“என்னைப் பிடித்தவர் வேண்டும்! பொன்னைப் பிடித்தவர் வேண்டாம்!” பெண்கள் சொல்ல வேண்டும்!

ஜூன் 16-30

 (இயக்க வரலாறான தன்வரலாறு – 204)

18.03.1983 அன்று அம்பத்தூர் கலியபெருமாள் மகன் திருமணத்திற்குத் தலைமையேற்று நடத்திவைத்து உரையாற்றினேன். அப்போது தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தொண்டு, பகுத்தறிவுப் பிரச்சாரம் பற்றியும், தன்மான உணர்வு மனிதர்களுக்கு கட்டாயம் என்பதையும் வலியுறுத்திப் பேசினேன்.

21.03.1983 தேரழுந்தூர் இல்லத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு புதிய இல்லத்தை திறந்து வைத்து உரையாற்றினேன். கிராம மக்களின் முன்னேற்றத்திற்குத் தந்தை பெரியார் வழங்கிய சிந்தனைகளை எடுத்துக் கூறினேன். வீட்டுப் பிரச்சினையில் உள்ள மூடத்தனங்களை எல்லாம் எடுத்துக்கூறினேன். கழகத் தோழியர்கள், தோழர்கள் பெருந்திரளாக கூடிநின்று வாழ்த்தினார்கள்.

08.04.1983 இரவு எட்டரை மணியளவில் கும்பகோணத்தில், மண்டல் கமிஷன் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டு அதன் அவசியம் பற்றியும் அதை நிறைவேற்றித் தீரவேண்டியது பற்றியும் வலியுறுத்திப் பேசினேன்.

09.04.1983 அன்று திருச்சி பேட்டவாய்த்தலையில் காலை 10 மணிக்கு காசிநாதன்_குணசந்திரா வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்திவைத்தேன்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 09.04.1983 அன்று இரவு 8 மணி அளவில் தாதக்கவுண்டன்பட்டி பெரியார் திடலில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மேற்கு கழகத் தலைவர் கே.கே.பொன்னப்பா தலைமை தாங்கினார்.

ஏ.பி.ராஜி (விராலிமலை), ஏ.சி.சண்முகம் (மணப்பாறை), ந.வெங்கிடசாமி (மணவை), எம்.ரகமதுல்லா, அ.இனியன், துரை,அழகி, ராஜ்மோகன், டி.டி.வீரப்பா, பேராசிரியர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டார்கள்.

நிறைவாக நான் ஆற்றிய உரையை கிராம மக்கள் உணர்ச்சியார்வத்துடன் இறுதிவரை இருந்து கேட்டனர்.

10.04.1983 தஞ்சையில் காலை 10 மணிக்கு கலைஞர் நடத்திவைத்த பழனிமாணிக்கம்_ மகேஸ்வரி ஆகியோரது வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவில் நான் முன்னிலை வகித்துப் பேசினேன்.

சிதம்பரம் அண்ணாமலை நகரில், 10.04.1983 அன்று மாலை நடைபெற்ற பேராசிரியர் சபாபதிமோகன்_கவுசல்யா அவர்களது வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

சபாபதிமோகன் அவர்களுடைய தந்தையாரை நீண்டகாலமாக அறிவேன். எனவே, பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கின்ற அளவுக்கு பிள்ளைகள் எடுத்துக்காட்டாக வாழவேண்டும்.

இந்த மணவிழா 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மணவிழா. சுயமரியாதைத் திருமணத்தை வரலாற்றிலே குறிப்பிடத்தக்க திருமணமாக இங்கே நடத்திக்காட்டியிருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டேன்.

“என்னைப் பிடித்தவரே வேண்டும்; பொன்னைப் பிடித்தவர் வேண்டாம்’’ என்று பெண்கள் துணிவுடன் தெரிவிக்க வேண்டும்

என்னுடைய திருமணம்கூட மாலை நேரத்திலே இராகு காலத்திலேதான் நடைபெற்றது. அய்யா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பேராசிரியர் டாக்டர் சிதம்பரநாதன் (செட்டியார்) அவர்கள்தான் மணவிழாவிற்கு தலைமை தாங்கினார்கள்.

அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள்தான் வரவேற்புரையாற்றினார்கள்.

எனக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நாங்கள் இன்றும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம்.

எங்களுடைய திருமணத்தில் தாலி கிடையாது. சில தாய்மார்கள் சொல்வார்கள், ‘என்ன பண்றதுங்க பெண்ணாக பிறந்துவிட்ட பின்பு எவங்கிட்டயாவது கழுத்தை நீட்டித்தான் ஆகவேண்டும்’. யார் கழுத்தை நீட்ட வேண்டும்? என்ன கசாப்பு கடையா? நீ போய் கழுத்தை நீட்டுவதற்கு?

தந்தை பெரியார் அவர்கள்தான் சொன்னார்கள், “ஆணுக்கு இருக்கின்ற எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் இருக்க வேண்டும்’’ என்று.

வீட்டிலே கோழி குஞ்சு பொரித்தால் பெட்டைக் குஞ்சு எத்தனை என்றுதான் கேட்பார்கள்.

மாடு கன்று போடும்பொழுது பசுங்கன்று எத்தனை என்றுதான் கேட்பார்கள்?

குழந்தை பிறக்கும்பொழுது மட்டும் என்ன பிள்ளை என்று கேட்டால் பொம்பளைப் பிள்ளை என்று மிக வருத்தமாகச் சொல்வார்கள்.

திருமணத்தின்போது, திருமண சந்தையிலே மாடு பிடிக்கின்ற மாதிரி நமது சமுதாய அமைப்பிலே வைத்திருக்கிறார்கள்.

என்ன செய்வார்கள்? 100 பவுன் போடுவார்களா? 50 பவுன் போடுவார்களா? என்று கேட்கிறார்கள் பட்டத்துக்கு ஏற்றவாறு ‘ரேட்’ வைத்திருக்கிறார்கள்.

ஒரு சிலர் கார் வாங்கித் தரவேண்டும்; இவ்வளவு பணம் தரவேண்டும்; கிளீனிக் வைத்துக் கொடுக்க வேண்டும்: இவைகளை எல்லாம் சகோதரிகள், தாய்மார்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ‘என்னை விரும்புகிறவனை தேடுங்கள். பொன்னை விரும்புகின்றவனை தேடாதீர்கள்’ என்ற துணிச்சலோடு சொல்லுங்கள்.

தாலி என்பது எதற்கு?

தாலி என்பது பெண்களை அடிமையாக்குகின்ற அடிமைச் சின்னம். எனக்கு தாலி கட்டினீர்களேயானால் உங்களுக்கும் தாலி கட்டுவேன் என்று துணிச்சலோடு பெண்கள் சொல்ல முன்வர வேண்டும்.

மணமக்கள் கொள்கை உறுதிப்பாட்டோடு வாழ்க்கையை தொடங்க வேண்டும். சமுதாயத்தில் மணமக்கள் புரட்சிகரமான வாழ்க்கையை மற்றவர்களுக்கு வாழ்ந்துகாட்ட வேண்டும். குழந்தை பேற்றிலேகூட சிக்கனமாக வாழ்ந்துகாட்ட வேண்டும். துணிச்சலாக வாழுங்கள். பகுத்தறிவு வழியில் வாழுங்கள். சிறக்க வாழுங்கள்’’ என்று நான் உரையாற்றினேன்.

திருமணத்தில், சபாபதிமோகன் அவர்களின் நண்பரும் மேனாள் அமைச்சருமான க.பொன்முடி உட்பட முக்கிய பிரமுகர்களும், கழகத் தோழர்களும் ஏராளமாய் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் ஆர்.டி.சபாபதிமோகன் அவர்களது வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டுவிட்டு, இரவு 10 மணிக்கு கடலூரில் எனது அண்ணன் அவர்களது டிரான்ஸ்போர்ட்டு அலுவலகத்திற்கு வந்தவுடன், அண்ணன் அவர்களுடன் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சிறுநீர் கழிக்க சென்ற இடத்தில் கால்தடுமாறி கீழே விழுந்துவிட்டேன். விலா எலும்பில் முறிவு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவி பெற்று வந்தேன். இதனை 13.04.1983 அன்று தலைமை நிலைய செயலாளர் அவர்களின் பெயரில் ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் வெளியிட்டு, கழகத் தோழர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் செய்தியாக, “என்னை பார்ப்பதற்கு வரவேண்டாம்’’ என்று அதில் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், மண்டல் கமிஷன் பரிந்துரை அமுலாக்கம் முதல் அரிசிப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை வரை அப்படிப்பட்ட பிரச்சினைகளை இளைஞர் பட்டாளத்தின் மூலம்தான் நம் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கும் என்ற காரணத்தினால், “வலியோடு வேண்டுகிறேன்’’ என்று 15.04.1983 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தேன். தந்தை பெரியாரின் புத்தகத்தை, பாடத்தை சீக்கியர்கள் சரியாகப் படிக்கிறார்களே, தமிழனே நீ மட்டும் உன் தலைமாட்டில் வைத்து உறங்கலாமா? என்று மருத்துவமனையிலிருந்து முக்கிய அறிக்கையாக “வலியோடு கேட்கிறேன், வலிமையோடு பதில் கூறு!’’ என்று நான் கையெழுத்திட்டு வேண்டிக் கேட்டுக் கொண்டேன்.

டில்லி _ மாநாடு முடிந்ததும் டி.பி.யாதவ் எம்.பி. அவர்கள் விமானம் மூலம் சென்னை வந்து காலை 9மணி அளவில் மருத்துவ மனையில் என்னை நலம் விசாரித்தார்கள். அப்போது டில்லியில் நடைபெற்ற மாநாட்டின் சிறப்புகளை என்னிடத்தில் எடுத்துக் கூறினார்கள்.

புதுடில்லியில் நடைபெற்ற தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையோர் உரிமைப் பாதுகாப்பு மாநாடு 13, 14.04.1983 அன்று நடைபெற்றது. மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் சந்திரஜித் யாதவ் எம்.பி அவர்கள் மாநாட்டின் சிறப்பு பற்றி 14.04.1983 அன்றே இரவு தொலைபேசி மூலம் செய்தியை நமக்கு அறிவித்து, மாநாடு சிறப்புடன் எழுச்சியுடனும் வெற்றிகரமாக நடந்ததையும் கூறி தனது மட்டற்ற மகிழ்ச்சியை நமக்கு ஆர்வத்துடன் தெரிவித்தார். மாநாட்டில் நான் கலந்து கொள்ளாதது குறித்து ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி, மாநாட்டில் தெரிவித்தார்கள்.

இதுகுறித்து சந்திரஜித் யாதவ் கடிதம் எழுதியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கருஞ்சட்டைக் குடும்பங்கள் ஏராளமாகப் பங்கேற்றனர். மாநாட்டில் நான் தயார் செய்து வைத்திருந்த அச்சிட்டு அனுப்பிய உரையின்  முக்கியப் பகுதிகள் மாநாட்டில் படிக்கப்பட்டது. வரலாற்றில் சமூகநீதி மாநாடு சிறப்பாக அமைந்ததாக கழகத் தோழர்கள் பலரும் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் உடல் நலிவுற்றிருந்த நிலையிலும் 27.04.1983 அன்று நமது இயக்கத்தின் விவசாயத் தொழிலாளர் பிரிவுச் செயலாளரும் கட்டுப்பாடு மிகுந்த பெரியார் பெருந்தொண்டருமான நண்பர் குடந்தை ஏ.எம்.ஜோசப் அவர்கள் மறைந்தார் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி அறிவிக்க வருந்தினேன்.

“கடமை வீரர் ஜோசப்பிற்கு நமது வீரவணக்கம்’’ என்று தலைப்பிட்டு முக்கிய இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருந்தேன்.

மறையாத ஏ.எம். ஜோசப்பிற்கு நேரில் இறுதி மரியாதை செலுத்த டாக்டர் அனுமதியோடு நான் விமானம் மூலமாக திருச்சிக்கு சென்று மரியாதை செலுத்தினேன். என்னுடன் துணைவியார் திருமதி மோகனா அம்மையார், கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, சென்னையிலிருந்து மகளிரணி கழகத் தலைவர் க.பார்வதி, தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் எம்.பி.பாலு, பெரியார் பெருந்தொண்டர் சி.ஆளவந்தார் ப.க. செயலாளர்கள் பூங்குன்றன், திருமகள் இறையன் உள்ளிட்டோர் என்னுடன் வந்து மரியாதை செலுத்தினர்.

இறுதி மரியாதை செலுத்தியவுடன் கூடிநின்ற தோழர்கள் மத்தியில் இரங்கலுரை ஆற்றினேன். “தந்தை பெரியார் அவர்களது மறைவுக்குப் பின் அன்னை மணியம்மையார் அவர்களது மறைவுக்குப் பின் நம்மிடையே சிறந்த கொள்கை வீரராகத் திகழ்ந்தவர். இன்றைய தினம் அவர் மறைந்தது பெரிய விபத்தாகக் கருதுகின்றேன். எனது உடல்நிலை சரியில்லாத நிலையிருந்தும் அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் இங்கே வந்தேன். ஒரு பெரியார் இலட்சியத் தொண்டர் எப்படி இருப்பார் என்கின்ற இலக்கணத்திற்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர். கொள்கை வழி நின்ற ஒரு தலைவனை இழந்தேன். இங்கே கட்சி வேறுபாடு, கருத்து வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்றுகூடி இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் எங்கள் இயக்கத்தின் சார்பில் நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது நினைவுச் சின்னம் கட்டப்படும் என்று இரங்கல் உரையாற்றினேன்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது கூட்டத்தில், நீதித்துறையில் உயர்ந்த பதவி வகிக்கும் தாங்கள் அச்சுறுத்தப்படுவதும், அவமானப்படுத்துவதும் குறித்து மிகுந்த வேதனை தெரிவித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர் என்ற செய்தி ‘இந்து’ நாளேட்டில் 28.04.1983 அன்று வந்தது.

இத்தீர்மானம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜஸ்டிஸ்) அவர்கட்கும் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் இல்லங்களில் என்ன நடைபெறுகிறது என்பதைக் கண்காணிக்க அவர்களது இல்லங்களைச் சுற்றிலும் சி.அய்.டி போலீசாரை நிறுத்தி வைத்து கண்காணிக்கப் படுவதை வன்மையாக கண்டித்து நீதிபதி ஒருவர் நாங்கள் கண்காணிக்கப்படுவதற்கு, “நாங்கள் குற்றப் பரம்பரையினரா? கடத்தல் பேர்வழிகளா?’’ என்று கேட்டுள்ளார்! இந்தப் போக்கினை நான் கண்டித்து 30.04.1983 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் “உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்தேகப் பேர்வழிகளா?’’ என்ற தலைப்பில் முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அதில், அமெரிக்காவின் ஜனாதிபதி நிக்சனை வீட்டிற்கு அனுப்பிய “வாட்டர் கேட்’’ ஊழலைவிட மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய செய்தி இது.

நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கே இந்நிலை என்றால், எங்கே சென்று மற்றவர்கள் நீதிபெறுவது என்று கண்டனம் தெரிவித்து எழுதினேன்.

03.05.1983 அன்று “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு…’’ என்ற தலைப்பில் ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அதில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர்த்துக் கொள்ளாமல் விடப்பட்ட இரண்டு மாணவர்கள் கொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கி, அந்த இரு மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு ஆணை பிறப்பித்து இருக்கிறது. இந்த இரு மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினைச் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் இருவரும் வாங்கிய மதிப்பெண்கள் ஒன்றும் குறைவானவை அல்ல.

பல்கலைக்கழக நிர்வாகம் சிந்திக்க வேண்டும். பிரச்சினைகளின் ஆழம், மூலம் பார்த்து உடனடிப் பரிகாரத்தை, விருப்பு வெறுப்பு பழிவாங்கும் தன்மை அற்ற போக்கினை காண முயற்சிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டேன்.

புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவரும், சீரிய செயல்வீரரும், கட்டுப்பாடு மிக்க பெரியார் பெருந்தொண்டருமான புதுவை கலைமணி அவர்கள் 08.05.1983 அன்று மாலை 4 மணி அளவில் மறைந்தார் என்ற பேரிடியான செய்தி கிடைத்தது. மறைந்த கொள்கை மாமணிக்கு 09.05.1983 அன்று இரங்கல் அறிக்கையில், “வலங்கைக் கலைமணியாக அவர் கழகத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த காலம் முதல் அய்யாவின் கட்டுப்பாடு மிகுந்த தொண்டராக தன்னை இணைத்துக் கொண்டு தொண்டாற்றிய நிலையிலும் சரி, புதுவைவாசியாக புதுவை கழகத்தில் பல பொறுப்பேற்று செயல்பட்ட காலகட்டத்திலும் சரி, அவர் காட்டிய கடமையுணர்வு, அவர் காட்டிய மரியாதை எல்லாம் நினைவு அலைகளாக நெஞ்சில் மோதுகின்றன’’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்தேன்.

நான் இறுதி நிகழ்ச்சியிலும் பங்கேற்க புதுவைக்கு புறப்பட்டு சென்றேன். என்னுடன் பொருளாளர் கா.மா.குப்புசாமி, துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, இளைஞர் அணிச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமான கழகத் தோழர்கள் புதுவை வந்தனர்.

இரங்கல் கூட்டத்தில் நான் உரையாற்றும்போது, “போர்க்களத்தில் முக்கியமான கட்டத்தில் முக்கியமான ராணுவ வீரர்களைப் பறிகொடுத்தால் என்ன நிலையோ அந்த நிலையிலேதான் தள்ளப்பட்டு இருக்கிறேன்.

கலைமணி, வெறும் கழகத் தோழர் மட்டுமல்ல, கட்டுப்பாடுமிக்க இராணுவ வீரர், கிடைக்க முடியாத அரிய நண்பன். அவருடைய சாதனைகள் சாதாரணமானது அல்ல. பத்தாண்டுகாலமாக தந்தை பெரியாரின் சிலையை இந்தப் புதுவை மண்ணிலே நிறுவிட எத்தனையோ இடர்ப்பாடுகள். அவற்றை எல்லாம் கடந்து அய்யா அவர்களின் சிலையை அருமையான இடத்தில் நிறுவி மிகச் சிறப்பான விழாவை எடுத்தவர்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் வலங்கை கலைமணியாக அவரைப் பார்த்த நான் இன்று சரித்திரமாக ஆகியிருக்கும் புதுவை கலைமணியைப் பார்க்கிறேன்.

தோழர்களைக் கலந்து ஆலோசித்து கலைமணியின் கழகத் தொண்டினைப் போற்றும் வகையில் புதுவையில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னத்தை ஏற்படுத்துவோம்!

அதைவிட அவருக்கு ஏற்படுத்தும் நினைவுச் சின்னம். அவர் எந்த இலட்சியத்திற்காக உழைத்தாரோ, எந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டாரோ அவற்றிற்காக நாம் கண் துஞ்சாது உழைப்பதுதான் பாடுபடுவதுதான் அவருக்கு எழுப்பிடும் நினைவுச் சின்னமாகும்’’ என்று குறிப்பிட்டேன்.

கழகத் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு இறுதி மரியாதையை செலுத்தினார்கள். பல்வேறு மாவட்டங்களி லிருந்து கழகத் தோழர்கள் வந்திருந்தனர்.

மதுரை மாநகர மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பே.தேவசகாயம், புதுவை மாநில திராவிடர் கழகத் துணைத் தலைவர் காரை மு.சிவம், புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் செ.முத்து, சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன், மூர்த்தி உள்ளிட்ட தோழர்களும் கலந்து கொண்டார்கள்.

தமிழர் கல்வி வள்ளல் “டாக்டர் மணவாள ராமானுஜம்’’ அவர்கள் 13.05.1983 அன்று மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்தேன். அதில்,

“அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வில் இருந்துவந்த தமிழ்நாட்டின் முன்னணி கல்வி மேதைகளில் ஒருவரும் நீதிக்கட்சி பற்றாளருமான டாக்டர் எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் அவர்கள் தமது 91ஆவது வயதில் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து மிகவும் துயரமும் வேதனையும் அடைந்தேன்.

பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பார்ப்பனர் அல்லாத பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்த அந்த மாமேதை துணைவேந்தராக இருந்தபோது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருக்கும் பேருபெற்ற மாணவர்களில் நானும் ஒருவன். மிகுந்த நினைவுவன்மை படைத்த அவரது ‘சமூகப் பார்வை’ என்பது மிகப்பெரிய நிபுணர்கட்கும் வராத ஒன்றாகும்.

1953இல் ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமை தாங்கி அதைத் துணிவுடன் எதிர்த்த பேரறிவாளர் இவர். வகுப்புரிமையில் ஆழ்ந்த நம்பிக்கை உடைய சமூக நீதியாளர்.

அவரது இழப்பு தமிழர் சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்’’ என்று அந்த அறிக்கையில் மன வேதனையுற்று எழுதியிருந்தேன். பாரதிதாசன் இலக்கிய மன்றத்தின் சார்பாக சென்னை பாவாணர் நூலகக் கட்டிடத்தில் 13.5.1983 இரவு 7 மணிக்கு நடைபெற்ற ‘பாரதிதாசன் நாடகத் திறன் ஆய்வு’ புத்தக வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். பாரதிதாசன் அவர்களுடைய நாடகங்களை ஆய்வு செய்து நூல்களை தோழர் கூ.வ.எழிலரசன் அவர்கள் இங்கே வெளியிட்டிருக்கிறார்கள்.

புரட்சிக்கவிஞர் அவர்களுடைய நூல்களை ஆய்வு செய்வதற்கு பல்கலைக்கழகங்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலை மாறி இன்று அவருடைய நூல்கள் ஆய்வு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையினைக் காண்கிறோம்.

எதையும் சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய அளவுக்கு ஆராய்ச்சி செய்ய வேண்டும். சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய அளவுக்கு கூ.வ.எழிலரசன் அவர்கள் புரட்சிக்கவிஞர் அவர்களுடைய நூலை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு என்னுரையை நிறைவு செய்தேன். கூட்டம் நிரம்பி வழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

(நினைவுகள் நீளும்…)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *