முகப்புக் கட்டுரை : தந்தை பெரியார் விரும்பி சிலை வைத்த ஒரே தலைவர் கலைஞர்!

ஆகஸ்ட் 01-15 2019

கி.வீரமணி

கலைஞர் அவர்கள் தம் மாணவர் பருவத்திலேயே தந்தை பெரியார் அவர்களின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, படிப்படியாக திராவிட இயக்கச் சித்தாந்தத்திற்கு ஆட்பட்டு, தொடர்ச்சியாக அந்த இயக்கத்தையே தம் சுவாசமாகக் கொண்டு, இயக்க வாழ்வே தன் வாழ்வாகக் கரைத்துக்கொண்டு, தனது கடும் உழைப்பாலும் தன்னிகரற்ற ஆற்றலாலும் படிப்படியாக ஏணிப்படிகளைக் கடந்து பிரச்சாரக் களம், போராட்டக் களங்களைக் கண்டு, கழகப் பிரச்சாரகராக, எழுத்தாளராகப் பரிணமித்து, கழகப் பொறுப்புகளில் படிப்படியாக வளர்ந்தவர். ஒரு கட்டத்தில் கட்சியின் தலைவராகவும் உயர்ந்தவர். அண்ணாவின் தலைமையில் ஆட்சியின் பயணத்தில் சட்டசபையில் கால்பதித்து, பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளையும் ஏற்று, அவற்றில் முத்திரைகளைப் பதித்து, முதல் அமைச்சர் என்னும் நிலைக்கு உயர்ந்தவர் என்றால் அது சாதாரணமானதல்ல.

கலைஞர் மீது பொறாமைக் கணைகளை வீசுவோர் அவர் கடந்துவந்த காட்டாற்றுப் பாதைகளை ஏன் கவனிக்கத் தவறுகிறார்கள்?

கலைஞர் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர் அல்லர். மிகப் பெரிய பாரம்பரியத்திற்குச் சொந்தக்காரர் என்று சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லாதவர். கலைஞர் மொழியில் சொல்ல வேண்டுமானால் மிக மிக என்று எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளக்கூடிய மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒருவர்! சிகரத்தை எட்டினார் என்றால் அதற்குக் காரணம், அவரது ‘அதிர்ஷ்டம்’ என்று சொல்லப் போகிறார்களா? அவரது கிரகப் பலன் அப்படி என்று கூறப் போகிறார்களா?

அந்த மூடக் கருத்துகளை அதன் வேர்வரை சென்று அழிக்கும் கொள்கைக்குச் சொந்தக் காரரான அவரின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் ஆழமான அடிப்படை _ உழைப்பு! உழைப்பு!! உழைப்பே!!!

கலைஞர் இன்றும் வாழ்கின்றார்; மறையவில்லை. தி.மு.க.வின் கொள்கையாய் என்றும் உறைந்துள்ளார்; நிறைந்துள்ளார். அவர் சார்ந்த திராவிட இயக்கத்தின் பலமான ஆணி வேர் கலைஞர் அவர்கள் வகுத்துக் கொடுத்துள்ள தனித்தன்மையான அணுகுமுறைகள் – என்றும் வெற்றிப் பாதையின் வெளிச்சங்கள்.

ஆட்சி என்று எடுத்துக்கொண்டாலும் பெண்களுக்கான சொத்துரிமை _ பெண்களுக்கான அலைஅலையான வளர்ச்சித் திட்டங்கள். சமூகரீதியில் அழுத்தமான சுவடுகள் (குறிப்பாக நுழைவுத் தேர்வு ஒழிப்பு)

ஜாதி ஒழிப்பில் முக்கிய மைல்கல்லான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் _ மற்றும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு, தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம், பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவிகித இடஒதுக்கீடு _ இத்தியாதி இத்தியாதி சட்டங்களும் திட்டங்களும் வேறு எந்த மாநிலத்திலும்கூடக் காணக் கிடைக்காதவையாயிற்றே!

இவையெல்லாம் அவர் இள வயதிலேயே வரித்துக்கொண்ட திராவிட இயக்கச் சித்தாந்தத்தின் வெளிப்பாட்டுக்கான அழியாச் சின்னங்களாகும். கலைஞர் அவர்கள் மறைவுற்ற நிலையில், இந்தச் சித்தாந்தங்களும் நோய்வாய்ப்பட்டுவிடும் என்கிற நிலை இல்லை _ ஏதோ வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்று கருதுவதற்கும் நியாயம் இல்லை.

தந்தை பெரியாரை அன்போடு வணங்கும் கலைஞர், உடன் ஆசிரியர் கி.வீரமணி

மற்றும் கழகத்தினர்

 இயக்கம் இருக்கிறது; இலட்சியங்கள் இருக்கின்றன. அவற்றைத் தலைமை ஏற்று நடத்தக்கூடிய தளகர்த்தர்கள் இருக்கும்பொழுது, வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்னும் சொல்லாடலுக்கு இடம் ஏது? அது ஓர் ஏமாற்று ஆரியத் தந்திரம்!

பதவி நாற்காலி ஆசை என்கிற எச்சில் ஊறலால் வேறு சிலர் அப்படிச் சொல்லலாமே தவிர, உண்மை அதற்கு நேர்மாறானதாகும்.

மற்றொன்று அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது – தி.மு.க.வைப் பொருத்தவரை மற்ற அரசியல் கட்சிகள் போன்று பத்தோடு பதினொன்றாய் – வெறும் அரசியல் கட்சியுமல்ல. இதனைப் பல நேரங்களில் முக்கியமான தளத்தில் அவர் வலியுறுத்தவும் தவறவில்லை.

தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்திலேயே (2.6.2008) திட்டவட்டமாக, தெள்ளத்தெளிவாக அதனைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

“நாம் எதிர்பார்க்கின்ற தேர்தல், சிம்மாசனத்திலே அமர்வதல்ல; கோட்டையிலே உட்கார்வதல்ல. இவைகளை எல்லாம் விடப் பெரியது – சமுதாயத்தை எழுச்சியுள்ளதாக ஆக்குவது, சுயமரியாதை உள்ளதாக ஆக்குவது. தமிழன் தமிழனாக வாழ்கிறான் என்ற நிலையை அவனிக்கு எடுத்துக்காட்டுவதுதான் நாம் வெற்றிபெற வேண்டிய, சாதிக்க வேண்டிய தேர்தல் என்பதை மறந்துவிடாமல் நீங்கள் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.”

(தி.மு.க. பொதுக்குழுவிலே தி.மு.க. தலைவர் கலைஞர் 2.6.2008 _ சென்னை)

திராவிடம், தமிழ்த் தேசியம் என்று எதை எதையோ பேசிக் குழப்பம் செய்பவர்களுக்கும் அவர் தக்க வகையில் விளக்கமும் அளித்துள்ளார்.

‘திராவிட’ என்னும் வார்த்தை அலங்காரத்திற்காகச் சொல்வதில்லை. நம்முடைய தமிழகத்திலே பெரும் புலவர்கள், விற்பன்னர்கள், பேராசிரியர்கள் எல்லாம் கண்டுபிடித்த உண்மைகளிலே மிக முக்கியமான உண்மைதான் ‘திராவிட’ என்கின்ற அந்த உணர்வு. நாம் ‘தமிழர்’ என்று சொல்லிக் கொண்டாலும் கூட ‘திராவிடன்’ என்று சொல்லிக் கொண்டால்தான், “திராவிடன் வேறு – ஆரியன் வேறு’’ என்கிற அந்தப் பாகுபாடு தெரியும். அதுவே, “நீ தமிழன் என்றாலுங்கூட, திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்பதை மறந்துவிடாதே’’ என்று பெரியாரும், அண்ணாவும் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள் என்கிறார் மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். (‘முரசொலி’ 6.6.2010)

இது மிகவும் முக்கியமானதோர் கருத்தாகும். பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்றும், ஆய்வாளன் இளைஞன் என்றும், ஆரியன் என்றால் சீரியன் _ உயர்ந்தவன் என்றும் புது அகராதி தயாரித்து விட்டனர் தமிழ்த் தேசியவாதிகள்.

இதன் பொருளென்ன? பார்ப்பனச் சனாதன தத்துவத்தை எதிர்த்து, பகுத்தறிவுச் சிந்தனைகளை விதைத்து, தன்மான உணர்வினை ஊட்டி, பெண்ணடிமையைத் தகர்த்து ஆரியப் பார்ப்பனர்களின் தனி உடைமையாக்கப்பட்ட கல்வியையும், வேலை வாய்ப்பையும் நீண்டகாலமாக எல்லா நிலைகளிலும் உரிமை பறிக்கப்பட்ட மக்களுக்காகப் பெற்றுத் தந்த திராவிட இயக்கச் சித்தாந்தத்தை அதன் அளப்பரும் பெருந்தொண்டை சாதனைகளை எதிர்க்கிறார்கள் என்றால், அத்தகையவர்கள் யாருக்காக இருக்கிறார்கள்? _ எதிர்க்கிறார்கள்? யாருக்காக அமைப்பை உருவாக்கிக் கொண்டுள்ளனர்? என்பதை எளிதில் உணரலாம்.

இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பைத் தகர்த்து, தமிழில் பெயர் சூட்டும் விழிப்புணர்வு, தமிழக உரிமைகள் மீட்பு என்னும் தடங்களில் எல்லாம் பெரும் போரிட்டு, மொழி மானம், இனமானம், பண்பாட்டு மீட்பு என்ற திசையில் பொறித்த வெற்றி முத்திரைகளைப் புறந்தள்ள முனையும் துரோகச் சக்திகளை நமது இன மக்கள் புறந்தள்ளுவர் என்பதில் அய்யமில்லை.

மானமிகு கலைஞர் என்றால் அதனுள் அடங்கியது இத்துணை சித்தாந்தங்களும், வரலாறும் என்பதை மறந்திட வேண்டாம்!

அத்தகு வரலாற்றுக்குச் சொந்தக்காரர் கலைஞர் என்பதால்தான் தந்தை பெரியார் அவர்களே பெரிதும் விரும்பி கலைஞருக்கு சிலை வைத்தார். பெரியாரே ஒருவருக்குச் சிலை வைக்கிறார் என்றால் அதன் வரலாற்றுச் சிறப்பும் பெருமையும் எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதல்ல. அத்தகைய பெருமை கிடைக்கப் பெற்றவர் கலைஞர்.

கலைஞரோடு உரையாடும் ஆசிரியர் கி.வீரமணி

அது மட்டுமல்ல; ‘பெரியாரைத் துணைகோடல்’ என்பதையும், ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதையும், முதலமைச்சர் ஆகி ஆட்சியைப் பிடித்த பின்பு அறிஞர் அண்ணா எப்படிக் கடைப்பிடித்தாரோ அப்படியே பின்பற்றினார் நமது மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர். அய்யாவின் ஆலோசனைகளை பல நேரங்களில் பெறுகையில் நிகழ்ந்த, பலரும் அறிந்திரா சில தகவல்கள் நம் வாசகர்களை வியப்புக் கடலில் தள்ளும்; காரணம், அவை இதுவரை வெளிவராத தகவல்கள்.

அண்ணா மறைவுக்குப் பின் தி.மு.க. சிதறுதேங்காய் போல உடைந்துவிடும் என்று நம் இன எதிரிகள் விரும்பினர்; நம்பினர். பேசியும் எழுதியும் வந்தனர். அதைப் பொய்யாக்கித் தி.மு.க. ஓர் இரும்புக் கோட்டை என்று நிருபிக்க தி.மு.க.வுக்குப் பெருந்துணையாய்  நின்றார் நம் பேராசான் தந்தை பெரியார்!

நாவலருக்கு முதல்வர் பதவி கிட்டவில்லை என்பதால் ஏற்பட்ட கசப்பினை மாற்றிட, முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர் அவர்கள், தந்தை பெரியாரையே ‘மத்தியஸ்தராக்கி’ நீங்கள் என்ன முடிவு சொன்னாலும் நாவலரிடம் பேசி என்ன தீர்வு கூறினாலும் அதன்படி செய்ய ஆயத்தமாக உள்ளேன்; அய்யாவிடம் ‘பிளாங்க் செக்’ (Blank Cheque) கொடுத்துள்ளேன் என்று அய்யா என் வீட்டில் தங்கி (சுமார் 1 மாதம் அண்ணா உடல்நலம் குன்றியதிலிருந்து கலைஞர் அமைச்சரவை பதவியேற்கும் வரை) அரசியல் ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கினார். தொலைபேசியில் முதல்வர் கலைஞர் என்னை அழைத்துப் பேசிய நேரம் இரவு 1:30 மணி. விடியற்காலை அய்யா எழுந்தவுடன் சொன்னேன்; அய்யாவும் நாவலரிடம் பல அரிய அறிவுரை கூறியும் அவர் அப்போது ஏற்காமல், பிறகு சில மாதங்கள் கழித்தே அமைச்சரவையில் சேர்ந்து பணியாற்றிட இசைந்தார்; முன்பே கேட்டிருந்தால் புதிய பொறுப்பும்கூட அவருக்குக் கிடைத்திருக்கக் கூடும்! என்ன செய்வது? பிடிவாதம் அறிவை விரட்டி விடுகிறது!

அண்ணா மறைந்து கலைஞர் முதல்வராகி தி.மு.க. ஆட்சிக்கு (அண்ணா முதல் கலைஞர் உள்பட) 4 ஆண்டுகள் இடையில் பிரதமர் இந்திராகாந்தி பொதுத்தேர்தலை அறிவிக்கிறார். வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுவிட்ட நிலையில் _ இந்திரா காங்கிரஸ் தி.மு.க.வுடன் தமிழ்நாட்டில் கூட்டு வைக்க விரும்பியது.

முதல்வர் கலைஞருக்கு சட்டமன்றத் தேர்தலையும் இத்துடன் இணைந்து நடத்திவிட்டால் ஓராண்டு பதவிக்காலம் குறைந்தாலும், தொலைநோக்கில் பல வகையிலும் நன்மையாகுமே என்று யோசித்தார்.

என்னை தொலைபேசியில் அழைத்து, அய்யா எங்கே இருக்கிறார் என்றார். சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு ஏற்பாடுகளில் திளைத்துள்ளார் என்றவுடன், என்னை நேரில் வரச் சொல்லி சட்டமன்றத் தேர்தலையும் இணைந்து நடத்துவது நல்லதா? அதன் பாரதூர விளைவுகள், வெற்றி_தோல்வி வாய்ப்புகள் பற்றி அய்யாவின் கருத்துகளையும் யோசனையையும் அறிந்துகொள்ள, உடனே செல்லுங்கள். இது பரம ரகசியமாகவே இருக்கட்டும் என்றார். உடனே சேலம் புறப்பட்டுச் சென்று அய்யாவிடம் கூறினேன். சற்றுநேரம் அமைதி, சிந்தனை _ பிறகு அய்யா சொன்னார், “நல்ல யோசனை; நான் பார்த்தவரை சுற்றுப் பயணத்தில் மக்களிடம் பெரிய அதிருப்தி ஒன்றும் ஆட்சிமீது இல்லை; விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது! இது நல்ல நேரம்; இணைந்தே நடத்திவிடலாம் என்று கூறினார். சென்னை திரும்பினேன். முதல்வரிடம் அப்படியே கூறியதும் அவர் மகிழ்ச்சியடைந்தார். அமைச்சரவையைக் கூட்டி, ஆட்சியை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலுக்கு ஆயத்தமாக டெல்லி மத்திய அரசின் அனுமதி பெற்று பணிகளை மளமளவெனத் துவக்கினார். பல்வேறு எதிர்ப்புகள் படமெடுத்தாடியது என்றாலும் வரலாறு காணாத வெற்றி! தி.மு.க.வுக்கு 181 கிடைத்தது.

கலைஞரால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு முக்கியஸ்தர் அமைச்சராக அவரைச் சுற்றிச் சுற்றி வந்தார். கலைஞர் பரிதாபத்திற்குள்ளாகி, பதவி தர மனம் உருகிய நிலையில், அய்யாவிடம் கருத்துக்கேட்டு இறுதி முடிவு செய்ய முனைந்தார்.

என்னை அழைத்து திருச்சியில் இருந்த தந்தை பெரியாரின் அறிவுரையைக் கேட்கச் சொல்லி கேட்டுக் கொண்டார்.

நானும் அப்படியே முதல்வர் விவரித்ததாகக் கூறி அய்யாவின் பதிலைப் பெற்றேன்.

முதிர்ச்சியின் முத்தல்லவா அது! ‘ஒருமுறை நீக்கியவரை மறுமுறை அமர்த்துவது எனக்குச் சரியென்று படவில்லை; உடனடியாக அத்தகையவர்கள் சரியாக இருந்தாலும் நாளாவட்டத்தில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே, தவிர்ப்பதே நல்லது என்றார்.

முதல் அமைச்சர் கலைஞரிடம் கூறிவிட்டேன். அவருக்குள்ள பரிதாபம் அவரை அலை இழுத்ததுபோல் இழுத்து, அய்யா அறிவுரையை மீறி வேறு முக்கிய பதவியில் அமர்த்தினார்.

அதன் தீய விளைவை _ பலனை _ பிறகு அறுவடை செய்தார் _ உணர்ந்து சொன்னார். நம்மிடம், “அய்யா சொல்லை நான் அன்று கேட்டிருந்தால் இன்று நமக்கு இந்தக் கேடு வந்திருக்காது’’ என்று கூறினார்.

நான் அவரிடம் கூறினேன், பழமொழி ஒன்று உண்டு _

‘மூத்தோர் சொல்லும், முதுநெல்லிக்கனியும் முன்னே கசந்து பின்னே இனிக்கும்’ என்பது எவ்வளவு உண்மை என்று!

இப்படிப் புதையுண்ட நிகழ்வுகள் பல உண்டு; ‘Periyar is our great Mentor’. நம்மை வழிநடத்தும் மாபெரும் தலைவர் தந்தை பெரியார் என்று அறிந்து அண்ணா சொன்னதன் பொருளும் இதுதான்!

வாழ்க கலைஞர்! வருக அவர் காண விரும்பும் ஒப்புரவு சமுதாயம்!

************

தி.மு.க

தோழர்களுக்கு கலைஞர் கட்டளை

பெரியார் பெயரை மாத்திரம் சொல்லிக் கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தால் அது பெரியாருக்கச் செய்யும் நன்றி ஆகாது. பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு வாஸ்து பார்த்துக் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்கின்ற நன்றி ஆகாது. பெரியாருடைய கொள்கையை உண்மையிலே மனதிலே பதியவைத்துக் கொண்டிருந்தால், அவன் நாத்திகவாதியாக இருந்தாலும், அவன் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் இரட்டை மனிதர்களாக இருக்கக் கூடாது. இதுதான் இந்த பெரியார் மய்ய திறப்பு விழாவிலே கண்டிப்பாக _ அரசியல் துறையிலே இருக்கின்ற என்னுடைய கழகத் தோழர்களுக்கு நான் சொல்லுகின்ற வேண்டுகோளாகும். இன்னும் சொல்லப்போனால் கட்டளையாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 (டில்லி பெரியார் மய்யம்

திறப்பு விழாவில் முதல்வர்

கலைஞர், 02.05.2010)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *