ‘நீட்’ தேர்வு, புதிய கல்வித் திட்டம் போன்றவற்றை நிறைவேற்றுவோம் என்று கூறியிருப்பது தோல்வி துணிவிலா? கொள்கை உறுதியிலா?

               – வே.செல்வபெருமாள், சோத்துப்பாக்கம்

ப:           இரண்டையும் தாண்டி, அ.தி.மு.க. அரசின் கொத்தடிமையின் மீது பா.ஜ.க. வைத்திருக்கிற முழு நம்பிக்கையின் காரணமாக இப்படி ஒரு “விந்தையும் வித்தையும்!’’

கே:       அய்.நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானம் வென்றது பற்றியும், இந்தியா வாக்கெடுப்பில் பங்கு பெறாதது பற்றியும் தங்கள் கருத்தென்ன?

               – கோ.சீனுவாசன், சேலம்

ப.           வழக்கமான இரட்டை வேடம்; இலங்கை அரசுக்கு என்றும் நண்பன் பா.ஜ.க. அரசு என்பதன் ஒப்புதல் நடவடிக்கை; ஒப்பனை கலைந்தது; அவர்கள் மூலம் ‘விடியல் ஈழத் தமிழர்களுக்கு வராது’ என்பது புரிந்தது! கண்டனத்துக்குரியது.

கே:       மாஃபா பாண்டியராஜன் பற்றிய தி.மு.க. தலைவரின் மதிப்பீடு, அவர் எதிரிகளை அடையாளம் கண்டே வைத்துள்ளார் என்பதைக் காட்டுகிறதல்லவா?

               – து.மாரிமுத்து, திண்டிவனம்

ப.           நிச்சயமாக.  துரோகம் எங்கிருந்தாலும் எந்த ரூபத்திலிருந்தாலும் அடையாளம் காணப்பட வேண்டும். பல கட்சி மாறிய பகல் வேஷ தாசர்களின் பவிசு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

கே:       தேர்தல் களத்தில் தங்களின் நேரடி மதிப்பீடு மனமகிழ்ச்சியளிக்கிறதா?

               – நீ.பெரியார்சித்தன், அரியலூர்

ப:           அ.தி.மு.க., பா.ஜ.க.விற்கு எதிரான அலைவீசுகிறது; படுதோல்வியைப் பரிசாகத் தர வாக்காளர்கள் தயாராகிவிட்டார்கள்!

கே:       வெற்றிடம் என்று பிதற்றியவர்கள்கூட, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆளுமைமிக்க தலைவர் என்று இப்போது அறிவிப்பது ‘திராவிடம் வெல்லும்’ என்பதன் அடையாளம்தானே?

               – கு.சரவணன், ஓசூர்

ப:           ஆம். நாளைய வரலாறும் இதைச் சொல்லும்! நிச்சயமாக!

கே:       வைகோவுக்கு குறைவான இடங்கள் கொடுக்கப்பட்டதாக அன்புமணி இராமதாஸ் கவலைப்படுவதேன்?

               – வா.அன்புமொழி, மதுரை

ப:           ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை’ நமக்குத் தெரிந்ததுதானே!

கே:       ஜாதியும், மதமும் தமிழகத்தில் எடுபடாது என்று தேர்தல் கருத்துக் கணிப்புகள் உறுதி செய்வது பி.ஜே.பி.க்கு மரண அடியல்லவா?

               – ந.கன்னியப்பன், அரக்கோணம்

 ப:           இது பெரியார் மண் _ இங்கே வடக்கத்திய வாடைக் காற்றுக்கு இடம் இல்லை என்பதை மீண்டும் உலகுக்கு ‘பளிச்’ சென்று காட்டுவதாகவே தேர்தல் முடிவுகள் அமைவது உறுதி! உறுதி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *