அருளானந்தாரின் ஆன்மீகம்

ஜனவரி 01-15

அன்று ஞாயிற்றுக்கிழமை, காகித ஆலைக்கு விடுமுறை. முத்துராமலிங்கம் கூடத்தில் அமர்ந்து செய்தித்தாளை ஒன்று விடாமல் படிப்பதில் மூழ்கியிருந்தார்.

அவரது அன்பு மனைவி முத்துச் செல்வி அவருக்குப் பிடித்தமான ஓட்ஸ் கஞ்சியை ஆவிபறக்க டிரேயில் வைத்து விட்டு அவரையே விறைக்க விறைக்கப் பார்த்தாள்.
முத்து!  என்னாச்சு உனக்கு!  இப்படி கர்ண கடூரமா பார்க்கிறே முத்து ராமலிங்கம் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, செய்தித்தாளை, மூடியவாறே பொறுமையாகக் கேட்டார்.

நம்ம வித்யாவுக்கு என்ன வயசு வினாவில் அனல்பொறி தெறித்தது!
இருபத்து மூணு நடக்குது

எப்ப கல்யாணம் பண்றதா உத்தேசம்

என்ன இப்படிக் கேட்டுட்டே… தரகரிடம் இது சம்பந்தமா பேசிட்டுத்தானே இருக்கிறேன்

என்ன பேசிக் கிழிச்சீங்க!  வர்ற வரனை-யெல்லாம் உங்க இஷ்டத்துக்குத் தட்டிக் கழிச்சிட்டே இருக்கிறீங்கோ!  மொதல்லே உங்க பகுத்தறிவுக் கொள்கையை மூட்டைகட்டி வச்சிட்டு, மத்த அப்பாக்கள் மாதிரி நாட்டு நடப்புக்கு மாறிப் பேசுங்க. இல்லே, உங்க ரூட்டிலேயே போனா இந்த ஜென்மத்திலே வித்யாவுக்குக் கல்யாணம் நடக்கவே நடக்காது!

நா என்ன தப்பாப் பேசிட்டேன்

அனல்பொறி மேலும் தொடர்ந்தது.

கலியாண விஷயத்தைப் பொறுத்த வரையிலும் நீங்க பேசறது மகா தப்புதான்.  எம்பொண்ணு டீச்சரா இருக்கிறா… அதுக்குத் தக்கவாறு வாத்தியார் மாப்பிளே அமைஞ்சா நல்லதுன்னு, தரகரிடம் சொன்னீங்களே, அதிலே தப்பு இல்லை.

ஆனா எத்தனை பவுன் போடுவிங்க என்று கேக்கற மாப்பிள்ளைக்கு பொண்ணு கொடுக்கவே மாட்டேன், அய்யர் வச்சு கலியாணம் செய்யறதுக்குச் சம்மதிக்க மாட்டேன் இந்த மாதிரி ஒருதலையா நிபந்தனை போடுவது உங்களுக்கே நியாயமாப்படுதா?

எனக்கு நியாயமாப்படுதம்மா!  அப்படிப் பேசுவதில் என்னம்மா தப்பு இருக்கு?  கூந்தலைத் துடைத்துக் கொண்டே மலர்ந்த முகத்தோடு வந்த வித்யா, வெண்கலக் குரலில் ஒலித்தாள்.  முத்துச்செல்வியின் முகத்தில் மேலும் கோபம் கொப்பளித்தது.

எனக்கும் உங்க அப்பாவுக்கும் எந்தச் சடங்கும் இல்லாம, கொட்டு முழக்குக் கூட இல்லாம ஒரு தலைவர் தலைமையிலே கலியாணம் நடந்ததுன்னு, நீதாம்மா, அடிக்கடி சொல்லுவே, இப்ப நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழலையா?  நானும், தம்பியும் உங்களுக்கு வாரிசா வரலையா?

வரதட்சணைக்கு ஆசைப்பட்டுக் கலியாணம் பண்ணும் குடும்பத்திலே வாழ்க்கைப்பட்டா, வாழ்நாள் முழுதும் துன்பத்திலேயே கழியும் என்பதற்கு எங்கேயும்போய்த் தேட வேண்டாம்.  நம்ம மாமா பொண்ணு அமுதா வாழற இடத்தைப் பார்த்தாலே போதுமே என்று வகுப்பில் பாடம் நடத்தும் முறையில் பேசினாள் வித்யா.

ஆமா, உங்க அப்பா ஊதறதுக்கு நீ ஒத்து ஊது!  நல்ல பொண்ணு நல்ல அப்பா. மனக்-குறையைக் கொட்டியவாறே உள்ளே நுழைந்தாள்.  அம்மாவின் பேச்சைக் கேட்டு கலகலவென நகைத்தாள் வித்யா.

கிரிச்…. கேட் கதவு விலகியது. தரகர் பொன்னுசாமி பையும் கையுமா உள்ளே உற்சாகத்தோடு வந்தான்.

அருகேயிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு தரகருக்கே உரிய வார்த்தை ஜாலங்களை மளமளவெனக் கொட்டத் தொடங்கினான்.

சமையல்கூடத்திலிருந்து தோசைக் கரண்டியுடன் வந்த முத்துச்செல்வி, இந்த வரனாவது கைகூடக் கூடாதா என்ற ஏக்கத்தோடு நோக்கினாள்.

நம்ம அய்யாவின் கொள்கைக்கும், எதிர்பார்ப்புக்கும் ஏற்ற மாப்பிள்ளையைப் பிடிச்சிட்டேம்மா தரகனின் பேச்சு முத்துச்-செல்வியைப் பூரிப்பில் மிதக்க வைத்தது.

மாப்பிள்ளை இங்கிலிஸ் லிட்டரேச்சர். மேல்நிலைப் பள்ளியிலே வேலை பார்க்கிறார்.  அப்பா தமிழ் வாத்தியார். நல்ல இலக்கியப் பேச்சாளர். அம்மா, குடும்பத்துக்கு ஏற்ற குணவதி! முத்துச் செல்வியின் முகத்தில் ஆனந்த ரேகை படர்ந்து கொண்டிருந்தது.

நாங்க நகைநட்டுக்கு ஆசைப்படலே, எங்க குடும்பத்துக்கு நல்ல பண்புள்ள அழகான ஒரு பெண் வேணும்.. இப்படி அவங்க தெரிவித்தவுடன், நான் உங்க குடும்பத்தைப்-பற்றிய விவரங்களைச் சொன்னேன்.

அவங்களுக்கு ரொம்ப ரொம்பத் திருப்தி!  நாளைக்கே பெண் பார்க்க வருவதா சொல்லீட்டாங்க அப்புறம் இன்னொன்று, நிறுத்தினார் தரகர், சொல்லுங்கள், முத்து ராமலிங்கமும் ஆர்வத்தோடு கேட்டார்..

அய்யர் வச்சு திருமணம் செய்வதில் எனக்கும் விருப்பமில்லை. ஆனால், தமிழ் அறிஞர் ஒருவரை வைத்து திருமணத்தை நடத்த விரும்புகிறோம். இதை பெண் வீட்டார் மறுக்காம இருக்கணும்.. மாப்பிள்ளையின் அப்பா தங்கவேலனாரின் கருத்து இது.  யாருக்கும் புரியாத சமஸ்கிருத மொழியில் எதை எதையோ உளறிக் கொட்டும் அய்யர் சடங்குதான் நான் வேண்டாமென்று சொன்னேனேதவிர, மற்றவர்களை வேண்டா-மென்று சொல்லவே இல்லையே… என்ற முத்து ராமலிங்கத்தின் பேச்சு, தரகரை மட்டுமல்ல, முத்துச்செல்வியையும் மகிழ வைத்தது.

பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி, அழைப்பிதழை அச்சாக்கும் நிலைக்கு இருதரப்-பாரும் ஆயத்தமாகிவிட்டனர்.

வித்யா இன்னிக்குக் காலையிலே மாப்பிள்ளை கலியாணப் பத்திரிகை மாடலைக் கொண்டு வந்தார் நீ பள்ளிக்குப் போயிட்டனு சொன்னவுடன் அவர் முகம் ரொம்ப சின்னதாகப் போயிருச்சுனு அம்மா சிரித்தவாறே கையால் எழுதப்பட்ட பத்திரிகையை நீட்டினாள்.

அப்பா பார்த்தா சரி, நான் வேற பார்க்கணுமா

வித்யா பார்த்து ஓ.கே. சொன்னாத்தான் பத்திரிகை அச்சாகும் என்று அப்பா மட்டு-மல்ல, மாப்பிள்ளையும் சேர்ந்தே சொல்லி-விட்டாரு.

பெரும் ஆர்வத்துடன் பத்திரிகையை உரக்கப் படிக்கத் தொடங்கினாள் வித்யா. தஞ்சை சோழிஸ்வர மடாலயத் தலைவர் சிறீ அருளானந்த சுவாமிகள் திருமணத்தை நடத்தி அருளுரை வழங்குவார். பத்திரிகையை மீண்டும் மீண்டும் உற்று நோக்கியபோது அவள் உள்ளம் கொதித்தது!  முகம் குப்பென வியர்த்தது. வித்யா என்னாச்சு உனக்கு! பத்திரிகையைப் பார்த்தவுடன் உன் முகம் என்னமோ போல ஆயிருச்சு என்றார் அம்மா.

அம்மாவுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் செல்போனை எடுத்து அப்பாவிடம் பேசத் தொடங்கினாள். அப்பா நீங்க தொழிற்-சாலையில் இருந்து வரும்போது மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் அப்பா ரெண்டு பேரையும் கூட்டிட்டு வாங்க

வித்யா என்ன பிரச்சினை? என்றார் அப்பா.  ஒன்னுமில்ல நீங்க நேரிலே வாங்க பேசிக்கலாம் என்றாள் வித்யா.

அவளோடு வேலை பார்க்கும் மரகதமணிக்கு போன் செய்தாள்.  மரகதம்!  நீ உடனே புறப்-பட்டு வீட்டுக்கு வா…

உம் எதுக்கு ஏதுன்னு கேக்காதே..எனக்காக உடனே உன் வண்டியிலே கிளம்பி வா என்றாள்.

வித்யா எதுக்கு எல்லோரையும் வரச் சொல்றே, உன் வேகத்தைப் பார்த்தா கலியாணத்துக்கு முந்தி ஏதோ ஒரு பிரச்சினையை உண்டுபண்ணிருவே போலிருக்கு என்றார் அம்மா.

அதெல்லாம் ஒன்றும் இல்லம்மா…எல்லாம் நல்லபடியாக நடக்கும்… நீ போய் எனக்குச் சூடா ஒரு காப்பி கொண்டு வா அம்மாவின் கன்னத்தில் செல்லமாகத் தட்டினாள். ஆனால், முத்துச்செல்விக்கோ குழப்பமும் கலக்கமும் மீண்டும் மனதில் புகுந்தன.

வழக்கமான உபசார முறைகள் முடிந்தவுடன் வித்யா விவரத்தைத் தொடங்கினாள்.
மாமா நீங்க மூத்தவர், முதிர்ந்த தமிழறிஞர், உங்களுக்குத் தெரியாதது ஒன்னுமில்லே.  ஆனா, மிகமிகச் சின்னவளான நான் கேட்பதைத் தப்பா எடுத்துக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன் என்று வித்யா பீடிகை போட்டாள்.

அப்பா, மனம்விட்டுப் பேசுவதை மிகவும் விரும்புவார்.  உனக்கு என்ன சந்தேகம் கேளு வித்யா தமிழ்ச்செல்வன் ஊக்கப்படுத்தினான்.

கேளம்மா கேளு என்று தங்கவேலனார் கனிவோடு அனுமதித்தார்.

நம்ம திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிற அருளானந்தர் உங்களுக்கு எப்படி அறிமுகம் என்று கேட்டாள்.

அவர் நானிலம் போற்றும் நற்றமிழ் அறிஞர். சிவஞான போதத்தை எழுத்தெண்ணிப் படித்தவர். சிறந்த ஆன்மீகவாதி. தாய் தந்தையில்லா ஏழைப் பெண்களுக்கு காப்பகம் அமைத்து உணவளித்துக் காக்கும் உத்தமர்!  அவரும் நானும் இலக்கியக் கூட்டங்களில் அடிக்கடி பங்கேற்போம்.

அருளானந்தர் வெளி உலகில் நல்லவராக , சிறந்த ஞானியாக இருக்கலாம். ஆனால், அந்த ஆள் நடத்தும் காப்பகத்தில் அவர் ஒரு கயவன் அப்பாவிப் பெண்களை செல்வந்தர்களுக்கு விருந்தாக்கும் நாசகாரன். பிரம்மச் சரியத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறி, இளம்பெண்களிடம் பாலியல் கொடுமை செய்யும் மூர்க்கன்.

என்னம்மா நீ அந்தப் புனிதமான மனிதர் மீது இப்படி அபாண்டமான பழிபோடறே, இருபத்தைந்து வருஷம் பழகுற எனக்குத் தெரியாததா உனக்குத் தெரிந்திருக்கு என்றார்.

மாமா! நீங்க இருபத்தைந்து வருஷத்திலே ஏதாவது ஒரு நாள் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் பழகியிருக்கலாம். ஆனால், இந்த நேரத்தில் அந்த மனிதனின் நிறையைத்தான் கண்டிருக்க முடியுமேதவிர குறையைக் கண்டிருக்க முடியாது. இருபத்து நான்கு மணி நேரமும் அந்த மனிதர் விடுதியில் தங்கியிருந்த என் தோழி மரகதமணி, சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். என்றாள். பின்னாலிருந்த மரகதமணி முன்னால் வந்தாள்.

அய்யா! அவர் நடத்தும் காப்பகத்துக்கு நன்கொடை வழங்கும் பெரிய மனிதர்களை இரவு நேரத்தில் வரவழைத்து, அவர்களுக்குச் சுகமளிக்க, அந்த அப்பாவிப் பெண்களை ஈடுபடுத்துகிறார்!

ஒவ்வொரு நாளும் அந்தப் பெண்கள் சோகக் கடலில்தான் மிதக்கின்றனர். வெளியில் அருளுரை வழங்குவார். ஆனால், விடுதியில் இரவில் பாலியல் கொடுமையைச் செய்து வருகிறார் என்ற தனது உள்ளக் குமுறலைக் கொட்டினாள் மரகதம்.

இது உண்மையா என்றார்.

அய்யா நுற்றுக்கு நூறு உண்மை. அந்த இளம்பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடாதபடி மின் வேலி போட்டிருக்கிறார். ரவுடிகளையே காவலாளிகளாக வச்சிருக்கார். ஆறு மாதம் இருந்துவிட்டு,  அந்த ரணகளத்திலிருந்து ஓடி வந்து சொல்ல வேண்டியவர்களிடம் சொன்னேன். ஆனால், எந்தப் பலனும் ஒரு வருஷமா கிடைக்கலையே. அவர் யார் யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்து சரிசெய்துவிட்டார்.

ஆனால், இப்போது அந்தக் கொடுமை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது! பாருங்கள் இந்தச் செய்தியை என்று மாலைப் பத்திரிகையை எடுத்து நீட்டினாள் மரகதமணி.

எல்லோரும் பரபரப்புடன் அதைப் பார்த்தனர். தங்கவேலனார் சத்தமிட்டுப் படித்தார்.

தஞ்சை சோழிஸ்வரர் பெண்கள் காப்பகத்தில் பாலியல் தொல்லை!

இரண்டு பெண்கள் தற்கொலை!

சாமியார் அருளானந்தர் கைது.

இந்தப் போலிச் சாமியார் எப்படி இத்தனை நாள் பொதுமக்களிடமிருந்தும் போலீசாரிட-மிருந்தும் தப்பினார் கோபக் கனலோடு கேட்டார் தமிழ்ச்செல்வன்.

மாப்பிளே! சாமியார்கள் தமது குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அவர்களுக்குக் கேடயமாக இருப்பது காவியுடையும் ருத்ராட்ச மாலையுமாகும் என்றார் பகுத்தறிவுவாதி முத்து ராமலிங்கம்.

மாதிரிப் பத்திரிகையை, வித்யாவிடமிருந்து வாங்கி அருளானந்தரின் பெயரை தங்கவேலனார் அடித்தபோது எல்லோரும் கைதட்டி ஆரவாரித்தனர்.

இப்போது மட்டுமல்ல, இனி எப்போதும் எந்த நிகழ்ச்சிக்கும் இதைப் போன்ற போலிச் சாமியர்களை அழைக்கவே கூடாது என்று தமிழ்ச்செல்வன் மேடைப் பேச்சு பாணியில் சொன்னபோது மீண்டும் கரவொலி எழுப்பி மகிழ்வை வெளிப்படுத்தினர்.

– ஈரோடு மே.அ. கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *