Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2021
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு(265)

அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு(265)

ஈழத்தில் நடக்கும் தமிழர் இனப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்துமாறு அய்.நா. பொதுச்செயலாளர் புட்ரோஸ்கலிக்கு பேக்ஸ் மூலம் அவசரச் செய்தியினை 28.10.1995 அன்று அனுப்பினேன். அதில்,

“சிறீலங்கா அரசாங்கம் _ அந்நாட்டு குடிமக்களான தமிழர் இனத்தவர் மீது ராணுவ அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

சொந்த நாட்டுக் குடிமக்களான பெண்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும் இனப் படுகொலை செய்து அழிக்கிறது. உணவு, உறைவிடம், மருத்துவ வசதிகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

நிராயுதபாணிகளாக நிற்கும் அந்த அப்பாவி மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றி மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் காக்க அய்.நா.மன்றம் தலையிட இதுவே சரியான தருணம். இலங்கையின் முப்படைத் தாக்குதல்களுக்கும் அந்த மக்கள் உள்ளாகி வருகிறார்கள்.

இலங்கையின் அண்டைப் பகுதியான இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு மக்கள் _ ஈழத் தமிழர்களோடு இனத்தால் ஒன்றுபட்டவர்கள்; இந்த நிலையில் மனித நேயத்தையும் மனித உரிமைகளையும் காப்பாற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ள அய்.நா.மன்றம் இதில் தலையிட்டு மனித நேயத்தையும் சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறோம். அதுவும் அய்.நா.மன்றம் பொன்விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டியது அவசியமாகும்.

இந்த நடவடிக்கைகளில் தாமதம் காட்டினால் _ அது அய்.நா.வின் நோக்கத்தையே தோல்விக்குள்ளாக்கியதாகும் என்பதையும் _ மிகுந்த கவலையுடன் சுட்டிக் காட்டுகிறோம். போஸ்னியா, தென்னாப்பிரிக்கா, பாலஸ்தீனப் பிரச்சினைகளில் _ தீவிரமாகத் தலையிடுவதுபோல் _ அய்.நா. இந்தப் பிரச்சினையிலும் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டிருந்தோம்.

ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்யும் சிங்கள அரசையும், வேடிக்கை பார்க்கும் இந்திய மத்திய அரசையும் கண்டித்தும், இந்தப் படுகொலை சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கைகயை தெரிவித்தும் 2.11.1995இல் அறிக்கையொன்றை வெளியிட்டோம். அதில்,

“சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் _ தமிழர்கள் யாழ் நகரை விட்டு _ யாழ் நகர் மக்களில் சுமார் 65 சதவிகிதத்தினர் வெளியேறி, உணவு, தண்ணீர் மற்றும் கூடாரம் அமைத்துக் கொள்ளக் கூட எந்த வசதியும் இல்லாமல் தவிக்கும் கொடுமை, உலக மகாக் கொடுமை அல்லவா? உலக வரலாற்றில் எந்த நாடு இதுவரை சொந்த நாட்டு குடிமக்கள் மீது குண்டுவீசி அழித்துள்ளது? தமிழகத்து மக்கள் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறார்கள் என்பதை இலங்கை அரசும், மத்திய அரசும் புரிந்து கொள்ளுங்கள். தமிழ் மக்களின் உணர்வுகளைக் காட்ட சிங்கள அரசுக்கும் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசுக்கும் எதிராக முக்கிய நகரங்களில் 6.11.1995இல் கண்டனப் பேரணிகள் நடைபெறும்’’ என பல்வேறு இனப் படுகொலைகளை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டோம்.

ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்துசென்னையில் நடைபெற்ற பேரணியில்கலந்து கொண்ட கழகப் பொறுப்பாளர்கள்

இதன் தொடர்ச்சியாக 3.11.1995 அன்று மதுரையில் நடைபெற்ற ஈழப் படுகொலை கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், “ஈழத் தமிழர்கள் படுகொலையில் மத்திய அரசு இதிலே தலையிட்டு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தின் வாயிலாக முதல்வருக்கு நான் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். இந்தப் பிரச்சினையில் யார் யோசனை தருகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், சட்டமன்றத் தொடர் முடிவதற்குள்ளாகவே மத்திய அரசை வலியுறுத்தி, இந்த இனப் படுகொலை நிறுத்தப்பட வேண்டும்’’ என்று ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற ஆளும் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்தோம்.

ஏற்கெனவே, திட்டமிட்டபடி 6.11.1995இல் தஞ்சையில் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து நடந்த கண்டனப் பேரணியில் கலந்துகொண்டு இலங்கை அரசை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பியபடி பல ஆயிரம் தோழர்களுடன் பேரணியாகச் சென்றோம். இறுதியில் நடந்த கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில், “நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றிணைந்து செயல்படுவோம். ராஜீவ் படுகொலையைக் காட்டிக் கொண்டே தமிழினப் படுகொலையை இந்திய அரசு மறைக்க முயல்கிறது. சிங்களர்களுக்கு இந்திய அரசு துணைபோவதா? அப்படியானால் தமிழ்நாட்டுக்கு இந்திய அரசு அந்நிய அரசுதான் என்று உறுதிப்படுத்துகிறார்களா? விரையில் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிக் கூடி முடிவு செய்வோம்’’ எனக் கூறியிருந்தோம்.

படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்காக திராவிடர் கழகத்தின் சார்பில் 9.11.1995 அன்று பெரியார் திடலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதனை திராவிடர் கழகம் தலைமையேற்று நடத்தியது. கூட்டத்திற்கு ஈழ உணர்வாளர்களும், பல்வேறு சிறு அமைப்புகள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு தமிழினப் படுகொலையைத் தடுக்க அனைவரும் ஓரணியில் திரள்வதும், மத்திய அரசுக்குக் கண்டனமும், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும், உணவு, மருந்துகள் மற்றும் மருத்துவக் குழுவையும் அனுப்பி வைக்க தமிழக அரசு  ஆவன செய்யவும், முக்கிய நகரங்களில் கண்டனப் பேரணிகளும், அனைத்து இந்திய தலைவர்களை அழைத்து கண்டன மாநாடுகள் நடத்தவும் அந்தக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

எங்கள் இல்லத் திருமணத்தில் என் மகள்வீ.கவிதா - நா.மாறனுக்கு வாழ்த்து கூறும்இரு வீட்டார் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்

எங்கள் இல்லத்து திருமணமான எங்கள் மகள் வீ.கவிதாவுக்கும், சிங்கப்பூர் தொழிலதிபரும், சிங்கப்பூர் திராவிடர் கழகப் பிரமுகருமான நாகரத்தினம் அவர்களின் மகன் நா.மாறனுக்கும் வல்லத்தில் 12.11.1995 அன்று பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எளிமையாக குடும்ப நண்பர்கள், இயக்க முக்கியப் பொறுப்பாளர்கள், கேள்வியுற்று கலந்துகொண்ட சான்றோர் பெருமக்கள் ஆகியோரது முன்னிலையில், கழகப் பொருளாளர் மானமிகு கா.மா.குப்புசாமி அவர்களது தலைமையில், இந்தியன் வங்கியின் தலைவரும் செயல் இயக்குநருமான எம்.கோபாலகிருட்டினன் அவர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது.

எனது இல்லத்து திருமணத்துக்காக தனி அழைப்பிதழ் அச்சிட்டு அனைவரையும் அழைக்கவில்லையே என பல நண்பர்களும் இயக்கத்தவர்களும் வருத்தமுற்றனர். எங்களுக்கு மற்றவர்களை அலட்சியப்படுத்துவதோ, புறக்கணிப்பதோ நோக்கமல்ல. பெரியார் தொண்டர்களாக வாழும் நாம், அய்யாவின் கொள்கை வயப்பட்டு அதில் சிறிதும் வழுவாது வாழுகிறோம் என்பதை நிலைநாட்டுவதில் சிக்கனம், ஆடம்பரத் தவிர்ப்பு மிகவும் முக்கியம் அல்லவா? ஆகவே அந்த சுயமரியாதைத் திருமணத்தை பெரிய விளம்பரமின்றி நடத்தினோம்.

திருமணத்தைச் சிறப்பாக நடத்த உதவிய மானமிகு ராசகிரி கோ.தங்கராசு, சாமி.நாகராசன், பேராசிரியர்கள் நல்.ராமச்சந்திரன், ராஜசேகரன், புகழேந்தி, சரஸ்வதி, வீகேயென் கண்ணப்பன், கல்வி வள்ளல் பே.தேவசகாயம், வல்லம் திரு.ராமசாமி (உடையார்), மயிலை நா.கிருட்டினன் ஆகியோருக்கு மணவிழாவின்போது எங்களது  நன்றியை தெரிவித்துக் கொண்டோம்.

ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்துதஞ்சையில் நடைபெற்ற பேரணியில்உரையாற்றும் ஆசிரியர் மற்றும் பொதுமக்கள்

உத்தரப்பிரதேசம் லக்னோவில் செப்டம்பரில் நடைபெற்ற மாபெரும் பெரியார் மேளா விழா, டில்லியில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, பெரியார் கல்வி நிறுவனங்கள் பற்றிய வீடியோ கேசட் வெளியீட்டு விழா 20.11.1995 அன்று சென்னை பெரியார் திடலில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பெரியார் மேளா ஒளிப் பேழையை ‘இனமுரசு’ சத்யராஜ் வெளியிட, சிங்கப்பூர் தி.நாகரெத்தினம் பெற்றுக் கொண்டார். அப்போது சத்யராஜ் அவர்கள் உரையாற்றுகையில், “மற்ற மற்ற மேடைகளில் நான் பேசச் செல்வதுண்டு. ஆனால், இதுபோன்ற மேடைகளில் நான் கேட்க வருவேன். இது ஒரு மாலை நேரக் கல்லூரி. பெரியார் மேடையில் நான் ஏறிய பிறகு, எனக்கு இறங்குமுகம் ஏற்பட்டுவிட்டது என்று ‘தினமலர்’ ஏடு எழுதியுள்ளதாக நண்பர்கள் சொன்னார்கள். இதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு ஒன்றும் இல்லை. நான் பெரியார் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட கடந்த 10 ஆண்டுகளில்தான் நான் நாளும் வளர்ச்சி பெற்று வருகிறேன். பகுத்தறிவுச் சிந்தனையிலும், பொருளாதார நிலையிலும் நல்ல நிலையில் உள்ளேன். பெரியார் விழா என எப்பொழுது கூப்பிட்டாலும் கலந்துகொள்வேன். அய்யா வீரமணி அவர்களின் கருத்தை ஏற்று ஈழத் தமிழர்களுக்காக உதவுவேன்’’ என்று தனதுரையில் பல கருத்துகளை எடுத்துரைத்தார்.

நிறைவாக, எனது உரையில், “அப்போதைய ஈழத் தமிழர்களின் படுகொலையைக் கண்டித்துப் பேசினோம். திரைப்படத் துறையிலே உள்ளவர்களை, ஈழத் தமிழர்களுக்காக ஒன்று சேர்க்க முயற்சி செய்யுங்கள். செத்து மடிந்து கொண்டிருக்கும் நம் தமிழின மக்களுக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் உதவ முடியுமோ அந்தந்த வகைகளில் எல்லாம் உதவிட ஏற்பாடு செய்யுங்கள்’’ என வேண்டுகோள் விடுத்தேன். அதனை ஏற்று இனமுரசு சத்யராஜ் அவர்களின் உரையும் இருந்தது மகிழ்ச்சிக்குரியதாகும். விழாவில் கழகப் பொறுப்பாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், பகுத்தறிவுக் கழகத்தினர் கலந்துகொண்டனர். ‘எமரால்டு’ பதிப்பக உரிமையாளர் எம்.டி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

பெரியார் மேளா மற்றும் டில்லியில் நடைபெற்றபெரியார் பிறந்த நாள் விழா ஒளி நாடாக்களை இனமுரசு சத்யராஜ் வெளியிட, அதனைப் பெற்றுக் கொள்ளும் சிங்கப்பூர் தி.நாகரெத்தினம் உடன்ஆசிரியர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்

திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் தந்தை பெரியார் சிலைதிறப்பு விழா 26.11.1995 அன்று எழுச்சியோடு நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில்,

“நாம், அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்குச் சிலை வைப்பது, தீப ஆராதனை காட்டுவதற்காக அல்ல; நமக்கு விழி திறந்த வித்தகர் என்பதற்காக. பெரியார் இல்லையென்றால் நாமெல்லாம் மனிதர்களாக ஆகியிருக்க முடியாது என்பதை உணர்ந்து நன்றியுணர்ச்சியாகத்தான் சிலையை அமைத்துள்ளோம். திராவிடர் தொழிலாளர்கள் தொழிலோடு மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் மேலே வரவேண்டும். கம்ப்யூட்டர் துறையில் முன்னேற வேண்டும். நமது தொழிலாளர் கழகத்திற்கும், மற்றவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. விடுமுறையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் நாம். கடமையைக் குறைத்துவிட்டு, உரிமையைக் கேட்கக் கூடியவர்கள் அல்லர், கடமை உணர்வோடு செயல்படக்கூடியவர்கள் நாம்’’ என்பன போன்ற பல கருத்துகளை எடுத்துக் கூறினோம்.

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று 3 மாதம் சிறையிலிருந்த வீராங்கனை திருமதி என்.எம்.ஆனந்தாய் 13.12.1995 அன்று முடிவெய்தினார் எனச் செய்தி கேட்டு துயருற்றேன். அவரது உடலுக்கு கழகக் கொடி போர்த்தப்பட்டு எவ்வித மூடச் சடங்கும் இன்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது. கழகத் தோழர்கள் _ மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செய்தனர்; இறுதி ஊர்வலத்தில் _ தந்தை பெரியார் பேச்சு _ ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது; மறைந்த எம்.என்.ஆனந்தாய் _ பெலாகுப்பம் ஆசிரியரும் _ கழகத் தோழருமான என்.முனுசாமியின் துணைவியார் ஆவார்; தனது குடும்பத்துடன் அவர் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த ஆனந்தாய் அவர்கள் சட்ட எரிப்புப் போராட்டத்தோடு, ராமன் பட எரிப்புப் போராட்டம், தமிழ்நாடு நீங்கலாக, இந்திய வரைபட எரிப்புப் போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம், ‘பிராமணாள்’ பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டம் ஆகிய போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இழப்பு கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

கோவை மாநகர திராவிடர் கழகத் தலைவர் புலியகுளம் பெரியசாமி 17.12.1995 அன்று சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் மறைவுற்றார் என்கிற செய்தியை அறிந்து வருந்தினேன்.

வேடசந்தூரில் தந்தை பெரியார் சிலையைதிறந்து வைத்து உரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்

சிறிது காலமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வந்தன. சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், மரணமுற்றார். உடனே மருத்துவமனைக்குச் சென்ற தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் இறுதி மரியாதை செலுத்தினார். அவரது துணைவியாருக்கு ஆறுதல் கூறினார். ஆம்புலன்ஸ் வேன்மூலம் கோவைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

மறைந்த தோழர் பெரியசாமி அவர்கள் இயக்கம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் பங்கு கொண்டவர். எந்தச் சூழ்நிலையிலும் இயக்கத்தில் உறுதியாக இருந்தவர்.

திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அண்ணா சாலை என்றும் மாற்றப்பட்டு தமிழக அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாகிய நிலையிலும், வணிக விளம்பரப் பலகைகளில் பழைய பெயர்களே எழுதப்பட்டுள்ளதைக் கண்டித்து 19.12.1995 அன்று தலைவர்களை அவமதிக்கக் கூடியதும், சட்ட விரோதமானதுமான இந்த நிலையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து துண்டறிக்கை வழங்கப்பட்டது. இதில் சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞரணி தோழர்கள் என ஏராளமானோர் அணிவகுப்பாகச் சென்று வணிகர்களைச் சந்தித்து எடுத்துக் கூறினர். 31.12.1995 தேதிக்குள் பெயர்களை மாற்றக் கோரியும், அவ்விதம் செய்யாவிட்டால், சட்ட விரோதமாக எழுதி வைக்கப்பட்டுள்ள பெயர்களை ‘தார்’ கொண்டு அழிக்க நேரிடும் என்று துண்டறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இந்தப் பிரச்சாரத்தினை வணிகர்கள் புரிந்துகொண்டனர். பெயர் மாற்றமும் விரைவாக நடைமுறைக்கு வந்தது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மகத்தான மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும், தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும் 26.11.1995 அன்று சிறப்பாக நடைபெற்றன. முன்னதாக இளைஞர்களுக்கு இரண்டு நாள்கள் பெரியாரியல் பயிற்சி முகாமும் சிறப்பாக கழகத்தாரால் நடைபெற்றிருந்தது. மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி வேடசந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கி பேருந்து நிலையம், ஆத்துமேடு வழியாக விழா மேடையை அடைந்தது. இளைஞர்கள் வழிநெடுக “தீச்சட்டி இங்கே, மாரியாத்தா எங்கே?’’ என்று முழங்கியும், தலையில் தேங்காய் உடைத்தல், எரியும் சூடத்தை விழுங்கியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வந்தனர். இரவு 8:00 மணியளவில் தந்தை பெரியார் சிலையினை தோழர்களின் வாழ்த்தொலி ஒலிக்க திறந்து வைத்து உரையாற்றினேன். சிலை திறப்பையொட்டி நகர் முழுவதும் சுவரெழுத்துகள் எழுதப்பட்டும், கொடித் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுமிருந்தது. கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அ.தி.மு.க. தொடங்கியதிலிருந்து அந்தக் கட்சியின் மாநில அவைத் தலைவராக இருந்து வந்த ஈ.வெ.அ.வள்ளிமுத்து (90) அவர்கள் 8.12.1995 அன்று கோவில்பட்டியில் காலமானார் என்கிற செய்திகேட்டு மிகுந்த வேதனையுற்றேன். உடல்நலக் குறைவு காரணமாக அவர் 3 மாதங்கள் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, உடல்நிலை மோசமடைந்ததையடுத்து ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு கோவில்பட்டியில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார்.

1938ஆம் ஆண்டு கோவில்பட்டியில் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டபோது தந்தை பெரியார், கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோரை ஈ.வெ.அ.வள்ளிமுத்து அழைத்துவந்தார். பின்னர், திராவிடர் கழகம் தொடங்கப்பட்டபோது கோவில்பட்டி நகர திராவிடர் கழக செயலாளராக வள்ளிமுத்து பல பொறுப்புகளை வகித்தவர். அவரது உடலுக்கு கழகத் தோழர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினோம்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில்பிறந்து, உயர்நீதிமன்றத்தில் தலைசிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்த தோழர் என்.எம்.மணிவர்மா அவர்கள் --ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் குலசேகரன் அவர்களது மாமனார் 11.12.1995 அன்று மறைவுற்றார் என்கிற செய்தி அறிந்து, பெரிதும் வருந்தினேன். அவர் ஒரு காங்கிரஸ்காரர் என்றாலும், அனைத்துக் கட்சியினருடனும் அன்புடனும், பண்புடனும் பழகும் நல்ல பண்பாளர்.

மாணவப் பருவந்தொட்டு தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.

இடஒதுக்கீடு பிரச்சினைகள் என்று வரும்போது, நம் இயக்கத்தோடு இணைந்து குரல் கொடுக்கத் தவறாதவர்.

அவரது மறைவு, அவர் இருந்த காங்கிரசுக்கு மட்டும் இழப்பல்ல; குடும்பத்துக்கு மட்டும் இழப்பல்ல; சமூகநீதிக் கொள்கையாளர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும். அவரது பிரிவால் துயருறும் அனைத்துப் பிரிவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கை வெளியிட்டோம்.

(நினைவுகள் நீளும்...)

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு(265) in FaceBook Submit அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு(265) in Google Bookmarks Submit அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு(265) in Twitter Submit அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு(265) in Twitter

உண்மையில் தேட

wrapper

ஏப்ரல் 1-15, 2021

  • இலக்கியம்: திராவிட இயக்கச் சிந்தனையே என் எழுத்தின் அடிப்படை!
  • தலையங்கம்: உச்சநீதிமன்றத்தின் இரண்டு மெச்சத்தகுந்த தீர்ப்புகள்!
  • பெரியார் பேசுகிறார் : தந்தை பெரியார் ஆதரித்த தி.மு.க
  • முகப்பு கட்டுரை:மக்கள் விரோத பா.ஜ.க.வின் மனுதர்மத் தேர்தல் அறிக்கை
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு(265)
  • ஆசிரியர் பதில்கள்: மெத்தனம் இல்லா எச்சரிக்கை வேண்டும்!
  • எத்தர்களை முறியடிகும் எதிர்வினை (75): தமிழ் தேசியத்தின் தந்தை பெரியார்
  • கற்றதை நடைமுறை சார்ந்து,தகவமைத்து உயர்வோம்!
  • களஞ்சியம்: முப்படைகளின் வணக்கம்
  • கவிதை:இனப்போர்
  • சட்டசபைக்குப் பார்ப்பனர் செல்வதன் ஆபத்து!
  • சிந்தனை : கிருமிகளும்-கிருமி நாசினிகளும்
  • சிந்தனை:நீட் ;முதல் அமைச்சர் நரேந்திர மோடி - பிரதமர் நரேந்திர மோடி இடையிலான முரண்பாடு!
  • சிறுகதை : பெண் பார்க்கும் இடம்
  • சில துளிகள்
  • சீர்திருத்தம் என்றால் குமட்டலா?
  • திராவிடம் வெல்லும்: திராவிட இயக்கங்களும் கல்வி வளர்ச்சியும்!
  • பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பயங்கரம்!
  • பெண்ணால் முடியும் : நம்பிக்கையோடு முயற்சி செய்தால் வெற்றி!
  • மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [27]
  • முகப்பு கட்டுரை:ஈழத்தமிழர்க்கு பா.ஜ.க.அரசின் பச்சைத் துரோகம்!
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.