எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 26

டிசம்பர் 16-31 2018

’தீரத் தலைவர்’ சிவராஜ் விடுதலை தந்தபட்டம்!

– நேயன்

என்.சிவராஜ் நியமனத்தைப் பாராட்டி ‘குடிஅரசு’ எழுதியிருக்கும் குறிப்பு, அவரை பெரியார் எப்படி மதிப்பிடுகிறார் என்பதற்கான சான்றாகும். (‘குடிஅரசு’ 23.5.1937)

“இந்திய சட்டசபையில் ராவ்பஹதூர் எம்.சி.ராஜா அவர்களின் இராஜிநாமாவால் காலியான பதவிக்கு ராவ்சாஹிப் என்.சிவராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை அறிய மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தோழர் சிவராஜ் அவர்கள் பல வருடங்களாக பொது வாழ்வில் அதிக பங்கு எடுத்துக்கொண்டு வருகிறார் என்பது சகலருக்கும் தெரிந்ததே. அவர் தன்னினத்தாருடைய நன்மதிப்பைப் பெற்று வந்திருக்கிறார் என்பதோடு மற்ற வகுப்பாருடைய ஆதரவையும் மதிப்பையும் தன்னுடைய உண்மையான உழைப்பாலும் கபடமற்ற செய்கைகளாலும் பெற்றிருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமூகம் நமது பொது வாழ்க்கையில் பாடுபடக்கூடிய பல தலைவர்-களைத் தந்திருக்கிறது. அவர்களில் தோழர் சிவராஜ் போன்ற நாவன்மையும், பிறர் உள்ளத்தைக் கவரக்கூடிய பேச்சும் பொருந்தியவர் இருப்பது மிக அரிது.

நம்மால் நினைப்பதற்குக்கூட முடியாத அவ்வளவு சீக்கிரத்தில் அவர் பொறுப்பு வாய்ந்த பதவியை வகிப்பார் என்பதில் சந்தேகமில்லை. கடைசியாக அவர், இந்திய சட்டசபைக்கு நியமனம் செய்யப்பட்டதை மனதார வாழ்த்துகிறோம்.

தீண்டாமைப் பிரச்சினையை தீர்த்துவைக்க இடமிருப்பாதாகவே தெரியவில்லை. தீண்டாமை-யின்று விலகவேண்டுமானால் தாழ்ந்த வகுப்பினர் ஹிந்து மதத்தைவிட்டு விலக வேண்டும். ஆனால், வேறு மதத்தில் சேர வேண்டியது இல்லை. அவர்கள் புதியதொரு மதத்தை உண்டு பண்ண வேண்டும்.’’ (1936 ஜனவரி ‘குடிஅரசு’) மகாராஷ்டிராவில் 11.1.1936இல் நடந்த ஆதி இந்து வாலிபர் மாநாட்டில் என்.சிவராஜ் பேச்சை ‘குடிஅரசு’ வெளியிட்டுள்ளது.

சிவராஜ் மறைந்தபோது, ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக உழைத்த தீரத் தலைவர்’ என்று பட்டம் சூட்டியது விடுதலை.

மேலும், 30.9.1964 தேதியிட்ட ‘விடுதலை’யில், “திரு.சிவராஜ் சென்னயில் வெஸ்லி கல்லூரி, மாநிலக் கல்லூரி, சட்டக்கல்லூரி இவைகளில் பயின்று பி.ஏ.,பி.எல்., பட்டம் பெற்றவர். பல ஆண்டுகள் வழக்குரைஞராக இருந்தவர். சென்னை நகரத்தின் கவுன்சிலராக பல ஆண்டுகள் இருந்து 1945ஆம் ஆண்டில் மேயராகவும் பணிபுரிந்து கவுரவம் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் சேவை புரிந்தவர். நீதிக்கட்சியில் ஈடுபாடு கொண்டு மிகவும் பாடுபட்டவர். அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் தலைவராகவும் பணிபுரிந்தார். அவர் மறைவு பின்தங்கிய வகுப்புனர்க்கு பேரிழப்பாகும்’’ என்று செய்தியும் வெளியிட்டிருந்தது.

சிவராஜ் அவர்களைப் பற்றி கீழ்க்கண்ட செய்திகளும் ‘குடிஅரசு’ ஏட்டில் வெளியிடப்-பட்டு, இவை மட்டுமல்ல அவரின் பெருமைகள் மக்கள் மத்தியில் பெரியாரால் கொண்டு சேர்க்கப்-பட்டன.

“மத சம்பந்தமான நமது அபிப்பிராயம் ஒரு விதமாக இருந்தாலும்கூட தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மனிதத்தன்மை பெறவும் அரசியல் விகிதாச்சார உரிமை பெறவும் வாழ்க்கையில் சம உரிமை பெறவும் இந்து மதத்தை விட்டுவிட்டுக் கிறிஸ்தவர்களாகவோ முக்கியமாய் இஸ்லாமியர்களாகவோ ஆகிவிடுங்கள் என்று பல தடவை வற்புறுத்தி வந்ததை அச்சமூகம் இலட்சியம் செய்யவே இல்லை.

இதற்குக் காரணம் நம் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களுடைய மதப்பற்றேதான் காரணம் என்பதாக நாம் சிறிதும் நினைக்கவில்லை. மற்றென்னவென்றால், சென்னை மாகாணத்தில் உள்ள வகுப்புவாரிப்-பிரதிநிதித்துவ முறையின் பயனாய் சில பெரிய பதவிகளும் உத்தியோகஸ்தர்களும் தாழ்த்தப்-பட்ட சமூகத் தலைவர்கள் என்பவர்களுக்குக் கிடைக்கக் கூடுமாதலால் அதில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆசையானது இந்துக்கள் என்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமூகத் துறையிலும் அரசியல் துறையிலும் செய்துவரும் எவ்வளவோ இழிவுகளையும் இன்னல்களையும் சகித்துக் கொண்டு சிறிதும் சுயமரியாதை இல்லாதவர்களாகித் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு உயிர்வாழ வேண்டி இருக்கின்றதே தவிர வேறு காரணம் இருக்க நியாயமில்லை என்றே படுகின்றது. என்றாலும் தேதி 29.1.1935 சென்னை சட்டசபை கூட்டத்தில் கூட்டுக் கமிட்டி அறிக்கையைப் பற்றிய விவாதத்தின்போது தோழர் என்.சிவராஜ் அவர்கள் தெரிவித்த அபிப்பிராயத்தில் பெரும் பாகத்தை நாம் மனப்பூர்வமாய் ஆதரிக்கிறோம். அதாவது,

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகிய டாக்டர் அம்பேத்கர், ராவ்பகதூர் சிவராஜ் போன்றவர்கள் எல்லாரும் நாங்கள் இந்து மதங்கள் அல்லவென்றும், நாங்கள் இந்துக்கள் அல்ல என்றும், தங்கள் சமூகத்தார் இந்து மதத்திலிருந்து விலக வேண்டும் என்றும் 15 வருடத்திற்கு முன்பிருந்தே சொல்லி வருகிறார்கள். இந்து மதத்தை விட்டுவிட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக்-கொள்வது என்று கேட்கலாம். உங்களுக்கு துணிவு இருந்து நீங்கள் வேறு எந்த மதத்தின் பேரைச் சொல்லிக்கொண்டால் சமுதாயத்தில் உங்களைத் தீண்டாமையும் இழிவும் அணுகாதோ, அதைச் சொல்லுங்கள். (‘குடிஅரசு’ 13.01.1945)

“இந்தியாவுக்கு ஏற்படவிருக்கும் எந்த ஒரு அரசியல் திட்டத்திலும் ஷெட்யூல் வகுப்பாருக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்கப்படாமல் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறான முடிவுகளே இருக்குமேயானால், கல்வித் திட்டத்தை முழுச் சக்தியுடன் எதிர்ப்போம்’’ என்று ராவ்பகதூர் என்.சிவராஜ் அவர்கள் லார்ட் லெவலுக்கு அனுப்பிய தந்திச் செய்தியில்  குறிப்பிட்டிருக்கிறார். திரு.சிவராஜ் அகில இந்திய ஷெட்யூல் வகுப்புப் பெடரேஷனின் தலைவர். தாழ்த்தப்பட்ட சமுதாயங்களின் நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர். டாக்டர் அம்பேத்கரைப் போலவே, ஷெட்யூல் வகுப்பினரின் முன்னேற்றத்தில் பல ஆண்டுகளாகத் தொண்டாற்றி வருபவர். எனவே, இவரது கருத்தை எந்த அரசியல்-வாதியும் அலட்சியப்படுத்த முடியாதென்றே கூறலாம்.’’ (‘விடுதலை’ 25.4.1945)

“…. என்று சொல்லிக்கொண்டே அம்பேத்கர் கண்ணீர் விட்டார். இதைக் கேட்ட சபையோர் அத்தனை பேரும் (1,000 பேர்) மனம் இளகி தாங்களும் கண்ணீர் விட்டார்கள். இந்தத் தீர்மானத்தை தோழர் சிவராஜ் அவர்கள் (பல இடங்களிலும்) மனப்பூர்வமாய் ஆதரித்திருக்கிறார். இந்தத் தீர்மானம் செய்த உடன் இராமாயணம், மநுதர்ம சாஸ்திரம், கீதை முதலிய சாஸ்திர புராண இதிகாசங்கள் அம்மாநாட்டிலேயே கொளுத்தப் பட்டிருக்கின்றன. (இவை 21.10.1935ஆம் தேதி ‘குடிஅரசு’ முதலிய பத்திரிகைகளில் இருக்கின்றன) நாசிக்கில்இவை நடந்தவுடன் நமது மாகாணத்தில் சுமார் 20, 30 இடங்களில் இத்தீர்மானத்தை ஆதரித்துப் பல மாநாடுகள் கூட்டி ஆமோதிக்கப்பட்டது. திருநெல்வேலியி-லேயே டாக்டர் ஆர்.வி.சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் 10.11.1935ஆம்  தேதியிலும், திருச்செங்கோட்டில் 11.11.1935லும் தூத்துக்-குடியில் 7.11.1935லும், கோபியில் 27.10.1935லும், சென்னையில் 30.10.1935லும் மீனாம்பாள் அவர்கள் தலைமையில் 19.10.1935ஆம் தேதி திருச்சி மாநாட்டிலும் மற்-றும் சென்னையில் தோழர்கள் ஜகநாதம், சிவஷண்முகம், பாலகுரு சிவம் முதலானவர்கள் தனித்தனி மாநாடு-களிலும் வெகு ஆவேசமாய் ஆதரித்துப் பேசியும் தீர்மானங்கள் பல நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. இதற்குப் பிறகும் பல இடஙகளில் ஆதி திராவிடர்கள் இஸ்லாமியர்-களாக ஆகி இருக்கிறார்கள். பல இடங்களில் தோழர்கள் மீனாம்பாள், சிவராஜ் முதலியவர்கள் தலைமையில் இராமாயணம், மனுதர்ம சாஸ்திரம் ஆகியவை கொளுத்தப் பட்டிருக்-கின்றன. இவை யாவும் பூனா ஒப்பந்தத்திற்குப் பின் நிகழ்ந்தவை என்பதையும், பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்ட இரு தலைவர்களாகலேயே நடத்திச் செய்யப்பட்டவை என்பதையும் நினைவுறுத்திக் கொண்டு மேலால் சிந்திக்க வேண்டுகிறோம். (‘குடிஅரசு’ 4.8.1945)

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *