சிந்தனைத்துளிகள் – அம்பேத்கர்

ஏப்ரல் 01-15

ஓய்வின்றிக் கஷ்டப்பட்டு உழைப்பதன் மூலமாகத்தான் சக்தியும், தன்னம்பிக்கையும், நன்மதிப்பும் பெறமுடியும்.

புத்தம், நீதி நூலை அடிப்படையாகக் கொண்டது.  புத்தர் ஒரு வழிகாட்டியாக நடந்து கொண்டார்.  கடவுளாக அல்ல.

துளி ரத்தமும் சிந்தாமல், மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தும் அரசு முறையே நவீன ஜனநாயகம் ஆகும்.

இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஜாதிகளும், மூடத்தனங்களும் இருந்துகொண்டிருக்கும் நாள்வரைக்கும் நாம் பிற நாடுகளின் முன்பாக தலை நிமிர்ந்து வாழ இயலாது.

தீண்டாமை, மதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல; பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது.  இது, அடிமைத்தனத்தைக் காட்டிலும் மிகவும் மோசமானது.

ஒருவர் உள்ளத்தால் சுதந்திரமாக இல்லையென்றால் அவர் சிறையில் அடைக்கப்படாவிட்டாலும்கூட சிறைக் கைதியே ஆவார்.

சீரிய லட்சியமாகிய சுயமரியாதையை வளர்ப்பதில் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.  இதுதான் மனித வாழ்விற்கே சிறப்பாகும்.

மாணவர்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டிய இடமாகப் பல்கலைக்கழகத்தின் கல்வியைப் பெறுதல் வேண்டும்.  எழுத்தர்கள் வேலைக்குப் பயிற்சிபெறும் நிலையமாக ஆக்கிக்கொள்ளக் கூடாது.

அறிவானது மனிதனுடைய வாழ்வின் அஸ்திவாரம் ஆகும்.   ஆதலால், மாணவர்கள் தங்களது முயற்சிகள் அனைத்தையும் பகுத்தறிவின் சக்தியைக் கொண்டு நிர்வகிக்கக் கூடியவைகளாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரே பக்கத்தில் இரண்டு சிறகுகளை உடைய ஒரு பறவைக்கு எப்படிப் பறக்க இயலாதோ, அப்படியே விதிவிலக்கு அடங்கிய ஒரு மதத்தைப் பின்பற்றும் சமூகத்திற்கு முன்னேற்றம் முடியாது.

ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்கும் திறன் உள்ளவராகவும் கல்வியறிவு உடையவராகவும் திகழ்தல் வேண்டும்.

எப்போதும் ஊக்கமாக சமூக சேவை செய்தால் உங்கள் முன்னோர்களால் சாதிக்க முடியாததை உங்களால் வெகு சுலபமாகச் சாதிக்க முடியும்.

மலைக்கும், நதிக்கும், காற்றுக்கும், நீருக்கும், புத்தகங்களுக்கும்கூட பெண்பாலை முன்னிறுத்திப் பெருமை சேர்ப்பதாகப் பாசாங்கு செய்கின்றார்கள்.

இந்தியா \ பாகிஸ்தான் நட்புறவு ஒரு பகற்கனவாகும்.  இஸ்லாமின் கொள்கை \ வேறுபாடு \ பண்பாடு ஆகியவை வேறு எந்த ஒரு மத ஆதிக்கத்தின் கீழும் இருக்கக் கூடாது என்பதை வேறுவகையில் வெளிக்காட்டுவதுதான் பாகிஸ்தான் என்பது.

சீர்திருத்தக்காரர்களை இம்சிப்பதற்கும், சீர்திருத்த இயக்கங்களை ஒழிப்பதற்கும் வைதிகர்களுக்கு ஜாதி ஒரு ஏற்ற கருவியாக அமைந்துள்ளது.

வழிகளையும், முறைகளையும் நீங்கள் சரியாக அறிந்து கொள்ளாவிட்டால் உங்கள் முயற்சிகள் எல்லாம் வீணாவது நிச்சயம்.

தனி மனிதனை மறந்துவிட்டு நாட்டின் பொதுநலத்தையே மூச்சாகக் கருதி, அதற்காகவே நம்பிக்கைப் பிரமாணம் எடுப்பவரின் கையில்தான் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *