உண்மையான விடுதலை ஒப்பனைகளில் இல்லை!

மார்ச் 16-31

மார்ச் 8- உலக மகளிர் நாள் – என்பது மகளிர் உரிமை பற்றி வெறும் பெண்களுக்கான புகழுரை, சம்பிரதாயமாக வாழ்த்துகளைக் கூறுதல் என்பதோடு, முடிந்துவிடக் கூடாது.

உண்மையில் உலகின் சரி பகுதி மக்கள் தொகையான மகளிர் – மனிதத் தன்மையோடு, சம உரிமை சமவாய்ப்புடன் நடத்தப்படுகிறார்களா இந்த 21ஆம் நூற்றாண்டில்கூட என்ற சுயசிந்தனைப் பரிசோதனைக் கேள்விகளை எழுப்பி, அதற்குத் தக்க விடைகளை – விடியலைச் செயல் வடிவத்தில் காணுவதே சரியான பகுத்தறிவாளர் அணுகுமுறையாகும்.

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களைப் போன்று பெண்ணுரிமைக்குப் போராடி வெற்றி கண்டு, பழஞ் சமுதாயத்தைப் புரட்டிப்போட்ட புரட்சியாளர் உலக வரலாற்றில் எவருமிலர்.

வரலாற்றில் அது இருட்டடிக்கப்பட்ட பகுதியாகும்! இன்னமும் பெண்ணாகப் பிறந்த அந்த மனித ஜீவனுக்கு வாழ்வுரிமை கிடைக்காமல், தாய்ப்பாலுக்குப் பதில் கள்ளிப்பாலும் எருக்கம்பாலும் தந்து கொல்லப்படும் நிலைதானே!

கருணைக் கொலையைக்கூட மறுக்கும் நமது நீதி அமைப்புகள் – இந்தப் பெண் குழந்தை கருவிலேயே அழிக்கப்படுவதைக்கூட (சட்டத்தின் தவறான பயன்பாட்டினை) தடுக்க முன் வருவ தில்லையே!

பாலியல் கொடுமைகள், வன்புணர்ச்சி, வக்கிரச் செயல்கள் பிஞ்சுகளைக்கூட விட்டு வைக்காத நஞ்சு பாய்ச்சிடும் நரி மனம் கொண்டோரிடமிருந்து நாரியர் பாதுகாக்கப்படாத நிலை.

தந்தை பெரியார் எதையும் தனது வாழ்விணையர் மூலமே துவக்கி, செயல் முறை விளக்கமாக்கி, செல்வாக்குப் பெற்றார். போராட்டக் களம், சிறைச் சாலை இவற்றை நோக்கி அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் ஆகியோரை அனுப்பிடத் தவறவில்லையே!
படித்த பெண்கள், இன்னும் இரு மடங்கு பணி செய்வோராகவே உள்ளனர். அலுவலகம், வீடு, கணவர், குழந்தை வளர்ப்பு என்பன போன்ற சுமைகளை முதுகொடியும்வரைச் செய்துவிட்டு, இயந்திரங்களாகிய பின்பும், சுகமான வாழ்க்கையைத் தேடும் சுமைதாங்கிகளாகியல்லவா வாழுகிறார்கள்?

இது புறத்தோற்றத்தில் வளர்ச்சி – நம் நாட்டு அகத்தில் வீழ்ச்சி – என்ன செய்வது!

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற பண்புகள் பற்றி பெண்ணுக்கு இலக்கணம் வகுத்தோர், அதுபோல ஆணுக்கு வைத்ததுண்டா? பயிர்ப்பு என்றால் அருவருப்பு, அசிங்கம், அசுத்தம் என்று தமிழ்ப் பேரகராதிகள் கூறுகின்றனவே.

அதன் பின்பும் பெண்களுக்கு அக்குணநலன்கள் தேவையா? என்ற கேள்வியைக் கேட்டவர் பெண்ணியப் புரட்சியின் இமயமான ஈரோட்டு ஏந்தல் தானே!

எனவே, உண்மையான விடுதலை நகை நட்டு, பட்டுச் சேலை படாடோபம், ஒப்பனைகள் நிறைந்த ஒய்யார வாழ்வில் இல்லை என்பதை அன்னை நாகம்மையாரும் அன்னை மணியம்மையாரும் வாழ்ந்தே காட்டினார்கள்! வசதி படைத்தவர்களிடம் எளிமை குடியேறும் போதுதான் அது அதன் உண்மை மதிப்பைப் பெறுகிறது!

எனவே மகளிர் தோழியர்களே, நீங்கள் தந்தை பெரியார் கூறியபடி,

(1) அலங்காரப் பொம்மைகளாகவோ

(2) வெறும் சமையல் கருவிகளாகவோ

(3) பிள்ளை பெறும் இயந்திரங்களாகவோ வாழாமல், மனித சமுதாயத்தின் மான வாழ்விற்கு, உரிமை வாழ்விற்கு, உறுதி கூறும் புதியதோர் உலகு படைக்க, புரட்சியாளர்களாகப் புறப்பட சூளுரைத்து, சுயமரியாதைப்புரியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!
மனிதம் ஆளட்டும்! மடமை மாளட்டும்!

இது இந்நாளில் எம் செய்தி!

– கி. வீரமணி
ஆசிரியர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *