பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்! என்ற தலைப்பில் ஆசிரியர் தீட்டிய தலையங்கங்கள் அருமை! பகுத்தறிவு படைத்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பயனுள்ள செய்திகள்!
பெரியார்! என்ற தலைப்பில் அன்று (1945) கலைஞர் தீட்டிய கவிதையை இன்று படித்தேன். ஒவ்வொரு வரிகளும் அற்புதம். இதில் ஈ.வெ.ரா. என்ற வார்த்தை இந்த நாட்டு ஆரியத்தின் அடிபீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம் என்ற வரி என்னை மிகவும் கவர்ந்தது.
உடல் பருமன் தவிர்க்க என்ற தலைப்பில் மருத்துவப் பகுதியில் வெளிவந்த வழிமுறைகள் அனைத்தும் அருமை! பகுத்தறிவாளர்கள் படிக்க வேண்டிய பயனுள்ள பகுதி! அவர்களுக்கு இது ஒரு உற்சாக டானிக்.
திராவிடஇயக்கத்தின் முன்னோடி என்.வி.நடராசன் என்ற துணுக்குகளைப் படித்தபோது, அவரது சொற்பொழிவை பல மேடைகளில் (திட்டக்குடி உள்பட) கேட்டது, எனக்கு மலரும் நினைவுகளாக வருகிறது. பட்டிதொட்டி எங்கும் தி.மு.க.வை வளர்த்தவர். ஒவ்வொரு ஊரில் உள்ள கழக முக்கியஸ்தர்களை பெயர் கூறி அழைப்பவர். இன்றைய கழகத்தவர் பலருக்கு, அவரைத் தெரிய வாய்ப்பில்லை. அவரைப் பற்றிய துணுக்கு இன்றிருப்போர் படிக்க வேண்டிய பயனுள்ள செய்தி!
என்னைப் பற்றி முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்திலே இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத் தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடமுண்டு என்று நாவலர் அவர்களை உதாரணம் காட்டி, என்னுடைய கவலைகளை உடனுக்குடன் நொடிப்பொழுதில் அறிந்து அதை மாற்ற வேண்டும் என்ற அக்கறையோடு, நல்ல முறையில் துணை புரிவதில் கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான் என அண்ணா கூறியதை கருணாநிதி பற்றி அண்ணா என்ற துணுக்கு என் போன்றோரை வியப்பில் ஆழ்த்தியது.
- தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
மானமிகு உண்மை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். மே 16-31 உண்மை இதழை வாசித்தேன். ஒவ்வொரு செய்திகளும் அற்புதமாக இருக்கின்றன. குறிப்பாக கவிஞர் வைரமுத்து அவர்கள் பகுத்தறிவு ஆசான் தந்தை பெரியாரை பற்றி ஆற்றிய உரையான தமிழாற்றுப்படை பெரியார் என்பதை தொகுத்து எழுதியுள்ள மஞ்சை வசந்தன் அவர்களுடைய கட்டுரை சிறப்பு.
மேலும் இதழின் 10ஆம் பக்கத்தில் பெரியார் என்ற பொருளை எப்படி புரிந்து கொள்வது எனும் தலைப்பின் கீழ் வைரமுத்து அவர்களின் வரியான அடிமண்ணை மேல்மண்ணாகவும் மேல்மண்ணை அடிமண்ணாகவும் வரலாற்றில் உழுதுபோன வைரக்கலப்பை என்பதா? எனும் வரி ஒரு இனத்தின் கூக்குரலாக உள்ளது.
இதனை தவிர தலையங்கம் (அரசு சார்பில் யாகம் நடத்துவது அரசியலமைப்பை மீறிய செயல்!), வெங்காய இயக்குநரின் நந்திக்கலம்பகம், பெரியார் கொடுத்த தந்தி, தலைநிமிர்ந்த தமிழர்களைக் கொண்டாடிய தமிழர் பண்பாட்டுப் புரட்சி விழா, கேள்வி?பதில்!, பெரியாரும் அயோத்திதாசரும், பெரியாரை போற்றிய தாழ்த்தப்பட்ட தலைவர்கள் போன்ற கட்டுரைகள் அருமைமிக்கதாக உள்ளன. அனைத்து கட்டுரைகளும் அறிவினை தூண்டும் வண்ணம் உள்ளன.
இது போன்ற சமூக கருத்துக்களை கொண்ட உண்மை இதழை அனைவரும் வாங்கி படிப்பதற்கு நான் விழிப்புணர்வு செய்வேன். உண்மைத் தீ பரவட்டும்!
இப்படிக்கு,
மானமிகு.சு.தமிழ்மணி,
திராவிடர் மாணவர் கழகம்,
அருப்புக்கோட்டை.