நூல் அறிமுகம்

ஜனவரி 01-15

இன்றைய வரலாறாகத் திகழும் கலைஞர் அவர்களை வைத்து வரலாற்றுச் சுவடுகள் என்ற நூலினை வெளியிட்டு, வரலாற்றுக்கும் புத்தகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் தினத்தந்தி நிறுவனத்தார்!

படித்தவர்களால் மட்டுமே வரலாற்று நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலையினை மாற்றி, பாமர மக்களிடையேயும்  ஓரளவு படித்தவர்களிடையேயும் உலகம் கடந்து வந்த  நாம் கடந்துவந்த பாதைகளைத் தெள்ளு தமிழில் கூறி, விழிப்புணர்வினைத் தூண்ட வழிசெய்துள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள செய்திகளைத் தெரிந்து கொள்ள பல புத்தகங்களைத் தேடி அலைந்து படிக்க வேண்டாம்.  வரலாற்றுச் சுவடுகள் என்ற ஒரே ஒரு புத்தகம் வைத்திருந்தால் மட்டும் போதுமே என்று சொல்லுமளவுக்கு, செய்திகள் குவிந்து கிடக்கின்றன.  செய்திகள் மட்டுமா?  செய்திகளை விளக்கிச் சொல்லும் படங்கள்….

கண்ணைக் கவரும் தாளில், தெளிவான மனதில் பதிவதான – மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுவதானவகையில் படங்களை வெளியிட்டுள்ளதோடு, வரைந்த படங்களும் இடம்பெற்று பட்டைதீட்டிய வைரமாக ஜொலித்து நூலுக்கு மெருகூட்டி நிற்கின்றன.  படங்கள் ஒவ்வொன்றும், படிப்போர் மனதில் ஒவ்வொரு பாடத்தினை அறிவுறுத்துவதாக நிழலாடியுள்ளன.

அரிய கருத்துகளுடன் இடம்பெற்றுள்ள அரிய புகைப்படங்கள் கண்ணிற்கும், கருத்திற்கும், மனதிற்கும் அறுசுவை விருந்தினை அள்ளித் தெளித்துள்ளன. புத்தகத்தின் புறத்-தோற்றத்தைப் பார்க்கும்போதே, அகத்துக்குள் அனைவரையும் ஈர்த்து அடிபணிய வைத்துள்ளது.

போரின் பின்னணியோடு இரண்டாம் உலகப் போரின் தலையாய கருத்துகளை, தனித்தனித் தலைப்புகளில் விளக்கியதோடு, உயிர்ச்சேதங்களின் பட்டியலைக் கொடுத்து போருக்குப்பின் இருந்த நாட்டின் நிலவரங்களை நிலை-நிறுத்தியுள்ளவிதம் சிந்தனையைத் தூண்டக்-கூடியதாக உள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டம், இந்திய அரசியல், இந்திய முக்கிய நிகழ்ச்சிகள், தமிழக அரசியல், தமிழ்நாடு, தமிழக முக்கிய நிகழ்ச்சிகள் என்ற தலைப்புகளில் நாட்டுப்பற்றை  நம் நாட்டு நிகழ்வுகளை வெளியிட்டிருக்கும்விதமும் வியந்து போற்றற்குரியது. இன்றைய தலைமுறைக்கு எட்டாக்கனியாக இருந்த இத்தனை செய்திகளையும் 308 கட்டுரைகளாக 842 பக்கங்களில் கனிரசமாகக் கொடுத்துப் பருக வைத்துள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், அரசுப் பொதுப்பணித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள்… என்று அனைத்துத் தரப்பினரையும் தன்னகத்தே ஈர்க்கக்கூடிய, புதியதொரு கலைக்களஞ்சியமாகப் பரிணமித்துள்ளது.
தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமல்லாது, நம் நாட்டிலுள்ளோர் – உலகிலுள்ளோர் அனை-வரும் படித்து இன்புற, ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட வேண்டிய நூல். வரலாற்று நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக – பத்திரிகை உலகின் மைல்-கல்லாக, தனது தடத்தினைப் பதித்து – படிப்போர் மனதிலும் சுவட்டினைப் பதித்து – வாங்கியதற்கான முழு நிறைவினைக் கொடுக்கக்கூடியது. ஒவ்வோர் இல்லத்திலும் தனது சுவட்டினைப் பதித்துக் கொலு வீற்றிருக்க வேண்டிய பெருமைக்கும், தகுதிக்கும் உடையதே வரலாற்றுச் சுவடுகள் என்றால் மிகையல்ல!

– செல்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *