சிலம்பனின் செல்வம்

ஜூன் 01-15

புதுமை இலக்கியப் பூங்கா

சிலம்பனின் செல்வம்

– சத்தியவாணிமுத்து

தாத்தா! இதெல்லாம் என்ன தாத்தா? மாட்டுக்குக் கல்யாணமா? இவ்வளவு சோறு எதுக்குத் தாத்தா? ஏன் தளதளன்னு சத்தம் போடுது? இதுபோன்ற கேள்விகளைக் கேட்டுப் பாட்டனைத் திணற வைத்தான் குழந்தை ஆனந்தன்.

அந்தச் சிறுவனை அணைத்தபடி, மகிழ்ச்சியுடன் உட்கார்ந்திருந்த முருகேச முதலியார், அப்போது அங்கு வந்த தன் மகளிடம், அம்மா, அதோ மாப்பிள்ளை குளித்துவிட்டு வருகிறார். புது வேட்டி சட்டை எடுத்துக்கொண்டு வந்து கொடு, குழந்தை ஆனந்தனையும் கூட்டிக்கொண்டு போய்க் குளிப்பாட்டு என்று குதூகலம் குலுங்கக் கூறினார். அன்று பொங்கல் நாள். எல்லோருடைய உள்ளத்திலும், உவகை பொங்கும் திருநாள். என்றாலும் முருகேச முதலியாரின் உள்ளம் மகிழ்ச்சி கொள்வதற்கு ஒரு தனிக் காரணமும் உண்டு.

* * *

முருகேச முதலியாருக்கு வயது நாற்பத்தேழு இருக்கும். இந்த வயதிலும் அவர் இன்னொருவரிடம் வேலை பார்த்து வந்தாரென்றால் அதற்கு அவருடைய வறுமை வாழ்வே காரணம். களம்பூர் கருப்பட்டி வியாபாரி கந்தப்ப முதலியாரின் கடையில், கணக்கப்பிள்ளையாக இருந்து வந்தார் முருகேச முதலியார். மாத வரும்படியான இருபத்தைந்து ரூபாயில், மனைவியையும், இரண்டு பெண்களையும் காப்பாற்ற வேண்டும். அவருடைய மனைவி, செட்டுஞ் சிக்கனமுமாகக் குடித்தனத்தை எப்படியோ சமாளித்து நடத்தி வந்தாள். வீட்டுக் கொல்லையில் காய்கறித் தோட்டம் போட்டு, விளைந்தவற்றை விற்று வரும்படி தன் பெரிய மகள் மங்களத்தை அனுப்புவாள். மங்களத்திற்குக் காய்கறி விற்று வருவதென்பது அன்றாட வேலையாகிவிட்டது. முதலில் கொஞ்ச நாட்களுக்குக் காய்கறிக் கூடையைத் தூக்கிக் கொண்டு வேண்டா வெறுப்புடன் செல்லத் தொடங்கிய மங்களம், சில நாட்களில், மிக்க ஆர்வத்துடன் விற்பனை செய்யக் கிளம்பிவிட்டாள். இந்த மாற்றத்தைப் பற்றி அவள் தாய் ஒன்றும் விபரீதமாக நினைக்கவில்லை. மகளுக்கு நல்ல புத்தி வந்ததே என்று மகிழ்ச்சி அடைந்தாள்.

ஒருநாள் இரவு நெடுநேரமாகியும் காய்கறி விற்கச் சென்ற மங்களம் வீடு திரும்பவில்லை. அடுத்தநாள் காலையிலும் வரவில்லை. பகல் பனிரெண்டு மணி வரையிலும் பார்த்தாகிவிட்டது. மகள் வந்து சேரவில்லை. எங்கு போய்த் தேடுவது என்ற விவரமின்றி, எங்காவது போய்த் தேடுவோம் என்ற எண்ணத்துடன், முருகேச முதலியார் வீட்டைவிட்டுக் கிளம்பினார். அதே சமயத்தில் தந்திச் சேவகன் தந்தி ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போனான். அதைப் பிரித்துப் படித்த முருகேச முதலியார், சிறிது நேரம் சிந்தனை வசப்பட்டு நின்றார். அவர் முகத்தில் லேசாக ஒரு புன்னகை படர்ந்தது. மகிழ்ச்சிப் பெருக்கின் முன்னறிவிப்புப் போலும் அந்தப் புன்னகை! மகளைத் தேடவேண்டும் என்ற எண்ணத்தை மறந்தார். மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் நடந்தார். நடக்கும்போதே செயற்கையாக, மிக வருந்துபவர் போல முகத்தை மாற்றிக் கொண்டார். கையில் தந்தியுடனும், கலவரமடைந்த முகத்துடனும் கணவன் நிற்பதைக் கண்ட அவர் மனைவி, என்ன, என்ன? என்று கேட்டுத் துடித்தாள்.

தங்கத்தின் கணவன் இறந்துவிட்டானாம். தந்தி வந்திருக்கிறது என்று கூறினார் முதலியார். பிறகு, முதலியாரும், அவருடைய மனைவியும் இளைய மகளும் பூமணத்தூருக்குப் புறப்பட்டனர். இழவுச் சடங்குகள் மளமளவென்று நடந்தேறின.
தங்கம் முருகேச முதலியாரின் தங்கை. அவளுடைய கணவன் பெருஞ் செல்வந்தன். தாய் தந்தையர் இல்லாததாலும், தனி ஆளாக இருந்ததாலும், தங்கத்துடன், செல்வ வாழ்வு நடத்தி வந்தான். தங்கமும் மாமியார் நாத்தனார் இல்லாத மகிழ்ச்சியான வாழ்வு நடத்தி வந்தாள். இப்பொழுது அவன் இறந்துவிட்டதால் எல்லாச் சொத்தும் தங்கத்தையே சேரும்.

பூமணத்தூர் பொன்னி நதி பொலிவுற்றோடும் பாங்கில் உள்ளது. அக்கிராமத்து நிலங்களை மொத்தம் இருபத்தேழு பங்காகப் பிரித்திருந்தார்கள். அதில் தங்கத்தின் கணவனுக்கு இருபத்தொரு பங்குகள் சொந்தம். மற்ற ஆறு பங்குகளும் அந்தக் கிராமவாசிகளுடையன. அங்கிருந்த 240 ஏக்கர்களும், நீர்வளமும் நிலவளமும் நிறைந்து செழித்துக் கொழித்துக் குலுங்கும் அருமையான நிலங்கள். அத்தனையும் நன்செய்.

விவரமறியாத தன் தங்கையை ஏய்த்து, மேற்பார்ப்பவர் என்ற முறையில் நாளாவட்டத்தில் அத்தனை நிலங்களையும் தன்னுடையதாக்கிக் கொண்டார் முருகேச முதலியார். நிலத்தையும் விளைச்சலையும் கருத்தோடு கண்காணித்து வந்தார். மேலும் அய்ந்து பங்குகளையும் விலைக்கு வாங்கிவிட்டார். எஞ்சி நின்றது ஒரே பங்கு. அதில் அரைப்பங்கு சிலம்பன் என்ற தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்ந்த ஒரு கிழவனுடையது. இது சற்று மேடான இடத்தில் இருந்ததால் நீர்ப்பாய்ச்சல் இன்றி வளங்குன்றியிருந்தது என்றாலும், எல்லாம் தனதாக வேண்டுமென்று ஆசைப்பட்ட முதலியார், அந்த நிலத்தைத் தனக்கு விற்று விடும்படி சிலம்பனை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டே வந்தார். ஆனால், சிலம்பன் சாக்குப்போக்குச் சொல்லிக் கொண்டே வந்தான். வெளியூரில் இருந்த தன் மகன் அப்போதைக்கப்போது அனுப்பி வந்த தொகையெல்லாம் சேர்த்து வைத்திருந்து, இன்னொரு அரைப்பங்கு நிலத்தையும் வாங்கிவிட்டான் சிலம்பன். அது நல்ல விளைச்சல் உள்ள இடம். இப்போது கிழவனுக்கு ஒரு பங்கு சொந்தம்.

இதையறிந்த முருகேச முதலியாருக்குக் கோபம் கோபமாக வந்தது. ஓர் அடிமை, அவனுடைய நிலத்தையே தான் விலைக்குக் கேட்டிருக்கும்போது, அவன் தனக்குப் போட்டியாக நிலம் வாங்குவதா என்று அங்கலாய்த்தார். அந்த ஒரு பங்குக்கும், ஒன்றுக்கும் மூன்றாகத் தருவதாகவும், விற்றுவிடச் சம்மதமா என்றும் ஆள் விட்டுக் கேட்டார். சிலம்பன் செவி சாய்க்கவில்லை.

சினத்துடன், வீட்டை விட்டுக் கிளம்பினார் முதலியார். சிலம்பன் அப்போது வயலில் களையெடுத்துக் கொண்டிருந்தான்.

சிலம்பா! இதுதான் நான் கடைசியாகக் கேட்பது. வாங்கின நிலத்தையும் சொந்த நிலத்தையும் இன்றே எனக்கு விற்கிறாயா, இல்லையா? இல்லையென்றால், இந்த ஊரிலே நீ வாழ முடியாது, தலைகாட்டவும் முடியாது! என்ன சொல்கிறாய்? என்று கடுகடுத்தார்.

கிழவன் விட்டுக் கொடுக்கவில்லை. முதலியாரே, எல்லா நிலத்திலும்தான் உங்கள் அதிகாரமாயிருக்கே. ஏழைக்கு ஒரு நிலம் இருப்பது உங்கள் கண்ணை உறுத்துகிறதோ? எனது பூர்வீகச் சொத்தான அரைப் பங்கையும், என் மகன் உழைப்பில் சேர்த்த அரைப் பங்கையும் நான் எப்படி விற்க முடியும்? உங்களைப் போல் திடீரென்று இருபத்தொரு பங்கு நிலத்துக்குச் சொந்தக்காரனாக ஆகவில்லையே நான். வேண்டுமானால் என் மகன் ஒப்புக்கொண்டால் அந்த அரைப்பங்கை வாங்கிக் கொள்ளுங்கள். என்னுடைய பூர்வீகச் சொத்தை விற்க முடியாது. உயிர் போனாலும் அது நடவாது என்று ஒரே மூச்சாகக் கூறி முடித்தான் கிழவன். என்ன சொன்னாய்? என்று இரைந்தபடி, கீழே கிடந்த மண்வெட்டியை எடுத்துக் கிழவன் மண்டையில் ஓங்கி அடித்தார். தலையில் இரத்தம் பெருகிக் குபு குபுவென்று வடிந்தது. சிலம்பன் கிறுகிறுத்து அதே இடத்தில் சுருண்டு விழுந்தான். முருகேச முதலியார் திரும்பிப் பார்க்காமல் நடந்துவிட்டார்.

திடீர்ப் பணக்காரரான முதலியார் தன் செல்வத்தைப் பெருக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். அதனால், அவர் இந்த உலகத்தை மறந்து வேறு இன்ப துன்பங்களை எண்ணாத பணப் பித்தராகத் திரிந்து கொண்டிருந்தார். அவர் எண்ணமெல்லாம் செல்வத்தை எப்படிப் பெருக்குவது என்பதிலேயே இருந்தது. ஆனால் அவர் மனைவி மட்டும், தன் காணாமற்போன அருமை மகளை எண்ணி எண்ணி அடிக்கடி புலம்பிக் கொண்டிருந்தாள். தன் கணவன் இப்படிப் பணப் பைத்தியம் பிடித்து, குடும்பத்தை மறந்திருக்கிறாரே என்பதை நினைத்து நினைத்து அழுவாள்!

* * *

அன்று காய்கறிக் கூடையைத் தூக்கிக்கொண்டு சென்ற மங்களம், விலைபோகாமல் மிகுந்ததை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தாள். மாலைக் கதிரவனின் பொன்னிற ஒளியில் அந்தச் சாலை வழியிலே, ஆடி ஆடி வரும் அந்த அழகு நடையும், லேசாக அவள் உதடசைத்துப் பாட எழுந்த மெல்லிய குரலின் இன்னிசையும், அங்கு காற்றாடத் தன் தோழர்களுடன் உட்கார்ந்திருந்த சிங்காரத்தின் உள்ளத்தில் தேன் பாய்ச்சின. களம்பூருக்குப் பக்கத்தில் பட்டாளத்தார் கூடாரம் போட்டிருந்தார்கள். அந்தப் பட்டாளத்துச் சிப்பாய்கள் அந்தச் சாலைப் பக்கத்தில் மாலை வேளைகளில் காற்றாட வருவதுண்டு. இதையறியாத மங்களம், தூரத்தில் நாலைந்து சிப்பாய்கள் உட்கார்ந்திருப்பதைக் கண்டு பயந்து திரும்பி நடந்தாள். யாரோ கைதட்டிக் கூப்பிடுவதைக் கண்டு திரும்பிப் பார்த்தாள். சிங்காரம் அவளை அழைத்தான். அவனுடைய முகக் கவர்ச்சியில் ஈடுபட்டு முன் நடந்தாள் மங்களம். எனினும், உடலெல்லாம் வியர்த்து நடுநடுங்கியது.

கூடையில் இருந்த அத்தனை காய்கறிகளையும் வாங்கினான் சிங்காரம். அவனுடைய அன்பு மொழியும், ஆதரவான பார்வையும், பட்டாளத்துச் சிப்பாய்கள் முரடர்கள் என்று மங்களம் கொண்டிருந்த எண்ணத்தையே மாற்றி விட்டன. தினமும் காய்கறி கொண்டு வரும்படிக் கூறினான். அவளும் சரியென்றாள். அது முதல் அவன் இதர சிப்பாய்களின் தோழமையை வெறுத்தான். மங்களமோ, காய்கறி விற்பதற்குப் பதில் அங்கேயே கொண்டுவந்து கொட்டிவிட்டுக் காசு வாங்கிக்கொண்டு அவனோடு பேசிக்கொண்டிருந்துவிட்டுச்   செல்வதை வழக்கமாகக் கொண்டாள்.

ஒருநாள் தான் மங்களத்தை வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்கு வந்தான். வாடிய முகத்துடன் அங்கு உட்கார்ந்திருந்த மங்களத்தைக் கண்டான்.
மங்களம்!
அவன் கூப்பிட்டான்.
வந்து விட்டீர்களா?

ஓடிவந்து அவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

புறப்படு என்றான் அவன். சிறிது நேரம் அசையாது நின்று என்னவோ நினைத்த மங்களம், சரி! புறப்படுங்கள் என்று தன் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டாள். அன்றிரவு வண்டியிலேயே இருவரும் சென்னைக்குப் புறப்பட்டனர்.

சென்னையில் அவர்கள் வாழ்வு. கன்னலும் தேனும் போல் சுவையாக இருந்தது. அந்தச் சுவைக்கடலின் அமுதமாகக் குழந்தை ஆனந்தன் பிறந்தான்.

ஒருநாள் குழந்தை ஆனந்தனைக் கொஞ்சியபடி உட்கார்ந்திருந்தாள் மங்களம். சிங்காரம், கவலையுடன் வீட்டிற்குள் நுழைந்தான். என்ன? என்று துடிதுடித்தாள் மங்களம். என் தந்தையை யாரோ மண்வெட்டியால் அடித்து விட்டானாம் ஜன்னி கண்டுவிட்டதாம். புறப்பட வேண்டும் என்றான். அன்றே, அப்பொழுதே பூமணத்தூருக்குப் புறப்பட்டனர் மங்களமும், சிங்காரமும் தங்கள் குழந்தை ஆனந்தனுடன். கிழவன் சாகக்கிடக்கிறான் என்று கேள்விப்பட்டது முதல் முருகேச முதலியாருக்குக் கலவரமும் பீதியும் அதிகரித்தது. ஒருநாள் அந்தி நேரத்தில் கிழவனின் நிலைமையை அறிவதற்காக ஒளிந்துசென்று, ஒரு ஓட்டையின் வழியாகக் குடிசைக்குள் பார்வையைச் செலுத்தினார். அடுத்த நொடியில், மங்களம்! என்று கதறிக்கொண்டே உள்ளே ஓடினார். அப்பா! என்றாள் மங்களம்.

அங்கே விளையாட்டுச் சாமானை உருட்டிக்கொண்டிருந்த பேரன் ஆனந்தனையே பார்த்துக்கொண்டிருந்த சிலம்பனிடம் சென்று சிலம்பா! என்னை மன்னித்துவிடு, நான் மனிதனாகிவிட்டேன் என்றார் முதலியார்.

முதலியாரே! கொஞ்சமும் கவலையில்லை. என் பேரனுக்குரிய ஒருபங்கு நிலத்தை நீர் விலைக்குக் கேட்டீர். ஆனால் இன்று என் பேரன் 240 ஏக்கருக்குச் சொந்தக்காரனாகிவிட்டான். இனி எனக்கென்ன வேண்டும்? என்று கூறி லேசாகப் புன்னகை புரிந்தான். அடுத்த கணம், அவனுடைய தலை கீழே சாய்ந்தது.

தன் சொத்துக்குரியவன் சுகவாசியாக இருப்பான் என்ற நம்பிக்கை அவனுக்கு ஆறுதல் அளித்தது. அமைதியாக, மன நிறைவுடன் தன் உயிரை விட்டான் சிலம்பன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *