Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2021
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

சிந்தனை: திருவள்ளுவர் நாள் சிந்தனை

முனைவர் வா.நேரு

உண்மை வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் திருநாள், திருவள்ளுவர் தின வாழ்த்துகள். உலகமெங்கும் இருக்கும் திராவிடர்கள் மனமகிழ்ந்து, தங்களின் ஜாதி, மதங்களை மறந்து கொண்டாடும் தமிழர் திருநாளைக் கொண்டாடும் அதே வேளையில் ஜனவரி -15அய் திருவள்ளுவர் நாளெனக் கொண்டாடுகிறோம். டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது, 1971ஆம் ஆண்டு முதன் முதலாக திருவள்ளுவர் தினம் அறிவிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் நாம், இன்று திருக்குறளை நமது பரம்பரை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.

திருவள்ளுவர் திடீரென்று தமிழ்நாடு அரசு நடத்தும் கல்வி சேனலில் காவி நிறத்தில் தோன்றுகின்றார். திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் கண்டனத்திற்குப் பிறகு அது நீக்கப்படுகிறது. சென்ற ஆண்டு திருவள்ளுவர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த இந்திய துணைக் குடியரசுத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியோடு வெளியிட்ட படத்தில் காவி நிறத்தில் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டார். பின்பு நீக்கினார். சில இந்து மதவெறி அமைப்பினைப் சார்ந்தவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு விபூதியைப் பூசினர். திருவள்ளுவர் இந்துதான் என்று சில வலதுசாரி ஊடகவியல்காரர்கள், பிகாரைப் பிறப்பிடமாகக் கொண்ட ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள், திருக்குறளில் இருக்கும் சில சொற்களைச் சுட்டி  தொடர்ச்சியாகப் பரப்புரை செய்கிறார்கள்... இந்தியப் பிரதமர் செல்லும் இடமெல்லாம் திருக்குறளைச் சொல்கிறார். இவையெல்லாம் தவறா என்றால் இல்லை, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சொல்லியிருக்கிறார். டாக்டர் அப்துல்கலாம் உள்ளிட்ட இந்தியக் குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்கள் மிகச் சிறப்பாக திருக்குறளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொன்னதற்கும் இன்றைய பிரதமர், நிதியமைச்சர் ஆகியோர் திருக்குறளைச் சொல்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. இவர்களின் நோக்கம் வேறு. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரே, காவி நிறத்தில் திருவள்ளுவர் படத்தைப் பதிவு செய்வது ஒன்றே போதும் - இவர்களின் நோக்கம் என்ன என்பதனைத் தெளிவாக அறிவதற்கு.

செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. செம்மொழித் தமிழ் நிறுவனத்தை ஒரு பல்கலைக் கழகத்தோடு இணைத்து அழிக்கப் பார்க்கிறது.. அப்படிப்பட்டவர்கள் திருக்குறளைக் கையில் எடுப்பதற்கு என்ன காரணம்?

திருக்குறள் என்பது திராவிட இயக்கத்திற்கு மட்டும் சொந்தமானதா? நாங்கள் சொல்லக் கூடாதா என்று ஒருவர் தொலைக்காட்சி விவாதத்தில் சீறுகிறார். திருக்குறள் எந்த இயக்கத்திற்கும், எந்த மதத்திற்கும் சொந்தமானதல்ல. ஆனால், 200 வருடங்களுக்கு முன்னால் ஆங்கிலேயரால் சூட்டப்பட்ட ‘இந்து மதம்‘ என்ற பெயரைக் கொண்ட ஒரு மதத்திற்குச் சொந்தமானது என்று ஆக்குவதற்காக  சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள்.... ஆரியர்களின் நரித்தனத்தை அம்பலப்படுத்துகிறோம். உங்கள் நோக்கத்தில் பிழை இருக்கிறது என்பதனைச் சுட்டுகிறோம்.

திருக்குறளை முதன்முதலில் படிப்பவர்கள் திகைப்பார்கள். அரிய கருத்துகள் மிளிரும் பொற்குவியலைக் கண்டுபிடித்த பெருமை அடைவார்கள். படித்து அதன் கருத்தைச் சுவைத்து அறிந்தவர்கள் செல்லும் இடமெல்லாம் திருக்குறளைக் கொண்டு செல்வார்கள். அதன் பொருளை, பொருத்தப்பாட்டை, வாழ்வியலை சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள். தமிழ் அறியாத பலருக்கும், வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் பல மதத்தினைச் சார்ந்தவர்கள், மதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என அனைவருக்கும் பொதுவான நிலையில் இருக்கும் ஒரு நூல் திருக்குறள். இப்படிப்பட்ட தனித்தன்மையான நூல், உலகத்தில் வேறு எந்த நூலும் இல்லை. ஒரு மதத்திற்கு உரிய நூலை அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் போற்றுவார்கள். அடுத்த மதத்தினைச் சார்ந்தவர்கள் அந்த நூலைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், திருக்குறள் நூலினை எவர் படித்தாலும் தனக்கான நூலாக உணர்கிறார்கள். தங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் உன்னதமான நீதி நூல் என்று போற்றுகிறார்கள். இப்படிப் பெருமைக்கு உரிய திருக்குறளை ஒரு கூட்டம் நம்மிடமிருந்து களவாண்டு, தங்களுக்கு உரியது என்று முத்திரை இடப் பார்க்கிறது. அப்படிச் செய்வதன் மூலமாக, ஒரு மதத்திற்கு உரியதாக ஆக்கி, கொஞ்ச நாளில் மறக்கடித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

நாகசாமி என்று ஒருவர், அவருக்கு ‘பத்ம பூஷண்’ விருதினை இந்திய அரசு கொடுக்கிறது. யார் இவர்? திருக்குறள் என்பது வடமொழியான சமஸ்கிருத நூல்கள், மனுதர்மம் போன்ற நூல்களிலுள்ள கருத்துகளின் அடிப்படையில் அமைந்தது என்னும் ஒரு அபத்தமான நூலை (Thirukkural - An Abridgement of Shastras) எழுதியவர். பேட்டி கொடுக்கும்போது கூட, இணையத்தில் பேசும்போது கூட சட்டை அணியாமல், பூணூலோடு பேட்டி கொடுப்பவர். ‘தினமணி’ நாளிதழ் -திருக்குறளைத் தடை செய்யவேண்டும் என்று ஒரு கட்டுரை வெளியிடுகிறது. மனுநீதி நூலைத் தடை செய்ய வேண்டும் என்று சொன்னால் அதைப் போன்ற நூலான திருக்குறளைத் தடை செய்ய வேண்டுமென எழுதுகிறார். அதை வாசிக்கும் நம்மைப் போன்றவர்களின் இரத்தம் கொதிக்கிறது. திருக்குறளும் மனு நீதியும் ஒன்றா?

‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ எனக் கூறும் திருவள்ளுவரின் கருத்து எங்கே? “பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததனாலும், மற்ற எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்குவதற்குரிய தலைவனாகிறான் (மனு. த. சாத். அத். 1. சுலோகம் 100) என்றும், “சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால், அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால், அவனது நாக்கை அறுக்க வேண்டும்.” (மனு. த. சாத். அத்.8, சுலோகம்.270) என்றும், “பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிற பெயரைச் சூட்டவேண்டும்.” (மனு. த. சாத். அத்.2. சுலோகம் 31) --(திருக்குறள் நாவலர் உரை.. பக்கம் 24) என மனிதர்களைக் கூறுபோட்ட மனு(அ) நீதி எங்கே? நாவலர் அவர்கள் மிகச் சிறப்பாக திருக்குறளுக்கும் மனு நீதிக்கும் உள்ள 14 வேறுபாடுகளை மிக அழகாக சுட்டிக்காட்டுவார். பரிமேலழகர் தொடங்கி இன்றைய நாகசாமிகள், நடராஜன்கள் வரை திருக்குறளைப் போற்றுவது போல் போற்றி, தங்கள் ஆரியக் கருத்துகளைத் திணிக்கிறார்களே, ஏன்?

ஆரியர்களின் வர்ணக் கோட்பாட்டைத் தகர்த்தெறியும் கருத்து அணுகுண்டு திருக்குறள். அணு அளவில் சிறியது என்றாலும் அதில் உள்ளே இருக்கும் ஆற்றல் எவ்வளவு பெரியது. அதனைப் போலத் திருக்குறளின் கருத்துகள் ஆரியத்தை அடியோடு வேரறுக்கும் தன்மை கொண்டவை. அதனால் அணைத்து அழிப்பது போல திருக்குறளைப் போற்றி, அதன் கருத்துகளைச் சிதைத்து அழிக்க விரும்புகிறார்கள். தமிழர்கள் இதனை அனுமதிக்க மாட்டார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல; பூமிப்பந்தின் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கடவுச் சீட்டை(பாஸ்போர்ட்) கொண்டு போவது போலவே ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என்னும் தத்துவம் கொண்ட ஒப்பற்ற இலக்கியமான திருக்குறளையும் சுமந்து சென்றிருக்கிறார்கள். செல்கிறார்கள். அவர்களில் பலர் தெய்வ நம்பிக்கை உடையவர்கள். பல மதத்தினைச் சார்ந்தவர்கள். தமிழர்களாகிய அவர்களின் உள்ளங்களிலே திருவள்ளுவர் தனது உயர்ந்த கருத்துகளால் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். உலகில் எங்கு சென்றாலும் தாங்கள் படிப்பது மட்டுமல்ல, தங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளும் படிக்க திருக்குறளைப் பல வடிவங்களில் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சிகோகா டாக்டர் சரோஜா இளங்கோவன் திருக்குறளைக் கதைகளின் வழியே ஆங்கிலத்தில் எழுதுகிறார். புதுச்சேரிக்கு அருகில் ஓர் உணவு விடுதிக்காரர் 200 குறளுக்கு மேல் ஒப்புவித்தால், அருமையான அசைவ உணவு பரிசாக சாப்பிட்டுச் செல்லலாம் என்கிறார். மதுரையைச் சார்ந்த ஓய்வுபெற்ற பொறியாளர் க.ச.அகமுடை நம்பி வருடந்தோறும் தன் கைப்பணம் செலவழித்து திருக்குறள் கருத்தரங்குகளை நடத்தி, அதில்வரும் கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிடுகின்றார். இப்படி உலகெங்கும் உள்ள தமிழர்கள் திருக்குறள் நூலின்பால் செலுத்தும் கவனமும், பங்களிப்பும், அர்ப்பணிப்பும் அளவிடற்கரியது. இதனை ஆரியர்களால் தாங்க இயலவில்லை. பகவத் கீதை என்னும் தங்கள் நூலை விட, கடவுளைக் கும்பிடுகிறவர்கள் கூடத் திருக்குறளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பார்ப்பனர்களுக்கு உறுத்துகிறது. ஆதலால், அதுவும் இந்து மத நூலே என்னும் பொய்யை இட்டுக்கட்டி, அரசு அதிகாரத்தின் மூலம் மெய்ப்படுத்தி, அதன் உண்மையான கருத்தைச் சிதைத்து, மற்றவர்கள் அதனை நாடாத ஒரு நிலையை ஏற்படுத்த நினைக்கிறார்கள்.

படித்தவர்களின் வீட்டுப் பரண் மேலே தூசு படிந்த கிடந்த இருந்த திருக்குறளை அச்சிட்டு, மிக மிக மலிவான விலையில் பாமரர்களிடம் கொண்டு சேர்த்தவர் தந்தை பெரியார். கொண்டு சேர்த்தது திராவிடர் இயக்கம். கிராமங்கள் தோறும் மகாபாரதத்தை அந்தக் காலத்தில் சாவடிகளில் உட்கார்ந்து வாசித்தார்களே, ஏன் திருக்குறளை வாசிக்கவில்லை? திருக்குறளுக்கு என முதன் முதலாக திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்தானே! குறைந்த விலையில் திருக்குறளைத் தெருத்தேருவாக விற்றது தந்தை பெரியார்தானே! அவரது இயக்கம்தானே...   திராவிட இயக்கம் வந்த பின்பு, திராவிட இயக்க படிப்பகங்கள், பத்திரிகைகள், சொற்பொழிவுகள் வாயிலாகத்தானே திருக்குறள் பரவியது, திராவிட இயக்கம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பின்புதானே, கடந்த 50 ஆண்டுகளில் பட்டி தொட்டி எங்கும் திருக்குறள் பரவியது. பாடத்திட்டத்தில் திருக்குறள், பேருந்துகளில் திருக்குறள், குமரியில் திருவள்ளுவருக்குச் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் எனத் திருவள்ளுவரை, திருக்குறளை உள்ளத்தில் ஏந்திச் செயல்பட்டது திராவிட இயக்க ஆட்சியில்தானே...

“குறளுக்குள் கடவுள், மதம், ஜாதி, மோட்சம், முன் ஜென்மம் என்பன போன்ற சொற்கள் இல்லை.”, “ஆரியத்தை -மூட நம்பிக்கையை எதிர்த்துப் போராட வள்ளுவரின் குறள் நமக்குக் கேடயமாக இருக்கிறது”, “திராவிடர்களுக்கு நீதி நூல், ஒன்றே ஒன்றேதான் உண்டு. அது திருக்குறள் தவிர வேறில்லை என்பதாக உறுதி கொண்டு, ஆரிய மத புராண இதிகாச நூல்களாகிய ராமாயணம், -கீதை, -பாரதம், புராணம் ஆகிய வைணவ, சைவ மத நூல்கள் ஆகியவைகளை அறவே ஒழித்து விடவேண்டும்...”, ‘ஆரியப் பித்தலாட்டத்திற்கு சரியான மருந்து, சரியான மறுப்பு திருக்குறள்தான்”, “என்ன மதத்தினர் என்று கேட்டால் “வள்ளுவர் மதம்“ என்று சொல்லுங்கள். உங்கள் நெறியென்ன வென்றால் ‘குறள் நெறி” என்று சொல்லுங்கள். குறள் நெறி என்று சொல்வீராயின், உங்கள் முன் எந்த பிற்போக்குவாதியும், எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் முன் நிற்க முடியாமல் கூசி ஓடி விடுவான். குறளை எவனாலும் மறுத்துக்கூற முடியாது. அவ்வளவு இயற்கைக்கும், அறிவுக்கும் இயைந்ததாக இருக்கிறது அது. எனவே குறளைப் படியுங்கள். அதன் வழிப்படி நடவுங்கள். அதையே எங்கும் பிரச்சாரம் செய்யுங்கள். உங்களுக்கு மனந்தூய்மை ஏற்படும். முன்னேற்ற அறிவில் ஆசையும், நம்பிக்கையும் ஏற்படும். (தமிழுக்கு என்ன செய்தார் பெரியார் -கி.வீரமணி.. பக்கம் 113_-115) என்று தந்தை பெரியார் கூறியிருப்பதை உள்வாங்கிக் கொண்டு இன்றைய பார்ப்பனர்களின் செயல்பாட்டைப் பார்த்தால் எப்படி திருக்குறளை அரவணைத்து அழிக்கப் பார்க்கின்றார்கள் என்பது புரியும்.

திருக்குறள் மீது வெறுப்பு என்பது அவாளின் அடிப்படை.  “தீக்குறளை சென்று ஓதோம்“ என்னும் ஆண்டாளின் பாடலுக்கு ‘திருக்குறளை ஓதவேண்டாம்“ என்று பொய்யுரை சொன்னவர்தானே மூத்த சங்கராச்சாரியார். மிகப் பெரிய மனது பண்ணி, திருக்குறளின் முதல் 10 குறள்களை மட்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதித்தவர்தானே ‘பெயில்’, ‘ஜெயில்’ புகழ் ஜெயந்திர சங்கராச்சாரி. எனவே, அவாளின் வெறுப்பு நாம் அறிந்ததே. ஆனால், திருக்குறள் மீது விருப்பு என்பது திராவிடர்களின், தமிழர்களின் அடிப்படை.  அந்த வகையில் நமது மிகப்பெரிய இலக்கியச் சொத்தான திருக்குறளை, அதன் உண்மையான வடிவத்திலேயே நிலைத்திருப்பதற்கு, நீடிப்பதற்கு நாம் உறுதி எடுத்துக்கொள்வோம். திருக்குறள் தின வாழ்த்துகள் அனைவர்க்கும், மீண்டும்! திராவிடம் வெல்லும்... அதனைத் திருக்குறள் இன்னும் 1000 ஆண்டுகள் கழித்தும் சொல்லும்..

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit சிந்தனை: திருவள்ளுவர் நாள் சிந்தனை in FaceBook Submit சிந்தனை: திருவள்ளுவர் நாள் சிந்தனை in Google Bookmarks Submit சிந்தனை: திருவள்ளுவர் நாள் சிந்தனை in Twitter Submit சிந்தனை: திருவள்ளுவர் நாள் சிந்தனை in Twitter

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.