Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2020 -> நவம்பர் 16-30, 2020 -> சிந்தனை : இனிவரும் காலத்தில் பிரபஞசம்

சிந்தனை : இனிவரும் காலத்தில் பிரபஞசம்

முனைவர் வா.நேரு

 

“இன்றைய உலகமானது பழங்கால உலகம் என்பதிலிருந்து நாளுக்கு நாள் எப்படி மாறுதலடைந்து வந்திருக்கிறது? இனிச் சில நூற்றாண்டுகளில் எப்படிப்பட்ட மாறுதலை அடையும்? என்பனவாகிய விஷயங்கள் பகுத்தறிவாதிகளுக்குத்தான் ஏதாவது தெரியக் கூடுமே தவிர, புராண இதிகாசப் பண்டிதர்கள் என்பவர்களுக்கு, அதுவும் நம் “கலை, காவியப் பண்டிதர்களுக்குத் தெரிவது சுலபமான காரியமல்ல” என்றார் தந்தை பெரியார். (இனிவரும் உலகம்... முன்னுரை). அறிவியல் பற்றி எல்லாம் கவலைப்படாமல், புராண இதிகாசப் பண்டிதர்கள் கதை அளந்து கொண்டிருந்த காலத்தில் கரோனா அவர்களின் கதையை எல்லாம் பொய் என்பதனை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது. நாம் பகுத்தறிவாதிகள். இந்தப் பிரபஞ்சம் (Universe) பற்றிச் சிந்திப்போம்.

“வானம் எனக்கு ஒரு போதி மரம்

நாளும் எனக்கு அது சேதி தரும்“ என்பது ஒரு திரைப்படப் பாடலின் வரிகள். வானத்தைப் பற்றி நாள்தோறும் புதுப் புதுச்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

பிரபஞ்சம் என்றால் என்ன? இரவில் வீட்டின் மாடியில் படுத்துக்கொண்டு வானத்தை நோக்கினால் சின்னச் சின்னப் புள்ளிகளாக நிறைய விண்மீன்கள்(Stars) தெரிகின்றன. சில விண்மீன்கள் பெரிதாகவும், சில விண்மீன்கள் சிறிதாகவும் வானம் நமக்கு ஒரு விண்மீன் தொகுப்பாகப் தெரிகிறது. நாத்திகரான அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இந்தப் பிரபஞ்சத்தை ஆராய்ந்து சில செய்திகளைச் சொன்னார். “நமது பிரபஞ்சத்தில் பல இலட்சக்கணக்கான காலக்சிகள்(Galaxy) உள்ளன. ஒரு காலக்சியில் 10,000 கோடி விண்மீன்கள் இருக்கலாம். அந்த காலக்சிகளில் ஒன்றுதான் நமது பால்வெளி மண்டலம். இந்தப் பால்வழி மண்டலத்தில் 100 மில்லியன் விண்மீன்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நமது சூரியன். நமது சூரியன் ஒரு விண்மீன். சூரியனை 8 கோள்கள், வால் விண்மீன்கள், குள்ளக்கோள்கள், விண்கற்கள் எனச் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. இதனை சூரியக் குடும்பம் என்கிறோம். இது போலவே மற்ற விண்மீன்களையும் கோள்கள் (Planets) சுற்றிக் கொண்டு இருக்கின்றன. நமது பால்வழி மண்டலத்தில் மட்டும் பூமியைப் போல் 5000 கோடி கோள்கள் இருக்கின்றன.” (ஸ்டீபன் ஹாக்கிங் -தன்னம்பிக்கையின் நாயகன், ஏற்காடு இளங்கோ, மங்கை வெளியீடு, சென்னை-18. பக்கம்-99). பிரபஞ்சத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. நாம் இருப்பது பூமியில். பூமி இருப்பது சூரியன் எனும் விண்மீன் குடும்பத்தில். நமது பால்வெளி சூரியனைப் போன்ற 100 மில்லியன் (10 கோடி) விண்மீன்கள் அடங்கியது. நமது பால்வெளியைப் போல இலட்சக்கணக்கான பால்வெளிகள் (காலக்சிகள்) அடங்கிய தொகுப்பிற்கு பிரபஞ்சம் (Universe) என்று பெயர். எவ்வளவு பெரிய பிரபஞ்சம். இவ்வளவு பெரிய பிரபஞ்சம் என்றவுடனேயே ஆத்திகர், கடவுள் படைப்பு என்று சொல்ல ஆரம்பிப்பார். ஆனால் கடவுள் படைப்பு, சொர்க்கம் என்பதனை எல்லாம் ஸ்டீபன் ஹாக்கிங் முழுமையாக மறுத்தார்.

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகமான “பிரம்மாண்ட வடிவமைப்பு” (The Grand Design) என்பதில் “உலகத்தைக் கடவுள் படைக்கவில்லை. இயற்பியல் விதிகளுக்கு ஏற்ப அது தானாகவே உருவானது” என்று குறிப்பிட்டுள்ளார். “இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பு எதுவும் இல்லை. இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை. கடவுள் இதனை உருவாக்கவும் இல்லை. மதத் தத்துவவாதிகள் கூறுவது போல உலகுக்கு வெளியிலிருந்தும் எவரும் படைக்கவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. கடவுள் வந்து, தடவிப் பார்த்து, பிரபஞ்சமே, நீ உருவாகு என்று கூறுவது அபத்தமானது” என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார். (ஸ்டீபன் ஹாக்கிங்-தன்னம்பிக்கையின் நாயகன், ஏற்காடு இளங்கோ, பக்கம்_86). தனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்பதனையும், சொர்க்கம் என்று ஒன்று இல்லை என்பதனையும், பிரபஞ்சத்தைப் பற்றிய விளக்கங்கள் கூறும்போது மிக அழுத்தமாகச் சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

சரி, இந்தப் பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளும் அது பற்றிய சிந்தனைகளும்  எப்படியெல்லாம் மனித குலத்திற்குப் பயனுள்ளதாக இருக்கப் போகிறது? நாம் வாழும் இந்த உலகம், பூமி எத்தனை ஆண்டுகள் இருக்கும்? பூமி இருக்கும் சூரியக் குடும்பம் எத்தனை ஆண்டுகள் இருக்கும்? நாம் வாழும் பூமி ஒரு நாள் அழிந்து போகுமா? என்பதை எல்லாம் பிரபஞ்ச அறிவியலோடு இணைத்துப் பார்ப்பது நமக்கு வியப்பைத் தருகிறது.

ஒரு நாள் பூமியில் இனி மனிதர்கள் வாழ முடியாது என்கிற நிலைமை வருமா? வரும் என்று சொல்கின்றார் பிரபஞ்சத்தைப் பற்றி பல்வேறு அறிவியல் உண்மைகளைத் தனது ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபித்த ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள். இன்றைய கரோனா காலமே அப்படி ஒரு நிலைமையை உண்டாக்கி இருக்கிறது. நமது அருமையான தோழர்கள் சிலரை இழந்திருக்கிறோம். பல தோழர்கள் கரோனா நோயை எதிர்கொண்டு, முழுமையான குணம் பெற்று இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். கரோனாவால் உலகமே பெரும் அச்சத்தில் உள்ளது. மக்கள் பயப்படுகிறார்கள். கரோனா போன்ற பல தொற்று நோய்கள், மிக எளிதாக மனிதர்களிடையே பரவக்கூடிய தொற்று நோய்கள், இனியும் தொடர்ந்து தோன்றும், பரவும், மனித குலத்தை அச்சுறுத்தும்  என்று அறிவியல் அறிஞர்களும் சுற்றுச்சூழல் அறிஞர்களும்  சொல்கிறார்கள். அப்படிப்பட்ட நிலைமை தொடர்ந்து வருகின்றபோது என்ன செய்வது என்னும் கேள்வி எழுகிறது. அதற்கான பதிலாக ஸ்டீபன் ஹாக்கிங், மனிதன் வேறு கோள்களில் சென்று குடியேற வேண்டும் என்று சொன்னார். ‘இனிவரும் உலகம்’ பற்றி சிந்தித்த சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள் பல்வேறு கருத்துகளைச் சொன்னது போல, இனி வரும் பிரபஞ்சத்தைப் பற்றி சிந்தித்து ஸ்டீபன் ஹாக்கிங் பல்வேறு கருத்துகளைச் சொன்னார்.

நாம் வேறு கோள்களில் குடியேறி வாழலாம். அப்படி வாழும் காலம் எதிர்கால நூற்றாண்டுகளில் மனிதர்களுக்கு கிடைக்கலாம். மனித இனம் எப்போது தோன்றியது, எங்கே தோன்றியது, எப்படி இப்போது இருக்கும் பூமி முழுவதும் பரவியது என்பதைப் பற்றி பல செய்திகளை மரபியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஓர் இடத்தில் தோன்றி வாழ்ந்த மனித இனம், பல ஆயிரம் ஆண்டுகள் பயணத்தின் விளைவாக இன்றைக்கு உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. முதல் பரவல் என்பது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு, கால்நடையாகச் சென்றிருக்கிறார்கள். போகும் வழியில் தங்கி, சில காலம் கழித்து அங்கிருந்து கிளம்பி ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும் அது போலவே ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கும் கால்நடையாகவே மனிதர்கள் குழு குழுவாகச் சென்றிருக்கிறார்கள். தங்களது பண்பாட்டை, நாகரிகத்தை வளர்த்திருக்கிறார்கள். பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு கிடைத்த மூளை வளர்ச்சியும், இரண்டு கால்களால் நேராக நிமிர்ந்து நடக்கும் தன்மையும் விளைவித்த அற்புதம் அவனை உலகம் முழுவதும் பரவ வழி செய்தது. பேருந்து, இரயில், விமானம் என்று அடுத்தடுத்த வந்த நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கோ செல்வதை மிக எளிமையாக்கி இருக்கிறது. சில மணி நேரங்களில் கண்டம் விட்டுக் கண்டம் செல்ல முடிகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிறந்து வாழ்ந்து, அங்கேயே செத்து மடிந்த மனிதன், இன்றைக்கு அறிவியலால் பல நாடுகளில், பல கண்டங்களில் வாழும் மனிதனாக மாறியிருக்கிறான்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு விமானத்தில் செல்வது போல, நமது பூமியிலிருந்து வேறு கோள்களுக்கு ராக்கெட் மூலமாகச் செல்வதும், அங்கு சென்று வேலை பார்ப்பதும், பின்னர் தாய் நாட்டிற்கு திரும்புவது போல பூமிக்குத் திரும்புவதும் எதிர்காலத்தில் இயல்பு ஆகலாம். அமெரிக்காவைக் கண்டுபிடித்தவுடன், அங்கிருந்த இயற்கைச் செல்வங்களை எல்லாம் வெள்ளையர்கள் அள்ளிக்கொண்டு சென்றது போல, வேறு கோள்களில் இருக்கும் இயற்கை வளங்கள் பூமி இருப்பவர்களுக்குப்  பயன்படலாம்; கொண்டு வரலாம். இப்படியெல்லாம் கூட நாம் யோசிக்கலாம்.

எலன் மஸ்க் (Elon musk) என்பவர் தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த தொழில் அதிபர். இவர் கடந்த சில ஆண்டுகளாக செவ்வாய்க் கோளில் மனிதர்கள் குடியேறுவதைப் பற்றி பேசுகின்றார் - எழுதுகிறார். அவருடைய திட்டத்தின் (பிராஜக்ட்) பெயர் ஸ்பேஸ்-எக்ஸ் (SPACE X). 2019ஆம் ஆண்டிற்கான ஸ்டீபன் ஹாக்கிங் -விண்வெளி தொடர்பு (Space communication) விருதினைப் பெற்றிருக்கின்றார். அமெரிக்காவில்  உள்ள நாசாவின் உதவியோடு அதற்கான திட்டங்களைத் தீட்டி, முதலில் ஒரு 100 பேரை செவ்வாய்க் கோளில் குடியேற்றுவது என்று திட்டமிட்டுச் செயல் ஆற்றி வருகின்றார். அதனைப் போல நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான குடியேற்றம் பற்றியும் தனது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ரைட் சகோதரர்கள் விமானத்தில் முதன்முதலில் பறப்பதற்கு முயற்சி செய்தது போல எலன் மஸ்க் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். செவ்வாய் கோளில் மனிதர்கள் குடியிருப்பைக் கட்டுவதே தனது நோக்கம் என்று சொல்கிறார். முதலில் நாம் கேட்கும்போது நமக்கு சிரிப்பு வரும். ஆனால் பூமியில் இருந்தால் நாம் இனி உயிரோடு இருக்க முடியாது. இன்னும் கொஞ்ச நாளில் இறந்துபோவோம் என்று நிலை வருகின்றபோது, உயிரோடு இருப்பதற்கான, வாழ்வதற்கான வாய்ப்பு இன்னொரு கோளிலோ அல்லது சந்திரன் போன்ற துணைக் கோளிலோ இருக்கிறது என்று சொன்னால், கொஞ்சம் பணம் அதிகம் இருந்தாலும் பரவாயில்லை, அங்கு சென்று சில ஆண்டுகள் வாழ்ந்து பார்ப்போமே என்று மனிதர்களுக்குத் தோன்றும். ஆனால் இது  நடைமுறையில் வந்தால், பல கோடி ரூபாய் வசதி உள்ளவர்கள் மட்டுமே வேற்றுக் கோளுக்குச்  சென்று வாழமுடியும்.

மாற்றி யோசிப்பதுதானே பகுத்தறிவு. கடவுள் சித்தப்படி உலகம் நடைபெறுகிறது என்று எண்ணிக் கொண்டு ஆத்திகவாதி சென்று கொண்டிருக்கிறான். ஆனால் வரக்கூடிய ஆபத்துகளையும், எதிர்காலத்தில் வரக்கூடிய வாய்ப்புகளையும் இணைத்து முன் செல்லக் கூடியவன் பகுத்தறிவுவாதி. நாம் வேறு கோளில் சென்று வாழ்வது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். வேறு கோளில் வசிப்பவர்கள், நம்மைப் போல அங்கே இருந்து வந்து பூமியில் வசிக்க வேண்டும் என்று நினைத்தால்?.... வேறு கோள்களில் உயிர்கள் வாழக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா? ...இருக்கிறது என்று சொன்னார் ஸ்டீபன் ஹாக்கிங்.

எந்த எந்தக் கோள்களில் எல்லாம் தண்ணீர் இருக்கிறதோ, அங்கெல்லாம் உயிர்கள் தோன்றியிருக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் என்பது பல இலட்சக்கணக்கான கோள்களைக் கொண்டது. உயிரினங்கள் இருக்கக்கூடிய கோள்களும் இருக்கும், இல்லாத கோள்களும் இருக்கும் என்றார். பறக்கும் தட்டு என்பது எல்லாம் உண்மை இல்லை என்று கூறும் ஸ்டீபன் ஹாக்கிங் வேற்றுக் கோள்களில் வசிப்பவர்கள் நமது பூமிக்கு வரலாம் என்றார். அப்படி வந்தால் பூமியில் இருக்கும் நாம் பாதிப்புக்கு உள்ளாவோம். எப்படி கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தவுடன், அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் பாதிப்புக்கு உள்ளாகி, உயிரை இழந்தார்களோ, அதுபோல பூமியில் இருக்கும் நமக்கு அவர்களால் ஆபத்து ஏற்படும். அவர்கள் நம்மை விட பலமடங்கு அறிவுக்கூர்மை உடையவர்களாக இருக்கக்கூடும் என்ற ஆபத்தையும் நமக்குச் சொன்னவர் பகுத்தறிவுவாதி ஸ்டீபன் ஹாக்கிங்.

எதைக் கண்டும் அஞ்சி வாழ்வதல்ல வாழ்க்கை. ஆனால் இனி வரும் பிரபஞ்சம் எப்படி இருக்கக்கூடும் என்னும் அறிவு, அறிவியல் தரும் அறிவு, நமக்கு புதிய வழிகளையும், புதிய வெளிச்சங்களையும் காட்டக்கூடும்.

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit சிந்தனை : இனிவரும் காலத்தில் பிரபஞசம் in FaceBook Submit சிந்தனை : இனிவரும் காலத்தில் பிரபஞசம் in Google Bookmarks Submit சிந்தனை : இனிவரும் காலத்தில் பிரபஞசம் in Twitter Submit சிந்தனை : இனிவரும் காலத்தில் பிரபஞசம் in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.