அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (294)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜூன் 16-30 2022

பெரியார் நினைவு சமத்துவபுரம்
கி.வீரமணி


பிகாரில் ‘பூமிகார் பிராமணர்’ குண்டர் படையின் தொடர் வன்முறையைக் கண்டித்து 12.2.1999 அன்று அறிக்கை வெளியிட்டேன்.
“பிகாரில் ஜெகனாபாத் பகுதியில் ரண்வீர்சேனை என்ற ‘பூமிகார் பிராமண’ நிலப் பிரபுக்களின் ஏவல் பட்டாளம் மீண்டும், பல தாழ்த்தப்பட்ட பெண்களையும் ஆண்களையும் குழந்தைகளையும்கூட, இரவு நேரத்தில் அந்த அப்பாவி விவசாயத் தொழிலாளிகள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறபோது, திடீரென்று, மின்னல்போல் தாக்கி, சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிவிட்டனர்.
சில வாரங்களுக்கு முன் நடந்த படுகொலைகளின் பச்சை ரத்தம்கூட இன்னமும் காயவில்லை. அதற்குள்ளே மீண்டும் இப்படிச் செய்ய ஆணவம் கொள்கின்றனர் அந்த அக்கிரமக்காரர்களான ‘பூமிகார் பிராமணர்கள்’ என்றால் அந்த சேனையைக் கண்டவுடன் சுட்டுத் தள்ளும் உத்தரவினை உடனே போட பிகார் அரசு தயங்கக் கூடாது’’ எனக் குறிப்பிட்டிருந்தேன்.
அதனைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா அரசின் சதியால் பிகாரில் மக்கள் ஆதரவுடன் நடைபெற்று வந்த ராப்ரிதேவி ஆட்சியைக் கலைத்துக் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்திருப்பது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல; சமூகநீதிப் படுகொலையுமாகும் என்பதை விளக்கி 14.2.1999 அன்று கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிட்டேன்.
கோவில்வெண்ணி சுந்தரசாம்பசிவம்_ யாழினி மணவிழாவினை நான் 14.2.1999 அன்று காலையிலும், கெங்குவார்பட்டி சு.முருகேசன்_ கி.முத்துலட்சுமி ஆகியோரின் மணவிழாவினை 17.2.1999 அன்றும் நடத்தி வைத்தேன்.
“தமிழர் இல்லங்களில் நடைபெறும் மணவிழாக்கள் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற வேண்டிய அவசியத்தை விளக்கியும், பெண்களின் முன்னேற்றத்திற்காக தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய தொண்டுகள், மூடநம்பிக்கைகளில் சிக்கித் தவிக்கின்ற நமது இனத்தைத் திருத்தி மானமும் அறிவும் உள்ள மக்களாக மாற்ற கழகம் ஆற்றி வருகின்ற பணிகள் போன்றவற்றைப் பட்டியல் இட்டும் சிறப்புரையாற்றினேன்.

சுயமரியாதைச் சுடரொளி அகிலாண்டம் அம்மையார் மறைந்த செய்தியை 18.2.1999 அன்று அறிந்தவுடன் மிகுந்த துயரத்தோடு இரங்கலைத் தெரிவித்தேன். பெரியார் கொள்கைக்காக பலமுறை சிறை சென்றவரும், சிறையிலேயே பெண் குழந்தை பெற்று, அதற்குச் ‘சிறைச்செல்வி’ என்று பெயர் சூட்டியவரும், கழக மாநாடுகள் அனைத்திலும் கலந்து கொண்டவருமான சேலம் சிவதாபுரம் சுயமரியாதைச் சுடரொளி அகிலாண்டம் அம்மையாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தந்தி அனுப்பினேன். அவரது விருப்பப்படியே, கழகக் கொடி போர்த்தி ஏராளமானோர் சூழ, எவ்வித சடங்குமின்றி அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சேலம் மாவட்ட நகராட்சி அமைப்புச் செயலாளர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியம் _ ரஞ்சிதம் ஆகியோரின் மகள், சி.எஸ். அறிவுமதிக்கும், சிந்தாமணியூர் சின்னப்பன் _ காளியம்மாள் ஆகியோரின் மகன் சி.புகழ்-மணிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த ஏற்பு விழாவை தலைமையேற்று 21.2.1999 அன்று நடத்தி வைத்து உரையாற்றுகையில், சுயமரியாதைத் திருமணத்தின் கட்டாயம் பற்றி விளக்கி உரையாற்றினேன்.
சென்னை மக்கள் நல உரிமைக் கழகத்தின் சார்பில் 23.2.1999 அன்று “இந்திய அரசியலும், மதவெறியும்’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றினேன். “காந்தியாரைக் கொன்றது நியாயம் என்று சொல்லி அதை நியாயப்படுத்துகின்ற நூல்கள் இன்றைக்கும் இருக்கின்றன. இதற்குக் காரணம் மதவெறி. மதத்தை நம்புகிறவர்கள், கடவுளை நம்புகிறவர்களால்தான் இந்த நாட்டிலே ஆபத்து என்ற சொல்லக்கூடிய சூழ்நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு மதம் பிடித்தால் எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே தந்தை பெரியார் அவர்கள் சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றார்கள். அதுதான் இன்று நடைபெறுகிறது என்று விளக்கி உரையாற்றினேன். இந்தக் கருத்தரங்கில் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, அ.குணசீலன், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு கட்சியினர் முக்கியப் பொறுப்பாளர்கள், கழகப் பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கருநாடக அரசு 19 தமிழர்களுக்கு, மாநிலக் கணக்காயர் அலுவலகத்தில் வேலை தர மறுத்துவிட்டதைக் கண்டித்து, சென்னை _ மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை 25.2.1999 அன்று தலைமையேற்று நடத்தினேன். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நிறைவுரை ஆற்றுகையில், “கருநாடகத்திலே 19 தமிழர்கள் கன்னட மொழியைக் கற்றுக் கொள்ளுகிறோம் என்று சொன்னாலும், வேலை தர கருநாடக அரசு மறுக்கிறது. நம்மைப் பார்த்து பிரிவினைவாதிகள் என்று சொல்லுகிறார்களே, இப்பொழுது யார் பிரிவினைவாதிகள்? தமிழன் என்றால், அவன் ஓர் அனாதை என்ற நிலை ஆக்கப்படக் கூடாது. தமிழன் என்றால் நாதி இல்லாத இனமா? இதற்கு உடனடியாக மத்திய அரசும், மாநில அரசும் பரிகாரம் தேடியாக வேண்டும்’’ என்று வலியுறுத்திப் பேசினேன்.

26.2.1999 முதல் தொடர்ந்து எமக்கு வந்த கழகத் தோழர்களின் மறைவுச் செய்தி பெரும் வேதனையை அளித்தது.
26.2.1999 அன்று முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் புதுக்கோட்டை அய்யா சுந்தரம்; 27.2.1999 அன்று திருவையாறு ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோதண்டபாணி; 28.2.1999 அன்று சட்ட எரிப்பு வீரரும், நன்னிலம் வட்டாரத்தில் அரும் பணியாற்றியவருமான புத்தகரம் செயராமன்; 28.2.1999 அன்று தருமபுரி மாவட்டம் காவேரிப்பட்டணம் நகர திராவிடர் கழகத் தலைவர் _ முன்னாள் இராணுவ வீரர் கி.ஓபுளி ஆகிய தோழர்கள் மறைவுற்றனர்.
இப்படிப்பட்ட கழகத் தோழர்களின் மறைவு, அவர்களின் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பு மட்டுமல்ல _ இயக்கத்துக்கும், சமுதாயத்துக்கும் ஏற்பட்ட பொது இழப்பாகும் என்று எனது இரங்கலை, துயரத்தை வெளிப்படுத்தி, அவர்களின் பொதுத் தொண்டுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ‘விடுதலை’யில் 2.3.1999 அன்று அறிக்கை வெளியிட்டேன்.
பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரியின் வாகன ஓட்டுநரும், குருவாடி த.சின்னத்துரை _ லீலாதேவி ஆகியோரின் செல்வன் சி.சிவக்குமாருக்கும், திருமானூர் மைனர் _ செயந்தி ஆகியோரின் செல்வி மை.அஞ்சுகத்திற்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை 3.3.1999 அன்று தலைமையேற்று நடத்தினேன்.
ஜாதி ஒழிப்புத் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களைப் பாராட்டியும், ஜாதிக் கொடுமையினால் நம் சமுதாயம் எவ்வாறு சீரழிகிறது என்பதை விளக்கியும், ஜாதி ஒழிப்புக்கு திராவிடர் கழகம் ஆற்றிவரும் பங்கினை விளக்கியும்’’ உரையாற்றினேன்.
பிகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்படுவதாக 8.3.1999 அன்று மக்களவையில் அத்வானி அறிவித்தது குறித்து அறிக்கை வெளியிட்டேன்.
“மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசால் இறக்கப்பட்ட சமூகநீதிக் கொடி மீண்டும் ஏற்றப்பட்டு, பறக்கத் துவங்கும் நிலை உருவாகியுள்ளது.
திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலையில் சிக்கி, மீண்டும் ராப்ரிதேவி அரசு உயிர் பெற்று எழுந்துள்ளது!
அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது!
முதலில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான பிகார் ஆளுநர் பண்டாரி பதவி விலக வேண்டும்; இல்லையேல் இதைவிட அவமானம் வேறு இருக்கவே முடியாது!’’ என அந்த அறிக்கையில் கூறியிருந்தேன்.

சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் நாகரெத்தினம் மறைவு!
மயிலாடுதுறையில் கழகம் வளர்த்து, பல ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் சென்று, அங்கே தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்ட சிங்கப்பூர் குடிமகனாகிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் தி.நாகரெத்தினம் அவர்கள் 11.3.1999 அன்று பிற்பகல் சுமார் 3:00 மணியளவில், திருவண்ணாமலை அருகில் உள்ள பாய்ச்சல் என்னும் கிராமத்தின் அருகே, காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த பேருந்து மோதி அந்த இடத்திலேயே உயிர் நீத்தார். காரை ஓட்டி வந்தவரும் அங்கேயே பலியானார் என்ற நெஞ்சைப் பிளக்கும் செய்தி கேட்டு, நாம் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.
தந்தை பெரியாரின் கொள்கை வீரராகவே அவர் சுமார் அரை நூற்றாண்டுக்காலம் அரிமாபோல வாழ்ந்தவர். எவரிடமும் இயக்கம், கொள்கை, தலைமை பற்றியே விவாதிக்கத் தவறாத பண்பாளர். சிங்கப்பூர்த் தமிழ்ப் பெருமக்கள், வணிகப் பிரமுகர்கள், மலேசியக் கழக முன்னணியினர் அனைவரது அன்புக்கும் பெரிதும் பாத்திரமானவர். அய்யா, அம்மா ஆகியோரின் பேரன்பிற்கு உரியவராக இருந்தவர்.

 

மயிலாடுதுறையில், நமது மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் போன்ற எண்ணற்ற கழக இளைஞர்களை, கூரிய கொள்கைப் போர்வாளாக ஆக்கிய லட்சியப் பட்டறை அவர்!
தனி வாழ்க்கைக்கான நேரத்தில்கூட, எப்போதும் இயக்கம், கொள்கை என்பதையே இடையறாமல் முழங்கக் கூடியவர். அவர் எனது ‘சம்பந்தியாக’ ஆனவர் என்ற நிலையில்கூட. என்றும்போல் கழக உறவோடுதான் நாங்கள் பழகி வந்தோம். அதே மரியாதையும், அன்பும், பண்பும் காட்டித்தான் என்னிடத்திலும், குடும்பத் தாரிடமும், தோழர்களிடமும் பழகினார்.
அவரது இழப்பால் வாடும் அவரது அருமைத் துணைவியார் திருமதி நவநீதம் அம்மையார், செல்வங்கள் குந்தவை_ கலியபெருமாள், மஞ்சுளா_அரவிந்த், மாறன்_கவிதா, ராணி அவரது சகோதரர்கள் குடும்பத்தினர் மற்றும் ஏராளமான கழக நண்பர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை அறிக்கையின் மூலம் தெரிவித்தேன்.
சிங்கப்பூர், மலேசியா திராவிடர் கழகத்தினரும் இரங்கல் செய்தியை வெளியிட்டு அவரது படத்திற்கு மாலையிட்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
17.3.1999 அன்று சட்டப்பேரவை உரையில், “கலைஞர் அவர்கள், பெரியார் நினைவு சமத்துவபுரம் பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார். உலகளவில் வாழும் ஜாதி ஒழிப்புக்குப் பாடுபடுகின்ற அனைவரும், உணர்வு பொங்க இந்த அறிவிப்பை வரவேற்றனர். இந்த அறிவிப்பின் மூலம் கலைஞர் அவர்கள் வரலாற்றில் நிலையான ஓர் இடத்தைப் பெற்றார்’’ என்று எல்லோரும் பாராட்டினர்.

“நாடே சமத்துவபுரமாக, ஜாதி, மத, மூட வழக்கங்கள் ஒழிந்த நாடாகத் திகழ அனைவரும் கட்சிக் கண்ணோட்டமின்றி, ஒன்றுபட்டு உழைத்து மக்களின் ஒருமைப்பாட்டுக்கும், உயர்வுக்கும் பாடுபடுவோம்!
21ஆம் நூற்றாண்டினை பெரியார் நூற்றாண்டாக்கிட இதுவும் ஒரு மைல்கல் ஆகும் என வரவேற்றுப் பாராட்டி தாய்க்கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிட்டேன்.
கழகத்தின் சார்பில் இரண்டாம் கட்ட ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும் பயணம் 20.3.1999 அன்று திருத்தணி முதல் திருச்சி வரையிலான பயணம் மேற்கொண்டோம். இந்தப் பிரச்சாரப் பயணத்தின் முதல் நாள் திருத்தணி பேரூராட்சி திடலில் எழுச்சியோடு துவங்கியது. மக்கள் நல உரிமைக் கழகப் பொதுச்செயலாளர் பண்ருட்டி இராமச்சந்திரன் கழகத்தின் கொடியினை அசைத்து துவக்கி வைத்தார்.

புத்தர் தோற்ற இடத்தில் பெரியாரின் வெற்றி! நிச்சயம் அமையும் என்று கூறி, எழுச்சியுரை ஆற்றினேன். நூற்றுக்கும் மேற்-பட்ட கழகத் தோழர்கள் பெரும் பயணத்தில் பங்கேற்றனர்.
இப்பயணத்தின் வழிநெடுக கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் சிறப்பான வரவேற்பினை அளித்தனர். பல்வேறு கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்கள். சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தின் கல்வெட்டைத் திறந்து வைத்தும், கழகக் கொடியினை ஏற்றி வைத்தும் உரையாற்றினேன். மாலை நேரங்களில் பொதுக்கூட்டமும் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
திருநாகேசுவரத்தில் 25.3.1999அன்று கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு, அறிவாசான் பெரியார் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினேன்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தின் நிறைவு விழா 29.3.1999 அன்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிறைவு விழா மேடையில் அரியலூர் மாவட்டம் செந்துறை சிங்காரவேல் _ ராசலெட்சுமி ஆகியோரின் மகன் இளங்கோவனுக்கும், பெரம்பலூர் மாவட்டம் செந்துறை முகம்மது அன்சாரி _ சர்புன்னிஷா ஆகியோரின் மகள் ரெஜினாவிற்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தை பொதுமக்களின் முன்னிலையில் நடத்திவைத்தேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.நல்லகண்ணு, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் கா.ஜெகவீரபாண்டியன் மற்றும் பல்வேறு கட்சியினர், முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தோழர் நல்லகண்ணு அவர்கள் உரையாற்றுகையில், “உலகம் முழுவதும் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்து நிலைக்க வேண்டுமானால், அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும். ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். ஆசிரியர் வீரமணி அவர்கள் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல், கடும் பகலிலும், இரவிலும் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். அவருடைய பிரச்சாரப் பயணத்தை _ இலட்சியப் பயணமாக நாங்கள் கருதுகின்றோம். ஜாதியை ஒழிக்க திராவிடர் கழக முயற்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்’’ என உரையாற்றினார்.


எனது நிறைவுரையில், ஜாதி ஒழிப்புக்கான பத்து அம்சத் திட்டத்தினை விளக்கியும், அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்புக்குப் பதிலாக ஜாதி ஒழிப்பு என்று திருத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உரையாற்றினேன். இப்பெரும் பிரச்சாரப் பயணத்தில் கலந்துகொண்ட கழகத் தோழர்களுக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்தேன்.
தருமபுரி மாவட்டம் பையூரில் 8.4.1999 அன்று அறிவாசான் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்தேன். விழாவில் சிறப்புரையாற்றுகையில், “ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் பாடுபட்ட மனிதநேய மாண்பாளர் சிலைதான் இங்கு திறக்கப்பட்டு இருக்கிறது. பையூர் தந்தை பெரியார் கிராமம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மக்களை மானமும் அறிவும் கொண்ட சமுதாயமாக மாற்றவே கழகம் பாடுபடுகிறது’’ என உரையாற்றினேன். கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். விழாவிற்கு மாவட்ட இளைஞரணியினர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ப.இரா.அரங்கசாமியின் செல்வன் அன்பு _ சுனிதா திருமண வரவேற்பில் 10.4.1999 அன்று கலந்து கொண்டேன். விழாவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வந்திருந்தனர். வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசிய ப.இரா.அரங்கசாமி அவர்கள் தனது உரையில் கழகத்தின் செயல்பாடுகளைப் பாராட்டியும், இந்திய நாட்டிலே சமூக சீர்திருத்தத்திற்காக இன்று பாடுபடக்கூடியவர் ஒருவர் உண்டென்றால், அவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டிப் பேசினார். விழாவில் உரையாற்றுகையில், தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தை வலியுறுத்தி உரையாற்றினேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாட்டுத் தலைவரான பெருமதிப்பிற்குரிய ஏ.கே.ஏ.அப்துல் சமது அவர்கள் 11.4.1999 அன்று தனது 73ஆம் வயதில் மறைந்தார் என்பது மிகுந்த துயரத்திற்கும் துன்பத்திற்கும் உரிய செய்தியாய் அமைந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல்நலக் குறைவுக்கு அடிக்கடி ஆளாகி வந்தபோதிலும் பொதுவாழ்வில் அவர் ஆற்ற வேண்டிய கடமைகளை என்றும் தள்ளிப்போட்டவர் அல்லர்.


அவரது பொதுவாழ்வு, காரைக்காலில் திராவிடர் கழக மேடையிலிருந்துதான் துவங்கியது. அவர் சிறுபான்மை இஸ்லாமியர் இனத்தின் காவலனாக, காயிதே மில்லத் விட்ட பணி முடிக்க உறுதி-பூண்டு உழைத்த தளபதியாக இறுதிவரை திகழ்ந்தார். தனது இனிய பண்பாலும், சொல்லாற்றலாலும் அனைவரையும் ஈர்த்த ஒரு பெருந்தகையாளர் ஆவார். அவர் மறைவிற்கு முன்னாள்தான் அவரைக் கண்டுவரும் இறுதி வாய்ப்பைப் பெற்றேன். அவரது இழப்பு மூலம் திராவிட இயக்கத்திற்கான ஒரு நல்ல நண்பரை இழந்தோம் என்ற ஒரு பள்ளத்தினை ஏற்படுத்திவிட்டது. அவரது பிரிவால் வாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என இரங்கல் செய்தியில் குறிப்பிட்டேன். கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுடன் சென்று அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினோம்.
(நினைவுகள் நீளும்…)