அய்யாவின் அடிச்சுவட்டில்….இயக்க வரலாறான தன் வரலாறு (274)

ஆகஸ்ட் 1-15,2021

சென்னையில் நடந்த மூன்று நாள் மாநாடு

கி.வீரமணி

தமிழ்நாடு ஆளுநர் மேதகு டாக்டர் சென்னா ரெட்டி அவர்கள் 2.12.1996 அன்று மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.

அவரது அணுகுமுறையில் நமக்கு மிகவும் மாறுபட்ட கருத்து உண்டு என்றபோதிலும்கூட, நாட்டின் சிறந்த நிருவாகிகளில் ஒருவராக அவர் திகழ்ந்தார் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது.

ஆந்திரத்தில் அவரது பொதுவாழ்க்கை மிக முக்கிய வரலாற்றுச் சுவடுகளைப் பதிப்பித்துள்ளது. அவரது மறைவுக்காக திராவிடர் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று ‘விடுதலை’யில் அறிக்கை வெளியிட்டோம்.

அய்க்கிய முன்னணி அறிவித்த குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்தில் ஒப்புக்கொண்டுள்ள -_ விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கிட வகை செய்யும் சட்டத்தினை மேலும் கால தாமமின்றி உடனே நிறைவேற்ற வேண்டும் என்று 5.12.1996 அன்று அறிக்கையொன்றை வெளியிட்டோம். அதில், குறைந்தபட்சப் பொது வேலைத் திட்டம் (C.M.P.) என்பதில் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்துச் சட்டங்களை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

பிற்படுத்தப்பட்டவர் _ விவசாயி ஒருவர் முதல் முறையாக இந்தியாவின் பிரதமராக இருக்கும் நிலையில், விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தினை நிர்ணயம் செய்யும் சட்டத்தினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிட ஏனோ இன்னமும் தயக்கமும் காலதாமதமும் ஏற்படுகிறது.

இந்தக் கோரிக்கை ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சமூக நீதியாளர்கள் _ முற்போக்கு இடதுசாரிக் கட்சிகள் _ எல்லோராலும் வற்புறுத்தப்பட்டு வருகின்ற ஒன்றாகும்.

நாடாளுமன்றத்தின் இந்தத் தொடரில் இச்சட்டத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கப்படும் என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அருணாசலம் அவர்கள் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

விவசாயத் தொழில் புறக்கணிப்பதற்கு அடிப்படைக் காரணம், மனு தர்மப்படி _ விவசாயம் ஒரு ‘சூத்திரத்’ தொழில்; உயர்ஜாதியினர் ஏர்பிடித்தால் ‘பாவம்’ என்ற வருணாசிரம் தர்மத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட ‘சூத்திர _ பஞ்சம’ தொழில்.

பெருமளவில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள்தானே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்?

அவர்கள் நிலை அதனாலேயே கேட்பாரற்று, நாதியற்ற நிலைக்கா தள்ளப்படுவது? வேதனையானது.

மத்திய அமைச்சரவை குறிப்பாகப் பிரதமர் தேவகவுடா அவர்களும், அவரது சக அமைச்சர்களும் வற்புறுத்தி செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கையில் வலியுறுத்தியிருந்தோம்.

மொரப்பூர் ஒன்றிய தி.க. தலைவர் வே.சாமிக்கண்ணு இல்ல மணவிழா 12.12.1996 அன்று இராமியம்பட்டியில் நடைபெற்றது. மணவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். வே.சாமிக்கண்ணு, ருக்கு ஆகியோரின் செல்வன் சா.சிற்றரசு _ இராமியம்பட்டி எஸ்.சிவப்பிரகாசம், இராதா ஆகியோரின் செல்வி பொன்மலர் இவர்களுக்கு இராமியம்பட்டி சாமிக்கண்ணு தோட்டத்தில் மிகச் சிறப்பாக மாநாடு போல மணவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமக்களுக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து விழாவினை நடத்தி வைத்தேன். சிறப்புரையாற்றி மணமக்களையும் வாழ்த்தினோம்.

மணவிழாவையொட்டி இராமியம்பட்டி கிராமம் முழுவதும் சிறப்பாக கழகக் கொடிகள் அலங்கரிக்கப்பட்டு, கட்டப்பட்டுருந்தது. ஏராளமான கழகத் தோழர்களும், முக்கியப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஏழைகளுக்கும் பொதுமக்களுக்கும் சிறப்பாகச் சேவை செய்து வருகின்ற ஆயுள் காப்பீட்டுக் கழகம் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்க்க இருப்பதாக செய்தியைக் கேள்விப்பட்டு 13.12.1996 அன்று விடுதலையில் அறிக்கையொன்றை வெளியிட்டோம். அதில், நமது நாட்டில் இன்ஷூரன்ஸ் துறையில் முதன்முதலில் ஆயுள் இன்ஷூரன்ஸ் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.  ஆயுள் காப்பீட்டுக் கழகம் என்ற பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒன்றிய _ மாநில அரசின் நலத் திட்டங்களுக்கு வீட்டு வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை அமைக்கத் தாராளமாகக் குறைந்த வட்டிக்கு தரப்படுகின்றன.

தொழில் நுணுக்கம் (Technical Know-now) கொண்டவை என வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளே அழைப்பதன் மூலம்தான் நாம் வளர்ச்சி பெற முடியும் என்று கூறுவது இத்துறையையும் பொறுத்தவரை ஒப்புக் கொள்ளக் கூடியதல்ல. உள்நாட்டுத் தொழில் நுணுக்கம் சிறப்பாகப் பயன்பட்டுத்தான் லாபகரமாக அவை இயங்கி வருகின்றன. எனவே, வெளிநாட்டுத் தொழில் அறிவு (Foreign Technology) இதன்மூலம் இறக்குமதியாக வாய்ப்பு என்ற மத்திய அரசின் கருத்து ஏற்க முடியாத ஒன்று என்பது பல பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும். தேசிய மயமாக்கப்பட்ட பிறகு பொது ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (ஜி.அய்.சி.) ஏழைகளுக்குப் பயன்படும் சுமார் 100 திட்டங்களைப் போட்டு அமல்படுத்துவதில் வெற்றியும் அடைந்துள்ளது. இந்த நிலையில் ‘அந்நிய ஒட்டகம்’ நுழைந்தால் இந்தக் கூடாரத்திலிருந்து இந்திய நிறுவனங்கள் மெல்ல மெல்ல வெளியே தள்ளப்படுவது உறுதி! அத்துடன் இன்ஷூரன்ஸ் பிரிமியம் _ ஏழை, எளிய, நடுத்தர மக்களின் சமாளிப்பு எல்லையைத் தாண்டியதாகிவிடும். எனவே, அய்க்கிய முன்னணி அரசு இதில் பிடிவாதம் காட்டாமல், தனது முடிவை மறுபரிசீலனை செய்து பழைய நிலையைத் தொடருமாறு செய்ய முன்வர வேண்டும். இது அவசரம்; அவசியம் என்பதை கழகத்தின் சார்பில் ஒன்றிய அரசுக்குச் சுட்டிக்காட்டிக் குறிப்பிட்டிருந்தோம்.

சென்னையில் மாநில மாநாடு வேலை நடைபெற்று வருகின்ற நிலையில் கழகப் பற்றாளரும், பெரியார் பெருந்தொண்டர்கள் மூவர் அடுத்தடுத்து மறைந்த செய்தி மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. பாரீசில் வாழ்ந்த சுயமரியாதை வீரரும், திருமதி சுசீலா எத்துவால் அவர்களது கணவரின் தம்பியான திரு.பக்தவத்சலம் அவர்கள் 16.12.1996 அன்று பாரீசில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தோம். மறைந்த ‘பக்தா’ அவர்கள் கழகத்திடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒரு நல்ல சுயமரியாதை வீரர். புதுவையைச் சார்ந்த அவர் பல ஆண்டுக்காலம் பாரீசில் பணியாற்றி ஓய்வு பெற்று அங்கேயே தங்கியிருந்தவர் ஆவார்.

அவரது மறைவு கேட்டு இரங்கல் தந்தியை அவர்கள் குடும்பத்தினருக்கு அனுப்பினேன். பாரீசுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமதி சுசீலா அவர்களுக்கு ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தினேன்.

திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளரும், பெரியார் பெருந்தொண்டருமான டி.ஆர்.கே.டி.எஸ்.மூர்த்தி 17.12.1996 அன்று திருவண்ணாமலையில் மறைவுற்றார் என்ற செய்தியைஅறிந்து வருந்தினேன். மாணவர் பருவந்தொட்டு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தவர். மறைந்த அவருக்கு வயது 68. சிறிது காலமாகவே உடல்நலமற்று இருந்தார். கவுதமன், சித்தார்த்தன் என்ற இரு மகன்களும், மனைவியும் உண்டு. அவர்களது குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தி அனுப்பி ஆறுதல் கூறினேன்.

திருப்பனந்தாள் ஒன்றிய முன்னாள் திராவிடர் கழகத் தலைவரும் நீண்டகால இயக்க முன்னணி வீரரும், துகிலியில் அய்யா சிலை நிறுவி அயராது பாடுபட்டவருமான துகிலி நடராசன் 19.12.1996 அன்று மறைவுற்றார் என்ற  செய்தி மிகுந்த துயரத்தைக் கொடுத்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி இரங்கல் செய்தி அனுப்பினேன். தொடர்ச்சியாக நிகழ்ந்த மரணங்கள் கழகத் தோழர்களிடையே மிகுந்த வேதனையையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

சென்னை பெரியார் திடலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு டிசம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் கழகத்தின் முத்திரை பதிக்கும் வகையில் சிறப்புடன் நடைபெற்றது. இம் மாநாட்டுக்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து கர்நாடகம், புதுவை, மும்பை, ஆந்திரா, தில்லி எனப் பல்வேறு பகுதிகளிலிருந்து பகுத்தறிவாளர்களும், திராவிடர் கழகத் தோழர்களும் குடும்பம் குடும்பமாகத் திரண்டனர். முதல் நாள் நிகழ்வில் காலை 9:00 மணிக்கு திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களது முழு உருவச் சிலைக்கு கழகத் தோழர்கள், வெளிநாட்டுத் தமிழர்கள், பெரியார் சமூகக் காப்பு அணித் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்து மாநாட்டினைத் துவங்கி வைத்தேன். டாக்டர் நாவலர் அவர்கள் மாநாட்டிற்கு வருகை புரிந்து சிறப்பு செய்தார். உடனே அவர் தந்தை பெரியார் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின், பெரியார் அறிவியல் கண்காட்சி மய்யத்தைத் துவங்கி வைத்து முழுமையாக அதனைப் பார்த்து பெரிதும் வியந்து பாராட்டினார்.

பெரியார் சமூகக் காப்பு அணி மரியாதை செய்யும் வகையில் அணிவகுத்து ஒருவர் பின் ஒருவராக வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர். அதனைக் கண்ட வெளிநாட்டிலிருந்து வந்த சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாநாட்டிற்கு வந்த அத்துணை தோழர்களும் ஆச்சரியத்துடன் நின்று பார்த்து மலைத்தனர். பல்வேறு கட்சி பிரமுகர்களும் கழகத்தின் அழைப்பை ஏற்று வந்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மாநாட்டில் தந்தை பெரியார் படத்தை அமெரிக்காவைச் சார்ந்த டாக்டர் இலக்குவன் தமிழ் திறந்து வைத்து உரையாற்றினார். பெரியார் பன்னாட்டமைப்பு _ பெரியார் கல்வி நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பெரியார் பன்னாட்டமைப்புக் கருத்தரங்கம் காலை 10:30 மணியளவில் சென்னை அபுபேலஸில் துவங்கியது.

பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் (அமெரிக்கா) அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பன்னாட்டு நாத்திகர் கழகம், மனித உரிமைகள் சங்கம் ஆகியவற்றின் துணைத் தலைவர் எம்.லெவி ஃபிராகல் (நார்வே) தலைமை தாங்கி உரையாற்றுகையில், “கடந்த 25 ஆண்டுகளாக நான் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். மனிதநேயம், மானுடம் என்று சொல்லக்கூடிய கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இதுபோல ஒரு பெரிய கூட்டத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. நான் பெரியாரைப் பற்றிய சில நூல்களைப் படித்திருக்கிறேன். தென்னிந்தியாவில் இருக்கக் கூடியவர்கள் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை கேள்விப்பட்டிருந்தேன். அதனை உங்களைப் பார்க்கையில் உணர்கிறேன். இங்கர்சால் அமெரிக்காவின் மிகப் பெரிய சிந்தனையாளர், மிகப் பெரிய நாத்திகர். ஆனால், இங்கர்சாலுக்கு நியூயார்க் நகரிலே ஒரு குறுஞ்சாலைக்காவது பெயர் வைக்க முடியுமா என்று எண்ணிப் பார்க்கிறேன். நடக்க முடியாத ஒன்று. இதை இங்கு மிகப் பெரிய நெடுஞ்சாலைக்குப் பெரியார் பெயர் வைத்திருப்பதைப் பார்த்தேன். எனக்குள் பெரும் வியப்பு ஏற்பட்டது. ஒரு பகுத்தறிவாளரின் பெயரை பெரிய சாலைக்கு வைக்கக் கூடிய வாய்ப்பு எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இது உலகத்திலே நடக்காத ஒரு செயலை இங்குக் கண்டேன்.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மதத்தினால் நடக்கக்கூடிய கொடுமைகளை யெல்லாம், அடக்குமுறைகளையெல்லாம் குறிப்பாக இந்து மதத்திலிருக்கிற அடக்குமுறைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை விழிப்படையச் செய்வதைக் கண்டு வியக்கிறேன். இதற்காக நாம் மிகப் பெரிய ஒரு போராட்டத்தை இதற்காக நடத்த வேண்டியிருக்கிறது.

இந்த வகையில் நீங்கள் நடத்துகின்ற போராட்டத்தில் நானும் கலந்து கொள்ளுவேன் என்று சொல்லக்கூடிய விருப்பம் எனக்கு வருகிறது’’ எனப் பல கருத்துகளை அவர் எடுத்துக் கூற பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார்.

கருத்தரங்கில், “21ஆம் நூற்றாண்டுக்கும் தந்தை பெரியாரின் கருத்துகள் ஏற்புடையவை _ புதிய சமுதாயத்தைப் படைப்பதில் பெரியாரின் பங்களிப்பு’’ என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். மாநாட்டில் பங்கு கொண்ட மலேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர் அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள். பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில், ‘கி.வீரமணி சமூகநீதி விருது’ வி.பி.சிங் அவர்களுக்கு வழங்கப்பட, அவரின் பிரதிநிதி ஜனதாதள முன்னணித் தலைவர் ஜெகவீரபாண்டியன் பெற்றுக் கொண்டார். அமெரிக்காவைச் சார்ந்த இலக்குவன் தமிழ், டாக்டர் சோம.இளங்கோவன் அதை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து மாநாட்டிற்கு உடல்நலக் குறைவு காரணமாக கலந்துகொள்ள முடியாத நிலையில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பேசிய ஒலி நாடாவை அனுப்பியிருந்தார். அது மாநாட்டில் ஒலிபரப்பப்பட்டது. அவர் கைப்பட எழுதியிருந்த வாழ்த்துச் செய்தியும் வாசிக்கப்பட்டது. அதில், “தந்தை பெரியார் அவர்கள் ஒரு புதிய சமுதாயத்தைக் குறித்த தொலைநோக்காளர் ஆவார். இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் பெரியாரின் கொள்கைகளைத் தெரிவிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் கழகத்தின் பொன் விழா மாநாட்டில் கலந்துகொண்டு பெரும் பேற்றைப் பெற்றேன். எனக்கு விருது அளித்துப் பாசத்தையும், நல்லெண்ணத்தையும் காட்டுகின்ற திரு.வீரமணி அவர்களுக்கும், பெரியார் அமைப்பைச் சார்ந்த டா

க்டர் இலக்குவன் தமிழ், டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓர் உறுதியை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதி மற்றும் மதச் சார்பின்மை எனும் இலக்குக்காக எங்கிருந்தாலும் என்றைக்கும் ஓயாது உழைப்பேன்’’ என தமிழில் கையொப்பமிட்ட வாழ்த்துக் கடிதம் மேடையில் வாசிக்க கழகத் தோழர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்துத் தெரிவித்தனர்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட மலேசிய திராவிடர் கழகத் தலைவர் ரெ.சு.முத்தையா, சிங்கப்பூர் நாகரத்தினம், சோம.இளங்கோவன், நார்வே லெவி ஃபிராகல் ஆகியோருக்கு மேடையில் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தோம். முதல் நாள் மாநாட்டின் ஒரு பகுதியாக ‘பெரியார் சி.டி.ராமை’ தொடங்கி வைத்து உரையாற்றினேன். அந்த உரையில், “21ஆம் நூற்றாண்டே பெரியார் நூற்றாண்டுதான். அதனை செயல்படுத்த உலகெலாம் பெரியார்; எல்லார் உள்ளங்களிலும் பெரியார் என்று ஆகவேண்டுமானால் என்ன வழி என்று சிந்தித்தபோது அறிவியல் மூலம் கொண்டு செல்ல வேண்டும். அறிவியலின் உச்சகட்டம் _ கணினி. உலகம் முழுவதும் பெரியாரை நாம் அறிமுகப்படுத்தி வருகிறோம். இன்னும் சிறப்பாகச் செய்வதற்காகத்தான் ‘பெரியார் சி.டி.ராம்’ என்பதைச் செய்து இருக்கிறோம். இதிலே சிறந்த தகுதி படைத்த கிரியா உற்பத்தியாளர்கள் யார் எனத் தேடி, பாலசுப்ரமணியம் என்ற தமிழர் மூலம் இதனை உருவாக்கியுள்ளோம். பல மாதங்கள் செய்ய வேண்டிய பணியினை, சில மாதங்களுக்குள்ளாக முடித்து உலகம் முழுவதும் அதை பரப்ப இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்ததோடு, பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். நிகழ்வில், பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

சமூகநீதி மாநாட்டின் 2ஆம் நாள் நிகழ்வில் முதலில் பிற்பகல் சென்னையைக் குலுக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் பேரணி நடைபெற்றது. தந்தை பெரியார் திடலுக்கு முன்பு விழுப்புரம் இராமசாமிப் படையாச்சியார் மாவட்டத் தலைவர் புலவர் ந.தங்கவேலன் அவர்கள் பேரணியைத் துவக்கி வைத்தார். 64 மோட்டார் சைக்கிள்களில் கழகக் கொடிகளுடன் தோழர்கள் அணிவகுத்துச் சென்றனர். வழியெல்லாம் இளைஞர்கள் வாணவெடிகள், அதிர்வேட்டுகள் வெடித்துக் கொண்டு உற்சாகத்துடன் குரலெழுப்பி வந்தனர். பேரணியில் இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் பெரியார் வேடமிட்டு கழகத் தோழர்களை உற்சாகப்படுத்தி வந்தார். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த தோழர்கள் அவரவர் மாவட்ட பதாகைகளுடன் அணிவகுத்து கட்டுப்பாட்டுடன் நடந்து வந்தனர். பெரியார் சமூகக் காப்பு அணி வீராங்கனைகள் பேரணியை சிறப்பாக வழிநடத்தி வந்தனர். வழியெங்கும் தோழர்கள் சுருள் கத்தி வீச்சு, கொம்பு விளையாட்டு, குஸ்தி, வாயில் மண்ணெண்ணெய்யை -ஊற்றி நெருப்புத் தீ கொப்பளிக்கின்ற சாகச நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தினர். மதியம் துவங்கிய பேரணி இரவு 8:00 மணிக்கு தங்கசாலை திறந்தவெளி மாநாட்டை அடைந்தது.

அந்த சமூகநீதி மாநாட்டில் கலந்துகொண்ட சமூகநீதி மய்யத் தலைவர் சந்திரஜித் யாதவ் அவர்கள் உரையாற்றுகையில், “பெரியார் ஒரு தனி மனித வரலாறு. அவர் இந்திய நாட்டிற்கே உரிய தலைவர் அல்ல; உலகத்திற்கே உரிய தலைவர் என்று சொல்ல வேண்டும். புதிய உலகத்தை, சமத்துவமான, சமூகநீதியுடைய உலகத்தைப் படைக்கும் ஆற்றல் பெரியார் கொள்கைகளுக்கு இருக்கிறது. அவருடைய பாதையில் உழைத்து வருகின்ற நம்முடைய தலைவராக இருக்கின்ற வீரமணி அவர்களுக்கும் ஒரு பெருமை சேர்க்கின்ற வகையில் ‘சமூகநீதி வீரமணி விருது’ என்ற விருதினை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். திராவிடர் கழகத்தின் கொள்கைகள், நடைமுறைகள் எல்லாம் இந்த நாட்டினுடைய கொள்கைகளாக நடைமுறைகளாக மலர்ந்து வருகின்றன. இதன் பெருமையெல்லாம் வீரமணியையே சாரும். நமது வீரமணி அவர்கள் தலைமை தாங்கி நடத்தியிருக்காவிட்டால் மண்டல் பரிந்துரைகள் நடைமுறைக்கே வந்திருக்காது என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலைமையிலே இந்த நாட்டை நடத்தி வைக்கின்ற பொறுப்பு திராவிடர் கழகத்திற்கு உண்டு. உங்கள் போராட்டங்களால் இந்தியா முழுமைக்கும் நன்மை அடையும். உங்கள் போராட்டங்களில் நாங்கள் உங்களோடு என்றும் இருப்போம் என்று உறுதி அளிக்கிறேன்’’ என பல அரிய கருத்துகளைக் கூறி உரையாற்றினார். மாநாட்டின் 2ஆம் நிகழ்வை நிறைவுரையாற்றி முடித்து வைத்தேன்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *