இது யாருடைய வெற்றி?

ஏப்ரல் 16-30

இந்தியாவில் விளையாட்டுத் துறை என்ற ஒரு அமைச்சகம் இருக்கிறது. அதன் கீழ் எண்ணற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கான குழுக்கள், வீரர்கள் இயங்கி வருகின்றனர். தடகளப் போட்டிகள் தொடங்கி, இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று அழைக்கப்படும் ஹாக்கி வரைக்கும் விளையாடும் எண்ணற்றோர் இந்திய நாட்டின் சார்பாக விளையாடுகின்றனர். அதே நேரத்தில், கிரிக்கெட் விளையாட்டுக்கான இந்திய அணி என்று அழைக்கப்படும் அணியில் இந்திய அரசுக்கோ, அமைச்சகத்துக்கோ எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது. அது முழுக்க முழுக்க பணக்காரர்களின் பொழுதுபோக் கிற்காக, பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் (பிற இடங்களில் என்ன வாழுதாம் என்ற உங்கள் கேள்வி காதில் விழுகிறது) இயங்கும், பிசிசிஅய் என்ற தனியார் அமைப்பின் அணி ஆகும். ஆனால் என்ன செய்ய? இந்த தனியார் அமைப்பின் அணிக்குக் கிடைக்கும் வாய்ப்போ, வசதிகளோ, விளம்பரமோ, இந்தியாவின் அதிகாரப்பூர்வ பிற விளையாட்டு அணி களுக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் பயிற்சி எடுப்பதற்கான வசதிகூடக் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். இதுவெல்லாம் இந்தியக் குடிமகன்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஊடகங்கள் இந்தச் செய்திகளை அவர்கள் மத்தியில் எடுத்துச் செல்வதில்லை. அதற்கு மாறாக, இந்திய தேசப் பற்றை வளர்ப்பதற்கான, வெளிப்படுத்துவதற்கான ஒரே கருவியாகவும், வாய்ப்பாகவும் கிரிக்கெட் போட்டியை அடையாளம் காட்டத் தவறுவதில்லை..

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, பங்களாதேஷ், இலங்கை நாடுகளால் நடத்தப் பட்டன. போட்டிகள் தொடங்கு வதற்கு முன்பிருந்தே ஜோசியக் காரர்களின் பேட்டிகளைக் கேட்க ஊடகங்கள் பிசியாகிவிட்டன. 2011-இன் நாள்காட்டி அப்படியே 1983-இன் நாள்காட்டியோடு ஒத்திருக்கிறதாம். அதனால் இந்திய அணி வெல்லும் என்றார்கள். அன்று நடந்தது இங்கிலாந்திலாயிற்றே.. இப்போது இந்தியாவில் நடக்கிறதே என்று நீங்கள் கேட்கக் கூடாது. அப்படியானால் 1983-இல் நடைபெற்ற எல்லாம் மீண்டும் நடைபெறுமா என்றும் நீங்கள் கேட்கக் கூடாது. இதே போன்ற ஒரு கணக்கை 2007-இல் நடைபெற்ற உலகக் கோப்பையின் போதும் அவிழ்த்துவிட்டார்கள்.

1981-ஆம் ஆண்டு:

1. இளவரசர் சார்லஸ் மணம் முடித்தார்

2. போப் மறைந்தார்.

1982-ஆம் ஆண்டு – கால்பந்து உலகக் கோப்பையை இத்தாலி வென்றது.

1983-ஆம் ஆண்டு – இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது.

2005-ஆம் ஆண்டு

1. இளவரசர் சார்லஸ் மணம் முடித்தார்

2. போப் மறைந்தார்.

2006-ஆம் ஆண்டு – கால்பந்து உலகக் கோப்பையை இத்தாலி வென்றது.

2007-ஆம் ஆண்டு – இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லும் என்று ஒரு கணக்கை அவிழ்த்துவிட்டார்கள். அந்தோ பரிதாபம், கணக்கும் தப்பானது. அதிலிருந்த செய்தியும் தப்பானது. ஆம். போப் மறைந்தது 1978 -தானே அன்றி 1981 அல்ல. ஆனால், ஏதோ குருட்டுத்தனமான கணக்கைச் சொல்லி பரபரப்புக் கிளப்பினார்கள். இந்தியா மண்ணைக் கவ்வியது. பிறகு, இந்திய அணி உலகக் கோப்பையை தோனி தலைமையில் வென்றது. இதே கணக்கைக் காட்டி சமாதானம் செய்தார்கள்.. அப்போதும் நாம் கேட்ட கேள்விக்குப் பதில் இல்லை. இப்போதும் அதேபோல் மீண்டும் 1983-அய்த் தூக்கிக் கொண்டு வந்தார்கள். தினமலர் புதிதாக எம் மந்திரம் என்று ஒன்றைப் பற்றி உளறியது. இதோ அந்தச் செய்தி:

இந்திய அணிக்கு இம்முறை “எம்’ மந்திரம் கைகொடுக்கிறது. அதாவது, ஆங்கில எழுத்தான “எம்’ என்று துவங்கும் இடங்கள் அல்லது மைதானங்களில் நடந்த போட்டிகளில் வென்றுள்ளது. உதாரணமாக, மிர்புர்(எதிர், வங்கதேசம்), எம்.ஏ.சின்னசாமி அரங்கம்(எதிர், அயர்லாந்து), எம்.ஏ. சிதம்பரம் (எதிர், வெ.இண்டீஸ்), மொடிரா(எதிர், ஆஸி.,), மொகாலி (எதிர், பாக்.,) ஆகிய இடங்களில் வெற்றிவாகை சூடியுள்ளது. பைனல் நடக்க உள்ள மும்பையின் பெயரும் “எம்’ என்ற எழுத்தில்தான் துவங்குகிறது. இதனால், இந்திய அணி கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளது. தவிர, மகேந்திர சிங் தோனி என்ற பெயரும் “எம்’ என்ற எழுத்தில்தான் துவங்குகிறது. இம்முறை பங்கேற்றுள்ள கேப்டன்களில் இவரது பெயர் மட்டுமே “எம்’ என்ற எழுத்தில் துவங்குவது சிறப்பம்சம்.

இதில் ஏதோ ஒன்று இடிக்குமே… ஆம். மும்பை விளையாட்டு மைதானத்துக்கு வாங்கடே என்றல்லவா பெயர். அதுதான்! இவர்களுக்குத் தேவை என்றால் ஊர் பெயரை எடுத்துக் கொள்வார்கள் மும்பை, மொகாலி என்று! இல்லாவிட்டால் போட்டி அரங்கத்தின் பெயரை எடுத்துக் கொள்வார்கள்.. எம்.ஏ. சிதம்பரம், எம்.ஏ.சின்னசாமி என்று! இதுதானே ஜோசியக்காரர்களின் வேலை. மகேந்திர சிங் தோனி என்பது மட்டும்தான் எம் என்ற எழுத்தில் தொடங்குகிறதாம். அப்படியானால் இதற்கு முன்பு கோப்பை வென்ற கபில் தேவுக்கு பெயர் கெ என்ற எழுத்தில் அல்லவா தொடங்குகிறது. பதில் சொல்வார்களா?

பிறகு இன்னொரு நகைச்சுவையான குறுந்தகவல் வந்தது. உலகக்கோப்பை என்பது சீதையைப் போலவாம். 1983-இல் அதனை இந்தியா (ராமன்) மணந்ததாம். பின்னர் 1996-ஆம் ஆண்டு ராவணன் அதனைக் கவர்ந்து சென்றுவிட்டானாம். (இந்தக் கூ(ழ்)முட்டை களுக்கு இலங்கை என்றாலே ராவணன்தான்.. அவன் சிங்களவனா? தமிழனா? இதெல்லாம் கவலையே இல்லை.)  14 ஆண்டுகள் கழித்து (1996_-2011 என்பது 15 ஆண்டுகள் அல்லவா என்றெல்லாம் நீங்கள் கேட்கப்பிடாது. அது அப்படித்தான்.. புராணம் வருதோல்லியோ.. எதிர்க்கேள்விகள் நாட் அலவ்ட்) இந்தியா அதை மீட்குமாம். சரி, அப்படியானால் 1983-க்குப் பிறகு ஆஸ்திரேலியா 4 முறை வென்றும் பாகிஸ்தான் ஒரு முறை வென்றும் உலக சாம்பியன் பட்டம் பெற்று கோப்பையை வைத்திருந்தார்களே! அப்படியானால் சீதையை ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் வைத்திருந்தன என்று பொருளா? அறிவு என்பது கொஞ்சமாவது இருந்தால் இப்படி குறுந்தகவல் அனுப்புவார்களா? நாம் ராமாயணத்தைப் பற்றிப் பேசாவிட்டாலும், பேசாமல் நம்மை விடமாட்டார்கள் போலிருக்கிறதே!

இதில் இந்திய அணி வென்ற பிறகு தினமலர் முழுப்பக்கம் படத்தைப் போட்டு ஒரு தலைப்பிட்டது- ஈழம் வென்ற எம் இந்தியப் புலிகள் என்று!  இதைக் கண்டு பல தமிழ்த் தேசியர்கள், பாருங்கள் இலங்கையை ஈழம் என்று தினமலர் எழுதிவிட்டது. தினமலருக்கு நன்றி என்று கைகுலுக்கினார்கள். என்ன கொடுமையடா இது? தோற்றவன் சிங்களன். அந்தத் தோல்வியை தினமலர் ஈழத்தின் மீது சுமத்துகிறது. ஈழத்தை வென்றது இந்தியப் புலிகளாம்.. எப்படி? அமைதிப்படையை அனுப்பி வாங்கிவந்ததைப் போலவா? ஏதோ, ஈழம்… புலிகள் என்று வந்துவிட்டால் என்ன சொல்ல வருகிறான் என்பதையே ஆராயாமல் விழுந்துவிடுவதா?

சரி, எப்படியோ இந்தியாதானே ஜெயித்தது என்று கேட்கிறீர்களா? இந்த ஜோசியங்கள் எல்லாம், இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்த பின்னர் வெளிவந்தவை. தொடக்கத்தில் தடுமாற்றத்தில் இருந்தபோதெல்லாம் வாயையே திறக்கவில்லை பலர். பின்னர் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானோடு விளையாட வேண்டும் என்ற நிலை வந்தபோது, ஊடகங்களும், மக்கள் மனநிலையும், அரசும் கொடுத்த பில்ட் அப் இருக்கிறதே! இந்தியா பாகிஸ்தானோடு மோதுகிறது. இறுதிப்போட்டி யில் தோற்றாலும் பாக்-உடன் தோற்றுவிடக் கூடாது. ஆம்.. இவர்களின் ஒட்டுமொத்த தேசபக்தி உறைந்து கிடக்கும் இடம் இதுதான். 500 இந்திய மீனவர்களைக் கொன்று குவித்த சிங்களனிடம் தோற்றால்கூடப் பரவாயில்லை… பாகிஸ்தானிடம் தோற்றுவிடக் கூடாதாம்..! விளையாட்டில் அரசியலைக் கலக்காதீர்கள் என்று வாய்கிழியப் பேசுவோரிடம், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை என்பது அரசியல் அல்லாமல் வேறென்ன அறிவியலா என்று கேளுங்கள்.

ஒரு வழியாக இந்தியா உலகக் கோப்பையை வென்றது. ஜோசியம் சொன்னவர்கள் எல்லாம் மீசை மண்ணையெல்லாம் தட்டிவிட்டுவிட்டு பாருங்கள்.. பாருங்கள் என்றார்கள்! ஆம்.. வரலாறு திரும்பியது. ஓர் உண்மை நிரூபிக்கப் பட்டது. நாமும் ஒப்புக் கொள்வோம். 1983-இல் படைக்கப்பட்ட வரலாறு 2011-இலும் திரும்பியது. அது என்ன தெரியுமா?

1983-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக கிரிக்கெட்டை வென்றது கபில் தேவ் என்ற அணித் தலைவர். 2011-இல் கோப்பையை வென்றவர் மகேந்திர சிங் தோனி என்ற அணித் தலைவர். இவர்களுக்குள்தான் அந்த வரலாற்று ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் இருவரும் பார்ப்பனர் அல்லாதவர்கள். 100-க்கு 3 விழுக்காடு இருந்துகொண்டு கிரிக்கெட் அணியில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனர்கள் பெற முடியாத வெற்றியைப் பெற்றுத் தந்த இவர்கள் இருவருமே பார்ப்பனர் அல்லாதவர்கள். ஹரியானாவில் பிறந்த கபில் தேவும், ஜார்க்கண்டில் பிறந்த தோனியும் பூணூல் அணியாதவர்கள். இதுவரை வெங்கட்ராமன், கவாஸ்கர், சாஸ்திரி, சர்மா, டெண்டுல்கர், கங்குலி, திராவிட் என எத்தனையோ பார்ப்பனர்களால் செய்து முடிக்க முடியாத ஒன்றைச் செய்து காட்டியவர்கள் பார்ப்பனரல்லாதவர்கள்தான்! இந்த உண்மையை எந்த ஊடகமும் வெளியிடாது. தகுதி, திறமை பற்றி வாயளக்கும் சோ கும்பல் இதைப் பற்றிப் பேசாது. அவர்களால் ஹர்பஜன் சிங்கை வெறுக்கத்தான் முடியும். தோனியின் வெற்றியை முழு மனதோடு வரவேற்க முடியாது. தனி மனிதரை எல்லாம் சொல்லமுடியாது; இது குழுவின் வெற்றி என்ற வெண்டைக்காய் விளக்கங்கள் எல்லாம் நம்மவர்கள் வெல்லும் போதுதானே வெளிப்படும். ஒரு வேளை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் கொஞ்சம் நன்கு விளையாடி யிருந்தால், இந்தப் பார்ப்பன ஊடகங்கள் எல்லாம் எப்படி விளம்பரம் கொடுத்திருக்கும்? பாருங்கள்… டெண்டுல்கரால்தான் நாம் வென்றோம் என்றல்லவா புகழாரம் சூட்டியிருக்கும். அதுதானே பார்ப்பனப் புத்தி! நாம் வரவேற்போம்… பறைசாற்றுவோம் இது பார்ப்பனரல்லாதாரின் வெற்றி என்று!  (பி.கு: இவற்றையெல்லாம் தாண்டி, இந்தியாவைப் பொறுத்தவரையில் எப்போதுமே கிரிக்கெட் என்பது நுகர்வுக் கலாச்சாரத்தின், அடிப்படையற்ற, கட்டமைக்கப்பட்ட தேசவெறியின், அறிவை மழுங்கடிக்கும் போதையாக முதலாளித்துவத்தின் வெற்றியே என்ற கருத்தில் உங்களோடு நானும் உடன்படுகிறேன்.) –

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *