அம்பலமான இந்துத்துவத்தின் முகம்

மார்ச் 16-31

இந்துத்துவாக்களின் வெற்றிநாயகனாக சில ஆண்டுகளுக்கு முன் கொண்டாடப்பட்டவர் குஜராத்தின் நரேந்திர மோடி. ஒரு கட்டத்தில் பிரதமர் பதவிக்கே பரிந்துரைக்கப்பட்டார். மீண்டும் குஜராத்தில் அவர் வெற்றிபெற்றபோது இந்துத்துவாவுக்குப் புதிய பார்முலாவைக் கொடுத்தவராகவும் பேசப்பட்டார்.இஸ்லாமியர்களே அவருக்கு வாக்களித்தனர் என்று கூறினார்கள். இப்படி அவர் புகழ்ந்துரைக்கப்பட்டது தீவிர இந்துத்துவாக் கொள்கையைக் கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு, குஜராத் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டியதால்தான். அது ஓரளவுக்கு குஜராத்தில் பா.ஜ.க.வைத் தக்கவைத்துக் கொள்ள உதவியது. ஆனால்,அவர்கள் இந்துத்துவாவை ஒத்திவைத்தார்களே தவிர விட்டுவிடவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டு தம் மீதான கறைகளைப் போக்கிக் கொள்ள அவர்கள் முயன்றார்கள் என்பது இப்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியிருக்கிறது.

இந்துத்துவாக்களின் உண்மை முகத்தைப் பல்வேறு தருணங்களில் அம்பலப்படுத்தியுள்ள தெகல்கா இதழ் இப்போது மோடியின் மோசடிகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. கோத்ராவில் கலவரம் நடந்தபோது மோடி அதனைக் கண்டும் காணாதது போல் இருந்தார் என்பது அப்போது சொல்லப்பட்ட குற்றச்சாட்டு. ஆனால்,இது தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அவரை இக்குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துவிட்டது என்ற செய்தி கடந்த 2010 டிசம்பர் 3 அன்றைய ஒரு தேசிய நாளிதழில் வெளிவந்தவுடன் மோடி குற்றமற்றவர் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. இந்தச் செய்தியை யார் தந்தது என்ற எந்தவிதத் தகவலும் இல்லை;ஆனாலும் மோடி புனிதமானவர் என ஆக்கப்பட்டார்.

சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே அளிக்கப்படவேண்டும். ஆனால்,அதற்கு முன்பாகவே இச்செய்தி திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. (இதேபோலத்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் கணக்குத் தணிக்கைக் குழுவின் அறிக்கை குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் முன்பேயே ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்டு(?) ஆ.ராசா குற்றவாளியாகச் சித்தரிக்கப்பட்டதை நினைவில் கொள்க). மோடி குற்றமற்றவர் என இந்துத்துவாக்களால் பிரச்சாரம் செய்யப்பட்டார்.

நீண்டகாலத்திற்குப் பிறகு எனக்கு உற்சாகம் அளிக்கும் செய்தி இது என்றார் அத்வானி. மோடி குற்றமற்றவர் என்று அவரை விடுவித்துள்ள சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையின் முழு விவரத்தை அறிய நாடே காத்திருக்கிறது என்று அத்வானி புளகாங்கிதம் அடைந்தார். ஆனால், அந்த அறிக்கை இப்போது தெகல்காவின் கையில் உள்ளது. அதில் உள்ள தகவல்கள் அதிர்ச்சி தரக்கூடியவை என்கிறார் தெகல்கா கட்டுரையாளர் ஆஷிஷ் கேத்தான். 2011 பிப்ரவரி 12 ஆம் நாளைய தெகல்காவில் அவர் எழுதியுள்ள கட்டுரை இந்துத்துவத்தின் இட்லர் முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற ஆணையின்படி சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை மோடி குற்றமற்றவர் என்ற நற்சான்றிதழ் எதனையும் அளித்துவிடவில்லை. அதற்கு மாறாக, 12-.5.-2010 நாளிட்ட தனது அறிக்கையில் (இந்த அறிக்கையை உச்சநீதிமன்றம் ரகசியமாகக் காத்து வருகிறது) பல விஷயங்களில் – மதம் சார்ந்த மனநிலையைக் கொண்டிருந்தது, வெறி உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசியது, முக்கியமான ஆவணங்களை அழித்தது, சங் பரிவார உறுப்பினர்களை பொது அரசு வழக்குரைஞர்களாக நியமித்தது, கலவரங்களின் போது காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் அமைச்சர்களை வைத்திருந்தது, நடுநிலை வகித்த அலுவலர்களைத் துன்புறுத்தியது போன்ற செயல்களைச் செய்த வகையில் மோடி குற்றவாளிதான் என்று விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது. குற்றவியல் நீதி நடைமுறையை மோடி கையாண்ட விதத்தில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த செயல்திட்டங்கள் மிகுந்து காணப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் மோடியின் அரசு எவ்வாறு தவறிவிட்டது என்பதை அது பதிவு செய்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராகக் குற்றம் சாற்றும் வகையில் மோடி தெரிவித்துள்ள ஒட்டு மொத்தக் குற்றச்சாற்றுகளும், ஓர் உயர்ந்த அதிகாரத்தில் இருப்பவர் எவ்வளவு சிந்தனையற்ற முறையிலும், பொறுப்பற்ற முறையிலும் பேசியுள்ளார் என்பதையே காட்டுகிறது என்றும் அந்த அறிக்கை குற்றம் சாற்றுகிறது.

இந்த அறிக்கையில் உள்ள தகவல்களை தெகல்கா பக்க எண்களுடன் எடுத்துக் கூறியுள்ளது. அதிலிருந்து சில…

* கலவரங்களின் போது, அசோக் பட் மற்றும் ஜடேஜா ஆகிய இரு மூத்த அமைச்சர்களையும் மாநகரக் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையிலும், மாநிலக் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையிலும் மாநில அரசு இருக்கச் செய்துள்ளது. எந்தவிதக் குறிப்பிட்ட செயல்திட்டமும் இன்றியே இந்த இரு அமைச்சர்களும் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப்பட்டனர் என்று சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் கருத்துத் தெரிவித்துள்ளார். காவல்துறையின் பணியில் குறுக்கிட்டு, கள அலுவலர்களுக்குத் தவறான முடிவுகளை, கட்டளைகளை அளிக்கவே அமைச்சர்கள் கட்டுப்பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப்பட்டனர் என்று கூறப்படுவதற்கு இச்செயல் வலு சேர்க்கிறது. நரேந்திரமோடி உள்துறை அமைச்சராக இருந்தார் என்பதால், இந்த ஏற்பாட்டுக்கு அவரது ஆசி இருந்தது என்ற சந்தேகம் வலுப்படுகிறது. (தலைவரின் குறிப்பு: பக்கம் 12).

* கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை நேரில் சென்று காண ஒரே நாளில் 300 கி.மீ. பயணம் செய்த மோடி, அதிக அளவிலான எண்ணிக்கை கொண்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்ட அகமதாபாத் கலவரப் பகுதிகளைச் சென்று பார்க்காததன் மூலம் வேறுபாடு காட்டியுள்ளார். (விசாரணைக் குழுத் தலைவரின் குறிப்பு: பக்கம் 8).

* உணர்ச்சி மிகுந்த கலவர வழக்குகளில் விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்தவர்களையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சேர்ந்த வழக்குரைஞர்களை அரசுத் தரப்பு குற்றவியல் வழக்குரைஞர்களாக குஜராத் அரசு நியமித்து உள்ளது. (பக்கம் 77).

* 28-.2.-2002 அன்று சட்டத்திற்குப் புறம்பாக விசுவ இந்து பரிசத் அமைப்பு அறிவித்த முழு அடைப்புப் போராட்டத்தினைத் (பந்த்) தடுத்து நிறுத்த குஜராத் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், அதற்கு மாறாக பந்துக்கு பா.ஜ.க. ஆதரவு அளித்தது. (பக்கம் 69).

(பந்த் என்ற பெயரில் விசுவ இந்து பரிசத்தும், பா.ஜ.க. தலைவர்களும் திரட்டிய இந்து கொலைவெறிக் கும்பல்களே நரோடா மற்றும் குல்பர்கா சொசைட்டி ஆகிய இடங்களில் 2002 பிப்ரவரி 28 அன்று பயங்கரமான படுகொலைகளைச் செய்தனர் என்பதை நினைவில் கொள்வது முக்கியம்).

* நரோடா பாடியா மற்றும் குல்பர்கா சொசைட்டி படுகொலை வழக்குகளில் மாநிலக் காவல்துறை மோசமான கண்துடைப்பு விசாரணையை மேற்கொண்டது. கலவரத்தில் தொடர்பு கொண்ட சங்பரிவார் உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க. தலைவர்களின் செல்பேசி அழைப்புகள் பற்றிய ஆவணங்களை வேண்டுமென்றே காவல் துறை பரிசீலிக்காமல் விட்டுவிட்டது. அவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் குஜராத் விசுவ இந்து பரிசத்தின் தலைவர் ஜெய்தீப் பட்டேல் மற்றும் பா.ஜ.க. அமைச்சர் மாயா கோட்னானி ஆகியோர். இந்த செல்பேசி அழைப்பு ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டிருந்தால், குற்றங்களில் அவர்களுக்கு உள்ள தொடர்பை மெய்ப்பிக்கும் சாட்சிகளாக அவை பயன்படுத்தப்பட்டிருக்க இயலும்.

* காந்திநகரில் உள்ள முதல் அமைச்சர் மாளிகையில் 27-.02.-2002 நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இத்தகைய அறிவுரைகள் வழங்கப்பட்டன என்று கூறப்படுகிறது.

சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் ராகவன் குறிப்பிடுகிறார்: 27.-2.-2002 அன்று காலை கோத்ராவுக்குச் சென்றுவிட்டு அகமதாபாத்துக்குத் திரும்பிய முதல் அமைச்சர் அன்று இரவு தனது வீட்டில் ஒரு கூட்டம் நடத்தினார் என்பது விசாரணையில் தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. (விசாரணைக் குழுத் தலைவரின் குறிப்புகள் பக்கம் 3).

* சிறப்பு விசாரணைக் குழுவின் முன் ஆஜரான இரண்டு மூத்த அதிகாரிகள் ஸ்வர்ண காந்த வர்மாவும், அசோக் நாராயணும் , முஸ்லிம்கள் மீது தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள இந்துக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அதிர்ச்சி தரும் சொற்களை மோடி கூறினார் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக, இத்தனை ஆண்டு காலம் கழிந்த பிறகு அவர் கூறியது எங்களுக்கு நினைவில்லை என்று கூறினார்கள். (பக்கம் 16).

* உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி.சவந்த் மற்றும் பம்பாய் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹோஸ்பெர்ட் சுரேஷ் இருவரும், கவலைப்படும் குடிமக்களின் தீர்ப்பாய உறுப்பினர்களாக கலவரங்கள் பற்றி விசாரணை நடத்திய போது, குஜராத் முன்னாள் வருவாய்த் துறை இணை அமைச்சர் ஹரேன் பாண்டியா, கலவரங்களில் மோடியைத் தொடர்புப்படுத்தும் வகையில் தங்களிடம் வாக்குமூலம் அளித்தார் என்று சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறுதிப்படுத்தினர் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

* பாண்டியா 2002 மே 13 அன்று எங்கள் முன் ஆஜராகி, தனது பெயர் வெளியில் தெரியக் கூடாது என்ற நிபந்தனையுடன், மோடியின் வீட்டில் 27.-2.-2002 அன்று நடந்த கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அக்கூட்டத்தில் பேசிய மோடி அடுத்த நாளன்று இந்துக்களிடமிருந்து ஓர் எதிர்த் தாக்குதல் கட்டாயம் நடக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார் என்பதாக வாக்குமூலம் அளித்தார் என்று இந்த இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகளும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் தெரிவித்தனர். (அறிக்கையின் பக்கம் 18).

இவையெல்லாம் அந்த விசாரணைக் குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளவற்றில் சில மட்டுமே. குறிப்பாக சஞ்சீவ் பட் என்ற காவல்துறை அதிகாரியை ஏன் சிறப்பு விசாரணைக் குழு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தெகல்கா கேள்வி எழுப்பியுள்ளது. ஆஷிஷ் கேத்தன் தொடர்ந்து எழுதுகிறார்: எதிர்நீச்சல் போட்டு உண்மையைக் கூற முன்வந்த ஒரே ஒரு மனிதர் சஞ்சீவ் பட். அவரை ஏன் சிறப்பு விசாரணைக் குழு பயன்படுத்திக் கொள்ளவில்லை?

மவுனமாக இருத்தல், தனக்கு நினைவில்லை என்று கூறுதல் போன்ற மென்மையான வழிகளைப் பல அலுவலர்கள் தேர்ந்தெடுத்தனர் என்றபோதிலும், முதல் அமைச்சரின் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டேன் என்று கூறும் அய்.பி.எஸ். அதிகாரியான சஞ்சீவ் பட் உண்மையைக் கூற முன்வந்தார். தற்போது உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருக்கும் அவர், கலவரங்களின்போது மாநிலப் புலனாய்வுத் துறையில் மாநகர உதவிக் காவல்துறை ஆணையராக இருந்தார்.

காவல் துறை டைரக்டர் ஜெனரல் சக்ரவர்த்திதான் முதல் அமைச்சர் கூட்டிய அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினார் என்று சஞ்சீவ் பட் சிறப்பு விசாரணைக் குழுவிடம் கூறினார். புலனாய்வுத் துறைத் தலைவர் ஜி.சி. ராய்கர் விடுப்பில் சென்றிருந்தபடியால், சபர்மதி ரயில் எரிப்புச் சம்பவம்பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவிக்கத் தவறியது எப்படி என்பது போன்ற புலனாய்வுத் துறை பற்றிக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் கூற புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரி எவராவது இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று சக்ரவர்த்தி விரும்பினார் என்று சஞ்சீவ் பட் சிறப்பு விசாரணைக் குழுவிடம் தெரிவித்தார்.

ஆனாலும், இதற்கு மேல் எதுவும் கூற சஞ்சீவ் பட் மறுத்துவிட்டார். மோடிக்கு எதிரான இந்த விசாரணை ஒரு தொடக்க நிலை விசாரணை என்பதால், இது பற்றி இதற்கு மேல் பேச நான் விரும்பவில்லை என்று சஞ்சீவ் பட் விசாரணைக் குழுவிடம் கூறினார்.

என்றாலும், ஒரு குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டால், சாட்சியம் அளித்து உண்மையைக் கூற தான் கடமைப்பட்டிருப்பதாக அவர் கூறினார். (இந்தச் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை முற்றிலும் ஆராயும் தன்மையை மட்டுமே கொண்டது என்பதால், தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரி ஒருவர், எந்தவிதப் பயனும் இல்லாமல், தான் பேசுவது தனது பணிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கக் கூடிய வகையில், அமையும் என்பது அவரது கருத்தாக இருந்திருக்கலாம்).

பின்னர் ஒரு நிலையில் சாட்சியம் அளிக்க தனது விருப்பத்தை அவர் தெரிவித்த உடனே, திரைமறைவில் வேகமாகச் செயல்கள் நடைபெறத் தொடங்கின. 25-3-2010 இல் விசாரணை அலுவலர் மல்ஹோத்ரா நரேந்திர மோடியை விசாரித்த போது, அதிசயமான முறையில் மோடி வாய்தவறி ஒன்றைக் கூறிவிட்டார்.

சபர்மதி ரயில் எரிப்புச் சம்பவ இடத்தைப் பார்த்துவிட்டு கோத்ராவிலிருந்து திரும்பிய பிறகு,

27-.2.-2002 அன்று தனது வீட்டில் ஒரு கூட்டத்தைக் கூட்டியதாக அவர் ஒப்புக் கொண்டார். அக்கூட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்று கேட்கப்பட்ட போது, தன்னைத் தவிர ஏழு அதிகாரிகள் கலந்துகொண்டதாக மோடி கூறினார். அதன்பின், எந்தக் கேள்வியும் கேட்காமலேயே, அது உயர்மட்ட அலுவலர் கூட்டம் என்பதால், புலனாய்வுத் துறை உதவி ஆணையராக இருந்த சஞ்சீவ் பட் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என்று மோடி கூறினார். சஞ்சீவ் பட்டின் பெயரை அவர் ஏன் கூறினார்? யார் யார் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்றுதான் விசாரணை அலுவலர் கேட்டாரே ஒழிய யார் யார் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வியைக் கேட்கவில்லை. சிறப்பு விசாரணைக் குழுவின் முன் சஞ்சீவ் பட் அளித்த சாட்சியத்தைப் பற்றி யாரோ மோடியிடம் கூறி அவரை எச்சரித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. விசாரணை அலுவலர் கேட்ட கேள்வியில் சஞ்சீவ் பட்டைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லாத நிலையிலும், சஞ்சீவ் பட் கூறியதை மறுத்து அவரை மதிப்பிழக்கச் செய்யத் தயாராகவே மோடி வந்திருந்தார்.

அக்கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டதுபற்றிக் கேட்கப்பட்டபோது இந்த மற்ற ஏழு அதிகாரிகளும்கூட வியப்பான முறையில் எதிர்வினையாற்றினர். ஸ்வர்ண காந்த் வர்மாவும், அசோக் நாராயணனும் தங்களுக்கு நினைவில்லை என்று கூறினார்கள். முதல் அமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த பி.கே.மிஸ்ரா, சஞ்சீவ் பட் கூட்டத்தில் கலந்து கொண்டதை மறுக்கவில்லை; ஆனால், தன்னால் நினைவுபடுத்திக் கூற முடியவில்லை என்று கூறினார். மற்ற நான்கு அதிகாரிகளில் காவல்துறை இயக்குநர் ஜெனரலாக இருந்த சக்ரவர்த்தி ஒருவர் மட்டும் சஞ்சீவ் பட் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறுவதை மொத்தமாக மறுத்தார். மற்ற மூவரும் குழப்பமான பதில்களை அளித்தனர்.

இந்த முரண்பாடுகளுக்குப் பின்னும், தனது அறிக்கையின் 149 ஆம் பக்கத்தில் விசாரணை அலுவலர் மல்ஹோத்ரா முடிக்கிறார்: முதல் அமைச்சர் கூட்டிய கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டது பற்றிய அவரது அறிக்கை மெய்ப்பிக்கப் படாததால் அது பொருட்படுத்தாமல் ஒதுக்கப்படுகிறது. மோடி அரசால் பரிச ளிக்கப்பட்டவர்கள் அல்லது அவரது அரசில் தொடர்ந்து பணியாற்றுபவர்கள் என்பதால், அந்த ஏழு அதிகாரிகளின் சாட்சியங்கள் நம்பத்தகுந்தவையல்ல என்று மல்ஹோத்ராவே கூறியுள்ளார். சஞ்சீவ் பட் கூட்டத்தில் கலந்துகொண்டது பற்றி வரும்போது மட்டும், இந்த நம்பத்தகாத சாட்சிகளை எப்படி மல்ஹோத்ரா நம்புகிறார் என்பதுதான் முற்றிலும் நம்பமுடியாததாக உள்ளது. (விசாரணைக் குழுத் தலைவரின் குறிப்புகள்)

விசாரணைக் குழுத் தலைவரின் குறிப்புகளும் அது போலவே காரணம் கூற முடியாதவையாக உள்ளன. ஒரு முறையான குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதனால் ஏற்படும் சட்டப்படியான ஒரு கடமை என்று வரும்போது மட்டும்தான் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த முடியும் என்று புலனாய்வுத் துறைக் கண்காணிப்பாளர் சஞ்சய் பட் விசாரணைக் குழுவிடம் கூறியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது என்பதைப்பற்றிக் கூறுவதில் அவருக்கு ஏதோ சில மறுப்புகள் இருப்பதாகத் தோன்றுகிறது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் அலுவலர்களில் எவர் ஒருவரும் சஞ்சீவ் பட் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று கூறாததால், சஞ்சீவ் பட் ஒரு நம்பத்தகாத சாட்சியாகவே கருதப்படுகிறார். அத்தகைய ஒரு உயர் நிலை அதிகாரிகளின் கூட்டத்தில் அழைக்கப்பட இயலாத அளவில் அவர் பணி மூப்பில் இளையவரானவர். (தலைவரின் குறிப்புகள் பக்கம் 3-4).

கேட்காமலேயே சஞ்சீவ் பட்டைப் பற்றி மோடி சொன்ன தகவலை, பகுத்தறிவு வழியில் ஆய்வு செய்யாமலேயே சிறப்பு விசாரணைக் குழு ஏற்றுக் கொண்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதைவிட வியப்பான செய்தி என்னவென்றால், 27.-2.-2002 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டதாகக் கூறியதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் சிறப்பு விசாரணைக் குழு, அவர்களின் அறிக்கையில், மற்ற இடங்களில் சஞ்சீவ் பட் அளித்த சாட்சியத்தை மட்டும் ஏற்றுக் கொண்டிருப்பதுதான் என்கிறார் ஆஷிஷ் கேத்தான்.

கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான வழக்கில் மார்ச் 1 அன்று சிறப்பு நீதிமன்றம் 11 பேர்களுக்குத் தூக்கும் 20 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும் அளித்துத் தீர்ப்பு வழங்கிவிட்டது. ஆனால், அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வன்முறைகளும், கலவரங்களும்,கொலைகளும் முதலமைச்சர் மோடியின் ஆசியுடனேயே நடந்தது என்று தெகல்கா அம்பலப்படுத்தியுள்ளது. 2000 சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. 230 தர்காக்கள் மண் குவியலாகின. 4000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வண்டிகள் சாம்பலாக்கப்பட்டன; ஆயிரம் உணவு விடுதிகள் குட்டிச் சுவர்களாக்கப்பட்டன. 3800 கோடி ரூபாய் இழப்புக்கு ஆளானார்கள் – சிறுபான்மை மக்களான முசுலிம்கள்.

இவ்வளவு கொடுமைகள் நிகழ்த்தப்படுவதற்கு 12 லட்சம் பேர்கள் களத்தில் இறக்கப்பட்டனர். இதன் பின்னணியில் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு இருந்திருக்கிறது.

ஏட்டிக்குப் போட்டியாகச் சொல்லப்படும் கற்பனையல்ல இது. ஆளும் பி.ஜே.பி.யைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களிடமே தகவல்களை வாங்கி, தெகல்கா ஊடகம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது. இச்சூழலில்இந்தியாவின் நீதி(?) என்ன செய்யப்போகிறது?என்ற கேள்வியை மனித நேய ஆர்வலர்கள் எழுப்புகிறார்கள்.

மோடி வெற்றிபெற்றது ஒரு சில சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான். இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் குற்றமற்றவர் என்று சாதிக்கத் துடிக்கிறார். அவருக்குப் பார்ப்பன ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள சோ, அவரது ஆட்சிதான் முன்மாதிரியான ஆட்சி என்று வெட்கமில்லாமல் கூறுகிறார். ஆனால், அண்மையில் வெளியான செய்தி ஒன்று, குஜராத்தில்தான் பசியும் பட்டினியும் அதிகமாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுவதாகத் தெரிவிக்கிறது.கொள்கை அளவிலும்,ஆட்சி நிருவாக அளவிலும் மக்கள் விரோத மோடிகள் இன்னும் நீடிக்கிறார்கள் என்பதுதான் இந்தியாவின் அவலங்களில் முதன்மையானது. சமூக நீதிக்கான பல நடவடிக்கைகளின் போது குறுக்கே கட்டையைப் போடும் நீதித் துறை இந்தக் கொலைகாரர்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கலாமா?

– மணிமகன்
மொழியாக்க உதவி: இளங்கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *