Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2021
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

கட்டுரை : நமக்கு தித்திக்கும் நாள்

முனைவர் வா.நேரு

நமது அன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய நமது தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வரும் 2.12.2020 அன்று 88-ஆம்  பிறந்த நாள். தந்தை பெரியாரின் கொள்கையைப் பேசுவதால், எழுதுவதால், அதன்படி நடப்பதால் மரியாதை கிடைக்கிறது எனக்கு. நான் தந்தை பெரியாரை நேரில் பார்த்தவனல்லன். அவரது உரையை நேரிடையாகக் கேட்கும் வாய்ப்புப் பெற்றவனும் அல்லன். ஆனால், “‘எனக்கென்று சொந்தப் புத்தி இல்லை, தந்தை பெரியார் தந்த புத்தியே போதும்“ என்று தனது வாழ்வை, தனது தொண்டை, தனது ஒப்பற்ற தலைமையை தந்தை பெரியார் தந்த புத்தியால் அமைத்துக் கொண்ட தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களை தலைவராக நான் பெற்றதால் _ நாம் பெற்றதால்  நமக்குக் கிடைத்தவையே பெருமை, மதிப்பு எல்லாம்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை நமக்குத் தந்தவர் மட்டுமல்லர்; வாழ்வியல் சிந்தனைகள் என்னும் அற்புதமான சிந்தனைத் தொகுப்புகளின், (இப்போது 15-ஆவது தொகுதி வந்துள்ளது) மூலம் நமது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல, நம்மைச் சுற்றி உள்ள உறவுகள், நட்புகள் வாழ்க்கையையும் வளம்பட வைக்கும் சிந்தனைகளைத் தருகிறவர் அய்யா ஆசிரியர் அவர்கள். அவரால் நாம் பெற்றவைக்கு நாம் நன்றி செலுத்தும் நாளே திசம்பர் இரண்டு. திசம்பர் இரண்டு, செப்டம்பர் 17 போலவே நமக்குத் தித்திக்கும் நாள். அய்யா ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு  நூறு ஆண்டுகளையும் கடந்து வாழ்ந்து நமக்கு வழிகாட்டிட வேண்டும் என்னும் நமது விருப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தியாவில், பல்வேறு மாநிலங்களில்  செயல்படும் நாத்திக அமைப்புகளை, அவற்றின் பொறுப்பாளர்களைச் சந்திக்கின்ற வாய்ப்பு கடந்த பல ஆண்டுகளாக எனக்கும், இன்றைய திராவிடர் கழகப் பொருளாளர் அண்ணன் வீ.குமரேசன் அவர்களுக்கும் வாய்த்திருக்கிறது. நமது இயக்கத்தின் செயல்பாட்டை, முன்னெடுப்பை, போராட்டங்களை, வெற்றிகளை மற்ற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் வியந்து பாராட்டுவதை பல நேரங்களில் கேட்டிருக்கிறோம். எங்கள் இயக்கத்திற்கு உங்கள் இயக்கம் போன்று கட்டமைப்புகள் இல்லை, உங்கள் இயக்கம் போன்று கல்வி நிறுவனங்கள் இல்லை, உங்கள் இயக்கம் போன்று தலைநகரில் கட்டடங்கள் இல்லை, பத்திரிகை அச்சிடும் வசதி இல்லை, எங்களால் ஒரு பத்திரிகையைக் கொண்டு வருவதே பெரும்பாடாக இருக்கிறது, நீங்கள் எப்படி இத்தனை பத்திரிகைகளை விடாமல் கொண்டு வருகின்றீர்கள், எப்படி உங்கள் இயக்கத்தால் எதிரிகளின் அத்தனை சவால்களையும் சமாளிக்க முடிகிறது? என்று எங்களிடம் கேட்கப்படுகிறபோது, நாங்கள் அளிக்கும் பதில் “எங்கள் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தான் காரணம்’’ என்பதாகும். இது வெறுமனே புகழ்ச்சிக்காகச் சொல்லும் சொற்கள் அல்ல. மற்ற இயக்கங்களோடும் தலைவர்களோடும் நமது இயக்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பளிச்சென்று விளங்கும் உண்மையாகும்.

தந்தை பெரியார் காலத்திற்குப் பிறகு  திராவிடர் கழகம் முடிந்துவிடும் என்று சிலர் எண்ணினார்கள் -_ சொன்னார்கள். ஆனால், .இன்று ‘நாத்திகம்’ என்றாலும், ‘சமூகநீதி’ என்றாலும், ‘பெண் விடுதலை’ என்றாலும், இந்தியாவில் மட்டுமல்ல, வெளி நாடுகளிலும் கூட உடனடியாக நினைவில் வரக்கூடிய பெயர் தந்தை பெரியார், அவர்தம் இயக்கம், அந்த இயக்கத்தின் தலைமை அய்யா ஆசிரியர் கி.வீரமணி என்பதாகும். இது ஒரு நாள், இரண்டு நாளில் வந்த பெயர் அல்ல. தந்தை பெரியார் மறைந்து இன்று 47 ஆண்டுகள் கடந்துவிட்டன. எதிரிகள் நினைப்பில் மண்ணைத் தூவி, ஆலமரமாய் விரிந்து நிற்கும் பெரியாரியல் கட்டமைப்பின் _ சிந்தனையின் மய்யம் அய்யா ஆசிரியர் ஆவார். அவர்தம் இடைவிடாத உழைப்பு, எதற்கும் துணிந்து நிற்கும் நெஞ்சுரம், கொள்கைத் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல், களைகளைக் கூசாமல் களைந்து துணிந்து வெளியில் வீசும் துணிவு, எவரிடத்திலும் தந்தை பெரியார் போல் காட்டும் தனிமனித மரியாதை, உலகம் முழுவதும் தந்தை பெரியாரின் கொள்கை பரப்பும் திட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றையும் தொண்டறத்துக்கான அர்ப்பணிப்பையும் நாம் நினைத்துப் பார்க்கையில் நம்மை மலைக்க _ வியக்க வைக்கிறது.

சொற்பொழிவாளராய், எழுத்தாளராய், பல்கலைக்கழக வேந்தராய், பத்திரிகை ஆசிரியராய், சட்ட வல்லுநராய், 31-சி என்னும் சட்டத்தை உருவாக்கி, அப்போது நாட்டை ஆண்டவர்களின் துணையோடு அரசு அமைப்புச் சட்டத்தின் 9-ஆம் அட்டவணையில் சேர்க்கச் செய்தவராய்.... அத்தனை தளங்களிலும் தனது சாதனை முத்திரைகளைப் பதித்திருக்கும் தலைவர் நம் தலைவர்... எண்ணி எண்ணிப் பெருமை கொள்கிறோம் நாம். எவ்வளவு இருட்டு சூழ்ந்தாலும், வெளிச்சம் உறுதியாக வரும் என்னும் நம்பிக்கையில் உழைக்க வேண்டும் எனும் நோக்கில் செயல்படும் அவர்தம் திட்டங்களும் செயல்பாடுகளும் கொள்கை எதிரிகளையும் மலைக்க வைக்கின்றன.

அண்மையிலே தோழர் அ.மார்க்ஸ் அவர்கள் எழுதிய ‘மேன்மைப்படுவாய் மனமே கேள்’ என்னும் புத்தகம் படித்தேன். அதில் அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதை அப்படியே தருகின்றேன்.

பெரியார் திடலில் இன்று...

“நான் சென்றபோது தாலி அகற்றும் நிகழ்ச்சி முடிந்துவிட்டது. அ.தி.மு.க. அரசின் சதி மனம் அறிந்த ஆசிரியர் வீரமணி, அரசு மறு தடை ஆணை வாங்கும் முன்னரே நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்திருந்தார். இப்போது பத்திரிகையாளர் மத்தியில் ஆசிரியர்... என்ன கேட்டார்களோ..

“Yes,We ate beef yesterday. We eat beef today. We will eat beef tomorrow. If you want you can come and join with us. You are always welcome...” எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.

குடும்பத்தோடு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் திராவிடர் கழகப் பாரம்பரியம் இன்னும் ஓயவில்லை என்பதுபோல ஆண்களும் பெண்களுமாய், யார் யாரோ முகம் தெரியாத கருஞ்சட்டைத் தோழர்கள் என்னைக் கண்டு தங்களின் மகிழ்ச்சியையும் வெற்றியையும் பகிர்ந்து கொண்டபோது... ஆஹா! நாம் எத்தனை பெரிய குடும்பம் என எண்ணி இறும்பூது எய்தினேன்...

அத்தனை கூட்டத்தின் மத்தியிலும் கை கூப்பி வணங்கிய என்னை ஆசிரியரும் கவிஞரும் (கலி.பூங்குன்றன்) அடையாளம் கண்டு கொண்டு கையோடு உள்ளே அழைத்துச் சென்றனர்.

தந்தை பெரியார் துயில் கொண்ட கட்டில், அவருக்கு எம் தமிழ் மக்கள் உவந்தளித்த  வெள்ளிச் சிம்மாசனம் ஆகியவை அழகு செய்த அந்த அறையில் நானும் ஆசிரியரும்...

ஆசிரியர் பூரித்துப் புளகித்திருந்தார். இருக்காதா பின்னே... எத்தனை பெரிய எழுச்சி இன்று தமிழ் மண்ணில்... மீண்டும் தந்தை பெரியாரின் காலத்தில் வாழ்ந்தது போல்...

அரசு இந்த வழக்கில் வாதிட அட்வகேட் ஜெனரல் சோமயாஜுலுவையே அனுப்பியிருந்தது... நீதிமன்றம் வழங்கிய அழகிய தீர்ப்பு... எல்லாவற்றையும் இதழாளர்களின் “தொல்லைகளுக்கிடையே’’ என்னையும் பொருட்படுத்தி, விட்ட இடத்திலிருந்து நினைவாகச் சொல்லிக்கொண்டிருந்தார்...

சற்று நேரத்தில் அண்ணல் அம்பேத்கரின் ‘The untouchables' ஆங்கில நூல் மற்றும் ‘மதவெறியும் மாட்டுக்கறியும்’ எனும் ஆவணத்தொகுப்பு இரண்டையும் ஆசிரியர் எழுந்து நின்று _ ஆம் எழுந்து நின்று... இது தகுமோ... என்னிடம் தந்தார்.

வெளியில் நின்ற கருஞ்சட்டைப் படையின் அன்புகளை மனம் நிறைய நிறைய ஏந்தியவாறு திடலை விட்டு வெளியே, அங்கு குவிந்திருந்த ஏராளமான காவல்துறைப் படைகளினூடே நடந்து வந்தபோது நெஞ்சு நிறைந்திருந்தது. (பக்கம் 139_140)

தோழர் அ.மார்க்ஸ் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவரல்லர். பொதுவுடைமை இயக்கத்திலே தீவிரமாக ஈடுபட்டவர். ‘ஆஹா... நாம் எத்தனை பெரிய குடும்பம் என எண்ணி இறும்பூது எய்தினேன்... நெஞ்சு நிறைந்திருந்தது’ என்று முடிக்கும் அவரது கட்டுரை சொல்லும் செய்திகள் ஏராளம். திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி, பொதுவுடைமை சிந்தனை வயப்பட்டவர்களும் இன்று ‘நாம் எத்தனை பெரிய குடும்பம்’ என்று எண்ணி இறும்பூது எய்தும் நிலை. சமூகநீதித் தளத்தில் இன்று இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் நோக்குமிடம் சென்னை பெரியார் திடல், திராவிடர் கழகம், அதன் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள். இன்றைய ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதிகள் தொடுக்கும் அத்தனை தாக்குதல்களையும் முறியடிக்கும் படைத் தலைவராக தமிழர் தலைவர்  அய்யா ஆசிரியர் திகழ்கிறார். அதனால்தான் தோழர் அ.மார்க்ஸ் போல அத்தனை தலைவர்களுக்கும்  தோழர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த தலைவராக அய்யா ஆசிரியர் இருக்கின்றார்.

இது  கரோனா காலம், உலகமே முடங்கிக் கிடக்கும் நிலை. ஆனால், திராவிடர் கழகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியான காணொலி நிகழ்வுகள், கலந்துரையாடல்கள், உரைகள், போராட்டங்கள் என தொடர் நிகழ்வுகள். திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் புதையல் புத்தகங்களாகத் தேடியெடுத்து, உரையாற்றுகிறார். தொண்டர்களின் உள்ளத்தில் கொள்கை உரம் ஏற்றுகிறார். கேட்பவர்களின் மனதில் பெரியாரியல் குடி புகுகின்றது.

ஓடுவதுதான் நதி. இயங்குவதுதான் இயக்கம். அந்த வகையில் உலகம் முழுவதும் ஓடும் நதியாக பெரியாரியல் மாறியிருக்கிறது. உலகம் முழுவதும்  அநீதிக்கு எதிராகப் போராடுபவர்களின் கைகளில் தந்தை பெரியாரின் படம் இருக்கிறது. போராடுபவர்களின் உள்ளத்தில் பெரியார் இருக்கிறார். புது உலகம் பற்றிச் சிந்திக்கும், புதுமைப் பெண்கள் அத்தனை பேரும் தந்தை பெரியாரின் பெயரைச் சொல்கிறார்கள்... அவரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகத்தைச் சொல்கிறார்கள். இதனைக் கொண்டு செல்வதற்கான வழிகளைச் செய்தவர் அய்யா ஆசிரியர் அவர்கள். எந்தவிதமான சபலங்களுக்கும் ஆளாகாமல், தந்தை பெரியாரின் பணி முடிக்க, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் சுட்டும் திசையில் பணியாற்றுவோம்; தந்தை பெரியார் இட்டபணி செய்வோம்; தொட்டபணி தொடர்வோம்; தொடர்ந்த பணி முடிப்போம்.

வாழ்க தந்தை பெரியார் புகழ்!

வாழ்க, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள்!

அனைவர்க்கும் அய்யா ஆசிரியர் பிறந்த நாள் வாழ்த்துகள்!   

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit கட்டுரை : நமக்கு தித்திக்கும் நாள் in FaceBook Submit கட்டுரை : நமக்கு தித்திக்கும் நாள் in Google Bookmarks Submit கட்டுரை : நமக்கு தித்திக்கும் நாள் in Twitter Submit கட்டுரை : நமக்கு தித்திக்கும் நாள் in Twitter

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.