திருச்சியில் நாத்திகர்களின் சங்கமம்

ஜனவரி 16-31

அனைவரும் சமமானவர்களாகப் பிறந்து இருப்பதால் அவர்கள் சமமாகவே வாழ வேண்டும் என்ற தீர்மானத்தை, திருச்சியில் ஜனவரி 7,8,9 தேதிகளில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாடு நிறைவேற்றியிருக்கிறது.

உலகப் பகுத்தறிவாளர்களின் தலைநகரமான தமிழ்நாட்டின் திருச்சியில் பகுத்தறிவாளர் கழகம், விஜயாவாடா நாத்திகர் மய்யம், திராவிடர் கழகம் இணைந்து மாநாட்டினை நடத்தினர். மாநாட்டின் மய்ய ஊக்க சக்தியான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், தந்தை பெரியாரை உலகமயமாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றதை இம்மாநாடு அறிவுறுத்தியது. இந்தியாவில் பிற மாநிலங்களிலிருந்தும், உலகின் பல்வேறு பகுதியான நார்வே, பின்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான உலக நாத்திகர்கள் திருச்சியில் சங்கமித்தனர்.  மாநாட்டில் பின்லாந்து நாட்டின் சுயசிந்தனையாளர் சங்கத்தைச் சேர்ந்த பெக்கா எலோ, அமெரிக்காவின் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவன், மலேசிய திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கே.ஆர்.ஆர்.அன்பழகன், சிங்கப்பூர் எஸ்.ரத்னகுமார், விஜயவாடாவைச் சேர்ந்த லவனம்,  விகாஸ் கோரா, நார்வே நாட்டைச் சேர்ந்த லெவி ஃபிராகல், திரு.கிரான், திருமதி. கிறிஸ்டியன்-_மை, பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் இலக்குவன் தமிழ்,  டாக்டர் சமரம், டாக்டர் பாபு கோகினேனி, டாக்டர் தானேஸ்வர் சாகு, பேராசிரியர் நரேந்திர நாயக், முனைவர் சனல் இடமருகு, முனைவர் ரவிவர்மகுமார் உள்ளிட்ட வெளிநாடுகள், பிற மாநிலங்களில் உள்ள அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு மாநாட்டிற்கு மாண்பினைச் சேர்ந்துள்ளனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியான இம்மாநாட்டினை நடத்தி, பயன் நிறைந்த முற்போக்குக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் இந்த மாநாட்டின் நோக்கத்தை வெற்றி பெறச் செய்ய இருக்கும எனது அருமை இளவல் திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களுக்கும், ஒட்டு மொத்த நாத்திகச் சகோதர அமைப்புகளுக்கும், தலைவர்களுக்கும், பேராளர்களுக்கும் எனது இதயப் பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதல் அமைச்சர் கலைஞர் அவர்களும்,  கடவுளை மற; கடவுள் மீது கொண்ட நம்பிக்கையைத் துற; மனிதனைப்-பற்றியும், மனிதகுல நலனைப்பற்றியும் நினை என்பதே பகுத்தறிவு இயக்கத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் எழுப்பிய பெருமுழக்கம். தமிழ்நாட்டின் இந்த இயக்கத்திற்கு இணையான இயக்கம் உலகத்தில் வேறு எந்த நாட்டிலுமே இல்லை. இந்த மாநாடு பெருவெற்றி பெறவும், மாநாட்டின் நிகழ்ச்சிகளும், விவாதங்களும் பயன் நிறைந்த செய்தியைப் பரப்பவும் நான் வாழ்த்துகிறேன் என்று தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களும் வாழ்த்துச் செய்தி-களை அனுப்பி இருந்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் கோலாகலத்துடன் மாநாடு தொடங்கியது. அவரது உரைக் கருத்துகளுள் சில: மதம் மக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைப் போக்காது. மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளைப் போக்காது.
நாத்திகமே உலக மனித சமுதாயத்தை நல் வழிக்கு அழைத்துச் செல்லும் நன்னெறியாகும். நாத்திக நெறிதான் நன்னெறி என்பதை, கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்னாலேயே  மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியாரின் கொள்கைதான் இன்றைக்கு உலகம் முழுமைக்கும் தேவைப்-படுகிறது. பெரியாரின் கொள்கை வளர்ந்-திருக்கிறது. உலகத்திலேயே நாத்திக இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக நடத்துவது தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில்தான்.

தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி மேற்கொண்ட பொழுது கடவுள் பெயரால் உறுதிமொழி எடுத்துக் கொள்ளாமல் மனசாட்சிப்படிதான் உறுதிமொழி மேற்-கொண்டனர். தமிழ்நாட்டில் தி.மு.க அரசுதான் தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்டது.
இது உலகத்தில் வேறு எங்கும் காண முடியாத, கேட்க முடியாத செய்தியாகும். இதற்குக் காரணம் என்னவென்றால் அந்த அளவுக்கு இந்த மண்ணை தந்தை பெரியார் பக்குவப்படுத்தியிருக்கின்றார் என்று வீர முழக்கமிட்டார்.

மாநாட்டு நோக்கத்திற்கான உரையினை முனைவர் விஜயமும் மாநாட்டுத் தொடக்க உரையினை லெவி ஃபிராகலும், அறிவியல் கண்காட்சியினை மு.நாகநாதனும், புத்தகக் கண்காட்சியினை அ.இராமசாமியும் திறந்து வைத்தனர். கடந்து வந்த பாதைகளையும், நடக்கின்ற நிகழ்வுகளையும் ஆய்ந்து பார்த்தால், மானுடம் சந்திக்கும் வீழ்ச்சிக்கு மதம்தான் காரணமாக அமைகிறது. பெரும்பான்மையான மதங்கள் மூடநம்பிக்கைகளிலும், கடவுளின் பொய்மைத் தோற்றத்திலும் நிலைத்திருக்கின்றன, மக்களைப் பிளவுபடுத்தி வருகின்றன என்று சிந்தனையைத் தட்டியெழுப்பும் பல கருத்துகளுடன் உரையாற்றினார் தமிழக அரசின் திட்டக் குழுத் துணைத் தலைவர் மு. நாகநாதன்.

முதல்நாள், திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி  வளாகத்தில் நாத்திகம் மற்றும் மனித-நேயம்_ஒரு வாழ்க்கை முறை, சமூக மாற்றத்திற்கு நாத்திகம், நாத்திகக் கொள்கை பரப்புவதில் பிஞ்சுகளின் பங்கு என்ற மூன்று தலைப்புகளில் மும்மணிகளைக் கோர்த்தாற் போன்ற முத்தாய்ப்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
பெக்கா எலோ மாநாட்டு மலரினை வெளியிட்டு மலருக்குப் பெருமை சேர்த்தார். 5 ஆங்கில நூல்களும், 2 தமிழ் நூல்களும் வெளியிட்டு மாநாட்டில் வெளியிடப்-பட்டன.  மாநாட்டின் இரண்டாம் நாளான 8 ஆம் தேதி காலையில் தஞ்சாவூர், வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உள்ள மூங்கில் பண்ணையினைப் பார்த்த உலக நாத்திகப் பேராளர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.

மகிழ்ச்சியினூடே தங்கள் சிற்றுண்டியினை மூங்கில் பண்ணையிலேயே உண்டு மகிழ்ந்தனர். இரண்டாவது நாள் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தின் பலமான அடித்தளம் -_ நாத்திகம், மகளிர் உரிமைக்கு நாத்திகம், அறிவியலும் போலி அறிவியலும், இளைஞர்களும் நாத்திகமும் என்ற நான்கு தலைப்புகளில் நடைபெற்ற கருத்தரங்கம் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி சிந்திக்கத் தூண்டியது.  அன்று மாலை 5 மணியளவில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலையிலிருந்து பிரமாண்டமான மூடநம்பிக்கைப் பேரணி பேராரவாரத்துடன் தொடங்கியது. 9.1.2011 காலை திருச்சியிலுள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் மதச் சார்பின்மை, நாத்திகம் மற்றும் மனித-நேயத்தைப் பலப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு, தனி மனிதர் மற்றும் சமூக நல்வாழ்வினைப் பாதுகாப்பதில் நாத்திகத்தின் பங்கு என்ற இரு தலைப்புகளில் அருமையான கருத்துகளுடன் கருத்தரங்கம் நடைபெற்றது.

பின்பு கருத்தரங்கங்களில் அமர்ந்து கருத்துகளை வெளியிட்ட தலைவர்களின் கருத்துகளைப்பற்றிய கலந்துரையாடல் பட்டை தீட்டிய வைரமாக -_ கருத்தரங்கக் கருத்துகளின் மணிமகுடமாகத் திகழ்ந்தது.

பஞ்சாபைச் சேர்ந்த சில பேராளர்களும், நார்வே நாட்டைச் சேர்ந்த பேராளர்கள் சிலரும் நமது கழகத் தோழர்கள் கைகளில் பிடித்திருந்த திராவிடர் கழகக் கொடியினை வாங்கி வெற்றிப் பெருமிதத்தோடு நடந்து வந்து நம் கொள்கைக்கு-_கழகத்துக்கு மெருகூட்டிப் பெருமை சேர்த்தனர். தந்தை பெரியார் உலகமயமாகி வருகிறார் என்பதற்கு வேறு சான்று தேவையில்லை.

மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கழக மகளிர் அணியினர் தீச்சட்டிகளை ஏந்தி பகுத்தறிவு முழக்கங்களை வெளியிட்டனர். பார்வையாளர்களாக நின்ற பெண்களின் கைகளில் கொடுத்து அம்மன் சக்தியின் ரகசியத்தை அம்பலப்படுத்தினர். வெளிநாடுகளிலிருந்து வந்த நாத்திக அறிஞர்களும் தங்கள் கைகளில் தீச்சட்டியினை ஏந்தி வந்தனர்.

நமது தோழர்கள் தீக்குண்டம் இறங்கியபோது பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், நார்வே நாட்டைச் சேர்ந்தவர்-கள்கூட தீக்குண்டம் இறங்கி பொதுமக்களிடம் நிலவி வரும் மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.

ஊர்வலத்தின் நிறைவில் திறந்த வெளி மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தந்தை பெரியாரின் சிறப்புகளை  எடுத்து விளக்கிப் பேசினார். அப்போது, மதமற்ற உலகைப் படைப்போம். பகுத்தறிவு – மனிதநேயமுள்ள சமுதாயத்தைப் படைக்க நாம் எல்லோரும் பாடுபடுவோம். இதுதான் இந்த மாநாட்டிற்கு நாங்கள் தரும் முக்கிய நோக்க-மாகும்; முக்கியச் செய்தியாகும். ராமச்சந்திர குகா என்பவர் பார்ப்பனர்தான்; பெரியாரிஸ்ட் அல்ல. அண்மையில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். மாடர்ன் மேக்கர்ஸ் ஆஃப் இந்தியா என்பது அந்த நூலின் பெயர். இந்த நூலிலே 19 பேர்கள்பற்றிக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

வடக்கே அண்ணல் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபாபுலே, தெற்கில் தந்தை பெரியார் பற்றி மட்டுமே குறிப்பிட்டு எழுதியுள்ளார். ஆங்கில நூல்கள் எப்பொழுதும் நம்மை இருட்டடிக்கும். அதையும் கடந்து ஆங்கிலத்தில் இருட்டடிக்கப்-பட முடியாத தலைவராக தந்தை பெரியார் உயர்ந்து நிற்கிறாரே! The Radical Reformer E.V. Ramasamy  என்று குறிப்பிட்டுள்ளார்.

1930 முதல் பெரியார், நாத்திகக் கொள்கை, பெண்ணுரிமைக் கொள்கை குடும்பக் கட்டுப்-பாடு பற்றி கருத்துத் தெரிவித்துள்ள சுயசிந்தனையாளர் பெரியார் என்று குறிப்பிடப்-பட்டுள்ளது அந்த நூலில்.

இந்தியை எதிர்த்தார், இறுதியில் பெரியார் அதில் வென்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ராமனைக் காட்டி சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கியுள்ளனர். மதமும், கடவுளும் மக்கள் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன என்பதற்கு இது ஒன்று போதாதா?

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது; கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்-பட்டவை. எனவே, பிராமணர்களே நமது கடவுள், தெய்வம், அவனையே வணங்க வேண்டும் என்பதுதானே பார்ப்பனர்கள் வேதம்?

மூலபலத்தைக் கண்டுபிடித்தே பெரியார் போர் தொடுத்தார் – வெற்றி பெற்றார் என்ற அறிவுப் பொறியினைத் தட்டி எழுப்பும் அருமையான கருத்துகளுடன் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புச் சொற்-பொழிவாற்றிய நாடாளுமன்ற மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்கள் பேசும்போது பிரச்சினைகள்பற்றி மக்கள் சிந்திப்பதில்லை. அதனை எப்படித் தீர்ப்பது என்று சிந்திப்பதில்லை. நேராகக் கோயிலுக்குச் சென்று கடவுளிடம் கூறி உடனடித் தீர்வு – இன்ஸ்டன்ட் தீர்வு கிடைக்க வேண்டும், கிடைக்கும் என்று நம்புகிறார்கள். கடவுளும், மதமும் தீர்வுகளைக் கொடுத்துள்ளதா? கெட்ட நாள், கெட்ட நேரம் என்று மாதத்தில் 20 நாள்களை வீணடிப்பது தான் மதம் கொடுக்கும் தீர்வா?

இங்கு ஏன் புரட்சி வரவில்லை? எதிலும் அடக்குமுறை –  சிந்தனை அடக்குமுறை. இன்று கஷ்டப்படு; ஏன், எதற்கு என்று கேட்காதே! வாயை மூடு! அடுத்த ஜென்மத்தில் உனக்கு நல்லது கிடைக்கும் என்று நம்பவைத்து விட்டனர்–  கடவுளின் பெயரால்–மதத்தின் பெயரால்.

அடக்க நினைப்பவர்களுக்கு இந்தக் கடவுளும், மதமும் வசதியாக இருக்கின்றன.  மனிதன் சுயமரியாதையுடன் கலந்து சமத்துவமாக வாழ அன்பும், அறிவும் அவசியம் தேவை. அதைத்தான் தந்தை பெரியார் வாழ்நாள் எல்லாம் வலியுறுத்தினார். அய்யாவின் அந்த வழிதான் நாட்டுக்குத் தேவை. அதுதான் மனித குலத்தை வாழ வைக்கும் என்றார்.

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி மற்றும் பெரியார் பிஞ்சுகள் யாழினி, வடசென்னை வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தமிழக அரசின் பெரியார் விருது பெறும் திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை அவர்களை மாநாட்டிற்கு வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கானோர் தமது கையொலி மூலம் வாழ்த்தினர். அமெரிக்காவின் பெரியார் பன்னாட்டு அமைப்பில் வழங்கப்படும் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது, அனைத்திந்திய பிற்படுத்தப்-பட்டோர் ஊழியர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்களுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. ப.க. தலைவர் வா.நேரு, பொதுச் செயலாளர் வீ.குமரேசன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்க மாநாட்டுக் கண்ணோட்டத்தினை திரு.விகாஸ் கோரா தொகுத்துக் கூற திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு அவர்கள் மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்தார். அனைவரும் சமமானவர்களாகப் பிறந்து இருப்பதால் அவர்கள் சமமாகவே வாழ வேண்டும்.

* ஆழ்ந்து நுணுக்கமாகச் சிந்தித்தல், அறிவியல் மனப்பான்மை, சுதந்திரமான ஆய்வு ஆகியவை சமூகத்தின் சிந்தனைக்கும் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதவை.

* கடவுள் நம்பிக்கையற்றிருப்பதற்கான உரிமையும்,  அதனடிப்படையில் செயல்படும் உரிமையும் வேண்டும்.

* பாலியல் சமத்துவம், பொருளாதார முன்னேற்றம், சமூகநீதி, மற்றும் சம வாய்ப்பு ஆகியவை அளிக்கப்படுவதன் மூலம் பெண்-களுக்கு உள்ளேயே மறைந்துள்ள திறமைகள் வெளிப்பட்டு, சமூக வளர்ச்சிக்கு முழுமையாகப் பங்களிக்கச் செய்யப்பட வேண்டும்.

* மனித மதிப்பீடுகளை நிலைநாட்டுவதன் மூலம் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் சமத்துவத்தின் இன்றியமையாமை வலியுறுத்தப்-படவேண்டும்.

* அரசியல், கல்வி, சட்டம் ஆகியவற்றிலிருந்து மதத்தைப் பிரிப்பதன் மூலம், நாம் பாதுகாத்து வரும்  மதச் சார்பின்மை என்ற கோட்பாடு பலப்படுத்தப்பட வேண்டும்.

* அறிவியலுக்கும், ஜோதிடம், வாஸ்து போன்ற போலி அறிவியலுக்கும் இடையே உள்ள வேறுபாடு தெளிவாக வரையறுக்கப்-படவேண்டும்.

* குழந்தைகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் ஆகியோரின் மனித உரிமைகள் மதித்து, அங்கீகரித்து  பாதுகாக்கப்-பட வேண்டும்.

* மனித உரிமைகளுக்கும், சமூக நலத்திற்கும்  மேம்பட்ட மதச் சுதந்திரம் எதுவும் இருக்க முடியாது; இருக்கக்கூடாது.

வாழ்க்கையின் ஒவ்வொரு களத்திலும் மதச் சார்பின்மை மற்றும் மக்களாட்சி மதிப்பீடுகள் நிலைநாட்டப்பட வேண்டும்;  நாட்டின் ஒவ்-வொரு நடப்பிலும் உள்ள குடிமக்களின் ஆக்கப்பூர்வமான பங்கேற்பு வளர்க்கப்பட வேண்டும்.

போரைக் கைவிட்டு  அமைதி காண்பது, அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெறுவது, மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு உண்மை நிலையை உணர்வது, சண்டை சச்சரவுகளைக் கைவிட்டு ஒத்துழைப்பது  ஆகியவற்றின் மூலம் மனிதநேய மதிப்பீடுகள் நிறைந்த ஒரு புதிய சமூகத்தை நோக்கி நடைபயில்வதற்கான நம்பிக்கை அளிக்கும் நாத்திகக் கண்ணோட்டம்  பரவச் செய்யப்பட வேண்டும். நிறைவு நாளான  9ஆம் தேதி காலை திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் நாட்டுப்-புறக் கலை நிகழ்ச்சிகள் எழுச்சியோடு நடைபெற்றன.

அந்நிகழ்வுகளை அயல் மாநிலத்தவரும் அயல் நாட்டவரும் வெகுவாக ரசித்தனர். பின்னர் 15 பானைகளில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாநாட்டின் முக்கிய அம்சமாக  பெரியார் சமூகக் காப்பு அணியின் தொண்டர்கள் கருப்புச் சீருடையுடன், உணர்ச்சியுடன் அணிவகுத்து வந்ததைத் திருச்சி மாநகரமே கண்டு திகைத்தது. மற்றொரு முக்கிய நிகழ்வாக அறிவியல் கண்காட்சி மாணவர்களால் நடத்தப்பட்டது. இதில், மூடநம்பிக்கைகளை  முறியடிக்கும் அறிவியல் விளக்கங்கள் எடுத்துக் கூறப்பட்டன.

கண்காட்சியினுள் மாணவ மாணவியர் ஏராள-மாகக் குவிந்த வண்ணம் இருந்தனர். மாநாட்டு வளாகத்தில் எங்கு பார்த்தாலும் கருப்புப்படை மற்றும் பெரியார் உருவம் பொறித்த பனியன் அணிந்த பெரியார் பிஞ்சுகள் திரண்டிருந்து மாநாட்டில் பேசப்பட்ட கருத்துகளை உள்வாங்கினர். பகுத்தறிவையும், அறிவியல் மனப்பான்மையையும், மனித நேயத்தினையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் மாபெரும் இயக்கம் இடையறாது  செயல்படுகிறது என்பதை, இந்த மூன்று நாள் மாநாட்டிலிருந்து உணர முடிந்தது.


நெஞ்சம் நிறைத்த பிஞ்சுகள்

வருங்காலத் தூண்களாய் இந்தியாவைத் தாங்க இருக்கும் பிஞ்சுகளுக்கான கருத்தரங்கில் த.க.கவுதமன், உ.த.அறிவரசி, ஜா.எ.டார்வின் தமிழ், தமிழ் ஓவியா கலந்து கொண்டு, நாத்திகக் கருத்துகளைப் பரப்புவதில் பிஞ்சுகளின் பங்கு என்ற தலைப்பில் பிஞ்சுகள் தங்களது உள்ளக் கருத்துகளை வெளியிட்டவற்றுள் சில: பிறக்கும் போது அனைத்துக் குழந்தைகளும் நாத்திகக் குழந்தைகள்தான்; உரிமை வழங்கப்பட வேண்டும். அறிவியலுக்கு முரணாக பள்ளிகளில், பாடத்திட்டங்களில் இருக்கும் புராணப் புளுகு மூட்டைகளை ஒழித்து, சிந்தனையைத் தூண்டி அறிவினை விருத்தி செய்யும் வகையில் கதைகள் இருக்க வேண்டும்.

விளையாட்டுகள், கணக்குப் புதிர்கள், போட்டிகள் போன்றன பகுத்தறிவு, அறிவியல் கருத்துகளை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்களின் கருத்துப் படங்களில் (கார்ட்டூன்) கிருஷ்ணா, ஜெய் அனுமான், பைபிள் கதைகள் என்று வியாபார நோக்கில் மூட நம்பிக்கைகளைத் திணிப்பதையே மய்யமாகக் கொண்டுள்ளார்கள்.

மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகளை நடத்தி மாணவமணிகளிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். பெரியார் பிஞ்சு மாத இதழ், பழகு முகாம் போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த தமிழர் தலைவருக்கு நன்றியினைத் தெரிவித்து நண்பர் களையும், உறவினர்களையும் இதனுள் இணைத்து, பகுத்தறிவூட்ட வேண்டும்  என்ற கருத்துகளை முன் வைத்தனர்.


பெரியார் தேவைப்படுகிறார்

காஷ்மீரில் சிவில் என்ஜினீயராக இருக்கும் நாத்திகப் பேராளர் பேராசிரியர் சூடன் மாநாட்டில் கலந்து கொண்டார். 20 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீருக்குச் சுற்றுலா செல்ல ஆசைப்பட்டனர். இப்பொழுது அங்குள்ள நிலவரம் கலவரம்தான். காரணம் என்ன? மதம், மதம், மதம்தான். எங்களுக்கு காஷ்மீருக்கு ஒரு தந்தை பெரியார் தேவைப்படுகிறார் என்றார்.  குமரி முதல் காஷ்மீர் வரை தந்தை பெரியார் தேவை என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *