Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> முந்தைய இதழ்கள் -> 2017 -> மே 01-15 -> பறிக்கப்படும் மாநில உரிமைகள்! எச்சரிக்கை எச்சரிக்கை!!
  • Print
  • Email

ஒற்றைக் கலாச்சார முயற்சி ஒற்றையாட்சி நோக்கி
 நீள்கிறது!

பறிக்கப்படும் மாநில உரிமைகள்! எச்சரிக்கை எச்சரிக்கை!!

- மஞ்சை வசந்தன்

வளர்ச்சி என்ற கவர்ச்சி காட்டி மக்களை குறிப்பாக இளைஞர்களை கார்ப்பரேட் ஊடகங்களின் உதவியுடன் ஏமாற்றி, மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது பி.ஜே.பி. கட்சி. அதற்கு மோடி என்ற ஒரு கைதேர்ந்த நடிகரை களமிறக்கி, இன்றுவரை அவரை வைத்து பல காட்சிகளைத் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.

ஆட்சியில் அமர்ந்து ஆள்வது பா.ஜ.க. என்றாலும், அப்பதுமையை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். என்ற மதவெறி அமைப்புதான். இந்த ஆர்.எஸ்.எஸ். 1925இல் தொடங்கும்போது எவையெல்லாம் நோக்கங்களாகக் கொள்ளப்பட்டனவோ, அவையெல்லாம் இன்று பி.ஜே.பி ஆட்சிமூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்திய மக்களாட்சியின் மாண்பு:

இந்திய மக்களாட்சியின் அடிப்படையே, பன்முகத் தன்மையை பரந்த மனத்தோடு ஏற்று, மத இணக்கம், மரபுகளை மதித்தல், மனிதநேயம் காத்தல், சம உரிமை, சமநீதி, சமூகநீதி, சம வாய்ப்பு ஏற்படுத்துதல் போன்றவைதான். ஆனால், இதற்கு நேர் எதிரான கொள்கையும் செயல்திட்டமும் உடையது ஆர்.எஸ்.எஸ்.

ஒற்றைக் கலாச்சாரம்:

இந்தியா ஒரு கூட்டாட்சிக் குடியரசு. இது பல்வேறு இயற்கைக் சூழலும், மரபுச் சூழலும், பண்பாட்டு நிலையும், பல மொழிப் பேசும் பகுதிகளையும், பல மதங்களைப் பின்பற்றும் மக்களையும் கொண்டது.

ஆனால், இவற்றை முற்றாக ஒழித்து, ஒரே கலாச்சாரம் _ ஆரிய சனாதன கலாச்சாரம்; ஒரே மொழி _ ஆரியர்களின் சமஸ்கிருதம்; ஒரே மதம் _ இந்து மதம் என்று பெயர் சூட்டப்பட்ட, ஆரிய சனாதன மதம்; ஒரே கடவுள் _ இராமன் மட்டுமே இருக்க வேண்டும், மற்றதெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற பாசிச வெறியுடன், ஆதிக்கக் கொள்கையுடன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றனர்.

ஆட்சிக்கு வந்த 10 நாள்களில்

மோடியின் தலைமையில் பா.ஜ.க. (ஆர்.எஸ்.எஸ்.) ஆட்சிக்கு வந்த 10 நாள்களில்,

சமஸ்கிருதம் ஆட்சிமொழி

பகவத்கீதை தேசிய நூல்

மானியங்கள் ரத்து

100 நாள் வேலைக்கு முடிவு

விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிப்பு

பிற மதத்தார் மீது தாக்குதல்

இந்துக்களைத் தவிர மற்றவரெல்லாம் வெளியேற வேண்டும்!

மாட்டுக்கறியைச் சாப்பிடக் கூடாது!

மாட்டு மூத்திரத்தை மருந்தாக்கு!

சோதிடத்தை விஞ்ஞானமாக்கு!

என்று ஆர்.எஸ்.எஸின், ஆரியப் பார்ப்பன ஆதிக்கச் செயல் திட்டங்கள் ஒவ்வொன்றாக அரங்கேறின.

பிற மதத்தினர் மீது தாக்குதல்:

“இந்து மதத்தை ஏற்றுக்கொள்! இல்லையென்றால் இந்தியாவை விட்டு வெளியேறு!’’ என்ற கண்டிப்புடன் வெறிகொண்டு தாக்குகின்றனர். பிற மதத்தவர்களின் வழிபாட்டு இடங்களைத் தகர்க்கின்றனர். அவர்கள் விரும்பி உண்பதைத் தடுக்கின்றனர். மீறினால், கொலைவெறியுடன் தாக்கிக் கொல்கின்றனர். இவற்றையெல்லாம் மத்திய அரசு பார்வையாளனாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஒடுக்கப்பட்டோர் உயர்வைத் தடுத்தல்:

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் போராடிப் பெற்ற உரிமைகளால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அழுத்தி, நசுக்கி, ஒடுக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு, உரிமைப் பறிக்கப்பட்ட மக்கள், மெல்ல மெல்ல வாய்ப்புகளைப் பெற்று மேலேழுந்து வந்ததோடு சாதிக்கவும் செய்தனர்.

தகுதித் திறமைக்குத் தாங்களே பிறந்து வந்தவர்கள்; அவை பிறப்பால் வருவது; எனவே, பரம்பரைத் தொழிலைச் செய்வதே சிறந்தது என்று பிறவி பேதம் சொல்லி, ஜாதியாதிக்கம் செய்தவர்களை முறியடித்து, உயர் மதிப்பெண், உயர் பதவி, உயர் ஆற்றல் என்று ஒடுக்கப்பட்டோர் உயர உயர எழுந்தனர்.

இதைக் கண்டு பொறுக்காத ஆரியப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். கூட்டம், தங்களுக்குக் கிடைத்த ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, கொல்லைப்புற வழியாக, கள்ளத்தனமாக, மாற்றம், வளர்ச்சி என்ற மாய பிம்பங்களைக் காட்டி, ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து வருகின்றனர்.

உயர்கல்வி நிறுவனங்களில் சதி:

ஆரியப் பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கத்திலிருந்த உயர்கல்வி நிறுவனங்களில் அண்மைக் காலமாகப் பிற்படுத்தப்பட்ட வர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் மெல்ல மெல்ல நுழைந்து, சாதனை புரியத் தொடங்கினர். இதைக் கண்டு கலங்கிய ஆதிக்கக் கூட்டத்தினர், அவர்களுக்கு பலவகையிலும் தடைகள் போட்டு, மடைகள் கட்டி, உதவிகளைப் பறித்து, வழிகாட்டலை மறுத்து, ஓரவஞ்சனையாக, ஒருதலைப்பட்சமாக, நடந்து, ஒடுக்கப்பட்ட திறமையுள்ள மாணவர்கள் நொந்து, வெந்து, வெந்து வேதனையின் விளிம்பிற்குச் சென்று, தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு ஆளாக்கப்பட்டுள்ள கடுமையும், கொடுமையும் அவலமும் வளர்ந்து வருகின்றன.

தாழ்த்தப்பட்ட மாணவன் உயர் மதிப்பெண் பெற்றுவிட்டான் என்பதற்காக உயர்ஜாதி மாணவர்கள் ஒன்று சேர்ந்து அவனைத் தாக்கும் நிகழ்வுகள்கூட நடந்துள்ளன.

காதல், கலப்பு மணத்திற்கு எதிர்ப்பு:

மனித மாண்பின், மனிதநேய மலர்ச்சியின், சமத்துவ எண்ணத்தின் உச்சத்தில் கலப்பு மணங்கள் நிகழ்கின்றன. கலப்பு மணம் செய்து கொள்வதற்கென்று ஒரு மனத் திட்பம், உயர்நோக்கு, பகுத்தறிவு வேண்டும். அப்படிப்பட்ட பண்பட்ட ஓர் உயர் செயலை அடித்து, தாக்கி, கொலை செய்து தகர்க்கும் வேலையைத் தொடர்ந்து செய்கின்றனர்.

அண்ணன் தங்கை சேர்ந்து சென்றால்கூட, அவர்களை அடித்து வதைக்கும் கொடுமைகூட ஆங்காங்கே அன்றாட நிகழ்வாக்கி, பெண்களை வீட்டுக்குள் முடக்கவும், சாதியைப் பாதுகாக்கவும் முற்படுகின்றனர்.

ஹிந்தித் திணிப்பு:

சமஸ்கிருதம் என்ற ஒற்றை மொழியைத் திணிக்க, இடை ஏற்பாடாக இந்தியைத் திணிக்க முற்படுகின்றனர். பொதுமொழியாய், தொடர்பு மொழியாய் பயன்படுத்தப்படும் ஆங்கிலத்தை அறவே அகற்ற முயற்சிக்கின்றனர்.

சமூகநீதிக்கு சமாதி:

எப்படியாவது இடஒதுக்கீட்டை ஒழித்துவிட வேண்டும் என்று முயன்றவர்கள், அது முடியாமல் போகவே, அரசுத் துறையை ஒழித்து, கார்ப்பரேட்டுகளை வளர்ப்பதன் மூலம் இடஒதுக்கீட்டை ஒழிக்க குறுக்கு வழியைப் பின்பற்றுகின்றனர்.

தனியார் துறையில் இடஒதுக்கீடு இல்லையென்பதால், தனியார் மயமாக்கல் மூலம் இடஒதுக்கீட்டை ஒழிக்க முயலுகின்றனர்.

இப்படி ஒற்றைக் கலாச்சாரத்தை -_ அதாவது ஆரியக் கலாச்சாரத்தை, இந்தியாவில் வாழும் அனைத்து மக்கள் மீதும் பல வழிகளில் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் இவர்கள், அடுத்தகட்டமாக ஒற்றை ஆட்சியை அமல்படுத்துவதற்கான ஆயத்த வேலைகளைத் தொடங்கியுள்ளனர்.

மாநில உரிமைகள் பறிப்பு:

1. இடஒதுக்கீடு:

“மண்டல் குழு பரிந்துரை நடைமுறை பற்றிய உச்சநீதி மன்ற தீர்ப்பில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தினை மத்திய அரசு அமைத்திட வேண்டும் எனக் கூறப்பட்டது.

இந்த ஆணையத்தின் மூலம் சமூகரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு, நேரடி மத்திய அரசின்,  அதிகாரவரம்பிற்குள் வரும் நிறுவனங்களின், கட்டுப்பாட்டிற்குள் உள்ள நிறுவனங்களின் பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை வாய்ப்பினை அளித்திடவேண்டும். மாநில அரசுகளும், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தினை அமைத்து மாநில அரசின் நேரடி அதிகாரம் மற்றும் கட்டுபாட்டில் உள்ள பணிகளில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம் பெற்றிடுவதற்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோரைக் கண்டறிய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

எனவே சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட ஜாதியினரைச் சேர்க்கவோ, நீக்கவோ மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் திறம்பட, சரியாக செயல்பட முடியும். மாநில அளவில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுப் பயனைப் பெற்றிட முடியும். இந்தப் பணியினை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் செய்திட இயலாது. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் சமூக, கல்வி அடைப்படையில் பிற்படுத்தப்பட்டோரிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என சில ஜாதியினர் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். சில மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் நான்கு பிரிவினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசு சார்ந்த இடஒதுக்கீட்டிற்கான பிற்படுத்தப்பட்டோரைத்தான் அடையாளப்படுத்த முடியும். தேசிய ஆணையம் மாநில அளவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு உரியவர்களை கண்டறிய முடியாது.

தாழ்த்தப்பட்டோரில் உள்ஒதுக்கீடு பெறுவதற்கான பணியினை தேசிய ஆணையம் செய்திட இயலாது.

பட்டியலிடப்பட்ட ஜாதியினரை தீர்மானிக்கும் அதிகாரத்தினை அரசமைப்புச் சட்ட விதி 341-_ம் பட்டியலிடப்பட்ட பழங்குடி மரபினரை தீர்மானிக்கும் - அதிகாரத்தினை விதி 342_-ம் இந்திய குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. புதிதாக 123-ஆம் திருத்ததின் மூலம் சேக்கப்படவுள்ள புதிய விதி 342ஏ-இன்படி சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை, மாநில அளவில் உள்ள இடஒதுக்கீட்டிற்கும் தீர்மானிக்கும் அதிகாரத்தினை குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது. இந்த புதிய விதி தீங்கு விளைவிக்காது போன்ற தோற்றத்தினைக் காட்டும். ஆனால் இந்த புதிய விதி 342-ஏ நடைமுறைக்கு வந்தால் சமூக ரீதியில், கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு சரி செய்திட முடியாத சேதத்தினை விளைவிப்பதோடு, இதர பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டுக்கு தீங்கு விளைவித்துவிடும்.

புதிய விதிகள் 342ஏ மற்றும் 366(26சி) ஆகியவை 123ஆம் அரசமைப்புச் சட்டத்திருத்தம் நடைமுறையானால் சமூக ரீதியில், கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்டோரைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு மட்டுமே வழங்கிவிடும். மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்டோரை தீர்மானிக்கும் அதிகார உரிமையினை இழந்துவிடும். மாநில அரசுகளுக்கு இருந்து வந்த அந்த உரிமையினை மத்திய அரசு பறிப்பதாக ஆகிவிடும். இது இந்திய கூட்டாட்சி அரசியல் அமைப்பின் மீதான வெளிப்படையான தாக்குதலும் அவமதிக்கும் செயலுமாகும்.

இதனால் மாநில அரசுகள் தங்களது மாநில மக்களுக்கு தேவைப்படும் நீதி சார்ந்த நிறைவேற்றங்களை வழங்கிடவோ, குறைகளைத் தீர்த்திடவோ உதவ முடியாத அரசுகளாக மாறிட நேரிடும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உருவாக்கப்பட்ட தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட்டம் 1993 (சட்டம் 27-1993)இன்படி ஆணையத்தின் தலைவராக பணியில் உள்ள அல்லது பணிநிறைவு பெற்ற உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிதான் நியமிக்கப்படவேண்டும் என கூறுகிறது. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதா எண் 70/2017இன்படி (123ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தம்) இந்த நியமன விதி திரும்பப் பெறப்படுகிறது. அதற்கு பதிலாக நாடாளுமன்றம் இயற்றிடும் சட்டத்தின் மூலம் (புதிதாக சேர்க்கப்படவுள்ள அரசமைப்புச் சட்டவிதி 338 ஆணைவிதி 2-இன்படி) ஆணையத்தின் தலைவரோ, துணைத் தலைவரோ மற்ற மூன்று உறுப்பினர்களோ இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர். அப்படி நியமனம் பெறுபவர்கள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்திடவோ இருந்திருக்கவோ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதன் மூலம் நீதிபதிகள் அல்லாத பிறரையும் ஆணையத்திற்கு நியமிக்கலாம் என்று மத்திய அரசு விரும்புகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தப் புதிய நியமன விதி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்திட விதிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்ட நியமன விதிகளுக்கு எதிரானது.

1993ஆம் ஆண்டு சட்டம் முழுமையாக திரும்ப பெற வேண்டிய அவசியம் இல்லை. பதிலாக பகுதி மிமிமில் உள்ள புதிதாக சேர்க்கப்பட உள்ள அரசமைப்புச் சட்டவிதி 342ஏ_-இன்படி பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு பற்றி மாநில அரசின் வசம் உள்ள அதிகாரங்கள் பறிபோய்விடும். இந்த விதி நடைமுறைக்கு வந்தால் மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள ஜாதியினரை சேர்க்கவோ நீக்கவோ கொண்டிருந்த அதிகாரத்தினை இழந்துவிடும். அந்த அதிகாரத்தை மத்திய அரசு முழுமையாகக் கைப்பற்றிவிடும். அரசமைப்புச் சட்டம் வலியுறுத்திவரும் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோரை அங்கீகரிக்கும் பணி குடியரசுத்தலைவர் வசம் போய்விடும். மத்திய அரசின் பரிந்துரையின் பேரிலேயே குடியரசுத் தலைவர் பிற்படுத்தப்பட்டோரை அங்கீகரித்திட முடியும்.

முடிவாக, அரசமைப்புச் சட்ட 123 - ஆம் திருத்த மசோதா சட்ட வடிவமாக்கப்பட்டால், மாநிலங்கள் தங்களது. வரம்பில் கையாண்டுவரும் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பற்றிய அதிகாரத்தைப் பறிக்கொடுக்க நேரிடும். இந்த திருத்த மசோதா, மண்டல் குழு பரிந்துரை மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை பற்றிய வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது புதிதாக சேர்க்கப்பட உள்ள அரசமைப்புச் சட்டவிதி 342 ஏ கூட்டாட்சியினை பங்கப்படுத்திவிடும். மாநில அரசுகள் எச்சரிக்கையும் விழிப்புணர்வும் கொண்டு தங்களது அதிகார உரிமைகளை பாதுகாத்திட முன்வராவிட்டால் தங்களது அதிகாரங்களை இழந்துவிட நேரிடும்’’ என்று டாக்டர் நீதிபதி ஏ.கே.இராஜன் அவர்கள் எச்சரிக்கிறார். இதை இந்தியாவிலுள்ள அனைத்து மாநில அரசுகளும், ஒடுக்கப்பட்ட மக்களும் கருத்தில் கொண்டு களம் இறங்கி, உரிமைகளை மீட்க வேண்டும்.

2. கல்வி:

புதியக் கல்விக்கொள்கையென்ற பெயரில் மாநில உரிமைகளைப் பறிக்க பா.ஜ.க. அரசு முற்படுகிறது.

கல்வி முதலில் மாநில உரிமையில் இருந்தது. பின் அது பொதுப் பட்டியலில் கொண்டுவரப்பட்டு மத்திய மாநில அரசுகளின்அதிகாரத்தில் வந்தது.

தற்போதைய பி.ஜே.பி. அரசு கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில், உரிமையில் கொண்டுவர ஒவ்வொரு செயலாகச் செய்து வருகிறது. அதன்வழி கல்வியைக் காவிமயமாக்கி, மூடநம்பிக்கைகளை, மதவெறியை, ஜாதி பேதத்தை மாணவர் மண்டையில் ஏற்றவும், சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்கவும் முயற்சிக்கின்றனர்.

3. நுழைவுத் தேர்வு:

நுழைவுத் தேர்வு என்ற நூதன மோசடியின் மூலம் மாநில அரசின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை பா.ஜ.க. அரசு பறிக்க முற்படுகிறது. எடுத்துக்காட்டாக, மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பு இவற்றின் உரிமை மாநில அரசிடம் இருந்ததால் தமிழகம் மருத்துவக் கல்வியிலும், மருத்துவத்திலும் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளது.

ஆனால், தற்போது மத்திய அரசு நுழைவுத் தேர்வைக் கொண்டுவந்து மற்ற மாநிலத்தவரை தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நுழைத்து, தமிழக மாணவர்களின் வாய்ப்பைப் பறிக்கிறது. இதன்வழி மாநிலத்தின் உரிமை பறிபோவதோடு, மருத்துவத் தரமும் குறைந்துபோகும் அவலம் உள்ளது.

4. பொருளாதாரம்:

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது மாநிலங்களிலிருந்து மத்திய அரசு பெறும் வருவாயில் 42% தொகையை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. தற்போது பா.ஜ.க. அரசு 32% தொகையை மட்டுமே மாநிலங்களுக்கு வழங்குகிறது.

ரேஷன் வழங்க மாநிலங்களுக்கு உரிய பொருட்களை வழங்காமையால் ரேஷன் கடைகளை மூடும் அபாயம் வந்துள்ளது.

இச்செயல் மாநில உரிமையைப் பறிப்பதோடு, மாநிலத்தின் நிதி வருவாயையும் பாதித்து, அதன்மூலம் மாநில அரசின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

நூறுநாள் வேலைவாய்ப்புக்கு மத்திய அரசு வழங்கிய நிதியையும் வெகுவாகக் குறைத்து, மாநில மக்களின் வருவாயைக் குறைத்து, மாநில வளர்ச்சியைக் கெடுக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது இத்திட்டத்திற்கு 49,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், பி.ஜே.பி அரசு இத்தொகையை 38,000 கோடியாகக் குறைத்துவிட்டது.

5. விவசாயத்தைப் புறக்கணித்தல்:

விவசாயத்தைப் பாவச் செயலாய்க் கருதும் ஆரியப் பார்ப்பனக் கூட்டம் அதை அறவே அழித்தொழிக்க முற்படுகின்றனர். இந்தியாவில் 80% மக்கள் வேளாண்மையை நம்பியுள்ள நிலையில் அதை அறவே புறக்கணித்து, விவசாயிகள் வறுமையில் வாடி மடியக் காரணமாய் உள்ளனர்.

மத்திய அரசு விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய முன்னுதாரணம் இல்லை என்ற அப்பட்டமான பொய்யை அன்றாடம் சொல்லி வருகின்றனர்.

1989இல் வி.பி.சிங் அரசு 10,000 கோடி ரூபாய் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தது. அது தற்போதைய மதிப்பில் பல லட்சம் கோடி ரூபாய் ஆகும். அதன்பின் காங்கிரஸ் அரசு 60,000 கோடி ரூபாய் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தது. உண்மை இப்படியிருக்க மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்வது வழக்கமில்லையென்ற அப்பட்டமான பொய்யை மோடி அரசு சொல்லி மோசடி செய்கிறது.

மற்ற மாநிலங்கள் கேட்ட நிவாரணத் தொகையில் 70% கொடுத்த மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக அரசு கோரியதில் மிகச் சொற்பத் தொகையே (21%) ஒதுக்கியுள்ளது.

கார்ப்பரேட் கம்பெனிகள், பெரும் பணக்காரர்கள் வங்கியில் வாங்கிய கடனில் வாராக் கடன் தொகை 5 லட்சத்து 51,200 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்த மத்திய பி.ஜே.பி. மோடி அரசு, விவசாயிகளின் கடனைத் தள்ள முடியாது என்பது இந்திய விவசாயிகளுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்பதோடு, மாநில உரிமைகளை முற்றாகப் புறக்கணித்து, மத்திய அரசின் ஆதிக்கத்தை நிலைநாட்டி, மாநிலங்களைக் கையேந்தி நிற்கச் செய்துள்ளனர்.

6. ஒற்றை ஆட்சியை நோக்கி:

ஒற்றைக் கலாச்சாரத்தை உருவாக்கும் முயற்சியைத் தொடர்ந்து இந்தியாவில் ஒற்றை ஆட்சி முறையை உருவாக்க பி.ஜே.பியின் பின்நின்று ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்கிறது.

7. உயர் அதிகாரங்களில் ஆர்.எஸ்.எஸ்.:

இதன் முதற்படியாக, ஆளுநர் முதல் இராணுவம் வரையுள்ள அனைத்து உயர் அதிகார பீடங்களிலும், புடம்போட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத் தேர்வு செய்து பணியமர்த்தும் வேலையைத் தொடங்கி விட்டனர்.

8. வடமாநிலத்தவர் தென்னாட்டில்:

இரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி பேசும் வடமாநிலத்தவரை அதிகம் நுழைக்கும் முயற்சியை பி.ஜே.பி. மத்திய அரசு செய்து வருகிறது.

9. மாநிலக் கட்சிகளை அழித்தல்:

இந்தியா முழுக்க தனது கட்சியின் ஒற்றையாட்சியே நடைபெற வேண்டும் என்ற முதன்மை இலக்கில், மாநிலக் கட்சிகளைப் பிரித்து அழிக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். இறங்கியுள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்குப் பின், அ.இ.அ.தி.மு.க. கட்சியை பி.ஜே.பி.யும் ஆர்.எஸ்.எஸ்.ம் எப்படிக் கூறுபோட்டு நார்நாராய்க் கிழித்துத் தங்களின் கைப்பாவையாக ஆக்க முற்படுகின்றனர் என்பதைக் கூர்ந்து நோக்கினாலே இந்த உண்மைப் புலப்படும்.

10. காங்கிரஸை ஒழித்தல்:

மாநிலக் கட்சிகளை ஒழிக்கும் பணியைச் செய்துகொண்டே காங்கிரசை அழிக்கும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸை ஒழித்து விட்டால், இந்தியா எங்கும் ஒற்றைக் கட்சி ஆட்சியை, காவி ஆட்சியை, ஆரிய பார்ப்பன சனாதன ஆட்சியை அமைத்துவிடலாம் என்பதே அவர்கள் கணக்கு, திட்டம்!

11. ஆர்.எஸ்.எஸ். ஜனாதிபதி:

ஒற்றை ஆட்சியின் முதல் முயற்சியாக, ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரை குடியரசுத் தலைவராக்கி அதன்மூலம் அனைத்து அரசியல் சட்டங்களையும் தங்கள் விருப்பம்போல் நிறைவேற்றி அவர்களின் ஆரிய ஆதிக்க ஆட்சியை இந்து இராஷ்ட்டிரம் என்ற பெயரால் அமைக்க முயலுகின்றனர். எனவே, எல்லா மாநிலக் கட்சிகளும் எல்லா தேசிய எதிர்க்கட்சிகளும் எச்சரிக்கையாய் ஒற்றுமையாய் இருந்து இச்சதியை முறியடிக்க வேண்டும். அதற்கான செயலில் இப்போதே இறங்கி ஆகவேண்டும். இது அவசியம், அவசரம்! 

 

 

 

 

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit பறிக்கப்படும் மாநில உரிமைகள்! எச்சரிக்கை எச்சரிக்கை!! in FaceBook Submit பறிக்கப்படும் மாநில உரிமைகள்! எச்சரிக்கை எச்சரிக்கை!! in Google Bookmarks Submit பறிக்கப்படும் மாநில உரிமைகள்! எச்சரிக்கை எச்சரிக்கை!! in Twitter Submit பறிக்கப்படும் மாநில உரிமைகள்! எச்சரிக்கை எச்சரிக்கை!! in Twitter

உண்மையில் தேட

wrapper

  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.