Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2021
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2021 -> பிப்ரவரி 01-15 2021 -> முகப்புக் கட்டுரை: தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆணை மீண்டும் வரும்!

முகப்புக் கட்டுரை: தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆணை மீண்டும் வரும்!

மஞ்சை வசந்தன்

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள், பொங்கல் விழா _ தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு விழா, பெரியார் விருது வழங்கும் விழா 16.1.2021 அன்று மாலை எழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழர் தொல்லியலும், நீர் மேலாண்மையும் கண்காட்சியை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார்.

தந்தைபெரியார் 21 அடி உயர முழு உருவச்சிலை முன்பாக "தமிழி கலைக்களம்" குழுவினரின் நாட்டுப்புற பறையிசை நிகழ்ச்சியினை ‘புதிய குரல்’ ஓவியா பறையொலித்து தொடங்கிவைத்தார்.

“தமிழி கலைக்களம்” சார்பில் நாட்டுப்புற பறையிசை _ பறையும் சதிரும் _ பெருஞ்சலங்கையாட்டம், கலை நிகழ்ச்சிகள் என பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.

சிறுவர்களை ஊக்கப்படுத்தும் போட்டி விளை யாட்டுகளை பா.சு.ஓவியச்செல்வன் ஒருங்கிணைத்தார்.

திராவிடர் திருநாள் பெருவிழாவில் ஆடவர் பொங்கலிட்ட நிகழ்ச்சிகள் இளைஞர்களையும், பிஞ்சுகளையும் தமிழி குழுவினரின் பறை இசை ஆட்டம் போட வைத்தது.

தமிழர் தொல்லியல் கண்காட்சியில் திராவிட நாகரிகத்தின் அகழாய்வுச் சான்றுகளைக் கொண்ட படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நீர் மேலாண்மையின் பல்வகை  காட்சிப்படங்களைக் கொண்ட கண்காட்சி அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. சிறுவர்முதல் பெரியவர் வரை கண்காட்சியைக் கண்டு பயன்பெற்றனர்.

விருது வழங்கும் விழா நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தொடங்கியது. தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத் தலைவர் த.க.நடராசன் தலைமையில் செயலாளர் மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ்சோதி அனைவரையும் வரவேற்றார்.

கழகப் பொருளாளர் வீ.குமரேசன், அமைப் புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவா ளர் கழக பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல் வன், பெரியார் நூலக வாசகர் வட்டசெயலாளர் கி.சத்தியநாராயணன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், திராவிட மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.

பெரியார் விருது

திரைத்துறையில் தொடங்கி சமூகத் துறை யிலும், பொதுத் தளத்திலும் முற்போக்குச் சிந்த னைகளை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பவர்கள் வரிசையில் இயக்குநர் கரு.பழனியப்பன், இயக் குநர் _ நடிகர் போஸ் வெங்கட் ஆகியோருக்கு திராவிடர் திருநாளில் "பெரியார் விருது" வழங்கும் நிகழ்வு பெரியார் திடலில் நடைபெற்றது.

பெரியார் களம் இறைவி இணைப்புரை வழங்கினார்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற விழாவில் உணர்வுப்பூர்வமாக கழகப்பொறுப்பாளர்கள், ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் கி.சத்தியநாராயணன், சேரன், தென்.மாறன், ஆ.சீ.அருணகிரி உள்ளிட்டோர் சார்பில் விழா வில் சர்க்கரைப்பொங்கல், வடை அனைவருக் கும் வழங்கப்பட்டன.

தமிழி கலைக்களம்_தமிழ்நாடு குழுவில் மா.தமிழி மாறன், சு.சுனில் வசீகரன், சி.அருள் கண்ணன், ப.மயிலான்ரூபா, பி.சிவா அம்மை, ப.கிருபாகரன், ர.நிவேந்திரன், செ.சுந்தரி, த.சந்தியா, ஆ.காவ்யா, இரா.மணிகண்டன், செ.பிரவீன், நா.ஆனந்தன், க.சீனிவாசன், ரா.மாதவன், கலைவாணன் ஆகியோர் இடம்பெற்றனர்.

சென்னை மண்டல பொறுப்பாளர்கள், தென் சென்னை, வடசென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், சோழிங்க நல்லூர் மாவட்டங்களிலிருந்தும் கழகத்தின் பல்வேறு அணிகளின்  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன், எழுத் தாளர் அஜயன்பாலா, ஊடகவியலாளர் செந்தில் வேல், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன்,  வட சென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன் உள்ளிட்ட சென்னை மண்டல கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

மோகனா வீரமணி, மருத்துவர் மீனாம்பாள், சி.வெற்றிசெல்வி, பெரியார் செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, பொன்னேரி செல்வி உள்ளிட்ட மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

கழக இளைஞரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகத் தோழர்கள் ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டனர்.

விருதாளர்கள் பற்றிய குறிப்புகள்: இயக்குநர், நடிகர் போஸ் வெங்கட்

இவர், “நீங்கள் தி.மு.க.வா?’’ என்று கேட்டால், “சமூகநீதி பேசுகிறவன்; தி.மு.க.காரனா என்றால், ஆம்! நான் தி.மு.க.காரன் தான்’’ என்பவர்.

இவர், “தமிழ்நாட்டில் எதைக் கொண்டு வந்தாலும் எதிர்க்கிறார்களே, ஏன்?’’ என்று கேட்டால், “ஒருவேளை இங்குள்ளவர்கள் தான் அறிவாளிகள் போலும்’’ என்கிறவர். இப்படி எதையும் மய்யமாகப் பேசாமல், நியாயத்தின் பக்கம் நிற்பவர். அந்தளவுக்கு சிந்தனைத் தெளிவும், துணிவும் உள்ளவர்.

அவர்தான் போஸ் வெங்கட் என்று அறியப்படும் வெங்கடேசன்.

இவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 15, மே 1975 ஆம் ஆண்டு, க.ஜெயராமன், ராசாமணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

பாண்டிபத்திரத்தில் 8 ஆம் வகுப்பு வரையிலும், ஆலங்குடியில் 10 ஆம் வகுப்பு வரையிலும், அறந்தாங்கியில் 12 ஆம் வகுப்பு வரையிலும் பயின்றவர். தொடர்ந்து அறந்தாங்கியிலேயே ஓவியக் கல்லூரியில் பயின்றவர். இவரது தந்தை தி.மு.க.காரர். அவர்தான் இவருக்குப் பெரியாரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

“மூட்டை தூக்கியதால் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, மூட்டை தூக்குவது இழிவானது என்று கருதியதில்லை’’ என்று பெரியார் சொன்னது போல, இவரும் இந்த உயரத்தை அடைய, தொடக்கத்தில் மூட்டை தூக்கியிருக்கிறார். பல்வேறு பணிகளைச் செய்து, ஆட்டோ ஓட்டுநராகவும் உயர்ந்திருக்கிறார்.

இவர் குறிவைத்ததென்னவோ வெள்ளித் திரையைத்தான். சிக்கிய தென்னவோ சின்னத்திரை. அதிலும் முத்திரை பதித்தார். ‘மெட்டி ஒலி’ எனும் தலைப்பில் வெளியான அந்தத் தொலைக்காட்சித் தொடரில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் போஸ். அந்தத் தொடரில் போஸ் எனும் கதாபாத்திரம் நன்கு பிரபலமானது. நாளடைவில் போஸ் என்னும் பெயர் இவர் பெயரோடு ஒட்டிக் கொண்டு, இவரது பெயரே “போஸ் வெங்கட்’’ ஆகிப் போனது.

சின்னத்திரை தொடரான மெட்டி ஒலியே இவரை வெள்ளித் திரைக்கும் இட்டுச் சென்றது.  திரையில் இவரது தனித்திறன் கண்டு, கலைஞர் தனது கைவண்ணத்தில் உருவான “கண்ணம்மா’’ எனும் திரைப்படத்தில் நாயகனாக இவரை அறிமுகப்படுத்தினார். அதுதான் இவர் நாயகனாக நடித்த முதல் திரைப்படம். இவர் இயக்கிய முதல் படம் கன்னிமாடம். இது 2020 ஆம் ஆண்டு வெளியானது. முதல் படமே ஆணவப் படுகொலைகளை வீரியத்துடன் கண்டித்தது.

வெள்ளித் திரையிலும், சின்னத்திரையிலுமாக பல்வேறு விருதுகளை வென்றுள்ள இவர், குரல் வளக் கலைஞராகவும் விருதுகளைப் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து, டொரோண்டோ திரைப்பட விழாவில் கலந்துகொண்ட இவர் இயக்கிய கன்னிமாடம் திரைப்படம் சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிக பார்வையாளர்களைப் பெற்ற படமாக கன்னிமாடம் திரைப்படம் அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது.

2011க்குப் பிறகு வெளிப்படையாகவே தன்னைத் தி.மு.க.காரன் என்று அடையாளப் படுத்திக்கொண்டு பிரச்சாரத்திற்கே சென்றவர்.

திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன்

பார்ப்பனரல்லாதாரின் அமைப்பான திராவிடர் இயக்கம், நம் மக்கள் வாழும் பகுதியெங்கும் நமது கனத்த தோலில் சுருக்கென்று சூடு போடும் படியாக சுயமரியா தைப் பிரச்சாரத்தைச் செய்து வந்த காரணத்தால், நாளடைவில் ஆயிரமாயிரம் பேர்களுக்கு சுயமரியாதை தமது பிறப்புரிமை என்ற எண்ணம் ஆழ வேரூன்றிவிட்டது.

அதனால் விளைந்தது என்ன? அடிமைப் பட்டுக் கிடந்த மக்களின் சுயமரியாதை, சிறகு விரித்துச் சுதந்திரமாகப் பறக்கத் தொடங்கிவிட்டது. இது தொடங்கி ஒரு நூற்றாண்டு காலம்தான் ஆனது. அதற்குள் ஏதேதோ சூழ்ச்சிகள் செய்து துளிர்த்துக் கொண்ட சனாதனம் அந்தச் சுதந்திரச் சிறகுகளை வெட்ட அசுர பலத்துடன் மீண்டும் படையெடுத்து வந்தது.

அந்தப் படையெடுப்பை நேரடியாக இயக்க வாதிகள் மட்டுமே எதிர்கொள்வார்கள் என்று எதிரிகள் எண்ணியதற்கு மாறாக, அதுவரை சுயமரியாதைச் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு தங்கள் துறையில் சாதனையாளர்களாகத் திகழ்ந்த ஏராளமா னோர், வசதியான அந்த வளையத்தை உதறிவிட்டு, கொள்கை எதிரிகளே திகைக்கும்படியாக, வெளிப்படையாகக் களத்திற்கு வந்தனர். அப்படி வந்தவர்களுள் முக்கியமான ஒருவர், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன்.

இவர் மார்ச் 6, 1972 இல், காரைக்குடியில் பாலசின்னக் கருப்பையா, நாகம்மையார் ஆகியோருக்கு மூத்த பிள்ளையாகப் பிறந்தார்.

இவரது தந்தை தீவிர புத்தக வாசிப்பாளர். பிறகென்ன? கரு.பழனியப்பனுக்கும் சிறு வயதி லேயே புத்தகங்களின் மீது ஈர்ப்பு உண்டாகி விட்டது.

இவர் மதுரை செவன்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலையும், மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் கற்றார்.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்  கரு. பழனியப்பன்.

1994ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் கால் பதித்து, இயக்குநர்கள் ரா.பார்த்திபன், எழில் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். இவர் இயல்பாகவே நேர்த்தியாகக் கதை சொல்லும் திறன் கொண்டவர்.

இவர் இயக்கிய முதல் திரைப்படம் “பார்த்திபன் கனவு” எனும் பெயரில் 2003 இல் வெளியானது. இந்தப்படம் மாநில அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதையும், சிறந்த நாயகனுக்கான விருதையும் பெற்றதன்மூலம் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார்.

தொடர்ந்து ‘சிவப்பதிகாரம்’, ‘பிரிவோம் சந்திப் போம்’, ‘மந்திரப்புன்னகை’, ‘சதுரங்கம்’,  ‘ஜன்னல் ஓரம்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் 2011 இல் வெளியான ’சதுரங்கம்’ படத்திற்காக சிறந்த கதையாசிரியருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். திரைப்பட நடிகராகவும் தன் பயணத்தை விரித்திருக்கிறார்.

சமூக அக்கறையைத் திரைப்படங்களில் முன் வைத்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் மேடைகளிலும் ஒலிக்கத் தொடங்கியது இவரது குரல்.

ஒரு தனியார் தொலைக்காட்சியில், “ஜாதிப் பட்டம் தேவையா?’’ எனும் தலைப்பில் விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் இவர் கருத்தாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

கிடைத்த சின்னஞ்சிறு வாய்ப்பில் “தமிழ்நாடு பெரியார் மண்தான்’’ என்று சொல்லாமல் சொல்லி விட்டார்.

சமகாலத்தில் தமிழர்களின் பிரச்சினைகளைப் பேசுகின்ற வெகுஜன ஊடகமான தொலைக் காட்சியில்  தொடர்ந்து ஒலிக்கத்  தொடங்கியிருக்கிறது கரு.பழனியப்பன் அவர்களின் குரல்  _ “தமிழா  தமிழா’’ நிகழ்ச்சியின் வாயிலாக! 

நடுநிலைமை என்பது அயோக்கியத்தனம் என்பதில் உறுதியாக நிற்பவர்.

மனித சமத்துவத்துக்கான திராவிடக் கருத்தி யலை “கருநீலம்’’ என்னும் இணையதளம் வாயிலாக தொடர்ந்து பதிவிட்டு வருபவர். ஆகவே, இது சாதாரண அவதாரம் அல்ல!. ஆரிய அவதாரங் களை சம்ஹாரம் செய்யும் அறிவாயுத அவதாரம்!

பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் சிந்தனைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதை ஒரு கடமையாகக் கொண்டிருப்பவர்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் ஆரியப் பண்பாட்டைத் தகர்க்கும் பணியில், இப்படி உள்ளமும் செயலும் ஒன்றெனக் கொண்டு சளைக்காது ஈடுபட்டு வரும் திரைப்பட இயக்குநர், சமூக செயல்பாட்டாளர் மானமிகு கரு.பழனியப்பன் அவர்களைப் பாராட்டவும், மென்மேலும் அவரை ஊக்குவிக்கும் பொருட்டும், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில், 2021ஆம் ஆண்டுக்கான “பெரியார் விருது’’ மகிழ்வுடன் வழங்கப்பட்டது.

விருது வழங்கி ஆசிரியர் சிறப்புரை

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 27ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தம் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

“உழவர்கள் _ விவசாயிகள் கடும் துயரத்தில் இருக்கும் கால கட்டம் இது. அரும் பாடுபட்டு உழைத்து அறுவடை செய்யும் கால கட்டத்தில் மழை வெள்ளத்தால் பயிர்கள் மூழ்கிய காரணத்தால், விவசாயிகள் பெரும் துயர வெள்ளத்தில் மிதக்கின்றனர்.

டில்லியிலோ, ஆயிரக்கணக்கான விவசாயிகள் குடும்பம் குடும்பமாக பல்லாயிரக்கணக்கில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். 

இந்த விழாவிலே நம் இனத்துக் கலைஞர்கள் இருவருக்குப் ‘பெரியார் விருது’ வழங்கிப் பாராட்டியிருக்கிறோம். அவர்கள் மனந்திறந்து இங்கு ஆற்றிய உரையை மனந்திறந்து பாராட்டுகிறோம். என்றார் கழகத் தலைவர்.

நேரிடையாகக் கருப்புச் சட்டை அணிந்து   பணியாற்றக் கூடிய தோழர்கள் ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் இத்தகைய தோழர்கள் இன்னொரு தளத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

பெரியார் கொள்கையை யார் எங்கு எடுத்துக் கூறினாலும் அவர்கள் ஒருவகையில் நம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தாம்.

எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனைத் திறமை உடையவர்களாக,  அறிவுடையோராக, துணிச்சல் உடையவராக இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்குத்தான் இந்த விழா.

இந்த நிகழ்விலே பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் அவர்களும், எழுத்தாளர் அஜயன்பாலா, ஊடகவியலாளர் செந்தில், ஒளிவண்ணன் போன்றவர்கள் எல்லாம் பார்வையாளர்கள் வரிசையில்  அமர்ந்து விழாவுக்குச் சிறப்பைச் சேர்த்துள்ளனர்.

உழைப்பால் உயர்ந்த மணிகள் இவர்கள். இவர்களுக்கெல்லாம் தோள் கொடுத்த ஒரே தலைவர் தந்தை பெரியார் என்று கழகத் தலைவர் சொன்ன போது மகிழ்ச்சி ஆரவாரத்தில் கரஒலி எழுப்பினர் பார்வையாளர்கள்.

தமிழர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு என்பது தை முதல் நாள்தான். தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு என்பதை மாற்றி தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தவர் முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள்.

அடுத்துவந்த ஆட்சியினர் அந்த ஆணையை ரத்து செய்து பழையபடி சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என்று ஆக்கி விட்டனர்.

இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். இன்னும் சில மாதங்கள்தான் இடையில் - தி.மு.க.. ஆட்சி மலரும்; மீண்டும் தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற அறிவிப்பு சட்ட ரீதியாக  வரும். (இவ்வாறு ஆசிரியர் கூறியபோது கூட்டத்திலிருந்து மகிழ்ச்சியும் ஆரவாரம்)-.

தை முதல்நாள் என்பது அறுவடைத் திரு விழாவாகும். விவசாயத்தைப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விவசாயம் பாவத் தொழில் என்று கூறுகிறது மனுதர்மம் (அத்தியாயம்_10, சுலோகம் _ 84) அப்படித்தான் கூறுகிறது. நாம் பொங்கல் விழா என்றால் அவர்கள் சங்கராந்தி என்பார்கள்.  எதிலும் ஏட்டிக்குப் போட்டிதான் _ ஆரியர் _ திராவிடர் போராட்டம்தான்.

இப்பொழுது திருக்குறளைப் பற்றி எல்லாம் கூட பேச ஆரம்பித்து விட்டனர். பிரதமர்கூடப் பேசி வருகிறார்.

‘உழுபவன் உலகத்திற்கு அச்சாணி’ என்ற திருவள்ளுவர் எங்கே! விவசாயம் பாவத் தொழில் என்று கூறும் மனுதர்மவாதிகள் எங்கே?

மதத்தைக் காட்டி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பறிப்பதுதான் அவர்களின் நோக்கம். நாம் ஏமாந்து விடக் கூடாது. ஏற்கெனவே இராமனையும், கிருஷ்ணனையும் காட்டி கடைசியில் தோல்விதான் மிச்சம்.

வரும் தேர்தல் முக்கியமானது. தி.மு.க. வெற்றி பெறுவது என்பது தி.மு.க.வுக்காக அல்ல. நம் மக்கள் மீட்சிக்கு, உரிமை வாழ்வுக்கே!

தந்தை பெரியார் இறுதியாக சென்னை தியாகராயர் நகரில் 1973 டிசம்பர் 19இல் தனது இறுதிச் சொற்பொழிவை  மரண சாசனமாக நிகழ்த்தினார்.

அதில் ஒன்றைக் குறிப்பிட்டார், “தி.மு.க. ஆட்சி ஒழிக்கப்படுமேயானால் இன்று மறைமுகமாகப் பேசும் பார்ப்பனர்கள், பிறகு வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விடுவார்கள்’’ என்றார். அதைத்தான் நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

திடச் சித்தத்தோடு செல்லுங்கள் _ தி.மு.க.வை வெற்றி பெற வைப்போம்! ஒவ்வொருவரும் பத்துப் பேர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்’’ என்று குறிப்பிட்டார்.

ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதுபோல், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானது. அது தேர்தல் மட்டுமல்ல ஒரு இனப்போர், ஆரிய சனாதனமா? - திராவிட மனித நேயமா? தமிழும் தமிழர் பண்பாடும் அழித்தொழிக்கப்பட வேண்டுமா? தழைத்து ஓங்க வேண்டுமா? என்பதற்கான போராட்டக் களம் அது.

எனவே, ஒவ்வொரு தமிழரும் தங்களுக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளை மறந்து, ஓயாது உழைத்து ஒற்றுமையுடன் வாக்களித்து, பா.ஜ.க.வையும் அதற்கு அடிமை சேவகம் செய்யும் அ.தி.மு.க.வையும் வீழ்த்தி தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டும். இது தமிழர் ஒவ்வொருவரின் கட்டாயக் கடமையாகும்.

குறிப்பு: விருதாளர்கள் ஆற்றிய உணர்ச்சிமிகு சிறப்புரைகள் அடுத்த இதழில் வெளிவரும்.

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit முகப்புக் கட்டுரை: தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆணை மீண்டும் வரும்! in FaceBook Submit முகப்புக் கட்டுரை: தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆணை மீண்டும் வரும்! in Google Bookmarks Submit முகப்புக் கட்டுரை: தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆணை மீண்டும் வரும்! in Twitter Submit முகப்புக் கட்டுரை: தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆணை மீண்டும் வரும்! in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

பிப்ரவரி 16-28, 2021

  • 53ஆம் நாளிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
  • அய்யாவின் அடிச்சுவட்டில்.. : இயக்க வரலாறான தன் வரலாறு (262)
  • உணவே மருந்து: உடலநலங் காக்கும் உணவுமுறை
  • சிந்தனை : கோயில் நகரம் என்றால்...
  • தலையங்கம் : பகுத்தறிவு இல்லாப் படிப்பு பாழே!
  • பெரியார் பேசுகிறார் : செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்
  • முகப்புக் கட்டுரை : குருமூர்த்திகளுக்கு சர் சி.பி.ராமசாமி அய்யரின் மொத்துகள்!
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பின் பக்க விளைவே நரபலிகள்!
  • ரோபோ மனிதர்கள்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.