இது பழையகோட்டை! பக்தியால் பின் தங்கிய மாவட்டம்

ஆகஸ்ட் 16-31


தமிழகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். ஏன் உலகமெங்கும் பக்தர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களில் சமீபத்தில் கிடைத்த புள்ளி விபரம் ஒன்றின்படி

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிக பக்தர்களைக் கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை என்கிறது.

ஆம். புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சபரி மலைக்குப் போகிறவர்கள் மட்டும் பேருந்து, வேன், ஜீப் என்று வாகனங்களை அமர்த்திக் கொண்டு சென்று விடுகிறார்கள். திருப்பதிக்குப் போகிறவர்களும்தான். ஆனால் பழனி, திருச்செந்தூர், வேளாங்கண்ணி, பிள்ளையார்பட்டி என்று பாதயாத்திரை சென்றவர்கள் (அ) மேற் கொண்டவர்கள், இப்போது கடந்த சில ஆண்டுகளாக சமயபுரம் மாரியம்மனைக் குறிவைத்து நடக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

சமயபுரத்துக்குச் செல்கிறவர்கள் மஞ்சளாடை உடுத்திக் கொள்கிறார்கள். சமயபுரத்துக்குச் செல்வதற்கு முன் எத்தனை நாள் விரதமிருக்க வேண்டும் என்கிற கணக்கும் கிடையாது, ஒன்றும் கிடையாது. ஆனி மாதம் கடைசி வாரத்திலிருந்து துவங்கி விடுகிறார்கள். அவ்வாறு போகிறவர்கள் பெரும்பாலும் உழைப்பாளிகளாகத்தான் இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை. ஆடி செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை கோயிலில் இருக்கிறது மாதிரி கணக்கு வைத்துக்கொண்டு பாதயாத்திரையைத் துவங்குகிறார்கள்.

உதாரணத்துக்கு அறந்தாங்கி அல்லது அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து யாத்திரை துவங்குவது என்றால் நான்கு அல்லது அய்ந்து நாட்களுக்கு முன்னதாகக் கிளம்புகிறார்கள். ஆவுடையார்கோயில் போன்ற பகுதிகள் என்றால் இன்னும் ஒரு நாள் கூடுதலாக எடுத்துக் கொள்கிறார்கள்.

அவ்வாறு போகிறவர்களில் வயது முதிர்ந்தவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். (பழனிக்குப் போகிறவர்களைப் பார்த்தால் பெரும்பாலும் ஆண்களாகத்தான் இருப்பார்கள். அரிதிலும், அரிதாக வயது முதிர்ந்த பெண்கள் இருப்பார்கள். நடு வயது அல்லது இளம்பெண்களை பாதுகாப்பு கருதி அனுப்புவதில்லை. அதுபோல திருச்செந்தூருக்கும்.)

சமயபுரத்துக்குச் செல்பவர்களில் இளம்பெண்கள் தொடங்கி நடுவயதுப் பெண்கள், குடும்பத்துப் பெண்கள் அதிகளவில் செல்கிறார்கள். அவர்களுடன் துணைக்குச் செல்பவர்களில் பலரும் அடுத்தடுத்த வீட்டுப் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். இவர்களுடன் ஆண்களும் செல்கிறார்கள். அவர்கள் செல்வதெல்லாம் பக்தியால் அல்ல என்பதை உற்று நோக்கினால் புரிய வரும். பெண்கள்தான் சமயபுரத்தை நாடிச் செல்கிறார்கள். ஆண்களுக்கு அங்கு என்ன வேலை? சமயபுரத்திற்குச் சென்று பார்த்தால் தமிழகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்களில் அதிக விகிதாச்சாரத்தில் கலந்து கொள்பவர்கள் புதுக்கோட்டை மாவட்ட பக்தர்களும் பக்தைகளும்தான்.

நீண்ட கால நண்பர்கள், உறவினர்கள் என யாரோடு  பேசினாலும் அய்யம் கொள்ளும் ஆணாதிக்க உள்ளம் கொண்ட ஆண் பக்தர்கள் தன் உறவுப் பெண்களை சாமியார் என்றாலும் நம்பி அனுப்ப தயங்குவதில்லை; இப்படியான ஆன்மீகப் பயணமானாலும் பல ஆண்களோடு அனுப்பி வைப்பதில் சிறிதும், தயக்கம் காட்டுவதில்லை. காவி உடைகளின் வண்டவாளங்கள் தண்டவாளங்கள் ஏறிக் கொண்டிருக்க, இன்னும் காவி உடுத்துபவன் யோக்கியன் என்று நம்புவதை என்னவென்று சொல்ல?

தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்கள் குறித்து ரெப்கோ வங்கியின் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் வங்கிக் கணக்கு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற அக்கறை மிகவும் குறைவாக உள்ளது புதுக்கோட்டை மாவட்டம்தான் என்று தெரிய வந்திருப்பதாக சில தினங்களுக்கு முன் அந்த வங்கியின் இயக்குனர் மகாலிங்கம் கவலை தெரிவித்தார். அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது. அதாவது ஒரு கோயிலைக்கூட விடாமல் கோயில்கோயிலாகச் சுற்றி வந்து கொண்டிருந்தால் எதிர்காலச் சிந்தனையோ அறிவியல் சிந்தனையோ எப்படியிருக்கும். அறிவு மழுங்கி விடாதா? அதுதான் வங்கிச் சேவையைப் பயன்படுத்திக் கொள்வதில் புதுக்கோட்டை மிகவும் பின் தங்கியிருக்கிறது.

– ம.மு.கண்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *