ஆஸ்திரேலியாவில் வெள்ளமும் மக்களின் இன்னலும்

மார்ச் 01-15

ஆஸ்திரேலிய நாட்டின், குயின்ஸ்லாந்து மாநிலத்தின், தலைநகர் பிரிஸ்பேன் நகர், டிசம்பர் மாதம் துவங்கி நான்கு, அய்ந்து மாதங்களுக்குரிய காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கி பார்த்துச் செல்வதற்கு ஏற்ற ஒரு  நகரப்பகுதி. கோடைக்காலப் பருவ வெப்பம் 250C  முதல் 200C  இருக்கக்கூடிய காலம், நாங்கள் (இணையரும், நானும்) எங்கள் மகள் அல்லி (கல்வித்துறை அறிஞர் நெ.து. சுந்தரவடிவேல் தலைமையில், ஆசிரியர் வாழ்த்துகளுடன் திருமணம் செய்து கொண்டவர்) உள்ள பிரிஸ்பேன் நகருக்கு ஜனவரி முதல் நாள் சேரும்படி ஏற்பாடுகளைச் செய்துவிட்டார்.  (திருச்சி நாத்திக மாநாட்டைக் காணமுடியாத, ஏமாற்றத்தை அளித்த ஏற்பாடாகி விட்டது).  அத்துடன் அமையாது, நாங்கள் வந்து சேர்ந்த நேரம், கோடைக்காலமாக இல்லாமல் மழை பெய்து கொண்டிருக்கும் நிலைமையில் நகரம் இருந்தது.  வழக்கமாக உள்ள கோடைக்காலமாக இல்லை என்பது அனைவரும் கூறுவதாக இருந்தது.

இதைக் கூறும் வேளையில், பிரிஸ்பேன் நகரத்தின், மேற்கு, தெற்கு, தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்ட இன்னல்கள், இழப்புகள்பற்றி, தமிழகத்து ஊடகங்களின் வாயிலாக மக்கள் அறிந்திருப்பர்.  அந்தச் செய்தியை, நாங்கள் இங்கு கண்டு, கேட்டு அறிந்தவற்றைப் பகிர்ந்து கொள்வதற்காக இக்கட்டுரை. ஊடகங்கள் மூலமாகவும், நேரில் சில பகுதிகளைக் கண்டும் அறிந்தவற்றைக் கூறியுள்ளோம்.  இப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்று 30 ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கு ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்.

கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம், எல்லாம் மழை,
குறளில் உள்ள கெடுப்பதூஉம் மழை என்பது இங்கு பொருத்தமாகிவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின், மேற்கே, பல சிற்றாறுகள், அருவிகள், கேரள மாநிலத்தில் பாய்வதுபோல இங்கு கிழக்குப் பகுதியில் தி கிரேட் டிவைடிங் ரேன்ஜ் (The Great Dividing Range) என்ற மலைத் தொடருக்குக் கிழக்காக பிரிஸ்பேன் நகரம் உள்ளது.  பல சிற்றாறுகள் பாய்ந்து பசிபிக் பெருங்கடலில் கலக்கின்றன.  பிரிஸ்பேன் நகரத் தலைமையகம் (சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் போன்றது) பல மாடி மிக உயரமான அலுவலகக் கட்டிடங்களும், வணிக வளாகங்களும், அருங்காட்சியகங்கள், பொழுது போக்கு மய்யங்கள், நூலகம், தகவல் மய்யம், உணவுக் கூடங்கள் போன்று மிகுதியான கட்டிடங்கள் பிரிஸ்பேன் ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளன.  பிரிஸ்பேன் ஆற்றில் CITY CAT என்ற பயணிகள் பயணிக்கும் எழில்மிகு இயந்திரப் படகுகள் மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை இயங்குகின்றன. 23 நிறுத்தங்களைத் (Terminals) தொட்டுச் செல்கின்றன.  (தாம்பரம் முதல் கடற்கரை வரை செல்வதுபோல்). இப்பகுதியில் மக்கள் கூட்டம் இல்லாத நேரமில்லை.  குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம், இந்த ஆற்றை ஒட்டியுள்ளது.

மலை மிஸ்டேக்(Mt. Mistake) கிலிருந்து செல்லக்கூடிய ஆறு பிரிமெர் ஆறு (Bremer River).  இந்த ஆறு, முக்கிய நகரமான ஸ்ப்ஸ்விச் (Spswich) வழியாக பிரிஸ்பேன் ஆற்றில் கலக்கிறது.  தொடர் கடும்மழையால் (20 நாள்களுக்கு மேலாக)  ஸ்ப்ஸ்விட்ச் நகரம் மூழ்கியது.  (குயின்ஸ்லாந்து மாநிலத் தலைநகருக்கான தேர்வில் போட்டியிட்ட நகரம்).  பிரிஸ்பேன் தலைமை நகரம் ஆற்றின் வெள்ளப்பெருக்கால், தெருக்கள் நிறுவனங்கள் 4,5 அடி உயரம் தண்ணீர் புகுந்தது.  ஆற்றை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகள், பல்கலைக்கழக வளாகம் தண்ணீரில் மூழ்கியது.  CITY CAT படகுகள் கவிழ்ந்து போயின.  பெரும்பாலான வசதிமிக்க நிறுத்தங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

நகருக்குள் புகுந்த நீர், அனைத்துப் பகுதிகளிலும், சேற்றை அப்பியது.  வண்டி வண்டியாக குப்பை கூளங்கள், மரக்கிளைகள் குவியல் குவியலாக எங்கும் புகுந்தன.  குடியிருப்பு வீடுகள் 80% கூரை அமைப்புத் தனி வீடுகள். மரச்சட்டங்களால் எலும்புக்கூடு அமைப்புப் போன்று அமைத்து புற அலங்கரிப்பு வகையில் அமைக்கப்பட்டவை.  சீட்டுக்கட்டு அட்டைகள் விழுவது போல் வீடுகள் வீழ்ந்தன.  அடித்துச் செல்லப்பட்டன.  பொருள் சேதம் கணக்கிலடங்காது.  மக்கள், குறிப்பாக முதியோர்கள், குழந்தைகள், பட்ட அவதி நெஞ்சை நோகச் செய்யும் காட்சி.  வளர்ப்புப் பிராணிகள் தவிப்பு ஒரு கொடுமை.  மக்கள் கண்ணீர் வடிக்க பேட்டி அளிப்பது மனதை வாட்டிய காட்சி.

மகிழ் உந்து இல்லாத வீடு இல்லை.  ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு பேருந்துகள் உண்டு.  சர்க்கஸ் கூடாரத்தில் குட்டிக் கரணக் காட்சி பார்ப்பது போன்று, மகிழ் உந்துகள், வீதிகள், வீடுகளில் புகுந்த சேற்று நீரில், உருண்டு, பிரண்டு அடித்துச் செல்லும் காட்சி வேடிக்கைக் காட்சி.  50 அகவை மனிதர், மகிழுந்துடன் அடித்துச் செல்லப்பட்டார்.  அலுவலகங்கள் இயங்கவில்லை.  30,000 வீடுகளுக்கு மின்வசதி இல்லாது போயிற்று, பாதைகளில் உள்ள ஊர்திக் கட்டுப்பாட்டு விளக்குகள் (Signals)  இயங்கவில்லை.  தொலைக்காட்சி, நாள் முழுவதும் அறிவிப்புகள் எச்சரிக்கைகள் கொடுத்துக் கொண்டே இருந்தது.  நிவாரணப் பணிகள் பற்றிய செய்திகளும், பிரதமர் (Premier),  பிரதமமந்திரி (Prime-minister) மேயர், காவல்துறை, ராணுவத்துறை அதிகாரிகள் செயல்பாடு விளக்கங்கள் வந்து கொண்டே இருக்கும்.

நாங்கள் இருக்கும் Fruit Grove ரயில் நிலையம் பாதிக்கப்படவில்லை.  Run Corn   என்ற குடியிருப்புப் பகுதியில் நாங்கள் உள்ளோம்.  எச்சரிக்கை அளவோடு எங்கள் பகுதியில் இருந்தது.  எதை எதை எடுப்பது எங்கு வைப்பது என்று யோசனை செய்வது என்ற அளவில் நாங்கள் இருந்தோம்.

பெரிய பெரிய பல்பொருள் அங்காடிகள் உணவு, காய்கறி, பழம், முட்டை, பால் யாவற்றையும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள், அதனால் பால், பழம், ரொட்டி, காய் போன்றவற்றில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

நாங்கள் இருக்கும் பிரிஸ்பேன் நகர் (Brisbane City)  பகுதியிலிருந்து ஏற்பட்ட பாதிப்பைக் கூறியுள்ளேன்.  மேற்கு, தெற்குப் பகுதியில், ஏற்பட்ட இழப்புப்பற்றி கூறமுடியாத அளவுக்குப் பாதிப்பு.  இந்த மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப, சீரமைப்பு வேலைகள் முடிய, குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று நடுவண் அரசும், மாநில அரசும் கூறுகின்றன.

நடுவண் அரசும், மாநில அரசும், பொதுத் தொண்டு நிறுவனங்களும், இந்தப் பேரிடர் நிலையில் போர்க்கால அடிப்படையில் இன்றும் தொய்வில்லாமல், தூய்மையாக ஆற்றும் முறையைக் காணக்கொடுத்ததே பெரிய பேறாகக் கருத வேண்டியுள்ளது.  வியந்து பாராட்டத்தக்க வகையில் உள்ளது, ஒரு முன்மாதிரி நிருவாகமாகக் காணமுடிகிறது.

சில புள்ளி விபரங்கள், அரசு செயல்பாடுகள் பற்றிய குறிப்பு: (19.01.2011) தேதிவரை அறிந்தது).

50,000 டாலர் அளவுக்கு வணிகம் பாதிக்கப்பட்டது.  25,000 வீடுகள் அழிந்தன.  70 குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.  2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் இழந்த பொருள்களின் மதிப்பு 30 பில்லியன் டாலர். 30 பேர் இறந்துள்ளனர்.  70 பேர் காணவில்லை.

55,000, பதிவு செய்த தொண்டு ஊழியர்கள், 25,000 பதிவு செய்யாத தொண்டு ஊழியர்கள், 22 ராணுவ ஹெலிகாப்டர்கள், 12 காவல் துறை ஹெலிகாப்டர்கள் பயிற்சிபெற்று என்றும் தயார்நிலையில் உள்ள State Emergency Service  (நம் ஊர் ஊர்க்காவல் படை போன்ற அமைப்பு) பல ஆயிரம் பேர், மருத்துவ முகாம்கள், செஞ்சிலுவை அமைப்புகள், 24 மணிநேரப் பணியில்  இயங்கினர்.  600 இராணுவ வீரர்களும் அடங்குவர்.

தாழ்வு நிலையில் வீடு இருந்து, வீடு இழந்தவர்களுக்கு ஈட்டுத்தொகையாக பெரும் தொகைகொடுத்து, அந்த வீட்டின் மதிப்புத் தொகையைக் கொடுத்து அரசே வீட்டை வாங்கி அவர்களை வேறு இடத்திற்குச் செல்ல அரசு கேட்டுக் கொள்கிறது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகையாக 17 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது.  பல சமூக அமைப்புகள், கலாச்சார அமைப்புகள், நன்கொடை வழங்குகின்றன.

கடந்தவாரம், குயின்ஸ்லாந்து பல்கலைக் கழக வளாகப்பகுதியைக் காணச் சென்ற வழியில் வீதிகள்தோறும் குவிந்து கிடக்கும் விலையுயர்ந்த பொருள்கள், சேதமடைந்த மகிழ் உந்துகளைப் பார்த்தது வேதனைக் காட்சிகள்.  பல்கலைக்கழக முதல் தளம் பாதி வரை சேற்றுநீர், தூரத்தில் இருந்துதான் பார்க்க முடிந்தது.  கடந்த 10 நாள்களாக, அனைத்து குயின்ஸ்லாந்து மாநில தொடர்வண்டிகளிலும், பேருந்துகளிலும் எங்கும் கட்டணம் இன்றிப் பயணம் செய்யும் சலுகையை அரசு வழங்கியது.  சலுகை 22.1.2011 வரை வழங்கப்பட்டது.

மழை நின்றுவிட்டது.  உதவிப் பணி தொடர்கிறது. ஆஸ்திரேலிய பெண் பிரதம அமைச்சர் ஜூலியா கில்லார்ட் (நாத்திகர்) வெள்ள நிவாரணப் பணிக்காக 5.6 பில்லியன் டாலர்களும், குயின்ஸ்லாந்து மாநிலத்துக்கு 2பில்லியன் டாலர்களும் ஒதுக்கியதாக அறிவித்துள்ளார். கோடைக் காலம் என்பதைக் காணமுடிகிறது.  காலை 6 மணிக்கும் சூடான வெயிலில் சன் கிரிம் (Sun cream) தடவிக் கொண்டு நடைப் பயிற்சிக்கும் செல்ல வேண்டியுள்ளது.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம் ஆ-றுதல் மொழி ஒரு கவலை நீக்கும் களிம்பாக அமையட்டும்.

– மு.வி. சோமசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *