நூல் அறிமுகம்

ஜூலை 01-15

நூல்: மனக் குகையில்…
ஆசிரியர்:    சிவகாசி மணியம்
வெளியீடு:    தமிழ்த்தாய் பதிப்பகம்,
27/24, திருநகர் 7ஆவது தெரு,
வடபழனி, சென்னை – 600 026
பக்கங்கள்: 128 விலை: ரூ.75/-

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, குடும்பத்தைவிட்டு வெளியேறும் பூங்கொடி என்ற பெண், சமுதாயத்தில் சந்திக்கும் நிகழ்வுகள் – சீரழிவுகள் – அன்பிற்கு ஏங்கித் தவிக்கும் அவலநிலை ஆகியன  எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

நல்ல குணம் படைத்த ஆண்களும் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக மருதய்யாவும் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக காவேரியும் மனதை நிறைத்து நிற்கின்றனர்.

தாய் எடுக்கும் தவறான முடிவால் மன உளைச்சலுக்கு ஆளாகி தவறான முடிவெடுக்கும் அமுதா, தாய் தன்னை – தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு இன்னொருவருடன் சென்றாலும், பல வருடங்களுக்குப் பிறகு பார்த்ததும் பாசத்தைப் பொழியும் வளர்மதி, வெறுக்கும் மகனாக செல்வம் என்று பிள்ளைகளின் மனநிலைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

பூங்கொடியின் மீது அளவுகடந்த பாசம் வைத்து, அவள் செய்த தவறுகளையெல்லாம் மன்னித்த மருதய்யா   ஏன் பூங்கொடியை அனாதைப் பிணமாக விட்டார்? அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லையா என்ற போராட்டத்தினை படிப்போர் மனத்திரையில் ஓட வைத்திருப்பதே மனக் குகையில்…

தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பியும் பின்பற்றியும் வருபவர் சிவகாசி மணியம். இவர் எழுதிய சிறுகதைகள் பல உண்மையில் பிரசுரமாகியுள்ளன. இதழ்களில் வெளிவந்த, வெளிவராத சிறுகதைகளைத் தொகுத்து வேரைத் தாங்கும் விழுதுகள், சொர்க்கத்திலா நிச்சயிக்கப்படுகிறது என நூல்களாக வெளியிட்டுள்ளார்.
செல்வா

நூல்:    சிகரம் ச. செந்தில்நாதனின் திறனாய்வுகள்
ஆசிரியர்:    ச. செந்தில்நாதன்
வெளியீடு:    அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்,
96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை – 600 041
பக்கங்கள்:    168 விலை: ரூ.60/-

திறனாய்வு என்பது ஒவ்வொருவர் கண்ணோட்டத்திலும் மாறுபடக்கூடியது. நூலாசிரியரின் திறனாய்வுப் பார்வையில் விந்தன் எழுதிய 6 நாவல்கள், கல்கியின் 2 நாவல்கள், சுந்தர ராமசாமியின் 2 நாவல்கள், டி.கே.சீனிவாசனின் ஆடும் மாடும், ரகுநாதனின் பஞ்சும் பசியும் ஆகியன அலசி ஆராயப்பட்டுள்ளன.

மேலும், பத்திரிகைகளில், இதழ்களில் வெளிவந்த நாவல், சிறுகதை, ஆய்வு நூல்கள் போன்றவற்றையும்  திறனாய்வு செய்து பல்சுவை விருந்தாக அமைத்து, பல நூல்களைப் படித்துத் தெரிந்து கொண்ட மனநிறைவினைச் சிந்தையில் ஏற்படுத்தியி ருப்பதே சிகரம் ச. செந்தில்நாதனின் திறனாய்வுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *