புதுப்பாக்கள்

ஜூலை 16-31

“நான் சரியா யோசிக்கிறேனா?”

எரியூட்டப் படுகின்றன – இன்னும்
எரியாத மனிதக் குப்பைகள்

சர்வாதிகாரச் சந்தைகளில்
விற்பனையாகாமல் – ஏராளமான
எலும்புக்கூடுகள் அடுக்கிய படியே

அப்பாவிகளின் முதுகுகளை
கூர்ந்து கவனித்தபடியே
காத்து இருக்கின்றன
கார்ப்பரேட் கழுகுகள்

வதைமுகாம்களில் – தொலைத்த
முகவரி தேடும் எறும்புகளாய்
மிதிபடுகிறது மக்களாட்சி

சட்டத்தை சட்டைசெய்யும்
சவுக்கு மரமாக –
அதிகார முனைகள் கனன்று
பதவி பாதாளத்தை நிரப்புகிறது.

வர்த்தக மூடர்களின் கண்களில் – கல்வியே
கல்லாப் பெட்டி.
கருகிய புத்தகத்தின்
கதறலுக்கு இன்னும் – நீதி
நெருப்பு வெளியே தெரியாமல்
புகைகிறது.

கும்பகோணக் காற்றில்
எரிந்து போன தாலாட்டுப் பாடல்கள்
கருகிய வாசமுடன் கேட்கிறது.

மடாதிபதிகளாய் ஆட்சியாளர்கள்
எடுபிடிகளாய் அமைச்சர்கள்
அடிமைகளாய் மக்கள்.

என்ன நடக்குது இங்கே,
பகுத்தறிவு பாறைமீது –
அறுத்தெடுங்கள்
அக்ரஹாரத்து அநீதிகளை.

கல்வி என்ன ஆரிய வீடா?
பள்ளி என்ன பார்ப்பன திண்ணையா?
சிந்திங்கடா! சிறுபய மக்களே!!

பரமேஸ்வரன் வழியில்

தாருகாவனத்து
ரிஷிபத்தினிகளிடம்
சிவபெருமான்
அரங்கேற்றியதோ –
காமசூத்ர லீலைகள்!
காஞ்சிக்கோயில்
கருவறைக்குள்ளே…
பருவக்குமரிகளிடம்
பக்தன் நடத்தியதோ-
படுக்கையறை
கொக்கோகப் பாடங்கள்!
பரமேஸ்வரன் எவ்வழியோ
பக்தனும் அவ்வழி!
_ கு.நா.இராமண்ணா, சீர்காழி

மனிதநேயமிக்க நாடு…

உயர் ஜாதிதான் – அவள்
இருப்பினும்
ஒவ்வொரு நிகழ்விலும்
ஒதுக்கி வைக்கப்படுகிறாள்
கணவனை இழந்த
கைம்பெண் என்பதால்!

– சேத், இனாம்ரெட்டியபட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *