ஆறு.கலைச்செல்வன்
குமாருக்கு கோபம் கோபமாக வந்தது. “திருமணத்தை சிக்கனமாக நடத்த வேண்டுமாம். நம்மிடம் பணம் இல்லையா? அப்பா இன்னமும் அவர் காலத்திலேயே இருக்கார்’’ என அவன் வாய் முணுமுணுத்தது.
மேசையின்மீது அச்சடிக்கக் கொடுப்பதற்காக அவன் எழுதிவைத்த திருமண அழைப்பிதழின் மாதிரி கிடந்தது. அதை முறையாக எழுதி முடிக்க வேண்டும். ஆனால், அவனுக்கு அப்போது எதிலும் ஈடுபாடு இல்லாத நிலையில் அப்படியே படுக்கையில் விழுந்து உறங்கிவிட்டான்.
குமாருக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவனது குடும்பம் வசதியானது. அப்பா மூர்த்தி சொந்தமாகத் தொழில் செய்து வந்தார். ஆனாலும், அவனுடைய தந்தை சிறுவயதில் ஏழ்மையில் இருந்து பிறகு தனது உழைப்பின்மூலம் படிப்படியாக உயர்ந்து இன்று வசதியான நிலையில் இருப்பவர். அவனுடைய அம்மா குமுதம் தன் கணவருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக விளங்கினார்.
அவர்களின் ஒரே மகன் குமார். படித்துவிட்டு நல்ல வேலையிலும் உள்ளான். அவன் விருப்பப்படியே அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணையே மணமுடிக்க முடிவு செய்தார். திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டு விட்டது.
மூர்த்தி கொள்கைவாதி. சிறுவயதில் அனுபவித்த துயரங்களிலிருந்து பாடம் கற்றவர். தற்போது வசதியான நிலையில் இருந்தாலும் மிகவும் எளிமையானவர். தன் மகனின் திருமணத்தை தடபுடலாக நடத்தாமல் எளிமையாகவே நடத்த விரும்பினார். ஆனாலும், அவர் துணைவியார் குமுதமும், மகன் குமாரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
“ஏங்க, நமக்கு இருக்கறது ஒரே புள்ள. அவனுக்கு பெருசா கல்யாணம் பண்ணி கண்குளிரப் பார்க்க வேண்டாமா? கல்யாணத்தில் கஞ்சத்தனம் காட்டணுமா?’’ என்று மூர்த்தியிடம் வாதிட்டார் குமுதம்.
“திருமணம் என்பது ஓர் ஆணும் ஒரு பெண்ணும் செய்து கொள்ளும் வாழ்க்கை ஒப்பந்தம். அதற்கு எதுக்கு வீண் ஆடம்பரச் செலவுகள்? அந்தப் பணத்தை சேமிச்சு வச்சிருந்தா பின்னாளில் அவங்களுக்கு உதவுமில்லையா? என்னைப்பத்தி என்னோட நண்பர்கள் எல்லாம் சொல்றப்போ என்னோட எளிமையைப் பத்திதான் புகழ்ச்சியா சொல்வாங்க. அப்படிப்பட்ட நான் உன் கல்யாணத்தையும் எளிமையாத்தானே நடத்தணும்! அப்பத்தானே எனக்கும் மரியாதை!’’ என்று மகனிடம் கூறினார் மூர்த்தி.
“நீங்க நல்ல பேரு வாங்க என்னோட கல்யாணம்தானா கெடைச்சுது’’ என்று மனதுக்குள் முனகிக் கொண்டான் குமார்.
“சாதாரண திருமண மண்டபமே போதும், நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்ப வேண்டும், தேவையற்ற அலங்காரங்கள் வேண்டாம், சுயமரியாதைத் திருமணம், எளிமையான அழைப்பிதழ் என்பது போன்ற தனது விருப்பங்களையெல்லாம் துணைவியாரிடமும் மகனிடமும் தெரிவித்தார் மூர்த்தி.
மேலும், திருமணத்திற்கு வருபவர்களுக்கு அன்பளிப்பாக அறிவுசார் புத்தகம் மட்டுமே தர வேண்டும் என்றும் கூறிவிட்டார். அறிவுசார் நூல்களே உலகை நல்வழிப்படுத்தும் என்பதில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
“எனது விருப்பத்தைத் தெரிவித்துவிட்டேன். இனி நீங்கள் இருவரும் எப்படி வேண்டுமானாலும் முடிவு செய்து கொள்ளலாம். கல்யாணச் செலவுக்கு நீங்கள் கேட்கும் பணத்தை நான் கொடுத்து விடுகிறேன். அதை சிக்கனமாகப் பயன்படுத்திக்கொண்டு மீதிப் பணத்தை சேமிப்பாக வைத்துக்கொள்வது உங்கள் பொறுப்பு’’ என்று கூறிவிட்டுத் தன் பணியில் கவனமாக இருக்கத் தொடங்கிவிட்டார் மூர்த்தி.
குமார் மிகவும் குழம்பிப் போய் விட்டான். “திருமண அழைப்பிதழ்கூட எளிமையான முறையில் இருக்க வேண்டுமென அப்பா சொல்கிறாரே! திருமண மண்டபம், உணவு ஏற்பாடு கூட எளிமையாக இருக்க வேண்டும் என்கிறாரே!’’ என்ன செய்வது என யோசித்தான்.
நண்பர்களைக் கலந்தாலோசித்தான். அதில் பலரும் அவனுக்கு ஆதரவாகவே பேசினார்கள்.
“மணமகள் வீட்டிலும், அவர்களின் உறவினர்களும், நண்பர்களும் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்? கருமிகள் என்றல்லவா நினைப்பார்கள்?’’ இவ்வாறெல்லாம் யோசித்த குமார் இதுபற்றி, தான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் மணமகள் நிர்மலாவிடமே பேசிவிடலாம் என நினைத்து அவளை தொலைபேசியில் அழைத்துப் பேசினான்.
“மாமா சொல்வது சரிதானே சிக்கனமாகச் செலவு செய்வது நல்லதுதானே’’ என்றாள் நிர்மலா.
“கல்யாணத்தில் என்ன சிக்கனம் வேண்டிக்கிடக்கு! நம்ம நண்பர்கள் நம்மைப் பற்றி என்ன நெனைப்பாங்க. ரெண்டு பேரும் ஒரே இடத்திலதான் வேலை செய்றோம். நமக்குப் பணக் கஷ்டம் ஒண்ணுமில்லியே? அப்பாவும் நெறையவே பணம் வைச்சிருக்காரே’’ என்றான் குமார்.
“சிக்கனம் நம் குடும்பத்தைக் காக்கும். ஆனால், சேமிப்பு நாட்டையே காக்கும்’’ என்று சொல்லிச் சிரித்தாள் நிர்மலா. அவளே மேலும் பேசினாள்.
“சிக்கனம் என்பது கருமித்தனம் அல்ல. நம் வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொள்வதில் தவறில்லை. நம் பெற்றோர்களும் நமக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்காமல் இல்லை. ஆனாலும் பல குடும்பங்களில் தங்கள் பெருமைகளைப் பறைசாற்ற அதிக அளவில் திருமணத்தில் செலவு செய்துவிட்டு பிறகு கடன்காரர்களாக அலைவதை நானும் பார்த்திருக்கேன். அந்த நெலைமையெல்லாம் நமக்குத் தேவையில்லையல்லவா? என் தோழிகள் சிலரின் திருமணங்களுக்கு நான் சென்றிருந்தபோது பல இடங்களில் உணவுப் பொருள்கள் வீணாவதைப் பார்த்திருக்கிறேன். நாம் அதையெல்லாம் தவிர்க்க வேண்டும்’’ என்று நீண்ட பிரசங்கமே செய்தாள்.
இருந்தாலும் குமார் மனம் ஒப்பவில்லை. சீரும் சிறப்புமாக நடத்த வேண்டுமென்றே விரும்பினான். திருமண அழைப்பிதழையே இதுவரை யாருமே அச்சடித்திராத வகையில் மிகச் சிறப்பாக அச்சடிக்க முடிவெடுத்தான்.
அடுத்த சில நாள்களில் அவனே பல இடங்களுக்கும் சென்று பல ஏற்பாடுகளைச் செய்ய முற்பட்டான். பிரம்மாண்டமான மண்டபங்களுக்குச் சென்று வாடகை பற்றி விசாரித்தான். மிகவும் விளம்பரமாகிப் புகழ் பெற்ற சமையல்காரரைத் தேடினான். அழைப்பிதழ் அட்டைகளை தேர்வு செய்ய கடைகடையாகத் தேடி அலைந்தான். புகழ்பெற்ற இசைக்கச்சேரி வல்லுநர்களைத் தேடினான். ஆனால் எதிலும் அவனுக்கு திருப்தி ஏற்படவில்லை.
இவன் ஒரு சமையல்காரரைத் தேர்வு செய்தால் அவனுடைய நண்பர்கள் சிலர் அவரைவிட சிறப்பான வேறு ஒரு சமையல்காரரைப் பரிந்துரை செய்தனர். இப்படி பலவற்றிலும் அவனுக்கு மன நிறைவு ஏற்படாததால் எதையும் தேர்வு செய்யாமல் நாள்களைக் கடத்தினான்.
அவனது தந்தை மூர்த்தியும் அவன் எண்ணப்படியே விட்டுவிட்டார். ஆனால், சிக்கனம் பற்றிச் சொல்ல வேண்டிய கருத்துகளையும் அவ்வப்போது சொல்லிவந்தார்.
திருமணத்திற்கான நாள் நெருங்கிவிட்டது. எந்த ஏற்பாட்டையும் குமாரால் முடிக்க முடியவில்லை.
இந்நிலையில் ஒரு நாள் அவன் பெயருக்கு ஒரு ‘பார்சல்’ வந்தது. நிர்மலாதான் அனுப்பியிருந்தாள். பிரித்துப் பார்த்தான்.
உள்ளே.....
நிறைய புத்தகங்கள். அனைத்தும் பகுத்தறிவூட்டும் அறிவுசார்ந்த புத்தகங்கள்.
“இவைகளை ஏன் இப்போது அனுப்பினாள்? போனில்கூட அவள் பேசவில்லையே?’’ என்று குழம்பினான் குமார். எரிச்சலும் அடைந்தான்.
ஆனாலும் நிர்மலா அனுப்பியது புத்தகங்களாயிற்றே! அவைகளில் ஒன்றை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். படித்துக் கொண்டே அப்படியே தூங்கிவிட்டான்.
மறுநாள் அவனுக்கு எந்தச் சிந்தனையும் ஓடவில்லை. நிர்மலா அனுப்பிய புத்தகப் பார்சலை மீண்டும் பார்த்தான். பத்து புத்தகங்கள் அதில் இருந்தன. ஒரு புத்தகத்தைப் படித்த நிலையில் மேலும் அடுத்தடுத்த புத்தகங்களையும் எடுத்துப் படிக்கலானான். இறுதியாக, “பெண் ஏன் அடிமையானாள்?’’ என்னும் புத்தகத்தையும் படித்து முடித்தான். இரண்டு நாள்கள் கடந்தன.
அடுத்த நாள் இரவு குமார் தனது தந்தை மூர்த்தியுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது தொலைக்காட்சியில் அறிவித்த செய்தி கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். உணவு பரிமாறிக் கொண்டிருந்த குமுதமும் அதிர்ச்சி அடைந்தார்.
“நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்பு இருப்பதால் நாளை முதல் இருபத்தோரு நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அது மேலும் நீடிக்கவும் வாய்ப்புள்ளது’’ இந்தச் செய்திதான் தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது.
மேலும் ஏற்கெனவே முடிவு செய்த திருமணங்கள் மட்டுமே நடத்தலாம் எனவும், குறைந்த அளவிலான உறவினர்களே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட செய்தியும் கூறப்பட்டது.
செய்தி கேட்ட மூர்த்தி அதிர்ச்சியுடன் குமாரைப் பார்த்து,
“குமார், உன் கல்யாணம் இந்த ஊரடங்கு நாளில்தான் நடக்க இருக்கு. என்ன பண்றது? இப்ப நடத்தினா நீ விரும்பியபடி தடபுடலா நடத்த முடியாது. அதனால திருமணத்தை ஒத்தி வைச்சுடலாம்’’ என்றார்.
அம்மாவும் அதை ஆமோதித்தார். ஆனாலும் குமார் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான்.
“குமார், ஏன் எதுவுமே பேசமாட்டேங்கறே? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?’’ என்றார் மூர்த்தி.
“இல்லப்பா. நான் ஏற்கெனவே எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சுட்டேன். சிக்கனமான, ஆனால் வசதியான மண்டபத்தையும் ஏற்பாடு செஞ்சுட்டேன். எல்லாத்தையுமே சிக்கனமா முடிச்சுட்டேன். அழைப்புகூட பல பேருக்கு செல்போன் மூலமா செய்தி அனுப்பவும் முடிவு பண்ணிட்டேன். திட்டமிட்ட நாளில் ஆடம்பரம் இல்லாம திருமணத்தை நடத்தி முடிச்சுடலாம்’’ என்றான் குமார்.
மூர்த்திக்கும் குமுதாவுக்கும் ஒரே வியப்பு! தடபுடலாக நடத்தத் திட்டமிட்டவன் எப்படி இவ்வளவு விரைவாக மாறினான்? என்று வியப்படைந்தனர்.
“தம்பி குமார், கொரோனா வைரஸ் பரவுது என்பதற்காக நீ இந்த முடிவுக்கு வந்ததா நெனைக்கிறேன். அதுக்காக உன்னோட விருப்பத்தை மீறி சிக்கனமாக நடத்த வேண்டாம். கொரோனா வைரஸ் நீங்கி ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு நீ விருப்பப்பட்டபடி சிறப்பாக நடத்திக்கலாம். இந்த நேரத்தில் தொழில் சம்பந்தமான வேலை நிறைய இருக்கறதால எல்லா வேலையையும் உன் கிட்டேயே விடும்படியா ஆயிடுச்சே’’ என்று வருத்தத்துடன் சொன்னார் மூர்த்தி.
“இல்லப்பா. நான் கொரோனா வைரசுக்காக பயப்படல. அதுக்காவும் மனம் மாறல’’ என்றான் குமார்.
“அப்புறம்?’’ என வினவினார் மூர்த்தி.
“நிர்மலா எனக்கு பகுத்தறிவுப் புத்தகங்கள் பத்து அனுப்பியிருந்தாள். அதையெல்லாம் படிச்சுப் பார்த்தேன். அதில், சொல்லப்பட்ட கருத்துகள்தான் என்னைச் சிந்திக்க வைத்தன.
நல்ல புத்தகங்கள் மனிதனை நல்வழிப்படுத்தும் என்பதையும் உணர்ந்து விட்டேன். எனது மன மாற்றத்திற்கு அதுதான் காரணம். சிக்கனம் என்பதும் ஒரு சேமிப்புதான் என்பதை உணர்ந்தேன். குறைஞ்சளவு உறவினர்களையும் நண்பர்களையும் வைச்சிக்கிட்டு திட்டமிட்டபடி திருமணத்தை நடத்திடலாம் அப்பா’’ என்றான் குமார்.
பெற்றோர் இருவரும் மகிழ்ந்தனர்.
திருமணம் முடிந்து சில நாள்கள் கடந்த பின் ஒரு செய்தியை நிர்மலா மூலம் குமார் அறிந்தான். ஆனாலும் அந்தச் செய்தி அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அந்தச் செய்தி,
பத்து பகுத்தறிவுப் புத்தகங்கள் நிர்மலா மூலம் குமாருக்கு வந்ததல்லவா! அதை நிர்மலா மூலம் அவளது ஒத்துழைப்புடன் குமாருக்கு அனுப்ப ஏற்பாடு செய்ததே மூர்த்திதான்.
அது மட்டுமா, திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் அன்பளிப்பாக அந்தப் புத்தகங்களையே வாங்கிக் கொடுத்தாரே பார்க்கலாம்!
தந்தையை நினைத்துப் பெருமைப்பட்டான் குமார்.