Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2018 -> ஜூன் 01-15 -> அண்ணாமலைக்கு அரோகரா!

அண்ணாமலைக்கு அரோகரா!

கலைஞர்

 
 

“ஓய்! நீல வர்ணம்! என்னிடம் காட்டாதே உன் பெருமையை! எங்கேயாவது ஆழ்வார் வர்க்கம் இருந்தால் அங்கே போய்க் காட்டும். சிருஷ்டி கர்த்தாவிடமா சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறாய். சபாஷ்!’’

“ஓய்! பல தலை! வீண்ஜம்பம் அடிக்காதீர். உமது பெருமையை மற்ற தலைகளிடம் சொல்லிக் களிப்படையும், வைகுண்ட வாசனிடமா வீராப்பு! வெகு நன்று!’’

“ஆத்திரப்பட்டு ஆடாதே தம்பீ! நீ மோகினி உருவம் எடுத்து சிவனோடு கலவி செய்த காரணத்திற்காக உனக்கு மதிப்பு தர முடியாது!’’

“மகளையே காதலித்து, கரடியைக் கூடிய மகானுபாவரே! மூடும் உமது நாலு வாய்களையும்! எனது சங்கின் முழக்கத்திலே_சக்கரத்தின் வீச்சிலே வீழ்ச்சி பெறுவாய், நினைவிருக்கட்டும்.’’

தேவலோகத்திலே _ ஆமாம் _ மனிதரினும் மேம்பட்ட முப்பத்துமுக்கோடி தேவர்கள் வாழும் புண்ய பூமியிலே ஒரு சச்சரவு! யாருக்கும் யாருக்கும்? சாட்சாத் பிர்மாவுக்கும் விஷ்ணுவுக்குந்தான்! சிருஷ்டி கர்த்தாவுக்கும் ஸ்ரீயப்பதிக்கும் ஏற்பட்ட சச்சரவில் நடந்த சம்பாஷனை இது. இதன் சாரம் என்ன? யார் பெரியவர் என்பது! படைப்புத் தொழில் புரியும் பிரமன் பெரியவனா? காத்தல் வேலை செய்யும் விஷ்ணு பெரியவனா என்ற தர்க்கம் முற்றுகிறது. இவர்களுடைய சண்டையில் இவர்களுடைய தனிப்பட்ட நடவடிக்கைகளின் சாயம் வெளுத்ததே தவிர, தீர்ப்புக் கிடைக்கவில்லை. தேவலோகத்திலா? அதுவும் தேவாதி தேவர்களுக்குள்ளா சண்டை என்று சந்தேகம் ஏற்படலாம். தேவர் உலகத்தில் சண்டை மட்டுமல்ல வழக்குகள் பல வண்டி வண்டியாக உண்டு! அங்கு மாத்திரம் கோர்ட்டுகள் ஏற்படுத்தி விசாரணை நடத்தியிருந்தால், பரமசிவன் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளைக் கற்பழித்த வழக்கு, பிருந்தையை விஷ்ணு பலாத்காரம் செய்த வழக்கு, அகல்யையை இந்திரன் கற்பழித்த வழக்கு, சப்தகன்னியரை அக்னி பகவான் சூறையாடிய வழக்கு, குரு பத்தினியை சந்திரன் கூடிய வழக்கு, எண்ணாயிரம் சமணர் வழக்கு, இன்னோரன்ன வழக்குகள், கருவழித்த குற்றங்கள், திருட்டுக்கேசுகள் முதலியன நடைபெற்று தீர்ப்புகள் வந்திருக்கும். பூலோகத்தில் இறந்து சொர்க்கத்திற்குச் செல்லும் வக்கீல்களுக்கும் அங்கு நல்ல சான்சு கிடைத்திருக்கும்.

மேற்கண்ட வழக்குகளில் ஒன்றாகத் தான் பிர்மனுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவன் என்ற வழக்கு ஆரம்பமாயிற்று! இதைத் தீர்த்துவைக்க சிவனார் வந்து சேர்கிறார். வழக்கை விசாரிக்கிறார். தீர்ப்பு கூறுவது சங்கடமாகி விடுகிறது. உடனே ஆகாயமளாவ ஜோதியாகக் கிளம்புகிறார். அந்த ஜோதியின் முடியை ஒருவரும், அடியை ஒருவரும் கண்டு திரும்பவேண்டும். யார் முதலில் திரும்புகிறாரோ அவரே பெரியவர் என்று சிவனார் முடிவு கூறிவிடுகிறார். முடியை நோக்கி பிர்மா அன்னப்பறவை உருவில் பறந்தார், பன்றி உருவமெடுத்து அடியைக்காண பரந்தாமன் பாதாளத்தைக் குடைய ஆரம்பித்தார். இருவரும் வெற்றியை அணுக முடியவில்லை. மேலே பறந்துகொண்டிருக்கும் பிர்மாவுக்கு எதிரில் ஒரு தாழம்பூ மேலே இருந்து கீழேவந்து கொண்டு இருந்தது. “ஓ! தாழம்பூவே எங்கிருந்து வருகிறாய்?’’ என்றார் பிர்மா. “சிவபெருமானின் சடாமுடியிலிருந்து வருகிறேன்’’ என்றது தாழம்பூ!

“நான் சிவனின் முடியைத் தேடிப் போகிறேன். என்னால் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. நான் அவரது முடியைக் கண்டுவிட்டதாக ஒரு பொய்சாட்சி சொல்லுகிறாயா?’’ என்று கெஞ்சினார் பிர்மா?

பொய் சாட்சி சொல்லத் தாழம்பூ ஒத்துக் கொண்டது. அதன்படி சிவனிடம் சென்று நான் முடியைக் கண்டு விட்டேன் என்று பிர்மா கூறினார். அதற்கு தாழம்பூ, “ஆம்! நானும் பார்த்தேன்’’ என்று சாட்சியம் கூறிற்று. பாதாளத்தை நோக்கிப் பன்றி உருவிற் சென்ற விஷ்ணு, நாரத முனிவரை சந்தித்துத் தன் முயற்சியில் வெற்றியடைய முடியாது என்பதைத் தெரிந்து கொண்டு தோல்வியோடு திரும்பினார். பரமசிவன், பிர்மாவும் தாழம்பூவும் பொய் கூறியதைக் கண்டுபிடித்து அவர்களுக்கு சாபம் அளித்தார். இதிலிருந்து பிர்ம, விஷ்ணுக்களின் கர்வம் அடங்கியதோடு, சிவனே யாவரிலும் பெரியவர் என்ற தீர்ப்பும் கூறப்பட்டது. சண்டையிட்டவர் வெட்கித்  தலை குனிந்தனர்.

இது அருணாசல புராணம். தீப ஒளித் திருவிழா நடக்கப்போகிற திருவண்ணாமலை ஸ்தலத்தின் திருப்புராணத்தில் காணப்படும் ஆபாசங்களில் இதுவும் ஒன்று! அண்ணாமலையில் இதுவும் ஒன்று! அண்ணாமலையில் நாளை நடக்க இருக்கும் கார்த்திகை தீபத்திற்குப் பலப்பல அய்தீகங்கள் உண்டு! சிவன் சில அசுரர்களை நெற்றிக் கண்ணால் எரித்துவிட்டதாகவும் அதுவே சொக்கப்பானைத் திருநாள் என்றும் ஒரு புராணம் கூறுகிறது. மற்றொரு புராணத்தில், அக்கினிதேவன், சப்த கன்னியர்களைக் கண்டு காமுற்றதாகவும், அதனைக் கண்ட அவன் மனைவி சுவாகா தேவி, அருந்ததி கற்புடையவளானதால் அவள் உருவத்தை தவிர மற்ற ஆறு கன்னிகைகளின் உருவத்தை எடுத்து அக்கினி பகவானின் ஆசையைத் தீர்த்ததாகவும், அந்த ஆறு உருவங்களும் கார்த்திகைப் பெண்களாகி, அவர்கள் முருகனுக்குப் பாலூட்டியதால் முருகனுக்கு ‘கார்த்திகேயன்’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும், பிறகு அந்தப்பெண்கள் கார்த்திகை நட்சத்திரங்களாக மாறியதாகவும், அதுவே கார்த்திகை விரதத்திற்குக் காரணமென்றும் மற்றொரு புராணம் சொல்லுகிறது. மாபலி சக்கரவர்த்தி பற்றி மற்றொரு புராணமும் உண்டு!

இம்மாதிரியே, இந்த நாட்டில் நடைபெறும் பண்டிகைகளுக்கும், உற்சவங்களுக்கும் ஆயிரக்கணக்கான_ ஒன்றுக்கொன்று முரண்பட்ட கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தக் கதைகளில் யாராவது ஒரு அசுரன் கொல்லப்பட்ட செய்தியும் அல்லது தேவர்களுக்குள் நடந்த அற்பத்தனமான, ஆபாசமான தகராறும் அதுவுமில்லையானால் ஒரு வஞ்சத்தையும், விபசாரத்தையும் வளர்க்கும் புராணமும் காணப்படுமேயல்லாது, சிறிதாவது அறிவுக்குப் பொருத்தமான, ஒழுக்கமான நிகழ்ச்சிகளைக் காண முடியாது. இவைகளை சிந்தித்துப் பார்க்க இந்நாட்டு மக்களுக்கு நேரமோ, நினைப்போ இருப்பதில்லை. எதையெடுத்தாலும் முன்னோர்கள் வார்த்தை என்ற முலாம் பூசப்பட்டு பழக்கவழக்கம் என்ற பசப்பு மொழி பேசப்படுகிறதே தவிர, மனிதராக வாழ முயற்சிப்பதே கிடையாது!

இம்மாதிரி ஆபாசக் கதைகளின் போல் மாதத்திற்கொரு பண்டிகை மாதத்திற்கொரு உற்சவ திருநாள் அதற்காக பல ஆபாச ஆட்டங்கள்! ஆடம்பரமான செலவுகள்! கண்டவர் சிரிக்கும் காட்டுமிராண்டி நடவடிக்கைகள்! இவைகள் தான், ஞானத்தில் சிறந்தது சுதந்திர தாகமெடுத்து சுயராஜ்யத்திற்கு ஏன்? பொது உடமைக்கும் தயாரான சூரர்கள் வாழ்வதாகச் சொல்லப்படும் இந்த நாட்டிலே நடைபெறுகின்றன!

பாட்டாளி மக்களின் பச்சைக் குழந்தைகளின் வறண்ட தலைக்கு ஒரு துளி எண்ணெய் கிடையாது. திருவண்ணாமலைத் தீபத்திற்கு ஆயிரக்கணக்கான நெய் டின்கள் உடைக்கப்படுகின்றன. மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்த நாட்டு மாதர்களுக்கு ஒரு முழத்துணி கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஆனால், அண்ணாமலை தீபத்திற்குப் பீஸ் பீஸாகத் துணிகள் கொளுத்தப்படுகின்றன. பசித்த மக்களுக்கு ஒரு பிடி சோறு கிடையாது. ஆனால், அந்தப் பரமபிதாவுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இங்கு வறுமையால் வாடும் மக்களுடைய வயிறு எரிகிறது. அங்கு, அண்ணாமலையில் ஆடம்பரத்தோடு அறியாமை நெருப்பு எரிகிறது. அதற்கு நெய் வார்க்கப்படுகிறது. அந்தோ! கொடுமை! கொடுமை!

திராவிட மக்களுடைய உணர்வுக் கழனியிலே அறியாமையை நீராகப் பாய்ச்சி, மூடப் புராணீகப் பழக்கவழக்கங்களை பயிராக வளர்த்து, அவ்வப்போது முளைக்கும் ஆராய்சிகளைக் களை என்று கழறி பயமெனும் அரிவாளால் களைந்து தங்கள் சுயநலத்துக்கேற்ற வசதிகளை விளைவாகப் பெற்று பிழைப்பை அறுவடை செய்து பார்ப்பனரும், பணக்காரரும், படித்தவரும் வாழ்கின்றனர். இவர்களுடைய ஒப்புதல் முறிந்து கூட்டுச்சுரண்டல் முறை ஒழிய வேண்டுமானால் திராவிடர் தன்மானம் பெற  வேண்டும். அதுவன்றி அண்ணாமலைக்கு அரோகரா! போட்டுக் கொண்டேயிருந்தால் பழைய கற்காலத்தை நோக்கிக் கட்டை வண்டிப் பிரயாணத்தை கட்டுசாத மூட்டையோடு ஆரம்பிக்க வேண்டியதுதான்! உணர்வார்களா திராவிடர்கள்? உணர்ந்து ஆவன செய்வார்களா?

- (‘குடிஅரசு’- 17.11.1945)

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit அண்ணாமலைக்கு அரோகரா! in FaceBook Submit அண்ணாமலைக்கு அரோகரா! in Google Bookmarks Submit அண்ணாமலைக்கு அரோகரா! in Twitter Submit அண்ணாமலைக்கு அரோகரா! in Twitter

உண்மையில் தேட

wrapper

பிப்ரவரி 16-28 2019

  • நிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன்? ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்!
  • அதனால்தான் அவர் பெரியார்! பெரியார் காமராசர் அரிய உரையாடல்!
  • அப்படிப் போடு!
  • அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)
  • அய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்!
  • உங்களுக்குத் தெரியுமா ?
  • உண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)
  • ஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா?
  • கவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது ! எங்கெங்கும் எழுச்சி ! எதிரிகள் மிரட்சி !
  • கவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்
  • கவிதை : பிள்ளையாரே, பேசுவீரா?
  • குறும்படம் : ஜீவநதி
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்
  • சிறுகதை : கடவுள் நகரங்கள்!
  • டில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை!
  • தலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா?
  • நுழைவாயில்
  • நூல் அறிமுகம் :அழகிய பூக்கள்
  • புகை மாசிலிருந்து காக்கும் முகமூடி
  • பெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி!
  • பெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்
  • மருத்துவம் : நிலவேம்பு
  • மாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி! அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை!
  • வாசகர் மடல்
  • வாழ்வில் இணைய
  • ‘சுயமரியாதைச் சுடரொளி’
  • ”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது!”
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.