Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (51) : யாக குண்டத்தில் கரு உருவாகுமா?

சிகரம்

 ஒருசமயம் ருசிகன் என்னும் அரசன் இருந்தான். அவன் இந்திரனைக் குறித்து தவம் செய்து அவனையே புத்திரனாக அடைந்தான். அப்புதல்வனுக்குக் காதி என்று பெயர்.

காதிக்கு ஸத்தியவதி என்று ஒரு பெண் பிறந்தாள். அவளை நிசித முனிவருக்கு மணம் செய்து கொடுத்தனர். காதிக்குப் புதல்வன் பிறக்காததால் அந்தக் குறை நீங்க நிசிக முனிவர் ஓர் யாகம் செய்தார். யாக குண்டத்திலிருந்து இரு கருக்கள் உற்பத்தியாயின. அவற்றை மனைவியிடம் கொடுத்த முனிவர், “இவ்விரண்டையும் உன் தாயும், நீயுமாகப் புசித்தீர்களானால், உன் தாய்க்கு எவராலும் ஜயிக்க முடியாத க்ஷத்திரிய வீரனும், உனக்கு அந்தணர் மக்களில் குறைவின்றி விளங்கும் ஞானப் புதல்வனும் பிறப்பார்கள்’’ என்று சொல்லி, வனத்துக்குத் தவம் செய்யச் சென்றார்.

அப்போது காதி தன் மனைவியோடு புதல்வியின் வீட்டுக்கு வந்தான். ஸத்தியவதி சந்தோஷத்தோடு தாயை வரவேற்று அழைத்துச் சென்று தன் கணவர் கூறியதை எடுத்துச் சொல்லி இரு கருக்களையும் அவளிடம் கொடுத்தாள்.

ஸத்யவதியின் தாய் தன் மகளையே வஞ்சிக்க எண்ணம் கொண்டு, தான் புசிக்க வேண்டியதை மகளுக்குக் கொடுத்துவிட்டு அவள் சாப்பிட வேண்டியதை, தான் புசித்து விட்டாள். ஸத்யவதிக்கு இது தெரியாது. அவள் கர்ப்பத்திலே க்ஷத்திரியர்கள் அனைவரையும் வெல்லக்கூடிய புத்திரன் உருவாகி வந்தான்.

முனிவர் ஞானதிருஷ்டியால் மனைவியின் கர்ப்பத்தில் இருக்கும் புத்திரனை உணர்ந்து, மனைவியை அழைத்து, “பிரியே, உன் தாய் உன்னை வஞ்சித்துவிட்டாள். தான் புசிக்க வேண்டியதை உனக்கு அளித்துவிட்டு, உனக்குக் கொடுக்க வேண்டியதை அவள் உட்கொண்டு விட்டாள். உனக்கு மகாதபஸ்வியான தம்பி பிறக்கப் போகிறான். உன் வயிற்றிலோ பிராமண தர்மத்துக்கு விரோதமாக க்ஷத்திரியக் கரு வளர்ந்து வருகிறது’’ என்றார்.

கணவனின் வார்த்தைகளைக் கேட்ட ஸத்தியவதி மிகவும் வருந்தி, “நாதா, நம் தர்மாசாரங்களுக்கு விரோதமாக நடக்கப் போவதைத் தாங்கள் அனுமதிப்பீர்களா? இதற்கு ஓர் உபாயம் செய்ய வேண்டும்’’ என்று வேண்டினாள்.

“பிரியே, நான் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. ஹோமம் செய்யும்போது உன் தாய்க்கு க்ஷத்திரியனான மகனும், உனக்கு பிராமணோத்தமனான மகனும் பிறக்கவே மந்திரம் ஜபித்தேன். உன் தாய் செய்த வஞ்சனை இது. இதில் மாற்றம் செய்வது இனி இயலாத காரியம்’’ என்றார் நிசித முனிவர்.

ஸத்யவதி கண்ணீர் விட்டபடி, “நாதா, அப்படியானால் ஒன்று செய்யுங்கள். நமக்குப் பிள்ளையாகப் பிறந்தால் என்ன? பேரனாகப் பிறந்தால் என்ன? நமது பேரனாகவே அக்குழந்தை பிறக்கட்டும்’’ என்று வேண்டினாள்.

நிசிக முனிவரும் அவ்வாறு ஆக அனுக்கிரகித்தார். ஆகவே, நிசிக முனிவரின் புத்திரரான ஜமதக்னி முனிவரிடம் பரசுராமர் தோன்றினார்.

ஹைஹய வமிசத்தில் கிருத வீர்யனுக்குப் புத்திரனாகப் பிறந்த கார்த்தவீரியன் ஆயிரம் கைகளும் சூரியனைப் போன்ற தேக காந்தியும் கொண்டிருந்தான். அவன் திரிஷிதர் என்னும் முனிவரைப் பூஜித்து அவர் அருளால் அக்கினியே அஸ்திரமாக இருக்கும் வரம் பெற்றான்.

அதனால் கர்வம் அடைந்த கார்த்தவீரியன் அனேக கிராமங்களையும் நகரங்களையும் கொளுத்தி அட்டகாசம் செய்து வந்தான். அவன் சென்ற இடமெல்லாம் அவனுக்குப் பணிந்தன. அதனால் மேலும் செருக்குற்று அவன் முனிவர்களின் ஆசிரமங்களையும் கொளுத்தி அவர்களுக்குப் பெரும் தொல்லைகள் விளைவித்தான். ஆபஸ்தம்ப முனிவரின் ஆசிரமத்துக்கு வந்த அவன் அவருடைய ஆசிரமத்தையும் கொளுத்த முயற்சிக்கையில், முனிவர் பெரிதும் சினந்து விரைவிலேயே பரசுராமனால் சிரம் அறுக்கப்பட்டு உயிரிழப்பாய்’ எனச் சாபமிட்டார்.

அப்போதும் அவன் இறுமாப்பு அடங்கவில்லை. ஒருசமயம் கார்த்தவீரியன் ஜமதக்னி முனிவரது ஆசிரமத்துக்கு வந்தான். முனிவர் அவனை வரவேற்று பலவாறு உபசரித்தார். திடீரென்று பரிவாரங்களுடன் வந்த தன்னை முனிவர் வரவேற்று அறுசுவை உண்டி அளித்ததற்கு அவரிடம் இருக்கும் காமதேனுவே காரணம் என்பதை அறிந்தபோது அவனுக்குத் தானும் அதை அடைந்திருக்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. முனிவரைப் பணிந்து அவருக்கு ஆசை வார்த்தைகள் பல கூறினான். காமதேனுவுக்குப் பதிலாக அனேக பசுக்களைக் கொடுப்பதாகக் கூறினான். முனிவர் அதற்கு இணங்க மறுத்து விட்டார்.

அரசனோ காமதேனுவை விட்டுப் பிரிய மனமில்லாது முனிவரிடமிருந்து எவ்வகையிலாவது அதைக் கைப்பற்றிச் செல்ல வேண்டுமென்று முயற்சித்தான். அஸ்திரங்களால் முனிவரைக் கிட்ட நெருங்கவிடாது செய்து காமதேனுவை மீட்டான்.

இதற்குள் விஷயமறிந்து பரசுராமன் அங்கு வந்து சேர்ந்தான். கார்த்தவீரியனோடு போரிட்டு அவன் ஆயிரம் கரங்களையும் துண்டித்து விரட்டியடித்து காமதேனுவை மீட்டான்.

பரசுராமனிடம் தோல்வியுற்ற கார்த்தவீரியன் அப்போதும் காமதேனுவிடம் வைத்த ஆசையை விடவில்லை. பரசுராமன் தவம் செய்யச் சென்றிருக்கும் நேரத்தில் தன் புத்திரர்களை அனுப்பி காமதேனுவைப் பிடித்து வரச் செய்தான். அவர்கள் முனிவரையே அஸ்திரங்களால் அடித்துக் கொன்று விட்டு காமதேனுவை ஓட்டிச் சென்றனர்.

தவம் முடிந்து பரசுராமன் ஆசிரமம் திரும்பியதும் அங்கே நிகழ்ந்திருந்த கோரச் செயல்களைக் கண்டு கோபமடைந்தான். தன் தந்தையைக் கொன்ற க்ஷத்திரிய குலத்தையே நிர்மூலம் செய்து விடுவதாகச் சபதம் செய்து கிளம்பினான். கார்த்தவீரியனையும் அவன் குமாரர்களையும் கொன்று வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டான். அப்போதும் அவன் கோபம் தணியவில்லை. உலகெங்கிலுமே க்ஷத்திரியப் பூண்டு இருக்கக் கூடாதென்று அனைவரையும் அழித்தான். ராஜ்ஜியங்களைப் பிராமணர்களுக்குத் தானம் செய்துவிட்டு மீண்டும் தவம் செய்யச் சென்றான்’’ என்கிறது இந்துமதம்.

குழந்தை உண்டாகக் காரணமான ‘கரு’ யாககுண்ட நெருப்பிலிருந்து வருமா? வரத்தான் முடியுமா? அது மட்டுமல்ல, மந்திரம் ஜபித்தால் ‘கரு’ வருமா? மந்திரத்தால் வருவதா கரு? ஆணின் விந்தணுவும், பெண்ணின் கரு முட்டையும் சேர்ந்துதான் ‘கரு’ உருவாகும் என்கிறது அறிவியல். ஆனால், மந்திரத்தால் யாகக் குண்ட நெருப்பில் கரு உருவானது என்பது அறிவியலுக்குப் புறம்பான மூடக் கருத்து அல்லவா?

மேலும், யாகக் குண்டத்தில் வந்த கருவை வாய்வழியாக உண்டால் அது எப்படி குழந்தையாக உருவாகும்? இது அறிவியலுக்கு எதிரான கருத்தல்லவா? இப்படிப்பட்ட மூடக்கருத்தைக் கூறும் இந்துமதம்... அறிவியலுக்கு அடிப்படையா?

(சொடுக்குவோம்...)

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (51) : யாக குண்டத்தில் கரு உருவாகுமா? in FaceBook Submit அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (51) : யாக குண்டத்தில் கரு உருவாகுமா? in Google Bookmarks Submit அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (51) : யாக குண்டத்தில் கரு உருவாகுமா? in Twitter Submit அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (51) : யாக குண்டத்தில் கரு உருவாகுமா? in Twitter

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.