ஆசிரியர் பதில்கள் : கல்விக் கூடங்களில் காவிகள் ஆதிக்கம் தடுக்கப்பட வேண்டும்!

நவம்பர் 01-15 2019

கே:       சுயமரியாதை – மனிதநேயம் இவற்றிற்கிடையே வேறுபாடு என்ன?

                – கிருபா, தாம்பரம்

ப:           சுயமரியாதை என்பது தனிமனிதர்களானாலும் சமூகமானாலும் மனிதர்களுக்குத் தேவை. மனிதநேயம் என்பது ஒத்தறிவு (Empathy). மற்றவர்களின் துன்பம் தனக்கே நேர்ந்ததுபோல் உணர்ந்து உதவுதல், ஊறு களைதல்! மனிதநேயத்திற்கு அடிப்படை சுயமரியாதையே. சுயமரியாதை _ அடித்தளம்; மனிதநேயம் _ அதன்மேல் எழுப்பப்பட்ட மேல்தளம். முன்னது மூளை போன்றது; அடுத்தது இதயம் போன்றது. மானமும் அறிவும் அன்புடன் இணைந்த நிலை.

கே:       தந்தை பெரியாரின் கடவுள், மத மறுப்புக்கும் – கார்ல் மார்க்ஸ் கம்யூனிசத்தில் உள்ள கடவுள், மத மறுப்புக்கும் வேறுபாடு உண்டா?

                – மோகன், மதுரை

ப:           பேதத்தில் பொருளாதார பேதத்தையே முன்னிறுத்தி, ஆண்டவன் தந்தான் என்று, பணக்காரன் சுரண்டலை நியாயப்படுத்துவதைக் கண்டிக்கிறது _ கார்ல்மார்க்சின் கடவுள் மறுப்பு. பிறவி பேதமான ஜாதி, பெண்ணடிமைக்கு மூலவித்தும், நியாயப்படுத்தும் காரணியும் கடவுள் நம்பிக்கையாகும். இங்கே ஆதிக்கம், பார்ப்பன மேல்ஜாதி ஆதிக்கம் என்பதால் ஜாதி ஒழிப்புக்கும், பெண்ணடிமை ஒழிப்புக்கும், கடவுள் நம்பிக்கை ஒழிப்பு கூடுதலாகவும் தேவைப்படுகிறது என்பது பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவம்.

                கார்ல் மார்க்ஸ் _ வர்க்கபேதத்திற்கு கடவுள் காரணமாகும்போது, ஒழிக்கப்படுதல் அவசியம் என்றார்.

                தந்தை பெரியார் _ கடவுள் நம்பிக்கை, ஜாதி, ஆண், பெண் முதலிய பிறவி பேதத்திற்கும், மூலகாரணமான வர்க்க பேதத்தோடு, நம் நாட்டில் வருண பேதத்திற்கும் கடவுள் எதிர்ப்பு முக்கியத் தேவையாகிறது என்று கூறுகிறார்!

கே:       மக்கள் வழங்கிய பதவியை, ஆட்சியை, அதிகாரத்தை நிரந்தரம் என்னும் கனவில் காவி(காலி)கள் துஷ்பிரயோகம் செய்கிறார்களே?

                – முகமது, மாதவரம்

ப:           வரலாறு இப்படி பலரை, பல கட்டத்தில் சந்தித்திருக்கிறது. அவர்களில் பலர் ஆடிய ஆட்டமென்ன என்று வருந்தி, வரலாற்றுக் குப்பைத் தொட்டியில் இடம் பிடித்தவர்களாகியுள்ளார்கள் என்பதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.

கே:       மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் பார்ப்பனர்களும், மார்வாடிகளும்தான் பயன் பெறுகிறார்கள். அப்படியிருந்தும் மற்றவர்கள் வாக்களிப்பது ஏன்?

                – டேவிட், ஈரோடு

ப:           அறியாமை, புரியாமை, விளம்பர வெளிச்சத்திற்கு ஏமாறுதல் _ அங்கே பெரியார் இயக்கம் போன்றவை இல்லாததே!

கே:       மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுர வருகையையொட்டி தமிழக அரசு சார்பில் பேனர் விளம்பர தட்டிகள் அமைக்க அ.தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறதே? இதனை எவ்வாறு புரிந்துகொள்வது?

                – ராஜ், சைதை

ப:           சட்டத்திற்கு எப்போதும் சந்து, பொந்துகள் உண்டு; மேலும், மத்திய அரசு எனும்போது பார்வையும் கூட வேறுபடுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் விலக்கு உண்டு என்னும் ஒரு விதி உண்டே!

கே:       அரசுத் துறைகளை ஒழிப்பதன் மூலம் இடஒதுக்கீட்டை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டு செயல்படுகிறதோ?

                – மகிழ், பழனி

ப:           தனியார் மயமாவது இரண்டு லாபங்களுக்காக.

                1. முதலாளிகளுக்கு உதவுவது. 2. இடஒதுக்கீடு, சமூகநீதி தனியார் துறையில் இல்லாததால் எளிதில் ஒழிப்பதற்கு ஒருமுறை.  எனவேதான், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்பதை நாம் இனி வேகமாக வற்புறுத்தி, போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

கே:       பள்ளிகளில் கற்பித்தல் பிரிவில் தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

                – உ.வெற்றி, சோழங்குறிச்சி

ப:           தவறான அணுகுமுறை. காவிகள் பள்ளிகளில் ஆதிக்கம் செலுத்த ஒரு முன்னோட்டமாக கதவைத் திறப்பதற்கு இந்த ஏற்பாடு. விரும்பத்தகாத ஏற்பாடு. தடுக்கப்படல் வேண்டும்.

கே:       கடவுள் மறுப்பாளராக மட்டும், பெரியாரைக் காட்டும் சூழ்ச்சியைத் தகர்த்து, அவரின் உலக நோக்குடைய மனிதநேயக் கொள்கைகளை அதிகம் பரப்பினால் விரைவில் பெரியாரை உலகம் ஏற்குமல்லவா?

                – சோழமுல்லை, திருச்சி

ப:           அது வேகமாக நடைபெறுகிறது. அந்த அணுகுமுறை இங்கும் எங்கும் தேவையே!  துவக்கப்பட்டுவிட்டது!

கே:       கல்கி ஆசிரமத்தில் வருமானவரித் துறையினர் 500 கோடிக்கு மேல் வருமானவரி ஏய்ப்பைக் கண்டுபிடித்ததைப் போல ஏனைய மடங்களையும் ஆய்வு செய்வார்களா?

                – க.தியாகராசன், நெய்வேலி

ப:           சாமியார்கள் எல்லாம் முதல் போடா பெருமுதலாளிகளாகி, வரி ஏய்ப்பாளர்களாகவும், மக்களை ஏமாற்றிச் சுரண்டும் மோசடி மன்னர்களாகவும் உள்ளதை நாம் பல ஆண்டுகளாகச் சுட்டிக்காட்டி வருகிறோம். அதன் உண்மைகள் இப்போது உலா வரத் தொடங்கிவிட்டன!

                எத்தனை காலம்தான் ஏமாற்றுவர் இந்த நாட்டிலே! மூடநம்பிக்கையை மூலதனமாகக் கொண்ட பக்தி வியாபாரம் எப்படி 800 கோடி வரி ஏய்ப்பு, 4000 ஏக்கர் நிலம் வாங்குதல், பல நூற்றுக்கணக்கான அந்நிய அமெரிக்க டாலர் என்று சொகுசு வாழ்க்கை _ ‘முற்றும் துறந்த முனிவர்களுக்கு!’ என்னே வேடிக்கை! என்னே கொடுமை!

                பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு மேலும் காரணம் வேண்டுமா? பாபாக்களும், சத்குரு ஜக்கிகளும், கல்கிகளும் நாட்டில் ஆட்சியாளர்களின் ஆதரவோடு மக்களை ஏய்த்துப் பிழைக்கிறார்கள் என்பதை, இனியாவது புரிந்துகொண்டால் சரி!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *