பகுத்தறிவு : தை அமாவாசை-திதி-தர்ப்பணம்

மார்ச் 16-31,2021

தமிழர்கள் செய்ய வேண்டியவை யாவை?

செய்யக் கூடாதவை யாவை?

செய்ய வேண்டியவை :

விளக்கேற்றி வையுங்கள்.

பிறருக்கு உணவளியுங்கள்.

வள்ளல் பெருமானார் இயற்றிய அகவல் பாக்களை வாசியுங்கள் அல்லது ஒலிக்க விடுங்கள்.

செய்யக் கூடாதவை :

பிராமணர்களை வைத்து சமஸ்கிருத மந்திரங்களை ஓத விடாதீர்கள், “அவர்களுக்கு மட்டுமே” தானம் கொடுக்காதீர்கள்.

காரணம். அவர்களின் சமஸ்கிருத மந்திரங்களின் பொருள் இவை.

இறந்த பின்பு நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். முதலில் இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்.

“யன்மே மாதா பிரலுலோப சரதி

அனனு விருதா தன்மே ரேதஹ

பிதா விருங்க்தா அபுரண் யோப பத்யதாம்

ரங்கராஜ சர்மனே ஸ்வாஹா

ரங்கராஜ சர்மனே அஸ்மது பித்ரே

இதம் நமம கிருஷ்ண கிருஷ்ண’’

இந்த மந்திரத்தின் பொருள்: “என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்குப் பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாத என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தைப் பெறட்டும்.’’ இதுதான் இந்த மந்திரத்தின் பொருள். அதாவது, “திதி கொடுப்பவனுடைய தாய் சில வேளைகளில் சோரம் போய் வேறு யாருக்காவது அவனைப் பெற்றிருக்கலாம்’’ என்று இந்த மந்திரம் சொல்கின்றது.

“உன்னுடைய அப்பா வேறு யாராவதாக இருக்கலாம். நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம்’’ என்று இந்த புனித மந்திரம் சொல்கின்றது.

தந்தைக்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினைக்க வேண்டாம். சமஸ்கிருதம் தாய்க்கு திவசம் செய்கின்ற போதும் வஞ்சகத்தோடுதான் பொருள் கூறுகிறது.

அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இதோ:

“என்மே மாதா ப்ரவது லோபசரதி

அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ பிதா

வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா அவபத்ய நாம”

இதன் பொருள்: “என்னுடைய அம்மா யாருடன் படுத்து என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் சென்று சேரட்டும்’’ என்பது.

அருட்பிரகாச இராமலிங்க வள்ளல் பெருமகனார், புரட்சிப் பெரு நெருப்பு… இதன் காரணமாகவே கருமாதி, திதி கூடாது என்கிறார்.

சரி… நாம் நமது அறிவைக் கொண்டு யோசிப்போம்.

“மறுபிறவி” உண்டு என்று நீங்கள் நம்பினால், இறந்தவர் உடனே வேறு தாய்க்குப் பிறந்திருப்பார்தானே?!

உங்கள் நம்பிக்கை அப்படி என்றால் இன்னொரு முறை பிறந்துவிட்ட, உயிரோடு இருக்கும் ஒரு உயிருக்குத் திவசம் செய்கிறீர்களே… இது என்ன நியாயம்?!

எனவே, இறந்த நம் முன்னோர் உருவங்களை மனப்பூர்வமாக வணங்கி நன்றி பாராட்டுவோம். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ எனப் போற்றுவோம்.

இவ்வாறு செய்தால், அவர்கள் பிறப்பெடுத்திருந்தாலும் நம் வழிபாடு நேர்மறையாக அவர்களை வாழ்த்துவதாக அமையும். மாறாக, பிண்டம், திதி, சமஸ்கிருத மந்திரங்கள் வாயிலாக அசிங்கப்படுத்துவது, அவர்களை எதிர்மறையாக ஆக்குவதாகவே அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *