Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

தலையங்கம் : பிரியாணி செலவை கணக்கில் சேர்க்கும் தேர்தல் ஆணையம் ஜோதிடம், யாகச் செலவைக் சேர்க்காதது ஏன்?

வேட்பு மனு வாங்குவதில் வேறுபட்ட மரியாதையா?

“தேர்தல் ஆணையம் இம்முறை புதிதாக பிரியாணி பொட்டலம், குடி தண்ணீர் பாட்டில்’’’ இவைகளுக்கெல்லாம் கட்டணம் விதித்து மிகவும் கண்டிப்புடன், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் செலவு அனுமதிக்கப்பட்ட 70 லட்சம் ரூபாய் நாடாளுமன்றத்திற்கு, சட்டமன்றத்திற்கு 28 லட்சம் ரூபாய் என்ற கணக்குக்கு அதிகமானால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என்று கூறக்கூடிய ஒரு கத்தியை வேட்பாளர்களின் தலைக்குமேல் தொங்க விட்டிருக்கிறது!

பிரியாணி பொட்டலம் லஞ்சமில்லையா?

பிரியாணி பொட்டலம் ‘லஞ்சம்’ அல்லாமல் வேறு என்ன?

இதைத் தேர்தல் ஆணையம் சட்டப்படி தடுக்க முற்படவேண்டுமே தவிர, இதற்குக் கட்டணம் போட்டு கணக்கிட்டால், அதனை சட்டப்படி ஏற்கிறது; அங்கீகரிக்கிறது என்பதுதானே! நமது ஜனநாயகத்தை கேலி செய்து, பழிக்குப் பகிரங்கமாகவே ஆளாக்குவது எவ்வகையில் சரியானது - நியாயமானது?

வெளிநாட்டவர்கள் இந்தச் செய்தியைப் படித்தால் பிரியாணி பொட்டலத்திற்காக தங்கள் வாக்குகளை ‘விற்கும்’ வாக்காளர்கள் இந்திய வாக்காளர்கள் என்ற கெட்ட பெயர் வராதா?

கையில் மை வைப்பதும் அவமானமே!

அடையாள அட்டையுடன் - அதில் படமும் உள்ளபோது - கையில் மை வைப்பதே தேசிய அவமானம் அல்லவா? இது நிறுத்தப்படல் வேண்டும். நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கும்கூட - அவர் ஓட்டுப் போட்டால் கையில் மை வைத்தாக வேண்டும்; அதுபோல், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், பிரதமர் உள்பட இச்சட்டத்திற்கு யாரும் விலக்கு அல்லவே! (A Nation of dishonest Voters-ஆக மதிக்கப்படலாம்!)

இதன்மூலம் நமது நாட்டு வாக்காளர்கள் மறுபடியும் இரண்டாம் முறை வாக்களிக்கக் கூடியவர்கள் என்று மற்றவர்கள் எண்ணும் இழுக்கு தேசிய அவமானம் அல்லாமல் வேறு என்ன?

அதில் இப்போது பிரியாணி பொட்டலம் 200 ரூபாய், தண்ணீர் பாட்டில் 50 ரூபாயும் சேருகிறதாம்!

ஜோசியத்துக்குக் கொட்டியழும் பணம் தேர்தல் கணக்கில் வராதது ஏன்?

இதையெல்லாம் கணக்கில் எடுக்கும் தேர்தல் ஆணையம், பெரும்பாலான வேட்பாளர்கள் ஜோசியர்களிடம், வாஸ்து நிபுணர்களிடம் ஜாதகம் பார்த்து - நல்ல நேரம் கணித்து, வேட்பு மனு தாக்கல் செய்கிறார்களே, அந்த ஜோசியர்களுக்கு அளிக்கப்பட்ட கட்டணங்களை செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டாமா?

பிரியாணி பொட்டலமாவது 200 ரூபாய்; ஜோதிடமோ ஆயிரத்திற்கு, 500 ரூபாய்க்குக் குறையாதது அல்லவா! அதுமட்டுமா?

யாகங்களுக்கான செலவும் முக்கியம்தானே!

யாகங்கள், அதுவும் ‘சத்ரு சங்கார யாகங்களுக்கு’ பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது அந்த வேட்பாளர்களால்!  புரோகித பார்ப்பனர்களுக்கு ஏராளமான பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறார்களே - அது ஏன் கணக்கில் சேர்க்கப்படக்கூடாது? அதற்கு ஆகும் நெய் உள்பட  பல பொருள்களின் விலை கணக்கில் சேர்க்கப்பட வேண்டாமா?

மலத்தில் அரிசி பொறுக்குவதா?

நல்ல நேரம், முகூர்த்த நாள் பார்த்து வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்; இதற்கு விதி விலக்கு ஏதோ ஆயிரத்தில் ஒன்றாக இருந்தாலே அதிசயம் _ மலத்தில் அரிசி பொறுக்கும் அசிங்கத்தினைச் செய்ய விரும்பவில்லை நாம்!

வடநாட்டில் சாமியார்களுக்கும், ஜோசியர்களுக்கும் ஏகப்பட்ட கிராக்கியாம்! அப்பாயிண்ட்மெண்ட் அவர்களிடம் கிடைப்பதற்கே கூட வாங்கித் தருபவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறதாம்.

தேர்தல் அறிவிப்பு இராகுகாலத்தில்தானே வெளியிடப்பட்டது!

தேர்தலில் வெற்றி பெற இத்தியாதி, இத்தியாதி’ நாள் நட்சத்திரம், மேஷம், மீனம் பார்க்கப்படுகிறது. ஜோசியரிடம் ஆலோசனை கேட்டு, பூஜை புனஸ்காரம், “சமாதி சமர்ப்பியாயமி’’ எல்லாம் செய்து, வேட்பு மனு தாக்கல் செய்கிறார்களே, அவர்கள் அத்துணை அரசியல் கட்சியினரும் ஒன்றை “வசதியாக’’ மறந்துவிட்டனரே, அது ஏன்?

நாட்டின் 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு தலைமைத் தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்ட தேதி, நேரம் மறந்துவிட்டதா?

2019 மார்ச் 10 ஞாயிறு மாலை 5 மணிக்கு (“கொழுத்த’’) ராகுகாலத்தில்தானே!

அந்த இராகுகாலத்தில் அறிவிக்கப் பட்டதால், தேர்தலில் நிற்கமாட்டோம் என்று எந்த  அமாவாசை, கிருத்திகை, பாட்டி முகம் _ பார்க்கும், கையில் ஒரு வண்டி அழுக்குக் கயிறுகளைக் கட்டியுள்ள ‘பிரகஸ்பதிகள்’ ஏனோ கூறவில்லை?

ஜோதிடம் பார்த்த அனைவரும் வெற்றி பெற முடியுமா?

போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் தானே வெற்றி பெற முடியும்? பின் என்ன  நல்ல நேரம் _ வெங்காயம்? அதே ஜாதி என்ற இந்த முட்டாள்தனத்திற்கு மெருகு ஏற்றப்பட்ட தங்கப் பூண்! இவர்கள் வெற்றி பெற்று அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுக்கப் போகிறார்களே -_ அதில் 51 ஏ_-எச் பிரிவில், அடிப்படைக் கடமைகள் என்ற தலைப்பு என்ன கூறுகிறது?

அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

“அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டல், சீர்திருத்தம் - இவைகளை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை’’ என்று ஒரு பிரிவு உள்ளதே! குறைந்த பட்சம் அதைப் படித்தாவது பார்க்க வேண்டாமா?

ஆன்மிக அரசியலாம், அட அறிவுக் கொழுந்துகளே!

“என்ன விநோதம் பாருங்கள்!

எவ்வளவு ஜோக்கு பாருங்கள்!!’’

அய்யய்ய சொல்ல வெட்கமாகுதே!!!

இதில் இன்னும் இரண்டு செய்திகள்:

கட்சிக் கொடிகளை அகற்றவேண்டும் என்கிறார்கள் _- அது ஏன் என்றே தெரியவில்லை.

சரி, அதுதான் போகட்டும்; கொடியை இறக்கியதுடன் நில்லாமல், கொடிக் கம்பத்தையும் அகற்றுவது ஏன்? இரும்புக் கம்பம் என்றால் அதனை அறுத்து எடுத்துச் செல்லுவது ஏன்? இரண்டவதாக, வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வரும்பொழுது, தேர்தல் அதிகாரிகள் நடந்துகொள்ளும் போக்கு கண்டிக்கத்தக்கது.

குறிப்பிட்ட சிலர் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது, எழுந்து நின்று வரவேற்பது, வேட்பு மனு வாங்குவது; மற்றவர்கள் வரும்போது உட்கார்ந்தபடியே வாங்குவது _ இதில் என்ன ‘வருண பேதம்’ _ வர்க்க பேதம்? உயர்ந்தவர் _ மட்டமானவர் என்ற கணிப்பு? அலுவலக நடைமுறைப் பண்புக்கு இது உகந்ததுதானா? சட்டத்தின்முன் அனைவரும் சமமில்லையா?

இதுபற்றி தலைமைத் தேர்தல் அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்புவது நல்லது!

- கி.வீரமணி,

ஆசிரியர்,

‘உண்மை’

 

 

 

 

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit தலையங்கம் : பிரியாணி செலவை கணக்கில் சேர்க்கும் தேர்தல் ஆணையம் ஜோதிடம், யாகச்  செலவைக் சேர்க்காதது ஏன்? in FaceBook Submit தலையங்கம் : பிரியாணி செலவை கணக்கில் சேர்க்கும் தேர்தல் ஆணையம் ஜோதிடம், யாகச்  செலவைக் சேர்க்காதது ஏன்? in Google Bookmarks Submit தலையங்கம் : பிரியாணி செலவை கணக்கில் சேர்க்கும் தேர்தல் ஆணையம் ஜோதிடம், யாகச்  செலவைக் சேர்க்காதது ஏன்? in Twitter Submit தலையங்கம் : பிரியாணி செலவை கணக்கில் சேர்க்கும் தேர்தல் ஆணையம் ஜோதிடம், யாகச்  செலவைக் சேர்க்காதது ஏன்? in Twitter

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.