ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர்

டிசம்பர் 16-31, 2020

தந்தை பெரியாரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பெண்களின் முன்னேற்றம் தமிழ்நாட்டில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. பெண்கள் குடும்ப அமைப்பினையும், சமூக அமைப்பில் முக்கிய அதிகாரங்களையும் ஒருசேர நிருவாகம் சிறந்த பங்களிப்பாளர்கள் என்பது யாவரும் அறிந்ததொன்று. அந்த வகையில் வரலாற்றுப் புகழ்வாய்ந்த ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்கிற பெருமைக்குரியவராக விளங்குகிறார் ச.திவ்யதர்ஷினி அய்.ஏ.எஸ் அவர்கள். அவரது வாழ்க்கைப் பாதையில் கடந்துவந்த சுவடுகள் பற்றிக் கூறுகையில்,
சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் இரண்டாவதாகப் பிறந்தேன். ஆரம்பத்தில் வழக்குரைஞராக வேண்டும் என ஆசைப்பட்டு வழக்குரைஞர் பட்டமும் பெற்றேன். என் பெற்றோர் என்னை அய்.ஏ.எஸ். தேர்வு எழுத ஊக்கப்படுத்தினார்கள். அவர்கள் என்னை ஒரு மாவட்ட ஆட்சியராகப் பார்க்க வேண்டும் என்னும் கனவினை எனக்கு ஊட்டினார்கள். அதற்காக அவர்கள் கடுமையான பொருளாதாரக் கஷ்டங்களையும் ஏற்றுக்கொண்டு, புத்தகங்களுக்கும் பயிற்சிக்கும் செலவு செய்தனர். 2010ஆம் ஆண்டு முதல் முறையாகத் தேர்வு எழுதினேன். அதில் முதல்நிலைத் தேர்வில் (பிரிலிமினரி) தோல்வியடைந்தேன். இருப்பினும் இரண்டாவது முயற்சியாக 2011இல் எழுதிய அய்.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றேன். அதே ஆண்டில் பயிற்சியுடன், உயர்கல்வியையும் வெற்றிகரமாக முடித்தேன்.
கோவையில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பணியும், இதையடுத்து மயிலாடுதுறை சார் ஆட்சியர் பணி, பொதுத்துறை துணை செயலர், வடசென்னை வட்டார துணை ஆணையர் என பல பகுதிகளில் பணி செய்தேன். மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள இந்த அனுபவம் பெரிதும் உதவியது.
இந்த நிலையில், புதிதாகப் பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தின் முதல் ஆட்சியராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டேன். புதிய மாவட்டத்தைக் கட்டமைக்கும் மிகப் பெரிய அறைகூவலான பொறுப்பை, மிகவும் துணிச்சலோடு எதிர்கொண்டும் வருகிறேன். என்னைச் சார்ந்த அனைத்துப் பெருமைகளுக்கும் என் பெற்றோர் என் மீது கொண்ட நம்பிக்கைதான் காரணம்.
வாழ்க்கையில் தன்னம்பிக்கை இல்லாமலும், இலக்கு இல்லாமலும் போகிற போக்கில் செல்லாமல் மனதில் நிலையான லட்சியத்தைத் தேர்வு செய்து அந்த இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். தற்போது பெண்கள் பட்டம் பெறுவது அதிகரித்துவரும் நிலையில், அவர்கள் அனைவரும் தன் சொந்தக் காலில் நிற்கும் வகையில் கல்விக்கு ஏற்ற வேலை அல்லது தொழில் செய்ய முனைய வேண்டும். இன்று அனைவருக்கும் வாய்ப்பாக அமைந்துள்ள சமூக ஊடகங்களை நல்லவை செய்யப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் வருங்காலத் தலைமுறைக்கு நம்பிக்கையூட்டும் வகையில்
தன்னைச் சந்திக்க வரும் வி.அய்.பி.க்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை அவர்கள் கொடுக்கும் பூச்செண்டைக்கூட வாங்க மறுத்து, நீங்கள் மக்கள் நலக் கோரிக்கையுடன் என்னைச் சந்தித்தாலே போதும் என்கிறார். பம்பரமாய்ச் சுழன்றுகொண்டு இயங்கி வருகிறார். ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் குவிந்து கிடக்கும் குரோமியக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றினாலே என்னுடைய பணி வெற்றிபெறும் எனக் கூறி நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *