Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2021
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

வைத்தியநாத அய்யரின் மோசடி அம்பலம்! -நேயன்

தொ.பரமசிவன் ஆய்வில்....
கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோர் முன்னேறும் போது கோயில் நுழைவு தானாக நடைபெறும் என்பது அம்பேத்கர் கருத்து, மறு வாரம் (1933, பிப்ரவரி 11) காந்தியடிகள் புதிதாகத் தொடங்கிய அரிஜன் இதழுக்கும் இக்கருத்தையே அம்பேத்கர் செய்தியாக அனுப்பி இருந்தார். இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் முதிர்ந்து கொண்டு வந்தன.
பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட தாழ்த்தப்பட்டோர் தலைவர்களில், அம்பேத்கரைத் தவிர மற்ற இருவரும் தமிழ்நாட்டவர் ஆவர். ஒருவர் ராவ்பகதூர் (ரெட்டமலை) சீனிவாசன். மற்றவர் எம்.சி.ராஜா. இவர்களில் சீனிவாசன் வட்டமேசை மாநாட்டின் முதல் சுற்றில் அம்பேத்கரோடு கலந்துகொண்டவர். மிக விரைவில் பூனா ஒப்பந்தத்தைக் காங்கிரசுக்காரர்கள் நடைமுறையில் கைகழுவி விட்டனர். அரிசனர் கோயில் நுழைவைக் கடுமையாக வங்காள இந்துக்கள் எதிர்த்தனர். அதற்கு முசுலிம்களின் ஆதரவைப் பெறவும் அவர்கள் முயன்றனர். 1933இல் வங்காளத்தைச் சேர்ந்த கவி இரவீந்திரநாத் தாகூர் பூனா ஒப்பந்தத்துக்கான தன் ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
1937 தேர்தலில் காங்கிரசு அம்பேத்கருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியது. இருப்பினும் அவர் வென்றார். பூனா ஒப்பந்தத்துக்குத் தமிழ்நாட்டில் எதிர்ப்பு பரவலாக இருந்தது. 1932 அக்டோபரில் சென்னையில் ஜே.சிவசண்முகம் (பிள்ளை) தலைமையில் கூடிய தாழ்த்தப்பட்டோர் மாநாடு பூனா ஒப்பந்தத்தைக் கண்டித்து, அத்துடன் அம்மாநாடு கோயில் நுழைவு அவ்வளவு அவசியமல்லவென்று கருதுகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. காந்தி தாழ்த்தப்பட்டோருக்கு அரிஜன் என்று பெயரிட்டு, இதழ் ஒன்றையும் தொடங்கியதைக் கண்டித்து தாழ்த்தப்பட்டோர் எழுதினர்.
மணிநீலன் (எ.முத்துக்கிருஷ்ணன்) என்பவர், காந்தி இடும் அரிசனப் பெயர் எதற்குதவும் _ அது தாழ்ந்தவரைக் கை தூக்குமோ என்று பாடல் எழுதினார். அவரெழுதிய நூலின் பெயரே காந்தி கண்டன கீதம் என்பதாகும். இந்தச் சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டோரைக் காங்கிரசு இயக்கத்துக்குள் தக்கவைக்க வேண்டிய நெருக்கடி அதற்கு உருவாயிற்று. இந்த நெருக்கடி தமிழ்நாட்டில் கடுமையாக இருந்தது. ஏனென்றால், முதலமைச்சர் இராஜாஜியின் வேட்பாளரான சுப்பையாவை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரசு தலைவர் தேர்தலில் காமராசர் வெற்றி பெற்றிருந்தார். வெளியிலே தெரியாதபடி கட்சிக்குள் ஒரு நெருக்கடி உருவாகியிருந்தது.
மதுரை வைத்தியநாத அய்யர் காங்கிரசு கட்சிக்குள் இராஜாஜியின் ஆதரவாளர் ஆவார். எனவே, உட்கட்சி நெருக்கடி, தாழ்த்தப்பட்டோர் ஆதரவைப் பெறுவது என்ற இரண்டு நோக்கங்களோடு அவர் மதுரைக் கோயிலில் அரிசன ஆலயப் பிரவேசம் நடத்திக் காட்டினார். இராஜாஜியும் அரிசன ஆலயப் பிரவேசத்தை முறைப்படுத்தும் அவசரச் சட்டத்தை வெளியிட்டு, வைத்தியநாத அய்யரின் முயற்சியை வெற்றியாக்கி விட்டார்.
கோ.கேசவன் ஆய்வில்...
அடுத்ததாக, முனைவர் கோ.கேசவன் அவர்கள், கோயில் நுழைவுப் போராட்டங்கள் என்னும் நூலில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடந்த போராட்டம் பற்றி ஆய்ந்து அறிந்து சொன்னதைப் பார்ப்போம்.
மக்கள் நம்பிக்கையை இழந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு நல்ல செயலைச் செய்து அதை ஈடுகட்டுவோம் என்கிற அடிப்படையில் இவை நடந்தேறியதாகக் கருதலாம். இதிலும் கூட இராசாசியின் தேர்ந்தெடுப்பு மிகவும் கவனிக்கத்தக்கது ஆகும். கோயிலிலிருந்து ஒதுக்கப்பட்ட ஜாதிகள், ஏற்கப்பட்ட ஜாதிகள் என இரண்டு தரப்பினரும் ஒருங்கே வாழ்க்கை நடத்தும் ஊர் மதுரை. இராஜாஜி குழுவைச் சார்ந்தவரும் அரிசன சேவை சங்கத்தில் ஈடுபாடு கொண்டவருமான வைத்தியநாத அய்யரின் தலைமை... ஆர்.எஸ்.நாயுடுவின் கோயில் நிருவாகம் என இன்னோரன்ன தேர்ந்தெடுப்புகள் மிகவும் கருதத் தக்கனவாகும்.
வேடம் கலைந்தது!
முனைவர். கோ.கேசவன், முனைவர். தொ.பரமசிவன், எஸ்.வி.இராசதுரை ஆகிய ஆய்வாளர்களின் கருத்துப்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைத்தியநாத அய்யர் நடத்திய கோயில் நுழைவுப் போராட்ட நாடகம் அம்பலமாகிறது.
மீனாட்சி அம்மன் கோயில் நிருவாக அதிகாரியாக இருந்த நீதிக்கட்சிக்காரரான ஆர்.எஸ்.நாயுடு கொடுத்த முழுமையான ஒத்துழைப்பும், காங்கிரசின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும், காங்கிரசில் இராஜாஜியா? சத்தியமூர்த்தியா? என எழுந்த கோஷ்டி மோதலில் இராசாசியின் செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்ளவும் நெருங்கி வந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசின் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவும் தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டத்தகாதவர்கள் ஆகியோரின் உற்ற துணைவன் காங்கிரசுதான் என்கிற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொள்ளவுமான பல்வேறு பின்னணிகள் அந்தப் போராட்ட நாடகத்திற்கு இருந்தது.
இப்படிப்பட்ட உள்நோக்கத்தோடுதான் வைத்தியநாத அய்யர் மதுரையில் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
மதுரை வைத்தியநாத அய்யரை கோயில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடி என வானாளவப் புகழ்வது, வரலாற்று மோசடி என்பது மேற்கண்ட அறிஞர்களின் ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது. எனவே, குறுகிய அரசியல் இலாபத்திற்காக, தாழ்த்தப்பட்டோரின் உயிரான உரிமைப் பிரச்சனையைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி விளையாடிய, மதுரை வைத்தியநாத அய்யரை கோயில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடி என்று கூறுவது மோசடியானது என்பதை வரலாற்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
(தொடரும்...)

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit வைத்தியநாத அய்யரின் மோசடி அம்பலம்! -நேயன் in FaceBook Submit வைத்தியநாத அய்யரின் மோசடி அம்பலம்! -நேயன் in Google Bookmarks Submit வைத்தியநாத அய்யரின் மோசடி அம்பலம்! -நேயன் in Twitter Submit வைத்தியநாத அய்யரின் மோசடி அம்பலம்! -நேயன் in Twitter

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.