சிந்தனைக் களம் : சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் நாகரிகமா?

ஜனவரி 16-31,2022

 சிந்து சமவெளி நாகரிகம்  ஆரியர் நாகரிகமா?

கவிஞர் கலி.பூங்குன்றன்

 குடுமியை அவிழ்த்து விட்டுக் கூத்தாடும் காரக்பூர் அய்.அய்.டி

அய்.அய்.டி காரக்பூர் நாட்காட்டியில் ஆரியர்கள் வருகை தொடர்பான தவறான தகவல் இடம் பெற்றுள்ளது வரலாற்று ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் முக்கிய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக காரக்பூர் அய்.அய்.டி தனது நாட்காட்டியில் பிப்ரவரி மாதப் பகுதியில் ஆரியர்கள் குறித்து சான்று-களே இல்லாத கற்பனைத் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் ‘சுவஸ்திக்’ என்ற சின்னம் வேதகாலத்தில் வாழ்ந்த முனிவர்-களால் உருவாக்கப்பட்டது என்றும், சிந்துவெளி நாகரிகத்தில் மிகவும் முக்கியமான முத்திரையாக இதை அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தினார்கள் என்றும் உண்மைக்குப் புறம்பாக கூறப்பட்டுள்ளது.

 இதுகுறித்து கேள்விப்பட்ட அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

 ஆரியர்கள் மத்திய ஆசியாவின் ஸ்டெபி புல்வெளியிலிருந்து வந்தவர்கள் என்பது அறிவியல் சான்றுகளோடு உறுதி செய்யப்-பட்டுள்ளது. மேலும் சிந்துப் பகுதி மக்களுக்கும் ஆரியர்களின் எந்த ஒரு பழக்க வழக்கங்களுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. சிந்துவெளி நாகரிகத்தின் போது ஆரியர்களின் வருகை இல்லை. சுமார் 200 ஆண்டுகளாக ஹரப்பா, மொகஞ்சதாரா (பாகிஸ்தான்), ராகிகாடி, தொலவீரா (இந்தியா) உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த ஆய்வில் ஆரியர்-களுக்கும் சிந்துவெளி மக்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது உறுதியானது.

 ஆனால், அறிவியல் பூர்வமாக செயல்பட வேண்டிய காரக்பூர் அய்.அய்.டி.யின்

 (அய்.அய்.டி. என்றால் அய்யர், அய்யங்கார் டெக்னாலஜிதானே!) காலண்டரில் “இழந்துபோன இந்திய அறிவுத் தளத்தை மீட்கும் தொழில் நுட்பம்’’ என்ற தலைப்பில் சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த பொருள்களை ஆரிய நாகரிகத்தோடு சேர்த்து “பெருவெளி மற்றும் காலம், அண்டத்தின் ஒளி மற்றும் யுகங்கள், பெருவெளியின் காலத்திற்-கான விதிகள்’’ என பல முட்டாள்தனமான தலைப்புகளில் சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த பொருள்களோடு ஒப்பிட்டு, தலைப்பிட்டு நாள்காட்டியில் எழுதியுள்ளனர்.

 மேலும் சிந்துவெளியில் வேதத்தின் 12 ரகசிய அடையாளம், சிந்து சமவெளி நாகரிகத்தின் சின்னங்களின் உண்மையான அடையாளம், ஆரியப் படையெடுப்பு என்பது கட்டுக்கதை, சிந்துவெளி மக்கள் ஆரியர்களே இந்த மண்ணின் மக்களே போன்ற தலைப்புகளில் நாட்காட்டி முழுவதும் கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மேலும் சில முத்திரைகளைக் காட்டி ஆரியர்கள் தான் இந்தியாவை அறிவின் ஆற்றல் தளமாக மாற்றிக் காண்பித்தனர் என்றும் கதைத்துள்ளனர்.

 தற்போது சமூகவலைதளங்களில் எழுதி-வரும் கற்பனைக் கதைகளை அப்படியே ஒரு பெரிய தொழில் நுட்ப நிறுவனம் நாட்காட்டியில் கொண்டுவந்து அனைவரையும் படிக்கவைப்பது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 இது தொடர்பாக அய்.அய்.டி பேராசிரியர் ஜாய் சென் கூறும் போது, “நாம் மறைக்கப்பட்ட வரலாற்றை இதுவரை படித்து வந்தோம், தற்போது உண்மைகளை அறியும் நேரம் வந்துவிட்டது. இந்த நாட்காட்டி  உண்மை-களை வெளிப்படுத்திட ஓர் ஆரம்பப் புள்ளி என்று கூறினார். மேலும் ஆரியர்களின் வருகை என்பது கற்பனைக் கதை, ஆரியர்கள் இந்த மண்ணுக்கானவர்களே என்ற புரட்டுகளின் மீதான குறித்த நீண்ட ஆய்வை இந்த நாட்காட்டியின் மூலம் துவக்கி உள்ளோம்’’ என்று கூறினார்.

 இது தொடர்பாக மும்பை ஹோமிபாபா அறிவியல் வரலாற்று நிறுவனப் பேராசிரியர் சுலே கூறும் போது, “அய்.அய்.டி போன்ற கல்வி நிறுவனங்கள் இது போன்ற கற்பனைக் கதைகளை அறிவியல் வரலாறு என்ற பெயரில் வெளியிடும் போது அதன் தாக்கம் மக்களிடையே வெளிப்படும். உண்மைகளை என்றுமே மறைக்க முடியாது ஆனால் இவர்கள் உண்மைக்குப் புறம்பானவற்றை ஆவணப் படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது’’ என்று ஊடகம் ஒன்றில் காலண்டர் குறித்த கேள்விக்குப் பதிலளித்தார்.

வரலாற்றைத் திரிப்பது, உருட்டல், புரட்டல் செய்வது என்பது ஆரியர்களுக்கே உரித்தான ‘தனிக்கலை’. கீழடி ஆய்வைக்கூட நடத்த விடாமல் முட்டுக்கட்டை போட்டதற்-கெல்லாம் கூட உண்மை வெளிவந்தால், அது திராவிடர்களின் தமிழர்களின் தொன்மை வெளிச்சத்துக்கு வந்துவிடுமே என்ற அச்சம்தான். எடுத்துக்காட்டுக்காக சில இங்கே:

நாகசாமி என்ற முன்னாள் தொல்பொருள் துறை இயக்குநராக இருந்த பார்ப்பனர் எழுதுகிறார் _ திராவிட நாகரிகம் என்ற ஒன்றே கிடையாதாம் (துக்ளக் _ 27.11.2019)

“திராவிடக் கண்ணாடியும் கீழடி ஆய்வும்’’ என்ற தலைப்பில் துக்ளக்கில் ஒரு கட்டுரை இடம் பெற்றுள்ளது.(25.10.2017) திராவிடம் என்பது எல்லாம் திராவிடர் கட்சிகளின் கண்டுபிடிப்பாம். ஆனால், உண்மை வரலாறு என்ன? சிந்துச் சமவெளி குறித்த ஆய்வுகள் என்ன கூறுகின்றன? ஏராளமுண்டு என்றாலும், எடுத்துக்காட்டுக்கு சில இங்கே….

சிந்துவெளி – தமிழி (தென்பிராமி) எழுத்தாய்வுப் பயிலரங்கம் (Indus – Tamil (Brahmi) script study workshop)

பழங்காலத் தமிழ் எழுத்துகளின் தோற்றம் வளர்ச்சி குறித்த ஆய்வில் 2007 முதல் சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம் ஈடுபட்டுள்ளது. சிந்து வெளி எழுத்தாய்வு நடுவமும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்மொழித் துறையும் இணைந்து 23.08.2014 முதல் 10 காரி (சனி)க்கிழமைகள் (முற்பகலில்) சிந்துவெளி – தமிழி (தென்பிராமி) எழுத்தாய்வுப் பயிலரங்கம் நடத்தியது.

இதற்கு முன் பத்து பயிலரங்குகள் நடத்தப்பட்டு 500 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். பயிலரங்கின் நிறைவுவிழா நவம்பர் திங்களில் நடைபெற்றது.

தொன்முது நாகரிகங்களில் முன்முது நாகரிகமான சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் எனப் பின்லாந்து அறிஞர் அசுகோ பர்பலோ, அறிஞர் அய்ராவதம் மகாதேவன் போன்றோர் உலக அரங்கில் நிலைநாட்டியுள்ளனர். மூன்று தமிழ்ச் சங்க வரலாற்றின்படி முதல் தமிழ்ச் சங்க காலத்தில் ஓவிய எழுத்தும் இரண்டாம் தமிழ்ச் சங்க காலத்தில் சிந்துவெளி எழுத்தும் மூன்றாம் தமிழ்ச் சங்க காலத்தில் தென்பிராமி எனப்படும் தமிழி எழுத்தும் அதிலிருந்து வட்டெழுத்தும் சோழர் காலத்தில் இன்றைய தமிழ் எழுத்துமாக வளர்ந்த தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி வரலாறு தமிழ் எழுத்துகளின் சங்கிலித் தொடர் போன்று தொடர்பு அறாத 5000 ஆண்டுக்காலத் தமிழ் எழுத்தின் தொன்மையைப் புலப்படுத்துகிறது.

 பயிரலங்கம் வாயிலாகப் புலப்பட்ட உண்மைகள்

 சிந்துவெளி எழுத்தும் தமிழி எழுத்தும் தமிழர்களால் தமிழுக்காகத் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டவை.

தமிழர் நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் என்னும் பெயரில் தெற்கிலிருந்து வடக்கே பரவியது. மிகத் தொன்மையான சிந்துவெளி எழுத்து தமிழ்நாட்டில் தான் செம்பியன் கண்டியூர் கற்கோடரியில் (கோகாங்கன் என்னும் பெயர் சிந்துவெளி எழுத்தில்) கிடைத்துள்ளது.

சிந்துவெளி எழுத்தின் மிகமிகத் தொன்மையான எழுத்துச் சான்றுகளும், கீறல் எழுத்து எனப்படும் (Graffiti) சிந்துவெளி கையெழுத்து வரிவடிவ வேறுபாடுகளும், அதன் பின்னர்த் தோன்றிய தமிழி (பிராமி) எழுத்து படிப்படியாக வளர்ந்த வளர்ச்சியும், விடுபட்ட இணைப்புகளும் தமிழ்நாட்டு அகழாய்வில் கிடைத்துள்ளன. இந்தப் படிமுறை வளர்ச்சி சிந்துவெளியில் கிடைக்கவில்லை.

சிந்துவெளி எழுத்துக் குறியீடுகள் இன்றும் நாட்டுப்புற மட்பாண்டத் தொழிலாளர், சலவைத் தொழிலாளர் உள்ளிட்ட 18 வகை பல்வேறு தொழிற் பிரிவினரிடை வெறும் அடையாள எழுத்துகளாக வழங்கிவருகின்றன.

சிந்துவெளி எழுத்தும் தமிழி (தென்பிராமி) எழுத்தும் இந்தியாவின் (Pan Indian Script) ஒரே பொது எழுத்தாக நின்று நிலவின என்பது நன்கு உறுதிப்படுகிறது.

தமிழ் எழுத்து 5000 ஆண்டுத் தொன்மையுடையது. தமிழிலக்கியம் 2000 ஆண்டுத் தொன்மையுடையது.

Language is fossil history and fossil, poetry as well. (R.C.Trench)
All of Indian civilization is built on an underlying base of Dravidian language and culture. (S.A.Tyler -1973

மெய்யெழுத்து ஒலிக் குறியீட்டொடு உயிர் எழுத்து ஒலிக் குறியீடுகளை எந்த இடத்தில் எந்தத் திசையில் சேர்த்து எழுதுவது என்பது சிந்துவெளி எழுத்துகளின் காலத்திலிருந்து தமிழ் பிராமி எழுத்து வடிவங்களின் காலம் வரையிலும் தொடர்ந்து ஒரே முறையில் பெரும்பாலும் அமைக்கப்பட்டுள்ளது.

 «««

சிந்து சமவெளி திராவிடர் நாகரிகமே!

தமிழ்நாட்டில் புதிய கற்காலக் கோடரி – கண்டுபிடிப்பு

சிந்து சமவெளி நாகரிக எழுத்துகளுடன் புதிய கற்காலக் கோடரி தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் முதன்முதலாகக் கண்டு-பிடிக்கப்பட்ட கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல் ஆயுதம் இது என்பது குறிப்பிட்டத்தக்கது.

தமிழரின் எழுத்துத் தொன்மையை உறுதிப்படுத்தும் மிகச் சிறந்த சான்று இது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் செம்பியன் கண்டியூரில் கடந்த பிப்ரவரியில் மேற்கொண்ட கல் ஆய்வில் இரண்டு புதிய கற்காலக் கைக்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றில் ஒன்றில் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட (கி.மு.1500) மொஹஞ்சதாரோ – ஹரப்பா பண்பாட்டுக் கால எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சிறப்பு ஆணையர் ஸ்ரீதர் தெரிவித்தார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவில் பேசிய அவர் இது குறித்துக் கூறியது. இதுவரை இதுபோன்ற குறியீடுகள் தமிழ்நாட்டுப் பாறை ஓவியங்களிலும் இரும்புக்கால ஈமச்சின்னங்களில் இருந்து கிடைத்த பானை ஓடுகளிலும் மட்டுமே கிடைத்துள்ளன.

தற்போது கற்கருவி கிடைத்த செம்பியன் கண்டியூரில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த தாழிகள், கருப்பு – சிவப்பு மட்கலன்கள், குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகள், சாம்பல் நிற மட்கலன்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன.

கருவியில் நான்கு பொறிப்புகள் உள்ளன. முற்பொறிப்பு குத்திட்டு அமர்ந்த நிலையில் உள்ள மனித வடிவுடையதாகவும். அடுத்த பொறிப்பு கோப்பை வடிவிலும், மூன்றாவது பொறிப்பு ஏறத்தாழ முத்தலைச் சூலம் போன்ற அமைதியிலும், நான்காவது பொறிப்பு குத்திட்ட பிறை வடிவின் நடுவில் ஒரு வளையத்தை இணைத்தது போலவும் உள்ளன.

தொல்லியல் ஆய்வாளர் அய்ராவதம் மகா தேவன் ஆய்வின்படி, முதலிரு பொறிப்புகளுக்கும் முரு என்றும் அன் என்றும் பொருள் கொள்ளலாம்.

புதிய கற்காலக் கற்கருவியில் இவ்வெழுத்துப் பொறிப்புகள் கிடைத்ததன் மூலம். புதிய கற்காலத் தமிழ்நாட்டு மக்கள் ஹரப்பா பண்பாட்டு மற்றும் நாகரிகக் கூறுகளைத் தொடர்ந்து பின்பற்றியவர்கள் என்பது உறுதியாகிறது என்றார் ஸ்ரீதர்.

இக்கண்டுபிடிப்பின் மூலம் சிந்துவெளி நாகரிகமும், தொல் தமிழ் நாகரிகமும், திராவிட நாகரிகம் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ‘தினமணி’யின் முன்னாள் ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான அய்ராவதம் மகாதேவன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத்துகள் பொறித்த ஒரு கற்காலக் கருவி என்பதுதான் இக்கண்டுபிடிப்பின் முக்கியத்துவமாகும். இப்புதிய கற்காலக் கருவி சுமார் கி.மு. 1500க்கு மேற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். கி.மு.1000த்துக்குப் பிறகு, இரும்பு வந்த பிறகு இக்கருவிகள் உருவாக்கப்படவில்லை, இதில் ஒரு பீடத்தில் உட்கார்ந்து இருக்கும் உருவத்தை அக்காலக் கடவுள் என்றும், அது முருகனைக் குறிக்கிறது என்றும் கூறுகிறார் அவர். இதே உருவங்கள் பொறித்த பெருங்கற்காலப் பானைகள் திண்டிவனம் _ சானூர், திருநெல்வேலி _ மாங்குடி கேரளத்தில் முசிறி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன என்று அய்ராவதம் மகாதேவன் தெரிவித்தார். (‘தினமணி’ -_ 02.05.2006)

குறிப்பு : சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே என்று பொய்ப் பிரச்சாரம் செய்யும் பார்ப்பனர்களுக்கு இந்த ஆதாரம் மரண அடியாகும்.

 

– தமிழாலயம் – மார்ச் – ஏப்ரல் – 2010

 

«««

 

சிந்துச் சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே!

கல்வெட்டு ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன் உறுதி

சிந்துச் சமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை, ரிக் வேதத்தின் வழியாக, பிரபல கல்வெட்டு ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன் விளக்கினார். சென்னை, தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி மய்யத்தில், சிந்துச் சமவெளிக் குறியீடுகளை விளக்கும், ‘டிராவிடியன் ப்ரூஃப் ஆஃப் தி இண்டஸ் ஸ்க்ரிப்ட் வையா தி ரிக் வேதா’ என்ற புத்தகத்தின் வழியாக, அய்ராவதம் மகாதேவன் அளித்த விளக்கம்:

சிந்துச் சமவெளி முத்திரைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றை அடையாளம் கண்டால், ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் அர்த்தங்கள் கொண்டதாக உள்ளன என்பதை அறிய முடிகிறது. அவை, தொல் திராவிட வடிவங்களே என்பதும் உறுதியாகிறது.

சிந்துச் சமவெளி முத்திரைகளை வாசிப்பதன் மூலம், சிந்துச் சமவெளி மரபுகள், இரண்டு நீரோடைகளாகப் பிரிந்துள்ளதாக சான்றுகள் அறிவிக்கின்றன. அவை, முந்தைய திராவிட மரபின் வேர்கள், பண்டைய தமிழகத்திற்குள்ளும், சிந்துச் சமவெளியிலும் இருப்பதை, சிந்துவெளி முத்திரைகள் உறுதிப்படுத்துகின்றன.

பாண்டியர்களின் மூதாதையர்கள், சிந்துச் சமவெளியில் வணிகத்தில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கலாம். அவர்கள், தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டைத் தமிழ் பேசியவர்களாக இருந்திருக்கலாம். முந்தைய இந்திய _- ஆரியப் பண்பாட்டுக்குள் உள்ள (ரிக் வேதம்) வார்த்தைகள், சிந்துவெளியில் இருந்து, கடன் மொழியாக நுழைந்திருக்கின்றன. ரிக் வேதத்தில் வரும், ‘பூசன்’ என்ற கடவுளின் பெயர், சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப் பட்டதாக அறிய முடிகிறது. சிந்துச்சமவெளி நாகரிகம், முன் வேதப் பண்பாட்டை விட, காலத்தால் மிக முந்தையது என்பது, இதனால் விளங்குகிறது. சிந்துச்சமவெளி குறியீடுகளுக்கும், பண்டைத் தமிழ்ச் சொற்களுக்குமான தொடர்பு அதிகம் இருப்பதை, சங்க காலத் தமிழ்ச் சொற்கள் மூலமாக அறியலாம். சிந்துவெளிக் குறியீடுகளில், மாற்றுதல், பெறுதல், சாலைகள் சந்திக்கும் தெருக்கள், வணிகன் உள்ளிட்ட குறிகளுக்கு இணையான வார்த்தைகள், தொல்தமிழில் உள்ளன. எனவே, சிந்துச் சமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு, அவர் விளக்கம் அளித்தார்.

(‘தினமணி’ – 29.01.2015)

 «««

கல்வெட்டு

மொகஞ்சதாரோ, அரப்பா, தொல்நகர்களில் வாழ்ந்தோர் திராவிடரே!

மொகஞ்சதாரோ, அரப்பா தொல் நகர்களில் காணப்படும் சித்திர எழுத்துகளை முன்னரே பலர் ஆராய்ந்து அங்கு வாழ்ந்தோர் திராவிடரே எனச் சொல்லியுள்ளனர். 1980ஆம் ஆண்டில் அவ்விரு எழுத்துகளைப் புதுமுறை எந்திரங்களின் துணை கொண்டு நன்காராய்ந்து அவை திராவிடர் புழங்கியதே என்ற உருசியப் பேரரறிஞர் குணோரோசோவ் உறுதிப்-படுத்தியுள்ளார். தற்போது வால்ட்டர் பேர்செர்விசு என்ற அமெரிக்க மாந்தவியலறிஞரும் அவை திராவிடர்களின் மொழியே என்ற மறுவுறுதிப்படுத்தியுள்ளார். அவர்தம் ஆய்வுக் கட்டுரை அறிவியல்துறை அமெரிக்கன் (Scientific American) எனும் மாதவிதழில் (மார்ச்சு 1983) வெளிவந்துள்ளது.

(தமிழ்த்தென்றல் திரு.வி.க. நூற்றாண்டு விழா மலர்,

வெளியீடு: தமிழர் முன்னேற்றக் கழகம் – இலண்டன் – பக்கம் 11 )

«««

 ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் என்ன கூறுகிறார்?

“இந்திய வரலாற்றைப் பொறுத்தவரையில் ஆரியர்களின் வருகையுடன்தான் இந்திய வரலாறு துவங்குகிறது என்ற கருத்தைத்தான் ஒரு காலத்தில் நமது சரித்திர ஆசிரியர்கள் கூறிவந்தனர். ஆனால், ஆரியர்களுடையதைவிட உயர்வான ஒரு கலாச்சாரம் திராவிட மக்களுக்கிருந்தது என்றும், அது ஆரியர்-களுடையதைவிட பழமை வாய்ந்தது என்றும், தென் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் அக்காலத்திலேயே வாதாடினார்கள். 1922இல் கண்டுபிடிக்கப்பட்ட மொஹஞ்சதாரோ, ஹரப்பா என்னும் நகரங்களின் தடயங்களும் இவைகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் செய்துள்ள நிர்ணயிப்புகளும் திராவிடக் கலாச்சாரம் பற்றிய வாதத்தைப் பெருமளவுக்குப் பலப்படுத்தி யுள்ளது. இவ்வாறு ஆரிய சார்பினர், திராவிட சார்பினர் என்ற இரு பிரிவுகள் வரலாற்று ஆசிரியர்களிடையே தோன்றின.

சிந்து சமவெளி நாகரிகத்திற்கு ஆதாரமான விவசாயத்தில் விசேஷ தன்மைதான் இதற்குக் காரணமென்று கருத வேண்டியுள்ளது. இதர பல நதிக் கரைகளிலும் _ -பிற்காலத்தில் சிந்து சமவெளியிலும் _ உருவாகிய நீர்ப்பாசனக் கால்வாய்கள் சிந்துச் சமவெளி மனிதர்களுக்கு இருக்கவில்லை. அதற்குப் பதிலாக அணைக் கட்டினால் நதியிலிருந்து தண்ணீர் கிடைக்கக் கூடிய பகுதிகளில் மட்டும் அவர்கள் விவசாயம் செய்தனர். ஆகவே விவசாயத்திற்குத் தகுதியான நிலம் மிகக் குறைவாக இருந்தது.

குறைந்த அளவிலான இந்த விவசாயத்திலிருந்து உபரி தானியத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாய கலாச்சார வாழ்க்கையின் எல்லை மிகக் குறுகலானது. புதிய தொழில்நுணுக்க முறைகளைப் பின்பற்றி உற்பத்தியைப் பெருக்கவோ, அதிகரித்த உபரியை அடிப்படையாகக் கொண்டு சமுதாய கலாச்சார வாழ்க்கையை உயர்த்தவோ சிந்துச் சமவெளி மனிதர்-களுக்கு ஊக்கமூட்டும் தூண்டுதல் இல்லாமல் இருந்தது. தலைமுறை தலைமுறையாக ஒரே விதமான விவசாயத்தையும் கைத்தொழில்களையும், வியாபாரத்தையும்தான் அவர்கள் செய்துவந்தனர். அந்தச் சமுதாயமும், நாகரிகமும் வளர்ச்சி குன்றியிருந்ததற்கு இது தான் காரணம்.

வளர்ச்சி குன்றி நின்றிருந்த இந்த சமூக கலாச்சார வாழ்க்கைகூட, ஆரியர்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தது. விலங்கினத்தை வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்ட ஆரியர்களின் வாழ்க்கைக்கு சிந்துச் சமவெளி மக்கள் கட்டி உருவாக்கியிருந்த அணைகள் தடைகளாக இருந்தன. அணைகளை உடைத்து நதிகள் அவற்றின் போக்கில் விட்டால் மாத்திரமே ஆரியர்களுக்கு தங்களுடைய வளர்ப்பு மிருகங்களுடன் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்ல முடியும். அதனால் அவர் களுடைய யுத்த முயற்சிகளில் முதன்மையானது நதிகளை சுதந்திரமாக்குவதாக இருந்தது. (அவர்களுடைய வீர புருஷனான இந்திரன், விருத்திரனைக் கொன்றான் என்ற ரிக் வேத கதையின் வரலாற்று ரீதியான உள்ளடக்கம், சிந்து நதியின் மீது கட்டியிருந்த அணைகளை உடைத்தது பற்றியதாகும் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.)

அணைகளை உடைப்பதென்ற இந்த நாசவேலையின் மூலம் ஆரியர்கள் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் அடிப்படையையே தகர்த்துவிட்டார்கள். சிந்துச் சமவெளி நகரங்களைத் தீக்கிரையாக்கியதைவிடக் கொடுமையான ஒரு நாச வேலையாக இருந்தது இது. இத்துடன் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் அழிவு முழுமையாயிற்று.

(“இந்திய வரலாறு – ஒரு மார்க்சிய கண்ணோட்டம்’’ – ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்)

தோழர் பி.இராமமூர்த்தி இவ்வளவு விரிவாக ஆரியர் _ திராவிடர் பற்றியும், சிந்து சமவெளி நாகரிகம் குறித்தும் ஒரு நூலாகவே எழுதியிருக்கும் நிலையில் ஆரியப் பார்ப்பன வார ஏடான ‘துக்ளக்’ எழுதுகிறது (25.10.2017, பக்கம் 10) பி.ராமமூர்த்தி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் திராவிட நாட்டுக்கும் திராவிடம் என்ற சொல்லுக்கும் எதிரானவர்கள் என்று ‘துணிவாக’ பொய்யை எழுதுவதற்குச் சற்றும் கூச்சப்படாமல் திரித்து எழுதுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *