நேயன்
சாதாரண தாழ்த்தப்பட்ட மக்களை மட்டுமல்ல, தலைசிறந்த சிவபக்தரான நந்தனாரையே சிதம்பரம் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். அவர் பிடிவாதமாக அடம் பிடிக்க பார்ப்பனர்கள் சதித் திட்டம் தீட்டி நந்தனை ஒழித்துக்கட்ட முடிவெடுத்தனர். நந்தனாரைப் பார்த்து, நாங்கள் வளர்க்கும் தீயில் மூழ்கி வந்து நடராஜப் பெருமானைச் சந்திக்கலாம் என்று அனுமதி அளித்தனர்.
நந்தன் கடவுள் மீதுள்ள நம்பிக்கையால் அதற்கு ஒப்புக் கொண்டார். கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் புகுந்தார். சற்று நேரத்தில் சாம்பலானார். ஆனால், பார்ப்பனர்கள் அதை மறைத்து, தீயில் மூழ்கிய நந்தன் இழிஜாதி உடல்நீங்கி பார்ப்பனக் கோலத்தில் மாறி நடராஜப் பெருமானுக்கு அருகில் சென்று அவரோடு கலந்துவிட்டார் என்று ஒரு கட்டுக் கதையை அவிழ்த்துவிட்டு மக்களை ஏமாற்றினர்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலவிய அந்த நிலை, இக்காலத்தில் முற்றிலும் நீங்கிவிட்டதா என்றால், இல்லை. இக்காலத்திலும் அந்த இழிநிலை தொடரவே செய்கிறது.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நந்தனார் சிதம்பரம் கோயிலுக்குள் சென்று வழிபட போராடியபோது தீட்சதர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, நந்தன் தொடர்ந்து அதற்காகப் போராட, தீட்சதர்கள் சூழ்ச்சியாக நந்தனாரை நெருப்பில் தள்ளி எரித்த காலந்தொட்டு தலித்துக்கள் கோயிலுக்கு செல்ல முயலும் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அண்மையில் கோயில் வழிபாடு சார்ந்து தாழ்த்தப்பட்டோருக்கும் ஜாதி இந்துக்களுக்குமான மோதலில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், ஆண்டிமடம் அருகில் சிலம்பூர் கிராமத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் 14 பெண்கள் உள்பட 21 பேர் இருதரப்பிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலம்பூரில் உள்ள அய்யனார் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் வழிபாடு நடத்த ஜாதி இந்துக்கள் மறுத்து எதிர்ப்புத் தெரிவித்ததால் பெருங் கலவரம் நிகழாமல் இருக்க உடையார்பாளையம் வருவாய் கோட்ட அலுவலர் (RDO) சனிக்கிழமை இரவு (6.8.2016) 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
காந்தியார் பிறந்த மாநிலம் குஜராத். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமும் இதுதான்.
ஆனால், குஜராத்தில் ஜாதி ரீதியான பாரபட்சம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தலித்களுக்கு சம உரிமை என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.
பெரும்பாலான கோவில்களில் தலித்துகளை உள்ளே அனுமதிப்பதில்லை. குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆலயத்தின் கேந்திர பகுதிக்கும், நுழைவாயிலுக்கும் இடையே அக்னி குண்டம் உள்ளது. இந்த அக்னி குண்டத்தைக் கடந்து செல்லும் உரிமை தலித்துகளுக்குக் கிடையாது. உயர் ஜாதி இந்துக்கள் மட்டுமே அக்னி குண்டத்தைக் கடந்து செல்ல முடியும்.
பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்பதை ஏற்க முடியாது. தலித்துகளை கேந்திரப் பகுதிக்குள் அனுமதித்தால் புனிதம் கெட்டுவிடும் என்று கோவில் பூசாரிகள் கூறுகிறார்கள். கோதா என்னும் இடத்தில் உள்ள சுவாமி நாராயண் நூதன் மந்திர் என்கிற நவீன ஆலயத்திலும் கூட தலித்துகளுக்கு சம உரிமை அளிக்கப்படுவதில்லை.
கோயில் கட்டியவருக்கே கோயிலுக்குள்
செல்லத் தடை
குஜராத்தில் அகமதாபாத் அருகேயுள்ள குக்கிராமம் ரகமல்பூர் என்பதாகும். இந்த கிராமத்தை சேர்ந்த பிந்தூபென் கிராம பஞ்சாயத்துத் தலைவியாக உள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு 35 பிகா நிலம் உள்ளது. இது சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பிற்கு சமம். இந்த நிலத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தைச் சேமித்து வைத்து ரூ.10 லட்சம் திரட்டிய அவர் இதைக் கொண்டு ஒரு கோவில் கட்டினார்.
இந்த கோவிலில் நேரந் தவறாமல் வழிபாடு நடைபெற்று வருகிறது. ஆனால், கோவிலுக்குள் நுழைய பிந்தூபென்னுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஏனெனில், அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று உயர் ஜாதியினர் கூறுகின்றனர். கட்டிய கோவிலுக்குள் நுழைய முடியாதது பிந்தூபென்னுக்கு மன உளச்சலை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் தலித் சமூகத்தினர் பாரபட்சமாக நடத்தப்படுவதால்தான் அங்கு அடிக்கடி கலவரங்கள் நடக்கின்றன.
கோயிலுக்குள் நுழைந்த 4 தலித் பெண்களுக்கு அபராதம்: கர்நாடகாவில் அவலம்
கர்நாடக மாநிலம் ஹொலேநார்சிபூர் தாலுகாவில் உள்ள சிகரனஹல்லியில் ஸ்ரீபசவேஸ்வரர் கோயிலில் தடையை மீறி நுழைந்ததாக 4 தலித் பெண்களுக்கு உயர் ஜாதியினர் அபராதம் விதித்தனர்.
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதியன்று நடைபெற்ற சிறப்பு பூஜையின் போது இந்த 4 தலித் பெண்களும் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த 9 பெண்களும், கோயிலுக்குச் சென்றனர், அப்போது வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த தேவராஜா என்பவர், தலித் பெண்கள் நால்வரும் நுழையக் கூடாது என்று உரத்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு அடுத்த நாளே உயர் ஜாதியினர் கூடி ரூ.1000 அபராதம் விதித்தனர். மேலும் சடங்குகள் என்பது கோயிலின் புனிதத்தையும் தூய்மையையும் காக்க நடைபெறுகிறது என்றும், இந்நிலையில் தலித்துகள் நுழைவினால் கோயிலின் புனிதம் கெட்டு விட்டது என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.
கர்நாடகத்தில் பல புராதன பெருமைவாய்ந்த கோயில்கள் உள்ளன. அதில் உலகப் புகழ்பெற்ற உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் பக்தர்களை ஜாதி அடிப்படையில் நடத்துவது பல நூற்றாண்டு காலமாக நடந்து வருகிறது.
இங்கு உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற அடிப்படையில் தனித்தனியாக உணவு பரிமாறப்படுகிறது.
2014 ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி உணவு அருந்தச் சென்ற பெண் ஒருவர் ஜாதியைக் காரணம் காட்டி வெளியேற்றப் பட்டார். இது கண்டனத்திற்குரியது.
‘எவிடன்ஸ்’ என்னும் அரசு சாரா நிறுவனம் கோவில்களில் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டு வரும் உரிமைகள் குறித்து புள்ளி விவரம் ஒன்றை சில வருடங்களுக்கு முன் வெளியிட்டது. அந்தப் புள்ளிவிவரம் இந்த ஆண்டும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதும், இந்தக் கணிணி யுகத்திலும் தொடர்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. 85 ஊராட்சிகளில் உள்ள 69 கோயில்களில் தலித்துகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 72 கோயில்களின் சன்னிதானமும் 56 கோயில்களில் அர்ச்சனையும் மறுக்கப்படுகின்றன. 54 கோயில்களின் தேர்கள் தலித் பகுதிகளில் வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. 52 கோயில்களில் பரிவட்டம் மறுக்கப்பட்டுள்ளது. 33 கோயில்களில் தலித்துகள் வடத்தைத் தொடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 64 கோயில்களில் தலித்துகள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது. பால்குடம் எடுப்பது, தீச்சட்டி ஏந்துவது போன்ற சடங்குகளின்போது 60 கோயில்களில் பாகுபாடு காட்டப்படுகிறது.
5.4.2016 அன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மலையம் விநாயகம்பட்டியில், கோயிலில் ஒரு சமூகத்தினர் சிலை வைக்க முயன்றனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்து தடுத்ததால் வாக்குவாதம் முற்றியது. இதில் ஏற்பட்ட கலவரத்தில் 4 போலீசார் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர்.
22.10-.2015இல் உசிலம்பட்டி அருகே ஏழுமலை கோயில் திருவிழாவில் இருபிரிவினர் மோதிக் கொண்டதால் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதில் தாசில்தார் ஜீப் உள்பட சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக 32 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தப்புரத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஆதிதிராவிடர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பில் சுவாமி சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. அப்போது கோயில் அருகே இருந்த அரசமரத்தில், ஒருவர் ஆணி அடித்து அதில் மாலை அணிவித்தார். இதனை மற்றொரு பிரிவினர் தட்டிக்கேட்டனர். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. போலீசார் தகராறை விலக்கி விட்டனர். இது குறித்து முனியாண்டி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சித் தலைவரின் கணவர் முருகேசன் உள்பட 35 பேர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
2011ஆம் ஆண்டு மதுரை திருமங்கலத்திற்கு அருகிலுள்ள டி.கல்லுப்பட்டி வட்டத்தை சார்ந்த வில்லூர் கிராமத்தில் ஆதிக்க ஜாதியான முக்குலத்தோரின் உட்பிரிவான அகமுடையார் ஜாதியைச் சார்ந்தவர்கள் அதிகம். சிறுபான்மையான தாழ்த்தப்பட்டவர்கள் சுமார் 300 குடும்பத்தினரும் இங்கு வசித்து வருகின்றனர்.
அகமுடையார்கள் வசிக்கும் மேலத் தெருவான காளியம்மன் கோயில் தெருவிற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் சைக்கிளிலோ அல்லது செருப்பு அணிந்தோ போகக் கூடாது.
ஆண்டுதோறும் ஆடிமாதம் 5 நாள்கள் நடக்கும் திருவிழாவில் தங்களுக்கும் ஒருநாள் கட்டளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தள்ளிமேடு பகுதி தலித் மக்கள் போராடி வருகின்றனர். அப்படி திருவிழாவில் ஒருநாள் கட்டளை நடத்திக் கொள்ள அனுமதிக்கா விட்டால், ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறப் போவதாகவும் தலித் மக்கள் கூறினர். இதனால் மாவட்ட நிருவாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சு வார்த்தையில் தலித் மக்களுக்கு கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு கட்டளை நடத்திக் கொள்ளக் கூறப்பட்ட ஆலோசனைகளை எதிர்த் தரப்பினர் ஏற்க மறுத்தனர்.
உண்மை நிலை இப்படியிருக்க, கருவறைக்குள் ஆதிக்கம் செலுத்தும் ஆரிய பார்ப்பனக் கூட்டம், தங்களை ஜாதி ஒழிப்பு தீரர்கள் போலக் காட்ட முற்படுவது கடைந்தெடுத்த கயமைத்தனம், மோசடித்தனம் மட்டுமல்ல, அப்பட்டமான அயோக்கியத்தனமாகும். எனவே, ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை அழித்து சமூகநீதியை நிலைநாட்டி, இழிவுநீக்கி சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டியது நமது கடமையாகும்.
(தொடரும்...)