கே: ரஜினிகாந்த் ஒதுங்கினாலும், வாய்ஸ் கொடுப்பார் என்று கூறும் குருமூர்த்தியின் நப்பாசை பற்றி தங்கள் கருத்தென்ன?
- முகிலன், நெய்வேலி
ப: கிராமத்து மக்களின் பழமொழி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது _ புரோக்கர் ஆசை பற்றி நீங்கள் கேட்கும்போது. ஆசை இருக்கு தாசில் பார்க்க; அம்சம் இருக்கு.... மேய்க்க. (கழுதை) என்பது ‘துக்ளக்’ ஆபிசிற்கு அருகில் இருப்பதால், அடிக்கடி அட்டைகளில் தென்படுவதால் இந்த உதாரணம்! மற்றபடி தரக்குறைவாகக் கூற அல்ல!
கே: பிகாரில் நிதிஷ்குமாரின் விரக்தி மாநில அரசியலில் என்ன விளைவை உண்டாக்கும்?
- சுந்தர், சேலம்
ப: பிகார் ஆளுங்கட்சி விரைவில் இரண்டாக உடையும் _ நிதிஷ் கட்சியே வெளியேறும் அல்லது மத்திய பதவி வாங்கி அமர்ந்து கொள்வார். (லாலு மகன்) தேஜஸ்விக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உண்டு.
கே: பா.ஜ.க.வுக்கு எதிரான மாநிலத் தலைவர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் ஒரு மாநில மாநாடு நடத்தினால் என்ன?
- புகழ், சென்னை
ப: பா.ஜ.க. தலைவர்களின் பேச்சும், கூட்டணி கூத்தணியாக நடப்பதுமே போதும். மக்கள் உணர்ந்து வருகிறார்கள். கொசுத் தொல்லை மாதிரி இங்கே அது! அளவுக்கு அதிகம் முக்கியம், அவர்களுக்குத் தேவையில்லை. மிஸ்டுகால் கட்சிக்கு அளவுக்கு மீறிய மரியாதை ஒரு போதும் பெரியார் மண்ணில் ஏற்படாது. ‘மயக்க பிஸ்கட்’ மாதிரியான பிரச்சார ஏவுகணைகளே போதும்!
கே: அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கும் நிலையில் தமிழகம் மிகை மின் மாநிலம் என்பது அப்பட்டமான மோசடியல்லவா?
- தாமஸ், தாம்பரம்
ப: ‘அய்வருக்கு தேவியாம்‘; அழியாத பத்தினியாம் துரவுபதை என்ற மொழி மாதிரி ஒரு புரட்டு அது!
கே: திராவிடமா? தமிழ் தேசியமா? என்கிற மோதலை உருவாக்க முயல்வது ஆரிய ஆதிக்கத்திற்குத் துணை நிற்கும் செயல் அல்லவா?
- வேல்முருகன், செஞ்சி
ப: அவர்களே ஆரியத்தினால் ஏவப்பட்ட மாயமான்கள்தானே! தி.மு.க.வை அதிக வாக்கு வாங்கவிடாமல் தடுக்க, கெடுக்கச் செய்த ஏற்பாட்டு ஏஜெண்டுகள்தானே!
கே: ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வரும் புது வரவுகள், தமிழகத்தை விழுங்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு துணை நிற்பது சரியா?
- செந்தில், வேலூர்
ப: மேற்கூறிய பதிலே இதற்கும் பொருந்தும். ஊழலை ஒழிக்க தேர்தலில் நிற்கும் எவரும் சட்டப்படி ஒரு தொகுதிக்கு எவ்வளவு தேர்தல் கமிஷன் அனுமதித்த தொகையோ அதை மட்டும்தானா? அதற்குள் தானா செலவழிக்க? பிறகு பொய்க் கணக்கு தாக்கல் செய்வதற்குப் பெயர் ‘ஏமி?’
மேடைகளில் “ஓட்டுப் போட 5 லட்ச ரூபாய் கேளுங்கள்!” என்று வாக்காளர்களுக்கு ‘அறிவுரை’ ‘தெளிவுரை’ கூறும் தலைவர்கள் ஊழல் ஒழிப்பவர்களா? தேர்தல் சட்டப்படி தகுதி இழப்புக்கு ஆளாக வேண்டியவர்கள் அல்லவா?
கே: தி.மு.க. நடத்தும் கிராமசபைக் கூட்டத்தை ஒடுக்க நினைக்கும் அ.தி.மு.க. அரசுக்கு உண்மையில் தோல்வி பயமிருக்கிறது தானே?
- பசும்பொன், குடியாத்தம்
ப: உலகறிந்த “ரகசியம்’’ அது! அதை விளக்கவா வேண்டும்?