Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2021
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2021 -> ஜனவரி 16-31, 2021 -> அரசியல் களம்: ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்?

அரசியல் களம்: ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்?

கவிஞர் கலி.பூங்குன்றன்

பாவம் பா(மா)லன்கள்! மிகவும் ஏமாந்து போய்தான் இருக்கிறார்கள். தி.மு.க.வால் அறிமுகமாகி, திமுகவால் தனிப்பட்ட முறையிலும்கூட பலன் பெற்ற மாலன்கள் ஒரு நடிகர் வருவார் வருவார் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து, கண்கள் பூத்து, கண்கள் பூத்து கடைசியில் கானல் நீராகி விட்டதே என்று கதறாத குறைதான் - கண்ணீர் விட்டு ஆற்றாமையைப் போக்குகிறார்கள்.

மாலன் என்றால், ‘தினமணி’, ‘தினமலர்’, ‘துக்ளக்‘, பா.ஜ.க. - சங்பரிவார்கள் - பார்ப்பன வட்டாரத்தின் ஒரு குறியீடு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

‘குமுதம்’ (13.1.2021) இதழில் வெளிவந்த - மாலன் எனும் நாராயண அய்யங்கார் எழுதிய  “ரஜினியின் முடிவு” என்பது அவாள் எடுத்திருந்த முடிவுக்கான முடிவுரை.

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைக் கொட்டடியில் இருந்த ஜெகத்குரு தன்னைச் சந்தித்த விஜய்காந்திடம் நீங்களும் ரஜினியும் சேர்ந்து ஓர் அரசியல் கட்சியை ஆரம்பியுங்கள் என்று உசுப்பி விட்டார் (‘குமுதம்’ 18.1.2001)

இதற்கெல்லாம் காரணம் பார்ப்பனர் அல்லாத கட்சியான நீதிக்கட்சி, திராவிடர் கழகம் வழிவந்த தி.மு.க ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்ற ஆத்திரத்தில்தான்.  அதெல்லாம் பொய்யாய் பழங் கதையாய் புஷ்வாணமாகப் போய் விட்டதே என்ற புலம்பலையும், ஒப்பாரியையும் மாலன்களின் எழுத்தில் காண முடிகிறது.

கட்சிகள் பிரிந்தது எல்லாம் தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட கோபதாபங்கள் தான் காரணம். அவர்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட சில வார்த்தைகளையும்கூட எடுத்துக்காட்டுகிறார்.

காட்டுமிராண்டி, கண்ணீர்த் துளிகள், கறுப்பாக இருப்பதால் கல்யாணம் ஆகவில்லை, குல்லுகப்பட்டர், குடிலன், விதவை, தீய சக்தி, மலையாளி, விசிலடிச்சான் குஞ்சுகள், பாப்பாத்தி -இவை எல்லாம் வெவ்வேறு கால கட்டங்களில்,  வெவ்வேறு அரசியல் தலைவர்கள் சில தலைவர்கள்மீது பொழிந்த அன்பு மொழிகள் என்று ஏகடியம் வேறு.

கருப்புக் காக்கையைக் கல்லால் அடிக்க வேண்டும் (27.2.1966) என்று சென்னை  கடற்கரைக்  கூட்டத்தில் ஆச்சாரியார் (ராஜாஜி) பேசியது பாலன் அல்லவா, மறந்திருக்கும்!  “காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல அடி கொடுக்க வேண்டும். அதுவும் செருப்படிபோல் விழ வேண்டும்“ என்று பேசினார் ராஜாஜி. அதனைக் கண்டித்து தந்தை பெரியார் “விடுதலை”யில் “செங்காங் கடையில் ஆச்சாரியார்” என்ற தலைப்பில் எழுதினார் - ‘இவருக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?’ என்று (14.4.1964.

பா(மா)லன் அல்லவா? இதெல்லாம் மறந்தே போயிருக்கும்! இவர்களின் அந்தரங்கம் என்பது பார்ப்பனர் அல்லாத மக்கள் - அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திராவிடர் கழகம்  - தி.மு.கவைப்  பற்றிய   வெறித்தனமான    பார்ப்பனப் பார்வையே!

திராவிட இயக்கத்தை அதன் கொள்கையை வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை; ஆனால், அதனை வீழ்த்த வேண்டும்; பா.ஜ.க.வால் முடியுமா என்றால் முடியாது - என்பது பார்ப்பனர்களுக்குத் திட்டவட்டமாகவே தெரிந்து விட்டது. அதனை ஒரு வகையில் ஒப்புக் கொண்டும் கருத்துத் தெரிவித்ததுண்டு.

அப்படி என்றால் என்ன செய்யலாம்? ஒரு வசீகரமான மனிதர் என்ற கண்ணிவெடியை வைத்து வீழ்த்திவிடலாம் என்று திட்டம் தீட்டினர். வரைபடம் போட்டனர்.

வெகு காலத்துக்கு முன்பே காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ரஜினிகாந்தும், விஜயகாந்தும் சேர்ந்து ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கலாம் என்று தூபம் போட்டதை  நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

1967 தேர்தலில் ராஜாஜி சொன்னது - பூணூலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு தி.மு.கவுக்கு வாக்களியுங்கள் என்று கூறிப் பார்த்தார்.

தி.மு.க வெற்றி பெற்றாலும் ‘ஆரிய மாயை’ எழுதிய அண்ணா ஆரியத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். திருச்சிக்குச் சென்று தந்தை பெரியாரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் - ஆட்சியை வழி நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பார்ப்பனர் போட்ட திட்டம் தவிடு பொடியாக்கப்பட்டது. ராஜதந்திரி, குல்லுகப்பட்டர், சாணக்கியர், உடம்பெல்லாம் மூளை உடையவர் என்று அக்ரகாரவாசிகளால் ஆகாயம் வரை தூக்கிப் போற்றப்பட்ட ராஜாஜி, தந்தை பெரியாரின் மாணவரான - “ஆரிய மாயை” நூல் எழுதியவரான அறிஞர் அண்ணாவிடம் பெருந்தோல்வி கண்டார்.

தந்தை பெரியாரை திருச்சி சென்று அண்ணா சந்தித்து வாழ்த்துப் பெற்றது 1967 மார்ச்சு 2 என்றால், ‘கல்கி’யில் இரண்டு நாள்கள் கழித்து  - மார்ச்சு 5 அன்று தம் கையொப்பத்தை இட்டு ராஜாஜி என்ன எழுதினார்?

“இன்று உங்களுக்கு (அண்ணாவுக்கு) வந்து சேர்ந்திருக்கும் சம்பத்து ஈசன் சம்பத்தும், அருளுமாகும். இதை ஈசனுக்கு அர்ப்பணமாக்கி, அடக்கத்துடன் அனுபவிக்க வேண்டும். இல்லாவிடில், இரவில் தூங்கி, காலையில் எழுந்ததும் எங்கேயோ மறைந்து விடும். நாட்டின் நன்மையையும் தர்மத்தின் வளர்ச்சியையும் நமது நோக்கமாகக் கொண்டு பணி செய்வோமாக”

(‘கல்கி’ 5.3.1967 பக்கம் 3)

இது சாபமா - அச்சுறுத்தலா என்பதைச் சிந்தியுங்கள்.

இன்னொரு மகாமகா திட்டத்தையும் ராஜாஜி மனதுக்குள் வைத்திருந்தார் என்பது பின்னர் தெரிந்தது. தேர்தல் முடிந்து சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (26.2.1967) அதனை வெளிப்படையாகக் கூறவும் செய்தார்.

“விரைவில் மத்திய ஆட்சியில் சுதந்திரா, ஜனசங்கம், தி.மு.க. வந்து விடும். இந்த மூன்று கட்சிகளும் நன்றாக அய்க்கியமாகி விடும். இந்தக் கட்சிகளிடையே வேறுபாடு இருப்பதாகக் கூறுவது மேலுக்குத்தான். உள்ளே மூன்று கட்சிகளும் ஒரே நோக்கமுடையவை.

சுதந்திரா கட்சி தேசப் பொருளாதாரத்தை நன்கு உணர்ந்தது. ஜனசங்கம் மக்களை ஊக்குவிப்பதிலும், ஒற்றுமையை வளர்ப்பதிலும் அக்கறை கொண்டது தி.மு.க.வும் அப்படித்தான். ஆனால், தமிழ்நாட்டின் நிலைமை வேறு மாதிரியாக இருப்பதால் தி.மு.க. தமிழ்நாட்டிலேயே இருக்கட்டும். மத்திய ஆட்சியில் இந்த மூன்று கட்சி கூட்டாட்சி ஏற்பட்டதும் கஷ்டங்கள் குறையும்; மோசங்கள் நீங்கும். அதுவரை எப்படி காலந்தள்ளுவது என்று கவலைப்படாதீர்கள். கடவுள் அதற்கு அருள் செய்வான்!” என்று பேசினாரே ராஜாஜி.

எவ்வளவு  பெரிய கவட்டுத்தனம் - நயவஞ்சகம்! அய்யாவிடம் பயிற்சி பெற்ற அண்ணாவிடமா நடக்கும்? ‘உனக்கும் பேப்பே - உம் அப்பனுக்கும் பேப்பே!’ என்று ஆச்சாரியாரின் நயவஞ்சக   வலையை அறுந்தெறிந்து, ஆட்சியையே அய்யாவுக்குக் காணிக்கை என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் பிரகடனப்படுத்தி விட்டாரே! ராஜாஜியுடன் கூட்டணி வைத்து தி.மு.க வெற்றி பெற்ற நிலையில் பார்ப்பனர்கள் அறிவுரைகளை எல்லாம் கூற ஆரம்பித்துவிட்டனர்.

சி.வி. துரைராஜன் என்ற பார்ப்பனர் ‘இந்து’ ஆங்கில ஏட்டில்  (10.3.1967) என்ன எழுதினார்? “இப்பொழுது ஆளும் கட்சியாக உள்ள கட்சி தன்னுடைய பெயரை ‘தர்ம முன்னேற்ற கழகம்‘ அல்லது ‘அற வளர்ச்சிக் கழகம்‘ என்று பெயரை மாற்றிக் கொண்டு  அகில இந்திய கட்சியாக எவ்விதத் தடையுமின்றி தன்னை ஆக்கிக் கொள்வது மிகவும் பொருத்தமாகும். கட்சியின் அறிகுறியாக உள்ள கருப்புப் பார்டரை அக்கட்சியின் கொடியிலும், உடையில் இருந்தும் நீக்கிக் கொள்வதே நல்லது” என்று எழுதியதுண்டே!

ஆரிய சூழ்ச்சிகள் அனைத்தும் அண்ணாவால் முறியடிக்கப்பட்டன.

அண்ணாவுக்குப் பின் முத்தமிழ் அறிஞர் கலைஞரிடமும் நெருங்க முடியவில்லை.

தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்தி எம்.ஜி.ஆரை கையில் போட்டுக் கொண்டு சில வேலைகளைச் செய்தனர் என்பது உண்மைதான். முதலில் அவரை ஆன்மிகவாதியாக்கினர். இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணிக்கச் செய்தார்கள்.

திராவிடர் கழகத்தின் போராட்டத்தால், தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் ஒருங்கிணைப்பால் தமிழ்நாட்டின் கட்சிகள், தலைவர்கள் திரட்டப்பட்டு, பொருளாதார அளவுகோல் எனும் சமூகநீதிக்கு எதிரான கண்ணி வெடி வெடிக்காமல் செய்யப்பட்டது.

விளைவு - “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்பதுபோல  பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதுவரை இருந்து வந்த 31 விழுக்காடு இடஒதுக்கீடு 50 ஆக உயர்வு என்று எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்படும் சூழல் உருவாக்கப்பட்டது. அதிலும் பார்ப்பனர்கள் பச்சைத் தோல்வி என்னும் படுகுழியில் வீழ்ந்தனர்.

பார்ப்பனப் பெண் ஜெயலலிதா திராவிட கட்சியின் பெயராலேயே முதல் அமைச்சராக வந்தார்.

‘ஆம் நான் பாப்பாத்திதான்!’ என்று சட்டப் பேரவையிலேயே கூடக் கூறியதுண்டு.

சமூகநீதியின் திசையை விட்டு விலகிச் செல்ல முடியாத ஒரு நிலையை உருவாக்கியதும் திராவிடர் கழகம்தான் - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்தான்!

69 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு ஆபத்து வந்தபோது, அவருக்குச் சரியான வழியைக் காட்டி,  இன்னும்  சொல்லப் போனால்   சட்ட முன் வரைவையே  தயார்  செய்து   கொடுத்து       அதனை சட்டமாக்கச் செய்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்    76ஆவது    திருத்தமாகி,   ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டு, இந்தியத் துணைக் கண்டத்திலேயே  சட்டப்படி (ஙிஹ் கிஸீ கிநீt) 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்னும் அசைக்க முடியாத நிலை தமிழ்நாட்டில்  உருவாக்கப்பட்டு விட்டது.

ஒரு பார்ப்பனரே முதலமைச்சராக வந்த நிலையிலும் கூட, தங்கள் எண்ணம் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்ற இடியால் நொறுங்கிப் போனது ஆரியம்.

இதற்கு ஒரே வழி என்ன? திராவிடக் கட்சி ஆட்சிக்கு மாற்றுத் தேவை என்கின்ற நிலையில், அவர்களுக்குக் கிடைத்த ஒரு கருவிதான் நடிகர் ரஜினிகாந்த்

ஆரிய அரசியலுக்கு அவர்கள் கொடுத்த பெயர்தான் ஆன்மிக அரசியல். வசீகரமான மனிதர், சினிமாக் கவர்ச்சியால் நாடறிந்த நட்சத்திரம் - “சபாஷ் இதுதான் சரியான சந்தரப்பம் - சரியான ஆசாமி கிடைத்து விட்டார்!” என்று ஆக்ரோசமாகத் திட்டம் தீட்டினர் - ‘திகு திகு’ ரயில் போல நாடெங்கும் இதே பேச்சு. ஊடகங்களின் ஊதல் சத்தம்.

அந்தோ பரிதாபம்! என்ன நடந்தது? நந்தவனத்திலோர் ஆண்டி! அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி  - கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக் “கூத்தாடி” “கூத்தாடி” போட்டு உடைத்தாண்டி என்ற சினிமாக் கதையாகிவிட்டது.

ஒவ்வொரு அக்கிரகாரவாசி  வீட்டிலும் இடி விழுந்தது போன்ற நிலைதான் இன்று!

ஆனாலும் வந்தவரை ஆதாயம் என்ற பாணியிலே எதையாவது செய்யத் திட்டமிடுவார்கள்.

என்ன செய்தாலும் சரி. மக்கள் ஒரு நிலைக்கு வந்து விட்டார்கள் - நம்பகத் தன்மை இல்லாதவர்கள் இவர்கள் என்பதுதான் அந்த நிலையும், முடிவும், மனநிலையும்!

அவர்களின் திட்டம் என்னவாக இருந்தது? இதோ ‘துக்ளக்‘ பேசுகிறது.

ரஜினியின் கட்சி - அ.தி.மு.கவில் இருந்து விலகி வருவோர் - த.மா.கா., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அணி சேர்ந்து தி.மு.கவுக்குப் பலத்த போட்டியை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. (‘துக்ளக்‘ 6.1.2021 பக்கம் 7).

‘துக்ளக்‘ குருமூர்த்தி அய்யர்தானே இந்தத் திட்டத்தின் சூத்திரதாரி. அவர் சொன்னால் இந்த வகையில் சரியாகத்தானே இருக்கும்.

அ.தி.மு.கவிலிருந்து விலகி வருவோர்களாம்! புரிகிறதா சூட்சமம் ?  யார் தலைமையில் வருவார்களாம்? தமிழக அரசியல் களம் தெளிவாகவே அடையாளம் காட்டிக் கொண்டே வருகிறது.

அ.தி.மு.கவை உடைப்பது - ரஜினியை வைத்து வாக்குகளை அள்ளுவது  (தேர்தல்  வரைக்கும்தான் ரஜினி) தேர்தலில் தி.மு.க வெற்றி பெறும் - அந்த நிலையில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. இரண்டாம் இடத்தைப் பிடிப்பது. இதுதான் பா.ஜ.க. திட்டம், குருமூர்த்திகளின் ஏற்பாடு! பா.ஜ.க. இரண்டாம் இடம் என்றால் பார்ப்பனர்களுக்கான ஒரு தளம் திராவிட இயக்க - பெரியார் மண்ணில் கிடைத்து விடும் என்பதுதான் அவாள் போட்ட திட்டம்!

தோல்வியுற்றாலும் வெறுமனே முடங்கிக் கிடப்பார்கள் என்று பொருள் அல்ல. கீரி - பாம்பு மந்திரவாதி போல தகடுதத்தம் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நமது கடமை.

இந்த நிலையில்தான் “திராவிடம் வெல்லும்!”

என்னும் முழக்கத்தை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கொடுத்தார். முதற்கட்டமாக இப்பொழுது வென்று விட்டது - தேர்தல் களத்திலும் தி.மு.க வென்று அந்த முழக்கத்திற்கான முழுப் பொருளை நாடு காணப் போகிறது.

தேர்தல் களத்திற்கு ஆயத்தமாவீர், அருமைத் தமிழ்நாட்டோரே!

வாழ்க பெரியார்!

வெல்க திராவிடம்!!

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit அரசியல் களம்: ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்? in FaceBook Submit அரசியல் களம்: ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்? in Google Bookmarks Submit அரசியல் களம்: ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்? in Twitter Submit அரசியல் களம்: ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்? in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

பிப்ரவரி 16-28, 2021

  • 53ஆம் நாளிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
  • அய்யாவின் அடிச்சுவட்டில்.. : இயக்க வரலாறான தன் வரலாறு (262)
  • உணவே மருந்து: உடலநலங் காக்கும் உணவுமுறை
  • சிந்தனை : கோயில் நகரம் என்றால்...
  • தலையங்கம் : பகுத்தறிவு இல்லாப் படிப்பு பாழே!
  • பெரியார் பேசுகிறார் : செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்
  • முகப்புக் கட்டுரை : குருமூர்த்திகளுக்கு சர் சி.பி.ராமசாமி அய்யரின் மொத்துகள்!
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பின் பக்க விளைவே நரபலிகள்!
  • ரோபோ மனிதர்கள்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.