கடவுள் வாழும்(?) கோவிலிலே

ஜூலை 01-15

மேல்மருவத்தூர் அருகேயுள்ள பசுவங்கரணை என்னும் கிராமத்தில் சோலைவாழி அம்மன் என்னும் கோயில் உள்ளது. இக்கோயிலின் கதவை இடித்துவிட்டு உண்டியலிலிருந்த பணம், அம்மனுக்குப் போட்டிருந்த நகைகள், பித்தளை, வெள்ளிக் குத்து விளக்குகளை திருடிச் சென்றுள்ளனர் என்று காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் திருடர்களைத் தேடி வருகின்றனர்.

*******

கரூர் அருகிலுள்ள வெள்ளியணை என்னும் ஊரில் வெங்கடரமண சுவாமி கோயில் உள்ளது. இங்கு வைகாசி மாதத் திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெற்றது. நெரிசலில் சிக்கி ஜெகதீஸ்வரன் (14) என்ற பள்ளி மாணவன் தேர் சக்கரத்தில் தவறி விழுந்துள்ளான்.

தேரினை இழுத்து வந்தவர்களால், உடனடியாக தேரை நிறுத்த முடியவில்லையாம். சக்கரத்தில் சிக்கிய ஜெகதீஸ்வரன் பலத்த காயங்களுடன் பெற்றோர்கள் கண்முன்னால் துடிதுடித்து இறந்துள்ளான்.

*******

பழனி அருகே தாமரைக்குளம் என்னும் கிராமத்திலுள்ள சிவன் கோவிலில் சிவன், பார்வதி, முருகன் வெண்கலச் சிலைகள் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

*******

சென்னை, மந்தவெளி மார்க்கெட் அருகே ரேணுகாம்பாள் அம்மன் கோவில் உள்ளது. ஜூன் 13ஆம் தேதி காலை பூசாரி கோவிலைத் திறக்க வந்தபோது உள் அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துள்ளார். உள்ளேயிருந்த இரண்டு மரப்பெட்டிகளை உடைத்து அம்மன் அலங்கார கவசங்கள் திருடப்பட்டிருப்பதாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.

*******

பெருங்குடி மேட்டுக்குப்பத்தில் வசிக்கும் சுப்ரமணியம் என்பவரின் மகன் சிபி (23) பொறியியல் கல்லூரி மாணவர். இவர் தனது நண்பருடன் திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்குச் சென்றுள்ளார். நண்பர்கள் இருவரும் கோவில் குளத்தில் குளித்துள்ளனர். அப்போது திடீரென மூச்சுத் திணறிய சிபி குளத்தில் மூழ்கிவிட்டார்.

*******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *