Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2021
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> முந்தைய இதழ்கள் -> 2017 -> நவம்பர் 16-30 -> அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (8)
  • Print
  • Email

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (8)

கண்ணப்பன் கண்மாற்று சிகிச்சையின் முன்னோடியா?

திண்ணப்பன் என்றொரு வேடன். அவன் சிவன் மீது அளப்பரிய பக்தியுடையவன். அவன் வேட்டையாடிப் பெறும் எதையும் சிவனுக்குப் படையலிடுவான். அவ்வாறு செய்யும்முன் அவற்றை, தான் முதலில் சுவைத்துப் பார்த்து பிறகுதான் சிவனுக்குப் படைப்பான்.

இவனின் பக்தியைச் சோதிக்க கற்சிலையாய் இருந்த சிவபெருமான், தன் ஒரு கண்ணில் நீர்வடியச் செய்தார். அதைக் கண்ட திண்ணப்பன் கண்ணுக்குரிய பச்சிலைச் சாற்றை ஊற்றினான். ஆனாலும், சிலையின் கண் குணமாகவில்லை. எனவே, தன் கண்களில் ஒன்றைத் தோண்டியெடுத்து நீர்வடிந்த கண்ணில் அப்பினான்.

சிவன் சிலையின் இன்னொரு கண்ணிலும் நீர்வடிய, தனது இன்னொரு கண்ணையும் சிவன் சிலையில் வைக்க விரும்பினான். தனது இன்னொரு கண்ணையும் எடுத்தால் தனக்குக் கண் தெரியாது. அப்படிப்பட்ட நிலையில் சிவன் கண்ணில் வைக்க முடியாமல் போகும் என்பதால், தன் செருப்புக் காலை, சிவனின் கண் இருக்கும் இடத்தில் வைத்து அடையாளப் படுத்திக் கொண்டு, தன் இரண்டாவது கண்ணை எடுத்து சிவன் சிலையில் வைத்தான்.

அவனது பக்தியைக் கண்ட சிவன், அவனுக்கு மீண்டும் இரு கண்களையும் கொடுத்து, பக்தியைப் பாராட்டி மோட்சம் தந்தார் என்கிறது புராணக்கதை.

தன் கண்களைச் சிவன் சிலைக்கு அப்பியதால்,  திண்ணப்பர் என்ற பெயர் மாற்றப்பட்டு கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் ஆக்கப்பட்டார்.
இந்தப் புராணக் கதையை எடுத்துக்கொண்டு, கண் மாற்று சிகிச்சைக்கு இந்துமத புராணம்தான் வழிகாட்டி என்று கூறுகின்றனர்.

பக்தி வெறியில் சிறுத்தொண்டன் தன் பிள்ளையை அறுத்து, சமைத்து சிவனடியார்க்கு விருந்து படைத்ததுபோல, கண்ணப்பன் பக்திவெறியில் கண்களைப் பறித்து சிவன் சிலையில் அப்பிய அறிவற்ற செயலைப் போய் அறிவியலுக்கு அடிப்படையென்பது அசல் பித்தலாட்டம் அல்லவா?
கண் மாற்று சிகிச்சை கண்டுபிடித்தவனுக்கு, கண்ணப்பன் கதையே தெரியாதே! உண்மை இப்படியிருக்க கண்ணப்பன் செயல் கண் மாற்று அறுவை சிகிச்சைக்கு வழிகாட்டி என்பது பைத்தியக்கார உளறல் அல்லவா?

வளர்பிறை தேய்பிறை வருவது தக்கன் சாபத்தாலா?


நிலவு ஒரு துணைக்கோள். அது சூரியனின் ஒளி பெற்று ஒளிரக் கூடியது. அந்த நிலவில் மனிதன் 1969 ஜூலை 20இல் காலடியும் வைத்துவிட்டான். அதன்பின் அதுபற்றி ஏராளமான ஆய்வுகள். நிலவில் குடியேற மனிதன் முயற்சி மேற்கொண்டுள்ளான்.

பூமி சூரியனைச் சுற்றுவதுபோல் நிலவும் சூரியனைச் சுற்றி வருகிறது. இவ்வாறு இரண்டும் சுற்றிவருவதால் பூமி சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே குறுக்காக வரும். அப்போது பூமியின் நிழல் நிலவில் விழும். பூமியும் நிலவும் இடம் பெயருவதைப் பொறுத்து நிலவில் விழும் பூமியின் நிழலின் அளவு மாறுபடும். ஒருநாள் நிலவு முழுவதும் பூமியின் நிழல் மறைக்கும். இதுவே அமாவாசை எனப்படுகிறது. பின் ஒவ்வொரு நாளும் அந்த நிழலின் அளவு குறைய நிலவின் சூரிய வெளிச்சம் படும் பரப்பு கூடிக் கொண்டே செல்லும். இதற்கு வளர்பிறை என்று பெயர். அமாவாசை வந்த 15ஆவது நாள் நிலவில் பூமியின் நிழல் அறவே விழாது. அப்போது நிலவு முழுமையாய் சூரிய ஒளியைப் பெற்று ஒளிரும். இது பௌர்ணமி எனப்படும். அதன் பின் ஒவ்வொரு நாளும் பூமியின் நிழல் நிலவில் படத் தொடங்கும். அதனால் நிலவில் சூரிய ஒளி படும் பகுதி குறைந்து கொண்டே செல்லும். இதற்கு தேய்பிறை என்று பெயர். பௌர்ணமி வந்த 15ஆம் நாள் அறவே சூரிய ஒளி படாது மீண்டும் அமாவாசை. இதனால்தான் அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடையே வளர்பிறையும், பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடையே தேய்பிறையும் ஏற்படுகிறது. இவை அறிவியல் ரீதியாய் உறுதி செய்யப்பட்ட உண்மைகள்.

உண்மை இப்படியிருக்க இந்து மதம் என்ன சொல்கிறது தெரியுமா?

தக்கனுக்கு 90 பெண்கள். அதில் 27 பெண்களை நிலவுக்கு (சந்திரனுக்கு) மனைவிகள் ஆக்கினான். அந்தச் சந்திரன், கார்த்திகை, உரோகினி என்ற இரு பெண்களிடம் மட்டும் அன்பாய் இருந்தான். மற்ற 25 மனைவிகளிடம் அன்பு காட்டவில்லை. அப்பெண்கள் தந்தை தக்கனிடம் முறையிட, கோபம் கொண்ட தக்கன் நிலவு தேயக்கடவது எனச் சபித்தான். அதன்படி நிலவு நாள்தோறும் தேய்ந்துவர, சிவனிடம் முறையிட்டது. சிவன், நிலவு வளரக்கடவது என்று வரங்கொடுக்க நிலவு மீண்டும் நாள்தோறும் வளர்ந்து முழு நிலவு ஆனது.

தக்கன் சாபப்படி நிலவுக்கு தேய்பிறையும், சிவன் தந்த வரப்படி நிலவுக்கு வளர்பிறையும் வந்தது என்கிறது இந்து மதம்.

நிலவு என்பது ஒரு துணைக்கோள். அதற்கு 27 மனைவிகள் என்று கூறி முட்டாள்தனமான கதை கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?  இந்த வளர்பிறை தேய்பிறைக் கதையில் எள் முனையளவாவது அறிவியல் உண்டா? சிந்திப்பீர்!

இறந்த உடலுக்குள் இன்னொருவர் நுழைய முடியுமா?

இறப்பு என்பது உடல் உயிர்த் தன்மையை இழப்பது. அப்படி இழந்தால் மீண்டும் அவ்வுடல் உயிர் பெற முடியாது. காரணம் உயிர் என்பது பெற்றோர் உயிரிலிருந்து அவர்களின் உயிர் அணுக்கள் மூலம் பிள்ளைக்கு வருவது. தந்தையின் விந்தணு தாயின் இணையணு இரண்டும் சேர்ந்தே பிள்ளை உருவாகிறது. இந்த இரண்டு அணுக்களில் உள்ள உயிரே பிள்ளையின் உயிராகிறது. இந்த உயிர் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனால், அல்லது உணவு கிடைக்காமல் போனால், அல்லது இதயம், நுரையீரல், மூளை, ஈரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டால், அல்லது விபத்தில் அடிபட்டால் உயிர்த் தன்மையை உடல் இழந்துவிடும். அதன்பின் அந்த உடலுக்கு உயிர் வரவே வராது. ஆனால், இந்துமதம் இறந்த உடலுள் இன்னொருவர் நுழைய முடியும் என்கிறது.

திருமால் செய்த மாயம்

திருமால் மாயையின் உதவியால் ஜலந்தரன் மனைவி பிருந்தை நித்திரையில் ஆழ்ந்திருந்த போது தீய கனவு தோன்றச் செய்தார். அதுபற்றி கவலை கொண்ட அவள், அதற்குப் பரிகாரம் அறியச் செல்கையில் வழியில் திருமால் முனிவர் வடிவில் தோன்றினார். பிருந்தை அவரை வணங்குகையில் மாயையால் இரு அரக்கர்கள் தோன்றி அவளைத் தூக்கிச் செல்ல முயல்கையில் அவள் தன்னைக் காப்பாற்றும்படி வேண்ட திருமால், தான் காப்பாற்றுவதாகக் கூறி அவர்களைச் சுட்டெரித்தார். அதனால் முனிவரிடம் மரியாதை கொண்ட அவள் போரில் தன் கணவன் நிலை என்ன என்று யோக சக்தியால் கண்டு கூற வேண்டினாள்.

கற்புக்குப் பங்கம்

இதோ உன் கண்முன் காட்டுகிறேன் என்றார் அவர். அப்போது வெட்டுண்டு இறந்து போன ஜலந்தரனுடைய உடலை இரண்டு வானரங்கள் கொண்டு வந்து போட்டன. அதைக் கண்டு பிருந்தை கதறி அழுதாள். அவள் முனிவரிடம் கணவன் உடலை உயிர்ப்பித்துத் தரவேண்டினாள். திருமால் ஜலந்தரன் உடலில் புகுந்து உயிர் கொண்டு அவளைக் கூடிட அவளுடைய கற்புக்குப் பங்கம் ஏற்பட்டது.

அதை அறிந்த பிருந்தை அதிர்ச்சி அடைந்து கதறி அழுதாள். திருமாலுக்குச் சாபம் அளித்தாள். அவர் மனிதனாகப் பிறந்து, மனைவியை அரக்கர்களிடம் பறிகொடுத்து உதவிக்குக் குரங்குகளையே நாட வேண்டும் என்றாள். மேலும் அவள் தன் களங்கத்தை நீக்கத் தீக்குளித்து உயிர் விட்டாள். திருமால் ‘பிருந்தே’ என்று அலறிக் கொண்டே அவளது சாம்பலில் விழுந்து புரண்டார்.

துளசி பிருந்தா

அப்போது பார்வதி தேவி அங்குத் தோன்றித் திருமாலின் துக்கத்தைப் போக்க பிருந்தையின் சாம்பலைத் துளசி ஆக்கினாள். அந்தத் துளசியை அணிந்து திருமால் பித்தம் தெளிந்தார் என்கிறது இந்து மதம். இறந்த உடலில் எப்படி திருமால் நுழைய முடியும்? அறிவியலில் அது சாத்தியமா? அது மட்டுமல்ல; பிருந்தை சாம்பல் துளசியாக மாறுமா? தாவரஇயல் கருத்துப்படி இது சரியா? இப்படி வடிகட்டிய மூடக் கருத்துகளைக் கொண்டுள்ள இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா? மதந்தான் இப்படியென்றால், அதன் கடவுள் ஏதாவது யோக்கியதையான கடவுளா? “லோ லோ’’ என்று காமவெறி கொண்டு அலைந்து, கண்டகண்ட பெண்களை வலிய புணரும் பொறுக்கிகளாக அல்லவா அவர்கள் இருக்கிறார்கள்?

(சொடுக்குவோம்)
- சிகரம்


செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (8) in FaceBook Submit அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (8) in Google Bookmarks Submit அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (8) in Twitter Submit அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (8) in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.