Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2021
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2020 -> நவம்பர் 01-15, 2020 -> சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : இவர்தான் பெரியார்

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : இவர்தான் பெரியார்

நூல்: இவர்தான் பெரியார்

ஆசிரியர்:மஞ்சை வசந்தன்

முகவரி: பெரியார் புத்தக நிலையம்

 பெரியார் திடல், 84/1 (50),

 ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி,

 சென்னை -600 007.

044-26618163 பெரியார் மாளிகை,

புத்தூர், திருச்சி-620 017 0431-2771815

www.dravidianbookhouse.com

 பக்கம் : 286 ; விலை: ரூ.180/-

துவக்கம் - சுயமரியாதை இயக்கம்

காங்கிரசை விட்டு வெளியேறிய ஈ.வெ.ரா. சுயமரியாதை உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

மக்களிடையே ஏற்றத்தாழ்வு கூறுவது தவறு. ஒருவன் உயர்ந்த ஜாதி, மற்றொருவன் தாழ்ந்த ஜாதி என்று பிறப்பால் வேறுபடுத்துவது கொடுமை. ஒவ்வொரு மனிதனுக்கும் மான உணர்வு உண்டு. அதை மதித்து மற்றவன் நடக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு சுயமரியாதைக் கருத்துகளை மக்களிடம் எடுத்துரைத்துப் பிரச்சாரம் செய்தார்.

1926 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி ‘‘குடிஅரசு’’ இதழில் ‘சுயராஜ்யமா? சுயமரியாதையா’? என்ற தலையங்கம் எழுதினார். அது அவரின் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைப் பிரகடனமாக அமைந்தது.

“ஒரு சமுதாயத்தை ஒடுக்கி சுயமரியாதை அற்று வைத்திருக்கும் சமூகத்தார் சுயராச்சியம் (விடுதலை) அடைவது மற்றைய சமூகங்களுக்கு நன்மை தருமா? அல்லது ஒடுக்கப்பட்டவருக்கும் சேர்த்துத்தான் சுயராச்சியம் தேடுவது என்று சொல்லுவோமானால், அவர்கள் தெய்வங்களைக் காணவும், தரிசிக்கவும் முடியாத படியும், தெருவில் நடக்கவும், கண்ணில் தென்படவும் முடியாத படியும் வைத்திருப்பதற்குக் காரணம் சுயராச்சியம் இல்லாமைதானா?.....

மகாத்மாகாந்தி அவர்கள் சுமார் அய்ந்து வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது,’’ என்னுடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள யோக்கியதை இல்லாமல் இருக்குமானால் நான் சுயராச்சியத்தை விரும்புவதில் அர்த்தமேயில்லை’ என்று சொல்லியிருக்கிறார்.....

“தீண்டாமை ஒழிய வேண்டும் என்று காந்தியடிகள் சொல்வதும், கதர் அணியவேண்டும் என்று கட்டாயப் படுத்துவதும், நம் நாட்டு மக்கள் சுயமரியாதையின் ஜீவநாடிகள்... ஆகவே, நமது தேசம் உண்மையான உரிமை பெறவேண்டுமானால் மக்களின் சுயமரியாதைக்குத்தான் முதலில் பாடுபடவேண்டும்‘‘ என்று எழுதியிருந்தார்.

“மனிதன், மானிடன் என்னும் சொற்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானம் உடையவன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமை உடையதே மானம்தான்.”

“தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமான கடனாகும். ஏனென்றால், தீண்டாதார்களின் முன்னேற்றந்தான் பிராமணர் அல்லாதாரின் முன்னேற்றம். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணர் அல்லாதாரின் துன்பமாகும். எனவே, தீண்டாமை ஒழிவதன் மூலந்தான் நாடு சுயராச்சியம் அடையும்“ என்றும் ஈ.வெ.ரா. விளக்கினார்.

தெருவில் நடக்கக் கூடாது, கோயிலுக்குள் நுழையக் கூடாது, பிராமணர்கள் குடியிருக்கும் பக்கம் செல்லக் கூடாது என்று தாழ்த்தப்பட்டோர் கொடுமைப்படுத்தப்படும் நிலை உச்சநிலையில் இருந்ததால்

ஈ.வெ.ரா. வேறு எல்லா பிரச்சினைகளையும் விட சுயமரியாதைப் பிரச்சினையை முதன்மையானதாகக் கொண்டு பிரச்சாரம் செய்தார்.

காங்கிரசை விட்டு வெளியில் வந்த ஈ.வெ.ரா. சுயமரியாதைப் பிரச்சாரத்தில் தீவிரங்காட்டியதோடு நீதிக்கட்சிக் கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வதை அறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒரு குழு அமைத்து ஈ.வெ.ரா. நடவடிக்கைகளை விசாரித்தது. அக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஈ.வெ.ரா. வின் காங்கிரஸ் பதவியை ரத்து செய்து, காங்கிரசுக்கும் அவருக்கும் இனித் தொடர்பில்லை என்று அறிவித்தது.

இந்த நடவடிக்கை ஈ.வெ.ரா.வை நீதிக் கட்சியின் பக்கம் நெருக்கமாகக் கொண்டு சென்றது. பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பில், பார்ப்பனர் அல்லாதார் உரிமைக்குப் போராடுவதில் ஈ.வெ.ரா முழுமூச்சாக ஈடுபடத் தொடங்கினார். தன்னுடைய பிரச்சாரத்திற்கு நீதிக் கட்சி மாநாடுகளையும் பயன்படுத்திக் கொண்டார்.

1926 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை மாகாண சட்ட மன்றத்திற்குப் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. ஈ.வெ.ரா யாரையும் குறிப்பிட்டு ஆதரிக்காமல், திறமையுள்ள, பார்ப்பனர் அல்லாத, தொண்டுள்ளங் கொண்ட, தன்னலமற்றவர்களை ஆதரிக்கும்படி வேண்டினார்.

அத்தேர்தலில் “நீதிக்கட்சி’’ பெருந்தோல்வி அடைந்தது, காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதில்லை என்ற முடிவில் இருந்ததால் சுயேட்சை உறுப்பினரான டாக்டர் பி.சுப்பராயன் டிசம்பர் மாதம் தனது அமைச்சரவையை அமைத்தார். ‘‘நீதிக்கட்சி’’ எதிர்க்கட்சியாகச் செயல்பட்டது.

தோல்வி அதிர்ச்சியில் ‘‘நீதிக்கட்சி’’ சிதறத் தலைப்பட்டது. அந்நிலை அறிந்த ஈ.வெ.ரா. அக்கட்சியைக் காப்பாற்ற முடிவு செய்தார். 1926 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25,26 தேதிகளில் மதுரை நகரில் கூட்டப்பட்ட பிராமணர் அல்லாதார் மாநாட்டில் ஈ.வெ.ரா. பேசினார். இந்த எழுச்சியுரை நீதிக்கட்சியினருக்கு புதிய தெம்பைக் கொடுத்தது. அனைவரும் கதர் அணிய வேண்டும் என்ற ஈ.வெ.ராவின் வேண்டுகோளை தீர்மானமாகவே அம்மாநாட்டில் நிறைவேற்றினர்..

காந்தியாருடன் கடும் மோதல்:

காங்கிரசை விட்டு வந்தாலுங்கூட ஈ.வெ.ரா. காந்தியார் மீது மதிப்பும் பற்றுங் கொண்டேயிருந்தார். ஆனால் 1927 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘‘சுதேசமித்திரன்’’  நாளிதழில் வெளிவந்த காந்தியாரின் உரையைப் படித்த ஈ.வெ.ரா. அதிர்ச்சியடைந்தார்.

“ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வர்ணத்தார் செய்யவேண்டும். அப்படி செய்யும் போது அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள்”.

பிராமணனுக்குச் சில தர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை அவன் சரிவர நிறைவேற்றும்போது அவன் உயர்ந்தவன் ஆகிறான். ஜனசேவையே பிராமணனுடைய முக்கிய தர்மம்.

எளியவர்களைப் பாதுகாப்பது சத்திரியனுடைய முக்கிய தர்மம். அத்தர்மத்தை அவன் செய்யுபோது அவன் மற்றோரிலும் மேம்பட்டவனாகிறான்.

இப்படியே இதர வர்ணத்தார்களும் தத்தமக்கு ஏற்பட்ட தர்மங்களை - கடமைகளைச் செய்கையில் அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள்.

இப்படியிருக்கும் போது உயர்வு -  தாழ்வு எங்கிருந்து வருகிறது? வருணாசிரம தர்மம் சமுதாய நலத்தை ரட்சிப்பதற்காகவே ஏற்பட்டது. மற்றபடி ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை ரட்சிப்பதற்கு ஏற்பட்டதல்ல.

மேற்கண்ட காந்தியாரின் கருத்துகளைக் கண்ணுற்ற ஈ.வெ.ரா. கடுங்கோபங் கொண்டார். காந்தியாரை நேரில் சந்தித்து விவாதிக்க முடிவு செய்து பெங்களூருக்குப் போய் காந்தியைச் சந்தித்தார்.

அப்போது மூன்று கருத்துகளை காந்தியிடம் வற்புறுத்தினார்.

1. காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும்

2. ஜாதியை ஒழிக்க வேண்டும்

3. இந்துமதத்தை ஒழிக்க வேண்டும்.

அப்போது காந்தியாருக்கும் ஈ.வெ.ரா. விற்கும் நடந்த விவாதத்தின் ஒரு பகுதியைக் கீழே படியுங்கள்.

ஈ.வெ.ரா.: இந்துமதம் ஒழிய வேண்டும்

காந்தி : ஏன்?

ஈ.வெ.ரா.: இந்துமதம் என்று எதுவும் கிடையாது.

காந்தி : இருக்கிறது

ஈ.வெ.ரா.: அது பிராமணன் உருவாக்கிய பிரமை

காந்தி : அனைத்து மதங்களும் அதைப் போன்றதுதான்

ஈ.வெ.ரா.  : இல்லை, மற்ற மதங்களுக்கு வரலாறு, லட்சியங்கள், கோட்பாடுகள் உள்ளன. மக்கள் அவைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

காந்தி : இந்துமதத்தில் அத்தகையது எதுவும் இல்லையா?

ஈ.வெ.ரா. : சொல்வதற்கு என்ன இருக்கிறது? பிராமணன், சூத்திரன், வைசியன் போன்ற ஜாதிய உட்கூறுகள் தவிர அதில் வேறெந்த விதியோ,சான்றோ கிடையாது.

காந்தி : அது குறைந்தபட்சம் இக்கோட்பாட்டைக் கொண்டுள்ளது.

ஈ.வெ.ரா. : இந்துமதம் இருக்கும்வரை சமத்துவத்தைப் பெற முடியாது.

காந்தி  : இந்துமதத்தின் மூலமாக எவரும் இதைப் பெற முடியும்.

ஈ.வெ.ரா : அப்படியானால் பிராமணர் - சூத்திரர் வேறுபாட்டை நிரூபிக்கும் மதச்சான்றுகள் குறித்து என்ன சொல்வது?

காந்தி : நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். இந்துமதம் என்று எதுவும் இல்லையென்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அதற்கென்று திட்டவட்டமான விதியில்லை என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால், இந்துக்கள் என்று நம்மை நாம் கூறிக் கொள்வதன் மூலம் நாம் விரும்பும் முறையில் அதற்காக பொதுவான லட்சியங்களை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்....

ஈ.வெ.ரா.  : மன்னிக்கவும். அதைச் செய்ய முடியாது.

காந்தி : ஏன்?

ஈ.வெ.ரா. : இந்துமதத்திலுள்ள சுயநலக் கும்பல் அவ்வாறு செய்ய

உங்களை அனுமதிக்காது.

காந்தி : (சிரித்துக் கொண்டே) : யார் அவர்கள்?

ஈ.வெ.ரா. : பிராமணர்கள் அனைவரும்.

காந்தி: அவ்வாறு சொல்லாதீர்கள்! நான் ஒரு பிராமணனைப் பார்த்தேன். அவர் ஒரு சிறந்த பிராமணர் என்றே இன்றும் கருதுகிறேன். அவர்தான் கோபாலகிருஷ்ண கோகலே.

ஈ.வெ.ரா.: உங்களைப் போன்ற மகாத்மாவிற்கு இந்த உலகில் ஒரே ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது சாத்தியமாயிருக்கலாம். ஆனால், என்னைப் போன்ற சாதாரண பாவிகளுக்கு ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?

காந்தி : (சிரித்துக் கொண்டே)... பிராமணர்கள் படித்த மக்கள். அவர்கள் என்றென்றும் மற்றவர் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவார்கள். எனவே, அவர்களை விமர்சிப்பதை விட்டு நாமும் அந்த மட்டத்தை அடைய வேண்டும்.

ஈ.வெ.ரா. : பிராமணர்கள் முழுமையும் அறிவு ஜீவியா இருந்து கொண்டு 90 சதவிகிதம் மக்களை கல்லாதவர்களாக்கி, அவர்களுக்கு ஊறுவிளைவித்தல் சரியா? எனவே, இந்நிலைக்குக் காரணமான மதத்தை ஒழிக்க வேண்டும்.

காந்தி : நீங்கள் பிராமணர்களுக்கு எதிரான வெறுப்பைக் கொண்டுள்ளீர்கள். அதுதான் உங்கள் சிந்தையில் பிரதானமாக நிற்கிறது. நம்முடைய விவாதம் மூலம் நாம் இதுவரை எந்த உடன்பாட்டுக்கும் வரவில்லை. எனினும் எதிர்காலத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சந்தித்துப் பேசுவோம். நமது நிலை குறித்துத் தீர்மானிப்போம். இவ்வாறு காந்தியுடன் கருத்து வேறுபாடு முற்றவே ஈ.வெ.ரா. கடுப்புடன் வெளியே வந்துவிட்டார். காந்தியின் மீதிருந்த மரியாதை ஈ.வெ.ரா.வை விட்டு விலகியது. அதுவரை “மகாத்மா’’ என்று எழுதி வந்தவர் அதன்பின் அதை நீக்கி எழுதினார்.

“என்றைக்கு மக்களுக்குள் வருணம் நான்கு உண்டு. அதுவும் அவை பிறவியில் ஏற்படுகின்றன. அந்தந்த வர்ணத்தாருக்கும் ஒரு தர்மம் உண்டு என்று சொன்னாரோ அன்றே அவரிடம் “மகாத்மா’’ தன்மை இல்லை என்று தீர்மானித்து விட்டோம்... “மகாத்மா’’ பட்டம் ஒருவரின் அபிப்பிராயத்தையும் நடவடிக்கையையும் பொருத்துத்தான் வழங்கப்படுவதே தவிர, வெறும் உருவத்திற்காக வழங்கப்படுவதல்ல என்று ஈ.வெ.ரா. வே கூறினார்.

காந்தியைச் சந்தித்து வந்தபின் ஈ.வெ.ரா. போக்கில் மட்டுமல்ல, “குடிஅரசு’’ ஏட்டிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.

சுயமரியாதை இயக்கத்தின் முக்கியக் கொள்கைகளாக கீழ்க்கண்டவற்றை ஈ.வெ.ரா. வரையறுத்தார்.

1. மனிதருள் உயர்வு- - தாழ்வு பிறப்பால் இல்லை.

2. பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாத பொதுவுடைமைச் சமுதாயம் வேண்டும்.

3. ஆணும் பெண்ணும் சமவாய்ப்பும் சம உரிமையும்  உடையவர்கள்.

4. ஜாதி, மதம், தேசம், வருணம், கடவுள் ஆகியவை ஒழிந்த அறிவும் ஒற்றுமையும் உடைய சமுதாயம் அமைக்க வேண்டும்.

5. உழைப்பாளி முதலாளி என்ற வேறுபாடு இல்லாமல் உழைத்து உழைப்பின் பயனை சமமாக அனுபவிக்க வேண்டும்.

6. யாரும் யாருக்கும் அடிமையல்ல. அவரவர் அறிவு, ஆராய்ச்சி, காட்சி, உணர்ச்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்க அனைத்து சுதந்திரமும் வேண்டும்.

இந்நோக்கங்களை அடைய அவர் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

1917 ஆம் ஆண்டு நாயக்கர் என்ற ஜாதிப் பெயரை ஈ.வெ.ரா. கைவிட்டார். அதுமுதல் அவர் ஈ.வெ.ரா. என்றே அழைக்கப்பட்டார்.

இரயில்வே தொழிலாளர் போராட்டம்

1928 ஆம் ஆண்டு தென்னக இரயில்வே தொழிலாளிகளின் போராட்டம் வெடித்தது. நாகப்பட்டினம், பொத்தனூர் போன்ற இடங்களிலிருந்த ரயில்வே பணிமனைகளை மூடி, ஆட்குறைப்புச் செய்தது ஆங்கில அரசு.

இந்த நடவடிக்கையின் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோகும் என்பதால் தொழிலாளர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியது.

தமிழகத்தை அப்போது ஆண்ட “நீதிக்கட்சி’’க்குத் தொல்லை தருவதாக பார்ப்பனர்கள் இப்போராட்டத்தைத் தூண்டுகின்றனரோ என்று எண்ணிய ஈ.வெ.ரா., முதலில் வேலை நிறுத்தத்தில் இறங்கவேண்டாம் என்று தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார். நாகப்பட்டினத்து தொழிலாளர்கள் பெரும்பாலானோர் சுயமரியாதை இயக்கத்தை ஆதரிப்பவர்களாய் இருந்தனர். ஆனாலும் அவர்களின் பாதிப்பை உணர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாய் இருந்தனர். ஜூலை 19 ஆம் தேதி வேலை நிறுத்தம் துவங்கியது. இதைக் கண்ட ஈ.வெ.ரா. தொழிலாளர்களுக்கு ஆதரவாய் போராட்டத்தை ஆதரித்தார். நாகப்பட்டினத்தில் அரசாங்கம் விதித்திருந்த தடையுத்தரவையும் மீறி போராட்டத்தை ஆதரித்துப் பேசியதோடு, போராட்டத்திற்கு நிதி உதவி அளிக்கும்படி பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

ஈரோட்டிலும் வேலை நிறுத்தக்காரர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது என்று வாதிட்டார்.

வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரித்ததற்காக ஈ.வெ.ரா 1 மாத சிறைத் தண்டனை அனுபவித்தார். பின்னர் அரசாங்கமே அவர்மீது தொடுத்த வழக்கைத் திரும்பப் பெற்றது.

சுயமரியாதை மாநாடுகள்:

1928 ஆம் ஆண்டு முதல் ஈ.வெ.ரா. வின் தீவிரப் பிரச்சாரத்தால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுயமரியாதை இயக்க அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு அவரின் முதன்மை நடவடிக்கையாக அமைந்தது.

பார்ப்பனர் இல்லாத திருமணம், பார்ப்பனர் இல்லாத நினைவு நாள், பார்ப்பனர் இல்லாத புதுமனை புகுவிழா என்று புரட்சிச் செயல்பாடுகள் பரவின. இவ்வாறு காரியங்கள் செய்வோர் பற்றிய விவரம் “குடிஅரசு’’ இதழில் வெளியிடப்பட்டது.

‘ஸிமீஸ்ஷீறீt’ என்ற ஆங்கிலப் பத்திரிகை ஒன்றையும் ஈ.வெ.ரா. தொடங்கினார். சுயமரியாதைக் கொள்கை தமிழ் தெரியாத மக்களுக்கும் பரவ வேண்டும் என்கிற நோக்கோடு இது ஆரம்பிக்கப்பட்டது. 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் செங்கற்பட்டில் சுயமரியாதை இயக்க முதல் மாநாடு நடந்தது. டபிள்யூ. பி.ஏ. சவுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். “நீதிக்கட்சி’’யின் கொடியை பி.டி.இராஜன் ஏற்றி வைத்து உரையாற்றினார்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தும் தீர்மானம் உட்பட 34 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மக்களிடையே ஏற்றத்தாழ்வு கூடாது, மதம், வேதம், சாஸ்திரம், புராணம் இவற்றை மக்கள் ஏற்கக் கூடாது, நால்வருணம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற முக்கிய தீர்மானங்களும் அதில் அடங்கும்.

பொது இடங்களில் அனைத்து ஜாதியினரும் புழங்க உரிமை வேண்டும். அதற்கு அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 16 வயதுக்கு மேல்தான் பெண்களுக்கு திருமணம் செய்ய வேண்டும். விவாகரத்து, விதவை மணம், சிக்கனத் திருமணம் ஆகியவையும் வலியுறுத்தப்பட்டன. தாய் மொழிக் கல்வியும் வலியுறுத்தப்பட்டது.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பதவி முழுவதும் பெண்களுக்கே தரப்படவேண்டும். மூடநம்பிக்கையைப் பரப்பும் கருத்துகள் பாடத்திட்டத்தில் இடம்பெறக் கூடாது என்பனவும் தீர்மானம் செய்யப்பட்டன.

தொழிலாளர் பாதுகாப்புக்கும் உரிமைக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

1930 இல் ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாடும், 1931 இல் விருது நகரில் மூன்றாவது சுயமரியாதை மாநாடும் நடத்தப்பட்டன.

இவற்றைத் தொடர்ந்து சுயமரியாதைப் பெண்கள் மாநாடு, சுயமரியாதை வாலிபர் மாநாடு நடைபெற்றன. ஆயிரக்கணக்கில் பெண்களைத் திரட்டி எழுச்சிக் கருத்துகளை ஊட்ட இம்மாநாடுகள் பயன்பட்டன. இளைஞர்களும் வெகுவாகக் கவரப்பட்டு அணி திரண்டனர்.

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : இவர்தான் பெரியார் in FaceBook Submit சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : இவர்தான் பெரியார் in Google Bookmarks Submit சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : இவர்தான் பெரியார் in Twitter Submit சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : இவர்தான் பெரியார் in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

பிப்ரவரி 16-28, 2021

  • தலையங்கம் : பகுத்தறிவு இல்லாப் படிப்பு பாழே!
  • பெரியார் பேசுகிறார் : செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்
  • முகப்புக் கட்டுரை : குருமூர்த்திகளுக்கு சர் சி.பி.ராமசாமி அய்யரின் மொத்துகள்!
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பின் பக்க விளைவே நரபலிகள்!
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.